Published:Updated:

`` `சேது’ க்ளைமேக்ஸ் ஷூட்ல நல்லா தூங்கிட்டேன்!’’ - அபிதா #20YearsofSethu

விக்ரம்
விக்ரம்

`காலையில, 'ம்மா... ஷூட்டிங் முடிஞ்சிருச்சு... விடிஞ்சும் போயிருச்சு எந்திருங்க'ன்னு யூனிட்ல இருந்தவங்க எழுப்பி விட்டாங்க’

'' 'சேது' படம் ரிலீஸாகி 20 வருஷம் ஆகிருச்சுனு நினைக்குறப்போ ஆச்சர்யமாதான் இருக்கு. இன்னும் மறக்கமுடியாத நினைவுகள் மனசுக்குள்ள இருக்கு.''

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்று சேது. இயக்குநர் பாலாவின் முதல் படம் என்பதோடு நடிகர் விக்ரமுக்கு புது வாழ்க்கையைக் கொடுத்த படம் இது. 'சேது' ரிலீஸாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இப்படத்தின் நாயகி அபிதாவிடம் பேசினோம்.

''என்னோட முதல் படம், 'கோல்மால்'. இதுல ஹீரோயினுக்கு தங்கச்சி கேரக்டர் பண்ணியிருப்பேன். காமெடி ஜானர் படம். இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பிச்சிருந்தேன். அந்த நேரத்துல, ஸ்டில் போட்டோகிராஃபர் ஒருத்தர் என் போட்டோவை பாலா சார்கிட்ட கொடுத்திருக்கார். அதைப் பார்த்துட்டு, பாலா சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, நேர்ல வரச்சொன்னாங்க. போனப்போ, அங்கே பாவாடை தாவணி கொடுத்து போட்டுக்கச் சொன்னாங்க. அப்புறம், போட்டோஷூட் பண்ணாங்க. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பாலா சார் பார்த்துட்டு, 'இந்தப் பொண்ணு நல்லாயிருக்கு. ஹீரோயின் ரோலுக்கு செட் ஆவாங்க'ன்னு சொல்லிட்டு போயிட்டார். எனக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆனா, இடையில் ஒரு அதிர்ச்சியான தகவல். 'படத்துக்கு புதுமுக நாயகிதானே தேடுனோம். ஆனா, நீங்க ஏற்கெனவே ஒரு படத்துல நடிச்சிருக்கீங்களே'னு சொல்லி தவிர்த்துட்டாங்க. கீர்த்தி ரெட்டியை ஹீரோயினா நடிக்க கமிட் பண்ணிட்டாங்க. பூஜை கார்டுல அவங்க பேர்தான் இருந்தது. சரினு நானும் மனசைத் தேத்திக்கிட்டு விட்டுட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, பாலா சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, 'நீங்களே படத்துல நடிங்க'ன்னு சொன்னாங்க. நடுவுல என்ன நடந்ததுனு இதுவரைக்கும் தெரியாது. படத்தோட கதையெல்லாம் எனக்கு தெரியாது. என்னோட போர்ஷன் மட்டுமே சொன்னார். படத்துல, அப்பாவியான பொண்ணு கேரக்டர். 'பார்லர் புருவத்தை சரிசெய்யுறது, கை நகத்தை வெட்டுறது, நெயில்பாலிஷ் போடுறதெல்லாம் பண்ணக்கூடாதுனு' நிறைய கன்டிஷன்ஸ் போட்டார் பாலா சார். எப்படி நடிக்கணும்னு சொல்லிக்கொடுப்பார். அதிகமா எதுவுமே பேச மாட்டார். அவருடைய வேலையை மட்டும் பார்த்துட்டு போயிருவார்.

அபிதா
அபிதா

படத்தோட தயாரிப்பாளரும் புதுசு. அதனால, ஃபைனான்ஸ் பிரச்னையால படப்பிடிப்பு அடிக்கடி நின்னுரும். ரெண்டு மாசம் நடக்கும். அதுக்கு அப்புறம் ஆறு மாசத்துக்கு இடைவெளி விழுந்திரும். அதனால இந்தப் படத்தோட ஷூட்டிங் ஒரு வருஷம் வரைக்கும் நடந்தது. சிலர் 'இந்தப் படம் ரிலீஸாகாதுப்பா'னு எங்க காதுபடவே பேசுவாங்க. அதைக் கேட்குறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நம்ம ஹீரோயினா நடிக்குற படம் இப்படி பேர் வாங்குதேனு கவலைப்படுவேன். படம் ரிலீஸாகலைனா ராசியில்லாத ஹீரோயின்னு பேர் கொடுத்துருவாங்களேன்னு பயந்தேன்.

