Election bannerElection banner
Published:Updated:

"என் மகன் விவேக்கிற்கு இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார்!" - அம்மா மணியம்மாள்! #RIPVivek

தாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்
தாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்

தமிழ் மக்கள் அனைவரையும் கலங்கவைத்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம். விவேக்கின் இளமைக்காலம் குறித்து அவரின் தாயார் மணியம்மாள் ஆனந்த விகடன் 26.11.2000 தேதியிட்ட இதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த சில நினைவுப்பகிர்வுகள் மட்டும் இங்கே!

''விவேக்கோட முழுப் பேரு விவேகானந்தன். வீட்ல செல்லப் பேரு ராஜு. ராஜா போல நம்ம மகன் இந்த மண்ணையே கட்டி ஆளணும்னு எல்லா அம்மாவும் ஆசைப்படற மாதிரி ஆசையா வெச்ச பேரு அது. வெச்ச பேருக்கு குறைச்சல் இல்லாம இப்போ எல்லோர் மனசையும் கட்டி ஆள்றானே... அதுவே சந்தோஷம்!

இந்திரா காந்தி பிறந்த நாள் அன்னிக்குத்தான் விவேக் பிறந்தான். 'தேசியத் தலைவர் பிறந்த நாள்ல பிறந்திருக்கேடா குட்டிப் பயலே... ஜனங்க மனசுல நிக்கிற மாதிரி பெரிசா எதையாவது செய்யணும் தெரியுமா?'னு அவன் பிறந்தவுடனே காதுல சொன்னேன். 'சரிம்மா'ன்னு சொல்ற மாதிரி கையையும் காலையும் ஆட்டிச்சு குழந்தை!

அப்போ நாங்க திருநெல்வேலியில் குடியிருந்தோம். ராஜு அப்பாவுக்கு (அங்கய்யா) கல்வித்துறையில உத்தியோகம். அடிக்கடி சட்டி பானையைத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓடணும். அதனால பல நல்ல விஷயங்களும் கிடைச்சது. அவருக்கு குன்னூருக்கு மாத்தலானப்போ விவேக் ஊட்டி கான்வென்ட்ல படிச்சான். இங்கிலீஷ் எல்லாம் அப்பவே பிச்சு உதறுவான்.

தாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்
தாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்

நாலாவது படிக்கிறப்பவே இங்கிலீஷ்ல ஒரு லெட்டர் எழுதி தனக்கு ரொம்பப் பிடிச்ச இந்திரா காந்திக்கு அனுப்பினான். அப்போ அந்தம்மாதான் பிரதமர். உடனே அவங்க ஒரு பதில் லெட்டரும் போட்டாங்க. இன்னமும் அந்த லெட்டரை ஃபிரேம் போட்டு பத்திரமா வீட்ல மாட்டி வெச்சிருக்கான்.

சின்ன வயசுல ராஜு எங்கேயாவது வெளியே விளையாடப்போனா, அவனைத் தேடி நான் அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்லை. தெருவுல எங்கேயாவது நிறைய பசங்க சிரிச்சுட்டே நின்னாங்கன்னா, அவங்க மத்தியில் நிச்சயம் ராஜு இருக்கிறான்னு அர்த்தம். எதையாவது சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டே இருப்பான். கதை சொல்லிட்டு இருப்பான். சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் மாதிரி மிமிக்ரி செஞ்சு காட்டிட்டிருப்பான்.

நாலாவது வகுப்பு படிக்கும்போது கதையெல்லாம் எழுதுவான். இவன் எழுதின முதல் கதைகூட ஞாபகம் இருக்கு... கதையை என்கிட்டத்தான் வாசிக்கத் தந்தான். குட்டியூண்டு பய என்ன அழகா கதை எழுதியிருக்கான்னு எனக்குப் பெருமையான பெருமை. இன்னமும்கூட இவன் எழுதற நகைச்சுவைக்கோ, டயலாக்குகளுக்கோ இவன் நடிக்கிற படங்களுக்கோ நான்தான் முதல் ரசிகை.

நானும் இவனுமே அம்மா - பையன் மாதிரி இல்லாம, ஜாலியா ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே அரட்டை அடிச்சுட்டிருப்போம். இவங்கப்பா வேலையில பிஸியா இருந்ததால இவனுக்கு எப்பவுமே என்கூட ஒட்டுதல் அதிகம். எனக்குக் கதை சொல்லிட்டே வீட்டு வேலைகள்லாம் கூட செஞ்சு கொடுப்பான்.

'மனதில் உறுதி வேண்டும்' படப்பிடிப்பில் விவேக்!
'மனதில் உறுதி வேண்டும்' படப்பிடிப்பில் விவேக்!

எங்க வீட்ல ராஜுதான் கடைசி. இவனோட மூத்த அக்கா விஜயலட்சுமி டாக்டருக்குப் படிச்சா. சின்னவ சாந்தி சட்டம் படிச்சா. இவனுக்கும் இயல்பாவே படிப்பு நல்லா வந்தது. டாக்டருக்குப் படிக்கணும்னு முதல்ல ஆசைப்பட்டான். அப்புறம் என்ன தோணுச்சோ.... வந்து அமெரிக்கன் காலேஜ்ல பி.காம் படிச்சான்.

காலேஜ் படிக்கும்போது படிப்பு சரியா வராத பசங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவங்களுக்குப் புரியற மாதிரி பொறுமையா கிளாஸ் எடுப்பான். இவன் சொல்லித்தர்ற அழகைப் பார்த்துட்டு, 'சரி... இவன் காலேஜ் புரொபசராகத்தான் வேலை பார்ப்பான்'னு நெனச்சேன். இவன் நெனச்சபடி டாக்டராவும் ஆகலே... நான் எதிர்பார்த்தபடி புரொபசராகவும் ஆகல... கடைசியில சட்டம் படிச்சுட்டு சினிமா நடிகனா ஆயிட்டான்.

விவேக் ஒரு நல்ல பரதநாட்டியக் கலைஞர்னு நிறைய பேருக்குத் தெரியாது. சின்ன வயசிலிருந்தே முறைப்படி பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். அவனும் அவங்க அக்கா விஜியும் மேடைகள்லகூட ஆடியிருக்காங்க.

நம்ம பையன் டான்ஸ்ல தனஞ்ஜெயன் மாதிரியும், மியூஸிக்ல இளையராஜா மாதிரியும் பேரு வாங்கப் போறான்னுகூட எனக்குக் கனவெல்லாம் இருந்துச்சு. மியூஸிக் மேல அப்படியொரு காதல். அருமையா பாடுவான். ஹார்மோனியம் ரொம்ப நல்லா வாசிப்பான். வயலின், பியானோ, தபேலா எல்லாமே நல்லா வாசிக்கத் தெரியும்.

இனிமையா புல்புல் தாரா வாசிச்சு எல்லோரையும் தூங்க வைப்பான். நேயர் விருப்பம் மாதிரி மாத்தி மாத்தி பாட்டு வாசிக்கச் சொல்வோம். ரொம்பப் பொறுமையா வாசிப்பான். கடைசியாத்தான் தூங்கப் போவான்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

மதுரையில் பரதநாட்டியப் போட்டி நடந்தப்போ நல்லா ஆடி இவன்தான் முதல் பரிசு வாங்கினான். அப்போ பி.காம். முடிச்சுட்டு மதுரை தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்துட்டிருந்தான். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் பரத நாட்டியத்தில் முதல் பரிசு வாங்கினவங்களுக்கு சென்னையில் இறுதிப் போட்டி நடந்தது.

அங்கதான் இவனுக்கு முதன்முதலா கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் பாலசந்தரோட அறிமுகம் கிடைச்சது. இவன் நடனமும் மிமிக்ரியும் பாலசந்தருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய்த்தான் தன்னோட 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிக்க இவனுக்குச் சந்தர்ப்பம் தந்தார்.

அப்புறம் இவனுக்கு சென்னைத் தலைமைச் செயலகத்திலேயே வேலை கிடைக்க, இங்க வந்துட்டோம். கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன ஃப்ளாட்லதான் குடியிருந்தோம். இவன் நடிச்சுட்டே எல்லாப் பத்திரிகைகளுக்கும் காமெடி துணுக்குகள், கட்டுரைகள் நிறைய எழுதுவான். விகடன்ல இவன் ஜோக்ஸ் நிறைய வந்திருக்கு.

எனக்கு ராஜுவை பார்க்கிறப்போ, எங்கப்பா சுவாமிதாஸ் தேவரையே நேர்ல பார்க்கிறது மாதிரி இருக்கும். அவர் வாத்தியாரா இருந்தார் அவர். எங்கப்பாதான் சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்துத் திருவிழாக்கள்ல எல்லாம் நாடகம் போடுவார். அவரே எழுதி, அவரே நடிச்சு, அவரே இசையமைச்சு இயக்குவார். ஆடுவார்... பாடுவார். அந்த 'ஜீன்'தான் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல ராஜு படிச்சப்பவும் இவனே நாடகம் எழுதி, நடிச்சு இசையமைச்சு, இயக்கவும் தூண்டுச்சு போல... நடனமும் இசையும் கத்துக்கத் தூண்டுச்சு போல!

கலாமுடன் விவேக்
கலாமுடன் விவேக்

காமெடி இவனுக்குள்ளே இயல்பாவே இருந்ததாலேயோ என்னவோ... இவன் நடிச்ச படங்களைப் பார்க்கிறப்போ, எனக்கு நடிப்பை மறந்துட்டு நிஜமாவே இவனைப் பார்த்த மாதிரி இருக்கும். படத்தில் நீங்க பார்க்கிற அதே விவேக்தான் அப்படியே வீட்லயும்!

இவனுக்கு ஆறு வயசு இருக்கப்போ நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருது. சொந்தக்காரர் ஒருத்தர் இறந்துட்டார். அந்த வீடே ரெண்டு நாளா பயங்கர இறுக்கத்தில் இருந்துச்சு.. முக்கியமான விஷயத்தைக்கூட ஜாடையில பேசிட்டிருந்தோம். அப்போ பந்தியில சாப்பிட உட்கார்ந்திருந்தவங்களுக்கு இட்லி பரிமாறிட்டு இருந்தாங்க. சட்னி ஊத்த கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பந்தியில் உட்கார்ந்திருந்த இவனுக்கோ பசி வயித்தைக் கிள்ளியிருக்கு. 'சித்தி, சட்னி போடுறியா.. பட்டினி போடுறியா?'னு இவன் சத்தமா தன் சித்தியைக் கூப்பிடவும், கூட்டம் மொத்தமும் இவனைத் திரும்பிப் பார்த்துச்சு. குழந்தை சட்னி கேட்டதைப் பார்த்துப் பலருக்கும் ஒரே சிரிப்பு. இறுக்கமான அந்த மௌனம் அப்பத்தான் உடைஞ்து. அதுக்கப்புறம்தான் எல்லோரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே ஆரம்பிச்சாங்க.

சின்ன வயசுல இருந்தே ராஜு என்னைவிட்டுப் பிரிஞ்சு இருக்கமாட்டான். எங்க சுத்தினாலும் சாயங்காலம் 'அம்மா'ன்னு வந்து என் முந்தானையைப் பிடிச்சுட்டாதான் நிம்மதியா இவனுக்குத் தூக்கம் வரும்.

'அப்படியிருக்கிறப்போ ஏன் நீங்க ஒரு இடத்திலேயும் உங்க பையன் ஒரு இடத்திலேயுமா தனித்தனியா குடியிருக்கீங்க?'ன்னு சிலர் கேட்கிறாங்க. காரணம் நான்தான். வடபழனி முருகனை அடிக்கடி தரிசிச்சுக்கிட்டே இருக்கணும்னு பிடிவாதமா கோயிலுக்குப் பக்கத்திலயே ஒரு வீடு பார்த்துக் குடியிருக்கேன் நான். ராஜு, அவன் குழந்தைகளோட பள்ளிக்கூட வசதிக்காக தனியா குடியிருக்கான்.

ராஜு ஒருவேளை யாரையாவது காதலிச்சால், அவன் காதலிச்ச பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடணும்கிற அளவுக்கு நான் முற்போக்குள்ள அம்மாவா, ரெடியாத்தான் இருந்தேன். ஆனா, அவனுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை போலிருக்கு. என் சின்னப் பொண்ணோட மாப்பிள்ளைதான் அருட்செல்விங்கிற அருமையான பொண்ணைப் பார்த்து இவனுக்குக் கல்யாணம் பேசி முடிச்சார்.

'உங்க பையன் காமெடியனாவே நடிக்கிறாரே... ஹீரோவாக வேண்டாமா?'னு சிலர் எங்கிட்டே கேட்பாங்க. ஹீரோக்களை சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனா, காமெடி நடிகரை எல்லோருக்குமே பிடிக்கும். என் பையன் இப்போ மாதிரியே எப்பவும் எல்லோரும் விரும்பற மனிதனா இருக்கணும்ங்கிறது தான் என் ஆசை!''

- லோகநாயகி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு