Published:Updated:

''ஒட்டகத்தை நடிக்க வைக்குறதைவிட, அதை நடிக்க வைக்க அனுமதி வாங்குறது பெரிய கஷ்டம்..!’’ - விக்ராந்த்

சனா

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விக்ராந்த் தற்போது `பக்ரீத்', `சுட்டிப்பிடிக்க உத்தரவு', `வெண்ணிலா கபடிகுழு2' எனப் பல படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்கள் குறித்து பேசியிருக்கிறார்...

நடிகர் விக்ராந்த்
நடிகர் விக்ராந்த்

''பக்ரீத்' கதை உங்களை தேடி எப்படி வந்தது?

``விஷாலும் நானும் நல்ல நண்பர்கள். விஷாலுடைய முன்னாள் மேனேஜர் முருகராஜ் எனக்கு நல்ல பழக்கம். வித்தியாசமா படம் ஒண்ணு பண்ணணும் தம்பினு என்கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். ஒருநாள் போன் பண்ணி, `சுவாரஸ்யமான கதை ஒண்ணு இருக்கு. படம் பண்ணலாம். கதை கேட்டுப்பார்'னு சொன்னார். கேட்டவுடனே வித்தியாசமா இருந்தது. அப்படியே கதைக்குள்ள ஹீரோவா கமிட்டாயிட்டேன். மத்தபடி படத்தை தயாரிக்கிறது முருகராஜ் அண்ணாதான்.’’

படத்தோட சுவாரஸ்யமான எலெமென்ட் பற்றிச் சொல்லுங்க?

``படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஸ்க்ரிப்ட்டுக்காக நிறைய மெனக்கெட்டோம். ஒட்டகத்தை நடிக்க வைக்குறது கஷ்டம். அதைவிட பெரிய கஷ்டம் அதை நடிக்க வைக்க அனுமதி வாங்குவது. படத்துல நடிச்சிருக்கிற ஒட்டகத்தை ராஜஸ்தானிலிருந்துதான் கூப்பிட்டு வந்தோம். ராஜஸ்தான் கவர்மென்ட் நாலு மாசம் மட்டும்தான் ஒட்டகத்தை வைத்து ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தாங்க.’’

ஒட்டகத்துக்குகூட நடிச்ச அனுபவம் ?

``ஷூட்டிங் ஆரம்பிக்குறதுக்கு நாற்பது நாளுக்கு முன்னாடி ஒட்டகத்தை சென்னைக்கு வரவெச்சு அதுகூட பழகுனேன். ஏன்னா, படத்துல நானும் ஒட்டகமும் ஒண்ணாதான் சுத்திக்கிட்டு இருப்போம். நடிக்குறப்போ இயல்பா இருக்கணும்ங்கிறதுக்காக அதுகூடவேதான் சுத்திக்கிட்டு இருந்தேன். படத்துல தாராங்கிற பெயருல ஒட்டகம் நடிச்சிருக்கு. ஒட்டகம் பார்க்கும் போதுதான் உருவத்துல பெரிசா தெரியும். ஆனா, பழகுறதுக்கு நாய் மாதிரிதான். எதைப் பார்த்தாலும் பயத்துல கத்தும். யாராவது அதுகூட ஒருவாரம் பழகுனா போதும், அவங்களுடைய வாசனையைப் பிடிச்சுக்கும். ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கூட்டிட்டு வந்தப்போ அதுக்கு துணைக்கு ரெண்டு குட்டி ஒட்டகத்தையும் கூட்டிட்டு வந்தோம். எங்க படக்குழு எல்லார்கிட்டயும் தாரா நல்லா பழகுச்சு. ஷூட்டிங் முடிச்சி தாரா போனப்போ எல்லாரும் கஷ்டப்பட்டாங்க. படத்தோட ஷூட்டிங்ல நம்மள மாதிரி அதுவும் பழகிருச்சு. எங்களோட டைரக்டர் ரொம்ப அழகாக ஒட்டகத்தைக் கையாண்டார். ஷூட்டிங் முடிச்சி ஒட்டகம் ராஜஸ்தானுக்குப் போயிட்டாலும் அதுக்கான முழுச் செலவை தயாரிப்பாளரே ஏத்துருக்கார். தாராவை தத்து எடுத்துக்கிட்டார். ஏன்னா, ஒரு விலங்கை வெச்சு 55 நாளுல மொத்த ஷூட்டிங்யும் முடிச்சிட்டோம். எந்த இடையூறும் எங்களுக்கு தாரா தரல.’’

இசையமைப்பாளர் இமான், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், எடிட்டர் ரூபன்னு பக்ரீத் படத்தோட டெக்னிக்கல் டீம் பெரிசா இருக்கே!?

