சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் இந்த பில்டிங் வரக்கூடாதுன்னு தலையிட்டாங்க. ஐசரி கணேஷ் ஒரு நீதிபதியையே தவறான வகையில் அணுகி, நீதிமன்றமே அதைக் கண்டித்தது

நடிகர் சங்கக் கட்டடம் தாமதம் தொடங்கி, இப்போது ஆர்.பி.சௌத்ரி பிரச்னை வரை ஆயிரம் பேச்சுகள் வெளியே... ஆனால் விஷாலோ ஜீன்ஸ் போட்ட சித்தர் போல சிரிக்கிறார் அழகாக. கொரோனாவால் கொஞ்ச நாள் தாடி, டென்ஷன் என எதிர்பார்த்துப் போனால் செம ஃபிரஷ் விஷால்!

“கேட்டதைவிட, நினைச்சதைவிட எல்லாமே அதிசயமா அடுத்தடுத்து நடந்திருக்கு. மேலே மேலே போகணும். சில படங்கள் ஏன் சரியாக வரலைன்னு கேட்கலாம். எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. ரிலீஸ் தேதி, என் டைரக்டரோட உழைப்பு, படத்தோட புரமோஷன் இப்படி நிறைய இருக்கு. சமயங்களில் சினிமாவே சூதாட்டம் மாதிரி இருக்கு. ஏழு கோடி ஜனங்களுக்கும் ஒரு படம் பிடிச்சு, பார்க்க வைக்கிறது பெரிய வேலை. நிஜமா நம்புங்க... எனக்கு எப்பவுமே பெரிசா பிளான் கிடையாது...”

சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!
சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!

“நடிகர் சங்கப் பொறுப்புக்கு வந்ததும் சங்கக் கட்டடம் கட்டுவேன் என்றீர்கள். நடக்கவே இல்லையே?”

“அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் இந்த பில்டிங் வரக்கூடாதுன்னு தலையிட்டாங்க. ஐசரி கணேஷ் ஒரு நீதிபதியையே தவறான வகையில் அணுகி, நீதிமன்றமே அதைக் கண்டித்தது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அவங்க தோத்துடுவாங்கன்னு தெரியும். அப்படியே மனசு விட்டுப்போச்சு. அந்தப் பக்கம் போனாலே சங்கடப்படுவேன். உறுப்பினர்களில் பலர் இறந்துட்டாங்க. 55 பேர் பட்டினியாலேயே கவனிப்பு இல்லாமல் காலமாகிட்டாங்க. இந்த சாபம் அவர்களை சும்மா விடாது. கோர்ட்டில் வாய்தா போட்டுப் போட்டு தாமதமாகி இரண்டு வருஷம் ஆகிடுச்சு. அடுத்த வாரம் கேஸ் வருது. புதிய முதல்வர் உத்தரவாதம் கொடுத்திருக்கார். நாலு சுவர், கூரைதான்னு அந்தக் கட்டடத்தைச் சொல்ல மாட்டேன். உழைத்து முன்னேறிய நடிகர்களின் ஆத்மா அங்கே சுத்திக்கிட்டு இருக்கு. தமிழ்நாடே திரும்பிப் பார்க்கிற கட்டடமா நிச்சயம் கட்டுவேன்!”

சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!
சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!

“அரசியலில் இறங்க நினைச்சதுதான் பிரச்னையா?”

“ஆர்.கே நகரிலிருந்து பிரச்னை ஆரம்பித்தது. அ.தி.மு.க-வில் மதுசூதனன் ஆட்களின் அட்டகாசங்கள் எனக்கு எரிச்சலை உண்டாக்கிவிட்டது. அதனால்தான் போட்டியிடத் தீர்மானிச்சேன். அதனால் அவங்களும் கடுப்பாயிட்டாங்க. தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டுப் போட்டு என்னை அடிக்க வந்தாங்க. ஐசரி கணேஷ், ஜி.ஆர்.டி ஹோட்டலுக்கு என்னையும் கார்த்தியையும் கூப்பிட்டார். எங்களுக்கு மறுபடி எலக்‌ஷனில் நிற்கணும்னு ஐடியாவே கிடையாது. அதுக்கு முன்னாடி ஸ்டாலின் அங்கிளை சந்திச்சிருந்தேன். ‘ஏன் அவரைச் சந்திச்சீங்க... அ.தி.மு.க ஆட்களைச் சந்திக்க மாட்டேங்கிறீங்க’ என்று ஐசரி கேட்டார். எனக்கு போஸ்டிங் வேண்டாம்னு சொன்னவர், ‘கவர்மெண்ட் என்னை நிக்கச் சொல்லுது’ன்னு சொல்லிட்டு, ‘நீங்க நிக்கக் கூடாது’ன்னு சொன்னார். ‘நான் நின்னா நீங்க ஜெயிக்க முடியாது’ன்னும் சொன்னார். ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுக்கும் பத்தாயிரம் பிக்ஸ் பண்ணியிருக்கோம்னு சொன்னார். எனக்குக் கோபம் வந்து, ‘இப்ப நாங்க எலக்‌ஷனில் நிற்கிறோம்’ என்று சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். ‘ஸாரி விஷால்... என்னுடைய 26 காலேஜ்களையும் காப்பாத்திக்க வேறு வழி தெரியலை’ன்னு சொன்னார். ‘உங்க சொத்தைக் காப்பாத்துங்க. நான் பொதுச் சொத்தைக் காப்பாத்துறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிரச்னைகளுக்கு அ.தி.மு.க-வும் ஐசரி கணேஷும்தான் காரணம்.”

சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!
சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!

“ஆர்யாவுக்கே கல்யாணம் ஆகிடுச்சு... உங்களுக்கு இன்னும் ஏன் தாமதம்?”

“இன்னும் கொஞ்சம் கடமைகள் இருக்கு. சில பிரச்னைகள் முடிவுக்கு வரணும். இந்த டிசம்பருக்குள் கடன் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்துடுவேன். நடிகர் சங்கக் கட்டடத்தை முழுசாகக் கட்டிக் கண்ணாரப் பார்க்கணும். அது என்னவோ எனக்குள்ள சென்டிமென்ட் ஆகிப்போச்சு.”

“முதல்வரான பிறகு ஸ்டாலினைச் சந்திச்சீங்களே?”

“ஆமாம். கொரோனாவுக்கு எதிராக தீவிரமான செயல்பாட்டைப் பார்க்குறேன். பதவியேற்றதில் இருந்து ஒரு நாள்கூட முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓய்வாக இருந்து நான் பார்க்கலை. உதய் அவருக்குப் பக்கபலமா இருக்கார். இருக்கணும். ஆரம்பத்திலிருந்தே உதய்கிட்டே நான் இதை வலியுறுத்தி வந்திருக்கேன். எம்.எல்.ஏவா உதயநிதியோட உழைப்பு நல்லாருக்கு. சினிமாவில் தான் இப்படியெல்லாம் காட்சிகள் வரும். அழகா இறங்கி வேலை செய்றார். ஒரு எம்.எல்.ஏ எப்படிச் செயல்படணும், மக்களோடு ஒன்றி இருக்கணும்னு அவரைப் பார்த்து எல்லாரும் தெரிஞ்சுக்கலாம். நல்ல தொடக்கம்.”

சங்கக் கட்டடம் முதல் சௌத்ரி பிரச்னை வரை... மனம் திறக்கும் விஷால்!

“துப்பறிவாளன் 2 என்ன ஆச்சு?”

“எந்தத் தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது. வயதான புரொடியூசராக இருந்தால் ஹார்ட் அட்டாக்கில் செத்திருப்பாங்க. நல்லவேளை நான் தப்பிச்சேன். லண்டனில் சீக்கிரம் வெளிச்சம் போயிடும். அதுக்குள்ள ஷூட்டிங் நடத்தணும். ஆனால் மிஷ்கின் தூங்கி எழுந்து வர்றதுக்கு 11 மணியாகிவிடும். ஒரு ஷாட் எடுத்துட்டு பேக்கப் பண்ணிடுவார். இதேநிலை தொடர்ந்திருந்தால் என் கம்பெனியை மூட வேண்டியதாகியிருக்கும். நல்லவேளை அவர்கிட்ட இருந்து தப்பிச்சேன். இப்போ நானே பண்றேன்.

