சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

- மனம் திறக்கும் விஷால்

எந்த வம்பு தும்புக்கும் போகாமல் எந்தச் சச்சரவும் நெருங்கிவிடாமல் நல்ல பையனாக அடுத்தடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால். ‘எனிமி’ வரக் காத்திருக்க, அடுத்து இப்போது ‘வீரமே வாகை சூடும்’ ஆட்டத்திற்கு ரெடி. ஒரு பதற்றமும் இல்லாமல் பேசினார் ‘மிஸ்டர் கூல்’ விஷால். அடக்கமும் பக்குவமும், பேச்சில் தெளிவும் கூடியிருக்கின்றன.

“ ‘வீரமே வாகை சூடும்’ தலைப்பில் கவனம் ஈர்க்குது. என்ன மாதிரி படம் இது?”

“ ‘பாண்டிநாடு’, ‘தாமிரபரணி’ மாதிரி சில சமயங்களில் படம் கிடைக்கும். இயக்குநர் து.ப.சரவணனின் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. சமகால சமூகத்தைப்பத்தின கதை. ‘எனக்கொரு கதை பண்ண முடியுமா’ன்னு கேட்டுட்டேன். அப்படியே ஒரு நிமிஷம் திகைச்சிட்டு ‘கொஞ்சம் டைம் கொடுங்க வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போனார். அப்படியே திரும்பி வந்து சொன்ன கதைதான் இந்த ‘வீரமே வாகை சூடும்.’ மூன்று இடத்தில் மூன்று விஷயம் நடக்கும். அது எல்லாமே ஒரு இடத்தில் ஒன்றுசேரும். அதை ஒரு சாமானியனா ஹீரோ எப்படிக் கையாள்கிறான்னு அடுத்தடுத்து படம் போகும். சமூகம் தன் அன்றாடத் தேவைகளில் பிரச்னை வந்துவிடக்கூடாதுன்னு எல்லாவற்றிலும் பின்வாங்கிக்கிட்டே இருக்கு. அப்படிப் பின்வாங்காமல் ஒரு அடி முன்னேறி வீரத்தைக் காட்டினாதான் நல்லது. நாம் நினைக்கிற மாற்றமும் நடக்கும். ‘மிடில் கிளாஸ்னா கம்மியான கண்ணோட்டத்தோட பார்க்கக் கூடாது’ன்னு சொல்லியிருக்கோம். படத்தில் என் பெயரே போரஸ். அலெக்சாண்டரை எதிர்த்த ஒரே போர்வீரன் அவன்தானே! செய்தித்தாளில் ஒரு விஷயம் படிக்கிறோம். அதே விஷயத்தை இன்னும் விரிவாகத் தொலைக்காட்சியில் காட்டுறாங்க. அப்படியான ஒரு பிரச்னை சராசரி மனிதர்கள் வாழ்க்கையில் வந்தால், அது எப்படி அவங்க வாழ்க்கையைப் புரட்டிப் போடும் என்பதுதான் கதை. நல்ல சினிமா எது என்பதில் எனக்கொரு கருத்து இருக்கும். உங்களுக்கொரு கருத்து இருக்கும். ஆனால் இரண்டு பேரும் ஒத்துப்போகிற இடம் வருமில்லையா? அந்த இடத்தில் ‘வீரம் வாகை சூடும்’ இருக்கும்.”

“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"
“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"

“தொடர்ந்து புதுமுக இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறீங்களே?”

“எல்லோரும் அப்படி வந்தவங்கதானே! இப்போ வருகிற இயக்குநர்களிடம் தனித்துவமான சினிமா இருக்கு. சொல்ல நினைக்கிறதை லாகவமா, பளிச்சுன்னு பயப்படாமல் சொல்றாங்க. அப்படிப் பார்க்கும்போது படமும் புதுசாத் தெரியுது. வாழ்க்கையோட சின்னப் பகுதிதான் சினிமா. நிறைய விஷயங்கள் மீதியிருக்கு. இனிமேல் சினிமா அதிகம் மக்களைப் பற்றிப் பேசாமல் இருந்தால் நல்லா இருக்காது. இதுமாதிரி புதியவர்களைப் பயன்படுத்தும்போது நமக்கு வேற மாதிரி படம்வரும். இதுகூட சுயநலம்தான். அவங்க மூளையைப் பயன்படுத்துகிறதுதான். எனக்கு இதில் புடிச்சது நல்ல திரைக்கதையாக அமைஞ்சதுதான். எளிய மக்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் கைகோத்து நின்னுட்டா அதிகாரமெல்லாம் ஒண்ணுமேயில்லைன்னு ஆணித்தரமாச் சொல்லியிருக்கோம். அடுத்து வருகிற ‘லத்தி’ கூட அப்படித்தான். போலீஸ்காரரின் எதிர்பார்க்காத சில பக்கங்களைச் சொல்லும் படம். எனக்கு யுவன்ஷங்கர் எப்போதும் பிடிக்கும். அவரோட இசை இந்தப் படத்தில் அவ்வளவு சரளமா, அழகா இருக்கு. ஒரு மளிகைக்கடையில் சேரும்போது ஆரம்பத்தில் முந்திரிப்பருப்பு மடிக்கவே அந்தந்த சைஸ் பேப்பருக்குத் திணறியிருப்போம். ஒரு வாரம் கழிச்சுதான் கை அந்தந்த சைஸ் பேப்பருக்கு தானாகப் போகும். ஆனால் இந்த யுவனை முதல் படத்திலிருந்து பார்க்கிறேன். எடுத்தவுடனே வேகம்தான். அவர் இதுக்குள்ளே வந்தது நல்ல விஷயம். டிம்பிள் எனக்கு இதில் புதுக் கதாநாயகி.’’

“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"
“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"
“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"

“சமீபமாக எந்தச் சர்ச்சையிலும் மாட்டுவதில்லையே?”

“நல்ல பெயர் எடுத்தாலும் கேள்வி கேட்பீங்க போலயே. இப்படி இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு. கொஞ்சம் விலகியே இருக்கிறேன். வீடு, வாசல், தங்கச்சி, அப்பா, அம்மா, ஷூட்டிங் ஸ்பாட், ஜிம், இரவு நிம்மதியான அடிச்சுப்போட்ட மாதிரி தூக்கம்னு இப்ப மாறியிருக்கேன். இதில் சினிமாவில் கவனம் கூடிப்போச்சு. நிறுத்தி நிதானமா முடிவு எடுக்கிறேன். ஆழ்ந்து கதை கேட்கிறேன். கொஞ்சம் படிக்கிறேன். நிறைய படம் பார்க்கிறேன். நண்பர்கள்கிட்ட மனசு விட்டுப் பேசுறேன். அதனால் இப்ப அதிகம் செய்திகளில் அடிபடுவதில்லை.”

“மறுபடியும் பாலா படத்தில் நடிப்பீங்களா?”

“பாலா அண்ணன் எப்பக் கூப்பிட்டாலும் உடனே ஒரு மேஜிக்குக்கு ரெடியா இருப்பேன். ‘ஏதாவது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க அண்ணே’ன்னு எங்கே பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருப்பேன். திடீர்னு ஒரு நாள் போன் வரும்னு காத்துக்கிட்டே இருப்பேன். நாங்க இரண்டு பேர் சேர்ந்தால் அதற்கான விஷயமும் பெருசா அவரிடம் இருக்கும். நான் ரெடி, அண்ணன் ரெடியான்னு காலம் போய்க்கிட்டே இருந்தது. இப்பதான் வரிசையா நாலைந்து படங்களுக்கு ஓகே சொல்லி புக் ஆனேன். இப்ப பார்த்து பாலா அண்ணன் போன் பண்ணி ‘வர்றியா படம் பண்ணுவோம்’னு சொன்னார். கமிட்டாகிட்டேன். அதனால் அவர்கிட்ட எப்படிச் சொல்லுவேன்னு சங்கடமாகிப்போச்சு. நான் சும்மா ஒரு ஹீரோவா இருந்தேன். என்னை நடிகனாக்கி ஆழம் பார்த்தது அவர்தான். நான் மட்டுமல்ல, எத்தனையோ பேர் அவர் கைபட்டு நடிகன் ஆகியிருக்காங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அடுத்து சேர்ந்திடுவோம்.”

“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"
“பாலாவுடன் மீண்டும் இணைவேன்... மிஷ்கினுடன் இணையவே மாட்டேன்!"

“நண்பன் ஆர்யா குழந்தையைப் பார்த்தீங்களா?”

“எங்கே போக முடியுது! போனில் விசாரிக்கிறது மட்டும்தான். சாயிஷா, குழந்தையோட மும்பையில் இருக்காங்க. எனக்கு அந்தப் பக்கம் போக நேரமில்லை. தாய்மாமன் பார்க்க வரலைன்னு பாப்பா வேற கோவிச்சுக்கப் போகுது. சீக்கிரம் பார்க்கப் போகணும்.”

“மிஷ்கின் உங்க மேலே கோபம் இல்லைன்னு சொல்லியிருக்காரே?”

“ஆனா எனக்கு அவர் மேல எந்தக் கோபமும் இல்லைன்னு சொல்லிட முடியாது. ஒரு நடிகனா என்னைச் செதுக்கியதில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. எனக்கு மிஷ்கின் பத்து வருஷமாப் பழக்கம். ஒவ்வொரு தடவை மீட் பண்ணும்போதும் ‘அடுத்த படம் பண்றோம்’னு கைகுலுக்கிட்டுப் பிரிவோம். ஒரு நடிகனா எனக்குச் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கார். அதை இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு தயாரிப்பாளரான எனக்கு அவர் செய்தது பச்சைத் துரோகம். அதை எந்தத் தயாரிப்பாளராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அவர்கூட திரும்பப் படம் பண்ண வாய்ப்பே இல்லை. அவ்வளவு மன உளைச்சலைக் கடந்து வந்திருக்கேன். தைரியமான ஆளா இருந்ததால மீண்டு வந்தேன். லண்டனில் இருக்கும்போது ‘நான் இந்தப் படம் பண்ணலை. நீங்க யாரையாச்சும் வெச்சுச் செஞ்சுக்கங்க’ன்னு மிஷ்கின் மெசேஜ். அப்படியே நடைபாதையில் தலையில் கையை வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். கூட நடிகர் பிரசன்னா இருந்தார். ‘என்ன’ன்னு கேட்டதற்கு ‘எடுத்துப் பாரு’ன்னு சொன்னேன். அவனும் நிலைகுலைந்தான். அதுவரைக்கும் பத்துக் கோடிக்கு மேல் பணம் செலவழிச்சிருக்கேன். அந்த ‘ஷாக்’ வாழ்நாளுக்கும் மறக்காது. படத்தில் மிஷ்கினின் தம்பி படம் முழுக்க வர்ற மாதிரி இருக்கு. மனிதாபிமானமே இல்லாமல், தம்பியை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார். `துப்பறிவாளன் 2’ மொத்தக்கதையையும் மறுபடியும் புதுசா மாத்தி எழுதியிருக்கேன். விஷால் ஸ்டைல் எப்படி இருக்குன்னு இனிமே பாருங்க.”