என்னோட ஒரிஜினல் பேர் ஜெனி. படம் ரிலீஸான சமயத்துல தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டர்ல படம் பார்க்கப் போயிருந்தேன். அப்போ, டைட்டில் கார்டுல ஹீரோயின் - அபிதான்னு வந்தது. 'படத்துக்கு நம்ம ஹீரோயின் இல்லை போல வேற யாரோ நடிச்சிருக்காங்க'ன்னு நினைச்சிட்டேன். என்னோட கேரக்டர் பெயர் அபிதா குஜலாம்பாள். அதோட பாதியை டைட்டில் கார்ட்டில் கொடுத்திருந்தார் பாலா சார். படம் ரிலீஸான பிறகு, எங்கேயாவது வெளியே போனகூட நிறைய பேர், 'குஜலாம்பாள் போறாங்க பாருங்கடா...'னு தான் சொல்லுவாங்க.

பாலா
பாலா

படம் ரிலீஸான ஒரு வாரம் வரை ஆடியன்ஸ் யாரும் படம் பார்க்க வரல. தியேட்டர்ல இருந்து படத்தை தூக்குற திட்டத்துல விநியோகஸ்தர்கள் இருந்தாங்க. அந்த நேரத்துல, 'ஆனந்த விகடன்'ல படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்திருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் படத்தைப் பார்க்க ஆடியன்ஸ் நிறைய பேர் தியேட்டருக்கு வந்தாங்க. கிட்டத்தட்ட 300 நாளுக்கு மேலே படம் ஓடுச்சு. தேசிய விருதும் கிடைச்சது. சேது படத்துக்காக நடந்த விருது விழாவுல பாலா மற்றும் விக்ரம் சாரைப் பார்த்தேன். அதுக்குப் பிறகு இதுவரைக்கும் அவங்க இரண்டு பேரையும் நேர்ல பார்க்கவே இல்லை.

படத்தோட க்ளைமேக்ஸ் காட்சியை இரவு 10 மணியில இருந்து காலையில நாலு மணி வரைக்கும் ஷூட் பண்ணாங்க. செத்துப் போன பிணம் மாதிரி மாலையை போட்டுக்கிட்டு படுத்திருப்பேன். நைட் முழுக்க ஷூட் பண்ணதால, எனக்கு தூக்கம் வர ஆரம்பிச்சிருச்சு. லைட் மாத்துறாங்க, சுத்தியிருக்குறவங்களாம் ஏதோ பேசிட்டிருக்காங்க. இதெல்லாம் கொஞ்சம் நேரம்தான் தெரிஞ்சது. ஏன்னா, நல்லா தூங்கிட்டேன். காலையில, 'ம்மா... ஷூட்டிங் முடிஞ்சிருச்சு... விடிஞ்சும் போயிருச்சு எந்திருங்க'ன்னு யூனிட்ல இருந்தவங்க எழுப்பி விட்டாங்க. தியேட்டர்ல படம் பாத்தப்போதான், 'இந்தக் காட்சி எவ்வளவு எமோஷனலா இருக்கு. நம்ம தூங்கிட்டோமே'னு தோணுச்சு. படம் ரிலீஸுக்குப் பிறகு கே.வி.ஆனந்த் சார் என்னை போட்டோ எடுத்து பத்திரிகைச் செய்தியில் கொடுத்தார். இளையராஜா சாரோட தீவிர ரசிகை நான். நான் நடிக்கிற படத்துல அவர் இசையமைக்குறார்னு தெரிஞ்சு சந்தோஷப்பட்டேன். அவரை நேர்ல பார்க்கணும்னு நினைச்சேன். அதுதான் முடியாம போயிருச்சு'' என்றார் அபிதா.

```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்!'' - அபிதா
அடுத்த கட்டுரைக்கு