விக்ராந்த்
விக்ராந்த்

" இவங்கதான் படத்தோட தூண்கள். `மைனா', `கும்கி' படத்துல பாட்டுகள் ஹிட் ஆனமாதிரி இந்தப் படத்துலயும் ஆகும். எல்லாரும் அவங்க படம் மாதிரி எடுத்துட்டு வொர்க் பண்ணுனாங்க. படத்தோட டீசரை சினிமாவுல என்னோட நண்பர்களாக இருக்கக்கூடிய விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் மற்றும் பெரிய இயக்குநர்கள், அனிருத் எல்லாரும் வெளியிட்டாங்க. இது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.’’

உங்களுடைய அடுத்தப் படத்துக்கு விஜய் சேதுபதி வசனமாமே?

விக்ராந்த்
விக்ராந்த்

``அந்தப் படத்தோட ஆரம்ப கட்டத்திலதான் நாங்க இருக்கோம். படத்தோட ஷூட்டிங் போறத்துக்கே மூணு மாசம் ஆகும். உடலளவில் நானும், விஷ்ணு விஷாலும் ரெடி ஆகணும். அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங் போக முடியும். `கவண்' படத்துல இருந்து விஜய் சேதுபதி எனக்கும், அண்ணாவுக்கும் நல்ல பழக்கம். அண்ணாதான் இந்தப் படத்தை டைரக்‌ஷன் செய்ய இருக்கிறார். விஜய் சேதுபதி, என்னோட வாழ்க்கையில எந்தவொரு நல்லது கெட்டதா இருந்தாலும் கூட இருந்து சப்போர்ட் பண்ணுவார். ஒருமுறை அண்ணாவும், விஜய் சேதுபதியும் பேசிட்டிருந்தப்போ இந்தக் கதையைச் சொல்லியிருக்கார். விஜய் சேதுபதிக்குப் பிடிச்சிருந்தனால வசனம் எழுதுறேன்னு சொன்னார்.’’

''ஒட்டகத்தை நடிக்க வைக்குறதைவிட, அதை நடிக்க வைக்க அனுமதி வாங்குறது பெரிய கஷ்டம்..!’’ - விக்ராந்த்

சுட்டுப்பிடிக்க உத்தரவு பற்றி?

``படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இது பக்காவான ஆக்‌ஷன் கதை. சுசீந்திரன் சார் எனக்கு நல்ல பழக்கம். மிஷ்கின் சார்கூட நடிச்சது நல்ல அனுபவம். படத்துல இவங்க ரெண்டு பேர்கூடவும் எனக்கு காம்பினேஷன் இருக்கு. டைரக்டர் ராம்பிரகாஷ் முதலில் பேசுனார். கதை கேட்குறதுக்கு முன்னாடி வேண்டாம்னு சொல்லலாம்ங்கிற முடிவுல போனேன். கதை கேட்டதுக்குப் பிறகு உடனே ஓகே சொல்லிட்டேன்.’’

''ஒட்டகத்தை நடிக்க வைக்குறதைவிட, அதை நடிக்க வைக்க அனுமதி வாங்குறது பெரிய கஷ்டம்..!’’ - விக்ராந்த்

விக்ராந்துக்கு தமிழ் சினிமாவில் இன்னும் சரியான இடம் கிடைக்காதது நினைத்து வருத்தப்பட்டது உண்டா?

``என்னோட `பக்ரீத்' படத்தோட டீசர் வெளியான போது நிறைய ரசிகர்கள் விக்ராந்த் நல்ல நடிகர்னு கமென்ட் பண்ணியிருந்தாங்க. ரசிகர்களுடைய சப்போர்ட் நமக்கு இருக்குனு தெரிஞ்சுதான் ஓடிட்டு இருக்கேன். இல்லைனா எப்போதோ சோர்ந்து போயிருப்பேன். நமக்கு நல்ல படம் கிடைக்கும். அப்போ ரசிகர்கள் நம்மகூட நிப்பாங்கனு நம்பிக்கையிலதான் ஓட்டிட்டு இருக்கேன். என்னைக்குமே வருத்தப்பட்டா எந்திருச்சு ஓடமுடியாது. என்னோட வாழ்க்கையில் யாரையும் நான் தப்பு சொல்ல மாட்டேன். மெச்சூரிட்டி லெவல் இல்லாம சில படங்களில் நடிச்சிருக்கேன். `பாண்டியநாடு' படத்துக்கு முன்னாடி, பின்னாடினு என்னோட வாழ்க்கையை ரெண்டா பிரிக்கலாம். விஷால் என் வாழ்க்கையில் முக்கியமான நபர். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். இப்போ அவன் பிஸியா இருக்கிறனால சரியா சந்திக்க முடியல. ஆனா, நாங்க எப்போதுமே நல்ல நண்பர்கள்தான்.’’