Published:Updated:

சோழா டீ விளம்பரம் முதல் இன்று சோழனாக நடித்தது வரை - விக்ரமின் 32 வருடத் திரைப் பயணம்!

விக்ரம்

திரைப்படத்துறையில் கால்பதித்து இன்றுடன் 32 வருடங்களை நிறைவு செய்துள்ளார் நடிகர் விக்ரம்.

சோழா டீ விளம்பரம் முதல் இன்று சோழனாக நடித்தது வரை - விக்ரமின் 32 வருடத் திரைப் பயணம்!

திரைப்படத்துறையில் கால்பதித்து இன்றுடன் 32 வருடங்களை நிறைவு செய்துள்ளார் நடிகர் விக்ரம்.

Published:Updated:
விக்ரம்

எந்த ஒரு முன்னனுபவமும் இன்றி 1990-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் நடிகர் விக்ரம். சேலம் அருகேயுள்ள ஏற்காட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அவரின் தந்தையின் கட்டாயத்தால் தனது மேல் படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தார். இதனைத் தொடர்ந்து சினிமா துறையில் கால் பதிக்க ஆசைப்பட்டார் விக்ரம்.

இவர் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988-ம் ஆண்டு கைலாசம் பாலசந்தர் இயக்கிய 'கலாட்டா குடும்பம்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 1990-ம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக விக்ரம் இப்படத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும் ‘சேது’ படத்தின் மூலம்தான் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.

விக்ரம்.
விக்ரம்.

இந்த வெற்றிக்குப் பின் 'தில்', 'ஜெமினி', 'தூள்', 'சாமி' போன்ற படங்களில் நடித்த விக்ரம் 'காசி' என்னும் படத்தில் பார்வை அற்றவராக நடித்துத் திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் பின் 'பிதாமகன்' படத்தில் தனது நடிப்பு திறனை வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். இப்படம் அதிக வசூலும் பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.

2011-ம் ஆண்டு வெளி வந்த 'தெய்வத்திருமகள்' என்னும் படத்தில் மனவளர்ச்சி பாதித்தவராக நடித்தது விக்ரமிற்கு மேலும் ஒரு அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சமீபத்தின் அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் 'பொன்னியின் செல்வன்' விக்ரமுக்கனொரு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது வெளியான அந்தப் படத்தில் ஆதித்த சோழனாக நடித்த விக்ரம் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன் ‘சோழா தேநீர்' என்ற விளம்பரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமாவில் நுழைந்து 32 வருடங்கள் கடந்துவிட்ட நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடங்களுக்கு நன்றி" எனக் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் (#32YearsofChiyaanism) என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.