Published:Updated:

“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு!”

விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம்

ஒரே இரவில் ஹீரோவாக ஜொலிக்கவில்லை விக்ரம்; ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, ஒவ்வொரு படியாக உயர்ந்திருக்கிறார்.

“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு!”

ஒரே இரவில் ஹீரோவாக ஜொலிக்கவில்லை விக்ரம்; ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, ஒவ்வொரு படியாக உயர்ந்திருக்கிறார்.

Published:Updated:
விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ, இயல்பான நடிகர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வெற்றி வாகை சூடிவரும் விக்ரமைச் சந்தித்துப் பேசினோம்.

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகிடுச்சு. திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?”

“சினிமாவில் நான் நடிக்க ஆரம்பிச்ச காலத்துல எவ்ளோ கஷ்டப்பட்டேனோ, உழைச்சேனோ அதைவிட இப்போ ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கு. கிரிக்கெட்ல ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸர் அடிச்சுக்கிட்டே இருக்கணும். ரெண்டு மேட்ச்ல டக்-அவுட் ஆகிட்டோம்னா, அதுவரை பாராட்டிக்கிட்டு இருந்தவங்க, கன்னாபின்னான்னு திட்டித் தீர்ப்பாங்க. சினிமாவுலேயும் அப்படித்தான். ஜெயிச்சுக்கிட்டே இருந்தாதான் நமக்கான இடத்தை நாம தக்கவெச்சுக்க முடியும். தியேட்டருக்கு வர்ற லட்சக்கணக்கான மக்களை ஏமாத்திடாம, அவங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு. அதுதான், ஒரு நடிகனோட தார்மிகக் கடமை. அதை நிறைவேற்றத்தான் கடுமையா உழைக்கிறேன்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“ ‘தந்துவிட்டேன் என்னை’யிலிருந்து ‘சேது’ வரைக்குமான போராட்டமான காலம், அதற்குப் பிறகான வெற்றிப் பயணம்... எப்படி இருந்தது?”

“முதல்படமான ‘தந்துவிட்டேன் என்னை’ தொடங்கி ‘சேது’ வரை... வாழ்க்கையில வெளிச்சம்னு ஒண்ணு இல்லவே இல்லை.எங்கேயாவது தூரத்துல கொஞ்சம் வெளிச்சம் தெரியிற மாதிரி இருக்கும். ஓடிப்போய்ப் பார்த்தா, அது கானல் நீர் மாதிரி காணாமப்போயிடும். ரொம்ப தூரம் ஓடிக் களைச்சுப்போய் ‘போதும்டா சாமி’ன்னு விரக்தியின் உச்சத்துக்குப் போனப்போதான், ‘சேது’ வாய்ப்பு வந்தது. அதுக்குப் பிறகு சினிமாவில் என்னென்ன செய்யணும், என்னென்ன சாதிக்கணும்னு நினைச்சேனோ அதையெல்லாம் செய்யக் கடுமையா உழைச்சேன். சினிமா என்னைக் கைவிடலை. செல்வம், புகழ் எல்லாத்தையும் கொடுத்து எங்கே நம்மை உட்காரவெச்சு அழகு பார்க்கணுமோ, அப்படி வெச்சுப் பார்க்குது. மெழுகுவர்த்தி அளவுக்காவது வெளிச்சம் தெரியாதான்னு ஏங்கிக்கிடந்த எனக்கு, சூரிய வெளிச்சமே கிடைச்சது. இப்போ என்னை மட்டுமல்ல, ‘ஆதித்யா வர்மா’ மூலமா என் மகன் துருவ்வுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்து, எங்களை சந்தோஷத்திலேயே வெச்சிருக்கு.”

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“ ‘பிதாமகன்’ படத்துக்காக தேசிய விருது வாங்கிய அனுபவத்தை நினைச்சா, எப்படி இருக்கு?”

“ ‘வாழ்க்கையிலே கொஞ்சமாகப் பேசுற ஒருத்தனுக்கு, லொடலொடன்னு பேசுற ஒரு நண்பன். அந்த நண்பனை வில்லன் கொன்னுடுறான். நீங்க வில்லனைக் கொன்னுட்டு, டெல்லிக்குப் போய் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கீங்க’ன்னு பாலா கதையைச் சொல்லிட்டார். “கொஞ்சமே கொஞ்சம்கூடப் பேசவேணாம். என் கேரக்டர் ‘சக்தி கொடு’ன்னு ஒரே ஒரு வார்த்தையைப் பேசினா போதும்’னு நான் சொன்னேன்; பாலாவும் ஓகே சொல்லிட்டார். உண்மையைச் சொல்லணும்னா, ‘பிதாமகன்’ படத்துக்குக் கதை. திரைக்கதை எதையும் பிளான் பண்ணாம, ஒன்லைனை மட்டுமே வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டோம். கொட்டுகிற மழையில ஒரு ரூம்ல உட்கார்ந்து நானும் பாலாவும் சித்தன் கேரக்டரை உருவாக்கினோம். பாலா சொன்னமாதிரி எனக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைச்சது.”

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்துக்கு ரெண்டு வருடம், ‘ஐ’ படத்துக்கு மூணு வருடம் எனக் கடுமையான உடல் எடைக்குறைப்பு, உழைப்பு. அந்த ஐந்து ஆண்டுகளில் ஏகப்பட்ட படங்களில் நடிச்சு சம்பாதிச்சி ருக்கலாமேன்னு நினைச்சதுண்டா?”

“சினிமாவுல சில படங்கள் மட்டுமே காலம் கடந்து நிற்கும். ‘பிதாமகன்’ல என் நடிப்பு தமிழ்நாடு தாண்டி ஆந்திரா, கர்நாடகா, கேரளான்னு ஒட்டு மொத்தத் தென்னிந்தி யாவுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. ‘அந்நியன்’ல என் பர்ஃபாமன்ஸ் இந்தியா முழுக்கப் பரவியது. ‘அந்நியன்’ படத்தின் இந்தி டப்பிங் படத்தை அங்கிருக்கிற சேனல்கள் அடிக்கடி ஒளிபரப்பிக்கிட்டி ருந்தாங்க. மும்பை ஏர்போர்ட்ல இறங்கினா, ‘நீ அப்ரா ஜித்தானே’ன்னு சுத்தி வளைச்சுக்கிட்டு, அன்புத் தொல்லை கொடுத்தாங்க. நேபாளத்திலும் ரசிகர்கள் அப்படிக் கொண்டாடினாங்க. ‘ஐ’ படம் என்னை உலகம் முழுக்கக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கு. ஒரு நடிகன், அவனோட கதாபாத்தி ரத்துக்காக உடலை வருத்திக்கிட்டு உழைச்சிருக்கான்னு என்னைப் பார்த்துச் சொல்லும்போது, அதைவிடப் பெரிய விருது என்ன இருந்துடப்போகுது... உழைப்பை என்னைக்கும் நான் வீண்ணு நினைக்கமாட்டேன். எனக்கு, அதுதான் வேணும்.”

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“கமர்ஷியல் ஹீரோ, வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் நடிகர்... ரெண்டையும் பண்றது எப்படி இருக்கு?”

“அது கொஞ்சம் கஷ்டமான காரியம்தாங்க. வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சுட்டு, திடீர்னு ஒரு கமர்ஷியல் படத்துல நடிப்போம். அது சக்சஸ் ஆகலைன்னா, ‘இவர் யதார்த்தமான கேரக்டர்ல நடிக்கத்தான் லாயக்கு; ஆக்‌ஷனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்’னு முத்திரை குத்திடுவாங்க. நல்லவேளை, நான் நடிச்ச ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ மாதிரியான கமர்ஷியல் படங்களும் ஹிட்டாச்சு, ‘பிதாமகன்’, ‘காசி’ மாதிரியான வித்தியாசமான முயற்சிகளும் ஹிட்டாச்சு. என்னைப் பொறுத்தவரை இரண்டு வகை சினிமாவிலும் மாற்றம் வரணும். யதார்த்த சினிமாக்களில் கமர்ஷியலின் பங்கு இருக்கணும்; கமர்ஷியல் படங்களில் யதார்த்தம் இருக்கணும்.”

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“ரொம்பக் கஷ்டப்பட்டு நடித்த படம் தோல்வி அடையும்போது உள்ள மனநிலை என்னவா இருக்கும்?”

“ஒரு படத்துக்குக் கால்ஷீட் கொடுத்தாச்சு, சம்பளம் வாங்கியாச்சுன்னா, அந்தப் படத்துல நடிச்சே ஆகணும்னு நினைக்கிற ஆள் நான் கிடையாது. ஷூட்டிங்ல இயக்குநர்கள் ஓகே சொன்னாலும், நான் அவ்ளோ ஈஸியா ‘நடிச்சது ஓகே’னு நினைக்கமாட்டேன், ‘இன்னொரு டேக் போலாமா சார்’னு கேட்பேன். சும்மா நடிச்சுட்டுப் போவோம்னு நான் எந்தப் படத்திலும் நடிச்சதில்லை. இனியும் அப்படி நடிக்கமாட்டேன். ஒரு படத்தோட ஷூட்டிங் நடக்கும்போதே, ‘இந்தப்படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடும்’னு கணிக்கிற திறமையும், புத்திசாலித்தனமும் யாருக்கும் கிடையாது. ஒவ்வொரு படத்துக்கும் நம்பிக்கையோடு உழைக்கிறோம். ஆனா, வெற்றி, தோல்வி நம்ம கையில கிடையாதே!”

 “என் காலம் வேறு; 
துருவ் காலம் வேறு!”

“ஒரு தந்தையாக, மகள் திருமணத்தை நடத்தி முடிச்சப்போ உங்க மனநிலை?”

“வாழ்க்கையில எவ்வளவுதான் சம்பாதிச்சிருந்தாலும், ஒரு அப்பாவா பொண்ணோட கல்யாணத்தை நடத்தி முடிச்சது, நெகிழ்ச்சியானதுதான். பொதுவா எல்லாப் பெற்றோருக்கும் மகளுக்கு வரன் தேடும்போது சம்பந்தி ஒரு டைப்ல, மாப்பிள்ளை வேறொரு டைப்ல இருப்பாங்க. சமயத்துல, சம்பந்தி, மாப்பிள்ளை சரியா அமைஞ்சா, அந்தப் பையனை பொண்ணுக்குப் பிடிக்காமப்போயிடும். ஆனா, என் சம்பந்தி, மாப்பிள்ளை எல்லோருமே தங்கமானவங்க. எல்லாத்துக்கும்மேல, என் பொண்ணுக்குப் பிடிச்ச மாப்பிள்ளை அமைஞ்சது, கடவுள் கொடுத்த வரம்.”

“மகன் துருவ்வுக்கு, நடிப்பு டிப்ஸ் கொடுத்தீங்களா?”

“சினிமா சாதாரண விஷயம் கிடையாது. குறிப்பா, நடிகர் ஆகணும்னா, அதுல ரொம்பக் கவனமா இருக்கணும்னு சொல்லியிருக்கேன். நாங்க நடிக்க வந்த காலம் வேற; இப்போ வேற. துருவ், புது ஜெனரேஷன் நடிகர். அவருக்குன்னு சில ஐடியாக்கள் இருக்கும். நாம அதுல தலையிடுறது நாகரிகமா இருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சொன்ன நேரத்துக்குப் போயிடணும், உன்னோட பெஸ்ட் எதுன்னு நினைக்கிறியோ அதை நடிப்புல வெளிப்படுத்தணும்னு சொல்லியிருக்கேன்.”

“ ‘கடாரம் கொண்டான்’ படம் எப்படி வந்திருக்கு?”

“ஒரே நாளில் நடக்கிற கதை. இதுவரை என் கரியர்ல இப்படி ஒரு படத்துல நடிச்சதில்லை. ஹாலிவுட் படம் மாதிரி, 55 நாள்களில் முழுப்படத்தையும் முடிச்சுட்டார், இயக்குநர் ராஜேஷ். பொதுவா, ஒரு தமிழ்ப்படத்துல என்னென்ன காட்சிகள் இருக்கும்னு ரசிகர்கள் கெஸ் பண்ணி வெச்சிருப்பாங்களோ, அப்படி எந்தக் காட்சியும் இந்தப் படத்துல இருக்காது. இதுவரை தமிழ்ல பார்க்காத ஒரு ஸ்டைலிஷான படமா ‘கடாரம் கொண்டான்’ இருக்கும். நாசர் சார் மகன் அபி ஹசனுக்கு ஜோடியா அக்‌ஷரா நடிச்சிருக்காங்க. படத்துல எனக்கு ஜோடியே கிடையாது. ‘விக்ரம் கேரக்டருக்காகவே இந்தப் படத்தை ரசிப்பாங்க’ன்னு கமல் சார் சொன்னது, ரொம்பப் பெருமையான விஷயம்.”