Published:Updated:

`அண்ணாத்த' ரஜினி, `விக்ரம்' கமல்... இருவருக்கும் வில்லன்கள் யார்?

'அண்ணாத்த', 'விக்ரம்' ஆகிய இரண்டு படங்களுக்கும் வில்லன்கள் யார்?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், 'அண்ணாத்த'. கிராமத்து படமாக உருவாகும் இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் ரஜினிக்குத் தங்கையாக நடிக்கிறார். தவிர, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிசம்பர் 14ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்குச் சென்றுவிட்டார் ரஜினிகாந்த். மீதமுள்ள 40 சதவிகித படப்பிடிப்பை முதலில் முடித்துவிட்டு, பிறகு, கட்சி வேலைகளில் தன்னை தீவிரப்படுத்த உள்ளார். புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் எடுக்க திட்டமிட்டிருந்த பகுதிகளை ராமோஜி ஃபிலிம் சிட்டிக்குள்ளேயே செட் அமைத்து எடுத்து வருகின்றனர். ஜனவரி 20ம் தேதி வரை ரஜினி அங்கு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஜினிக்கு வில்லனாக இரண்டு நபர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதில் ஒருவர் ஜாக்கி ஷெரோஃப். மற்றொருவர் டோலிவுட் நடிகர் கோபிசந்த்.

கோபிசந்த்
கோபிசந்த்

கோபிசந்த் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பே கசியத்தொடங்கின. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில காட்சிகளில் நடித்த ஜாக்கி ஷெரோஃபிற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் இருக்கிறதாம். கோபிசந்த் இன்னும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. தெலுங்கில் முன்னணி நாயகனாக இருக்கும் கோபிசந்த்தான் சிறுத்தை சிவா இயக்கிய முதல் இரண்டு படங்களின் நாயகனும் கூட. அதன் பின்தான், சிவா கோலிவுட்டுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தமன்னாவுடன் 'சீட்டிமார்' என்ற கபடி படத்தில் நடித்து வருகிறார் கோபிசந்த். இந்தப் படம் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. அது முடிந்தவுடன் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். கோபிசந்த், ஜாக்கி ஷெரோஃப் தவிர, பிரகாஷ்ராஜ் வேறு இருக்கிறார். நிச்சயம் பக்கா ரூரல் எண்டர்டெயினராக 'அண்ணாத்த' இருக்கும்.

ஃபகத் பாசில்
ஃபகத் பாசில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடிக்க பல நடிகர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதில் முக்கியமானவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் கரியரின் தொடக்கத்தில் 'ஹே ராம்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். ஆனால், இவரது பகுதிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டுவிட்டது. பின், 'பேட்ட' படத்தின் மூலம் கோலிவுட் வந்தார்.

அடுத்த பெயர், மலையாள நடிகர் ஃபகத் பாசில். இந்தப் படத்தின் வில்லன் கிளாஸாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்க வேண்டுமாம். அதற்காக ஃபகத் பாசிலை கேட்கலாம் என நினைத்திருக்கிறார்கள். விகடன் பிரஸ் மீட்டில் தன்னை ஈர்த்த நடிகர்களாக நவாஸுதீனையும் ஃபகத் பாசிலையும் கமல்ஹாசன் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இவர்தான் வில்லன் என்பது முடிவாகாமல் இருக்கிறதாம். ஆனால், ஃபகத் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்ற செய்தி உண்மைதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு