நடிகர், இயக்குநர் மனோபாலாவின் யூடியூப் சேனலுக்கு சிங்கமுத்து கொடுத்த பேட்டி பல சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறது. தன்னைப்பற்றி அவதூறாகப் பேசிய சிங்கமுத்து, அந்தப் பேட்டியை வெளியிட்ட மனோபாலா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்துவருகிறார் நடிகர் வடிவேல்.

இந்த விவகாரம் குறித்து மனோபாலா, சிங்கமுத்து இருவரிடமும் பேசினோம்.
"சிங்கமுத்து, வடிவேலு ரெண்டு பேருக்குமிடையிலான பஞ்சாயத்து ரொம்பப் பழசு. எல்லா பத்திரிகைகள்லயும் பேசினதைத்தான் என்கிட்டயும் சொன்னார் சிங்கமுத்து. புதுசா எதையும் சொல்லலை. ஆனா, பேட்டியைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட வடிவேலு என் நட்பையும் புரிஞ்சுக்கலைங்கிறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. சினிமாவை விட்டே கிட்டத்தட்ட விலகிப் போயிட்ட வடிவேலுகிட்ட கடந்த சில வருஷமா தொடர்புல இருக்கற ஒரே சினிமாக்காரன் நான் மட்டும்தான். வடிவேலு மாதிரி நல்ல நண்பனைப் பகையாக்கிக்க நான் என்ன முட்டாளா? `மண் சார்ந்த கலைஞனான நீ திரும்ப சினிமாவுக்கு வரணும்'னு பார்க்கறப்பெல்லாம் சொல்லிட்டேதானே இருக்கேன். இதையெல்லாம் மனசுல வெச்சிக்காம சிங்கமுத்து பேசினார், இவர் கேட்டார்னு அதிகாரிகிட்டப் போய் கடுதாசி கொடுத்தா என்னத்தச் சொல்றது? அந்தப் புகார் லெட்டர்ல கூட மே 19-ன்னு தேதி போட்டிருக்கு. ஆனா 31-ம் தேதி கொடுத்ததாச் சொல்றாங்க. இடையில என்ன செஞ்சிட்டிருந்தார்னு தெரியலை’’ என்றார் மனோபாலா.
சிங்கமுத்துவிடம் பேசினோம்.
"என்னுடைய வாழ்க்கை வரலாறு பத்திப் பேசச் சொல்லி மனோபாலா கேட்டார். என் வாழ்க்கைப் பயணம்னா நிச்சயம் அதுல வடிவேலு வருவார் இல்லையா? அதனால அவரைப் பத்திப் பேசினேன். அவரைப் புண்படுத்திப் பேசணும்னெல்லாம் எனக்கு நோக்கமில்லை. பேட்டின்னு உட்கார்ந்துட்டா சில விஷயங்கள் அதுவா வந்திடும். நான் பேசினது அவருக்கு மன உளைச்சலைத் தருதுன்னா, சிம்பு தேவன், ஷங்கர்னு எத்தனையோ பேர் பத்தி எத்தனையோ தடவை அவர் என்னவெல்லாமோ பேசியிருக்காரே? அவங்களுக்கெல்லாம் மன உளைச்சல் இருக்காதா? இவரு டயலாக்படியே வர்றேன். இவருக்கு வந்தா ரத்தம்... ஷங்கர், சிம்புதேவனுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?

தன்னைப் பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாதுன்னு மிரட்டி வைக்கறதுக்காக புகார் தந்திருக்கார்னு நினைக்கேன்.
ஆனா, சில விஷயங்களை நான் சொல்லத்தான் செஞ்சேன். மறுக்கலை. நான் சந்தானம்கூட நடிச்சது வடிவேலுவுக்குப் பிடிக்கலை. அதுக்காக நான் நடிக்காம இருக்க முடியுமா? அடுத்து என் பையன் ஹீரோவா நடிக்கப் போறான்னதும் அவருக்குள்ள பொறாமை வந்திடுச்சு. அதை அவரோட பேச்சை வெச்சே நான் உணர்ந்துட்டேன்.
நல்லபடியா சினிமாவுல இருந்திருக்கலாம். ஆனா இருந்தாரா? சினிமா ஒதுக்கி வச்சிடுச்சு. யாரும் தேடுவார் இல்லை. அதனால இப்ப நான் பேசினதைச் சாக்கா வச்சு `வடிவேலு இருக்கார்’னு காட்டிக்கத்தான் இந்தக் கம்ப்ளெய்ன்ட்டு. சினிமாதான் உங்களை உள்ளே வரவே கூடாதுன்னுடுச்சே. நடிகர் சங்க அதிகாரிகிட்ட எதுக்குப் போய் புகார் தர்றீங்க? நியாயப்படி வடிவேலுவின் இந்தப் புகாரை அவங்க வாங்கியிருக்கவே கூடாது. சரி, வாங்கிட்டாங்க. என்னைக் கூப்பிட்டுக் கேட்டா என் தரப்பு நியாயத்தையும் அவங்ககிட்டச் சொல்றேன்’’ என்றவர்,
"ஒண்ணு மட்டும் சொல்லிக்க விரும்பறேன் தம்பி. வடிவேலு என்னைக்கும் என் நண்பர்தான். அவர் திரும்பவும் சினிமாவுக்குள் வரணும்னுதான் நான் ஆசைப்படறேன். அதனாலதான் அவரைப் பத்திப் பேசவேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்திடுது" என்றும் சொன்னார்.