Published:Updated:

விமல் vs விநியோகஸ்தர் சிங்காரவேலன் - மூன்று வருடங்களாக ஓயாத பிரச்னை... இதன் பின்னணி என்ன?

'மன்னர் வகையறா' படத்தில் பூபதிபாண்டியன், விமல்

"சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்." - விமல்

Published:Updated:

விமல் vs விநியோகஸ்தர் சிங்காரவேலன் - மூன்று வருடங்களாக ஓயாத பிரச்னை... இதன் பின்னணி என்ன?

"சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார்." - விமல்

'மன்னர் வகையறா' படத்தில் பூபதிபாண்டியன், விமல்
நடிகர் விமல் - விநியோகஸ்தர், தயாரிப்பாளர் சிங்காரவேலன் இருவருக்கும் இடையேயான பஞ்சாயத்து கடந்த பல மாதங்களாகவே தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் இருவரும் மாறி மாறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்களை அளித்து வருகிறார்கள்.

இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு, மீடியாவிடம் பேசினார் சிங்காரவேலன்.

"நான் மெரினா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'புறம்போக்கு' உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களைப் பெறுவதற்காக 2016-ம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நெருக்கமான நட்பு உருவானது.

விமல் - சிங்காரவேலன்
விமல் - சிங்காரவேலன்

அந்தச் சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. அவருக்கு மார்க்கெட்டும் இல்லாததால் அவரை வைத்து படம் தயாரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவங்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட 'மன்னர் வகையறா' என்ற அவரின் படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகச் சொல்லி, அதற்கு பண உதவி தேவை என்று என்னிடம் கேட்டு கொண்டார்.

நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து ரூ.5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன். இந்நிலையில் சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் 'களவாணி - 2' என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது 'களவாணி' படத்தின் இயக்குநர் சற்குணமும் உடன் இருந்தார்.

அதன் பிறகு என்னை சந்தித்த நடிகர் விமல் 'களவாணி - 2' படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கிக் கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் படத்தை முடித்து தந்து விடுவதாகவும் கூறியதையடுத்து அக்டோபர் 14-ம் தேதி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.1.5 கோடியை முன்பணமாகக் கொடுத்தேன். ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து 'களவாணி - 2' படத்தின் தயாரிப்புப் பணிகளைத் துவங்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்தப் படத்தை இயக்குநர் சற்குணமே தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ.1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன்.

இந்நிலையில் 'களவாணி - 2' படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதியான நிலையில் நடிகர் விமலிடமிருந்து எனக்கு வர வேண்டிய ரூ.1.5 கோடி பணம் வராததால், என் அலுவலக ஊழியரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான கமரன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 'களவாணி -2' பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றேன்.

களவாணி 2
களவாணி 2

இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களைக் காட்டி, 'களவாணி 2' படத்தின் காப்பிரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கிய போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு, நடிகர் விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி அழைத்தனர் காவல்துறை அதிகாரிகள்.

உடனடியாக ஒரு அரசியல் பிரபலத்தைத் தொடர்பு கொண்ட விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும்படியும் கேட்டதால் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அந்தப் புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் விசாரணை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ.1.5 கோடியை உரிய வட்டியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை நடிகர் விமல் என்னிடம் வழங்கினார். அதனை வங்கியில் செலுத்தியபோது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே என் நண்பர் கோபி கொடுத்துள்ள ரூ.5 கோடி பணம் திரும்ப வராததால், அவரும் விமல் மீது புகார் அளித்துள்ளார். விமல் மீது கொடுத்துள்ள இந்த ரூ.5 கோடி மோசடிப் புகாரைத் திசை திருப்புவதற்காக, இப்போது அவரை நான் ஏமாற்றிவிட்டதாக ஒரு பொய்யான புகாரை விமல் அளித்ததோடு, என்னை பற்றி அவதூறான கருத்துக்களையும் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பி வருகிறார்" என்கிறார் சிங்காரவேலன்.

விமலோ கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கமிஷனர் அலுவலத்திற்கு வந்திருந்து சிங்காரவேலன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடிப் புகாருக்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து விமல், "சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார். அதன் பிறகு துணிச்சலாக நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு ஓரளவு தொல்லை குறைந்தது. இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

விமல்
விமல்

'மன்னர் வகையறா' படத்தை இயக்கிய பூபதி பாண்டியன்தான் சிங்காரவேலன் என்பவரை அறிமுகம் செய்தார். இந்த சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கோபி பணம் கேட்கும்போதெல்லாம், சிங்காரவேலன் என்னைக் கை காண்பித்து விடுவார். எனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னை பல வகையில் சிங்காரவேலன் மிரட்டி வந்தார். நான் எனது புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து சமாளித்து வந்தேன். எனது பயத்தை அவர் எனது பலவீனமாக எடுத்துக்கொண்டு என்னை மிரட்டிவந்தார். இதனால்தான் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அந்தப் புகாரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

சிங்காரவேலன் என்மீது கொடுத்துள்ள புகார் பற்றி பத்திரிகைகளில் படித்துதான் நான் தெரிந்து கொண்டேன். என்மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது. எனக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு கேட்டும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளேன்" என்கிறார் விமல்.

இருதரப்பினருமே இப்போது அடுத்தகட்ட நகர்வை எதிர்நோக்கியுள்ளனர்.