இப்போதான் கதை எழுதி முடிச்சேன். முன்னே எடுத்த படத்தில் மிஷ்கின் தம்பி நடிச்சிருக்கார். என் தம்பி நடிக்க வர மாட்டான்னு இப்போ சொல்லிட்டார். திரும்ப கதை எழுதியிருக்கேன். ஆழ்வார்பேட்டையில் ஷூட்டிங்னா கேன்சல் பண்ணலாம். லண்டனில் 15 லட்ச ரூபாய் கட்டணும். எனக்கே இந்த கதின்னா மற்ற தயாரிப்பாளர்கள் கதி என்ன ஆகும்..? அந்தப் படத்தை ஜனவரியில் ஆரம்பிக்கப் போகிறேன். இளையராஜாதான் மியூசிக்.”

“ஆர்.பி.சௌத்ரியோடு என்னதான் பிரச்னை?”

“இரும்புத்திரை படத்திற்காக அவரிடம் ஃபைனான்ஸ் வாங்கினேன். எல்லாப் பணத்தையும் எடுத்துக்கிட்டு அவர் வாசலில் போய் நின்னேன். ஒரு ஹீரோ, ஜி.கே.ரெட்டி பையன், 35 வருஷமா தெரிஞ்ச குடும்பம்னு பார்க்காமல் வெளியே நிக்க வச்சாங்க. கடைசியாக இரண்டு கோடி குறைஞ்சு, அதை எஸ்.ஆர்.பிரபு கொடுத்துதான் ‘இரும்புத்திரை’ ரிலீஸ் ஆச்சு. டாக்குமென்ட்ஸ் கேட்டால் துக்க நிகழ்ச்சி, கல்யாணம், ஊருக்குப் போயிருக்கார்னு வகைவகையா காரணம் சொன்னாங்க. ‘என்னங்க விளையாடுறீங்களா’ன்னு கேட்டால் ‘டாக்குமென்ட்ஸ் தொலைஞ்சுபோச்சு’ன்னு சொல்றார். பணம் கொடுத்துவிட்டால் பத்திரங்களைத் திருப்பிக் கொடுக்கணும். அதுதான் நீதி; நடைமுறை.

20 புரோநோட், ஆறு கிரீன் ஷீட், 10 லெட்டர் ஹெட், இரண்டு பாண்ட் பேப்பர்னு எல்லாத்திலும் வெறுமனே கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்திருக்கேன். இதுவரை எங்க குடும்பத்தில் 500 கோடிக்கு மேல் சினிமா வியாபாரம் நடந்திருக்கு. என் டாக்குமென்டை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். யாராக இருந்தாலும் என் கையெழுத்து இருக்க பேப்பரைத் தூக்கிட்டு எங்கே இருந்தும் கிளம்பி வரலாம். அவ்வளவு ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ்.

பணம் கொடுத்தாச்சு. பணம் திருப்பிக் கொடுத்தாச்சுன்னு பாண்ட் பேப்பர்ல எழுதிக் கொடுத்தார். அதனால் ஒரு பலனும் இல்லை. ‘நாளைக்கு யார் உயிரோடு இருக்கப் போறோம் சாகப்போகிறோம்’னு தெரியாது. எதையாவது எழுதிப் பூர்த்தி பண்ணிட்டு வந்தால் நம்ம கதை முடிஞ்சிரும். இதுக்கு முன்பு அன்புச்செழியன், அழகர்கிட்டே வாங்கியிருக்கோம். பணம் கொடுத்தால் எல்லாம் அருமையா ரிட்டர்ன் ஆகும். சரி, நீங்க கிரீன் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கன்னு கேட்டால் மறுக்கிறார். அப்போ எனக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமான்னு தெரியலை. இதுல போலீஸ் நல்ல முடிவெடுக்கும்னு நம்புறேன்.”