Published:Updated:

``8 மாத கர்ப்பிணியா போன வாரம் வரைக்கும் என் மனைவி டாக்டர் சேவையை செய்துகிட்டிருந்தாங்க!" - விமல்

விமல்
விமல்

கிராமத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விமல், தற்போது அவருடைய சொந்தக் கிராமத்தில் கொரோனாவை எதிர்த்து கிருமிநாசினி தெளித்து வருகிறார். அவரைப் போனில் தொடர்புகொண்டு பேசினோம்.

``இப்ப நான் சென்னையில இல்லை. சொந்த ஊர் மணப்பாறை பக்கத்துல ஒரு கிராமத்துக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. இங்க ஊரடங்கு உத்தரவை எல்லாரும் கடைப்பிடிக்குறாங்க. முதல்ல மக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்ப ஓரளவுக்கு பரவாயில்ல. ஆனா, ஊரடங்கு அறிவிச்ச கொஞ்ச நாளைக்கு பசங்க யாரும் அடங்கல. கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாம இருந்தாங்க. `ஹே நம்மக்கெல்லாம் வராது பா... நம்ம ஊருக்கு எப்படிப்பா வரும்'னு அலட்சியமா பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க வரைக்கும் இப்படிதான் சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க. இப்ப கொஞ்சம் தெளிஞ்சிட்டாங்க. மதுரை, கும்பகோணம் பக்கத்துல கொரோனாவால நடந்த பாதிப்பைப் பார்த்துவிட்டு, `கொரோனா நம்மளை நெருங்கிக்கிட்டிருக்கு'னு உணர ஆரம்பிச்சிருக்காங்க. வெளியே பைக் எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தவங்களை போலீஸ் எச்சரித்து அனுப்பி வெச்சாங்க. உண்மை நிலவரத்தைச் சொன்னதுக்குப் பிறகு, கொஞ்சம் பரவாயில்ல. இப்போதைக்கு, மளிகை சாமான்கள் வாங்க மட்டும் வெளியே வந்துகிட்டு இருக்காங்க. அரசு அறிவிப்பின்படி காலையில கடை திறந்துட்டா மதியம் 2:30 மணிக்கு மூடிட்டு வீட்டுக்குப் போயிடுறாங்க. கட்சி, சாதினு எந்தப் பாகுபாடும் பார்க்காமல் ரூல்ஸ ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்காங்க.''

களத்தில் விமல்
களத்தில் விமல்

மக்களுக்காக அரசாங்கம் நிறைய உதவிகள் பண்ணிக்கிட்டு வர்றாங்க. முடிஞ்சளவு என்னால செய்ய முடியுற காரியங்களைப் பண்ணிக்கிட்டு வர்றேன். எங்க ஊரோட பஞ்சாயத்து 18 பட்டியைச் சேர்ந்தது. பஞ்சாயத்துல இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுறாங்க. நானும் சில இளைஞர்களும் சேர்ந்து தெருத் தெருவா போய் கிருமிநாசினி தெளிச்சிக்கிட்டு வர்றோம். டெட்டால், லைசால், பினாயில் எல்லாமே பயன்படுத்துறோம். தவிர, என்னோட மனைவி டாக்டர். ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் வேலைபார்த்துகிட்டு இருக்காங்க. இப்ப 8 மாசம் கர்ப்பிணி. இதோட அரசு மருத்துவமனையில பாதிக்கப்பட்டவங்களுக்கு சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. நிறை மாசம் நெருங்கிகிட்டு இருந்தனால மருத்துவமனை சார்பாக அவங்களுக்கு விடுமுறை கொடுத்திருக்காங்க. போன வாரம் வரைக்கும் வேலையிலதான் இருந்தாங்க. இந்த நேரத்திலயும் நிறை மாசத்தோட வேலைபார்க்குறதைப் பார்த்துவிட்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்னு கைதட்டினாங்க. என் மனைவி ரொம்ப சின்சியரான நபர். இதுவே எனக்குப் பெரிய சந்தோஷமா இருந்தது.

ஷூட்டிங் இருக்குறப்ப மட்டும்தான் சென்னைக்கு வருவேன். மத்த நேரத்துல கிராமத்துல அம்மா, அப்பா, மனைவிகூட இருக்கிறதுதான் வழக்கம். வீட்டுக்குக்கூட யாராவது சொந்தக்காரங்க பார்க்க வந்தா, `இந்த நேரத்துல யாரும் பார்க்க வேண்டாம். நம்ம ஊர்லதான் இருக்கோம். எல்லா சரியானதுக்குப் பிறகு, பார்த்துக்கலாம்'னு முடிஞ்சளவுக்கு தவிர்த்துகிட்டு வர்றேன். அதே மாதிரி வீட்டுலதானே இருக்கோம்னு அலட்சியமா சிலர் இருக்காங்க. அப்படி இல்லாம சுத்தமா இருந்தாலே போதும். அதே மாதிரி, ஒருமுறை பலசரக்கு கடைக்குப் போயிட்டு வர்றப்பவே ஒரு வாரதுக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டா நல்லது. விதவிதமா தினமும் சாப்பிடணும்னுகூட அவசியமில்லை. மூணு கூட்டு வெச்சு சாப்பிடமா ஒரே கூட்டு வெச்சிக்கிட்டா ரொம்ப நல்லது. காய்கறிகளும் நிறைய நாள் வரும். இந்த மாதிரியான சில விஷயங்கள்ல அனுசரிச்சு போகலாம்.

விமல்
விமல்

இந்தச் சூழல் ரொம்பக் கஷ்டமானது. இதை எல்லாரும் சரியா எதிர்கொள்ளணும். கூலித் தொழிலாளில இருந்து கோடீஸ்வரன் வரைக்கும் எல்லாருமே பொருளாதார ரீதியா பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆனா, எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான். பொதுநலன் கருதி தனித்திருத்தல் நல்லது. இதுதான் புத்திசாலித்தனம். கொரோனாவுக்கு ஏழை, பணக்காரன் பாகுபாடு தெரியாது. அரசாங்கம் சொல்றபடி கேட்டு நடக்கணும். கஷ்டம், நஷ்டம்னு சில விஷயத்துக்குள்ள போகமா இருக்குறதுதான் நல்லது. வியாதியைத் தாண்டி வந்துட்டா எங்க வேணாலும் போய் சம்பாதிக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம். முதல்ல, சுவர் இருந்ததான் சித்திரம் வரைய முடியும். இப்போதைக்கு நம்ம எல்லாரும் சரியா போய்க்கிட்டிருக்கோம். இதை மக்கள் நம்பணும்.

சினிமா துறையைச் சேர்ந்த என்னோட நண்பர்கள்கிட்ட தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கேன். சற்குணம் சொந்த ஊருக்கு வந்திருக்கார். சூரி சென்னையிலதான் இருக்கார். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனும் சென்னையில இருக்கார். முடிஞ்சளவுக்கு போன்ல பேசிக்கிட்டு வர்றேன். கிராமத்துல நான் இருக்கிறதால நெட்வொர்க் பிரச்னை இருக்கும். அதனால, முடிஞ்சளவுக்கு வீடியோ போனைத் தவிர்த்துருவேன்'' என்கிறார் விமல்.

அடுத்த கட்டுரைக்கு