Published:Updated:

"விஜய் சேதுபதி நடிப்பாரான்னு ஒரு டவுட் இருந்தது?!" - அதிதி பாலன்

அதிதி பாலன்
அதிதி பாலன்

"மலையாளத்துல ப்ரித்வி ராஜ் படத்துல கமிட்டாகுறதுக்கு முன்னாடி விஜய் சேதுபதிகிட்ட படத்தோட ஸ்டோரி சொல்லிட்டு டிஸ்கஷன் பண்ணேன். அவர்கிட்ட எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்ணணும்னு நிறைய கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். அந்தளவுக்கு என்னோட நலம் விரும்பியா விஜய் சேதுபதி இருக்கார்."

'அருவி' படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகமான நடிகை அதிதி பாலன். தற்போது 'குட்டி லவ் ஸ்டோரி' எனும் ஆந்தாலஜி படத்தில் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'ஆடல் பாடல்' கதையில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார் அதிதி. அவரிடம் பேசினேன்.

'ஆடல் பாடல்' வாய்ப்பு எப்படி வந்தது?

''நலன் சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. இந்த ப்ராஜெக்ட் பற்றி சொன்னார். கதையை அனுப்பி வெச்சார். நல்லாயிருந்தது. முதல்ல லுக் டெஸ்ட் பண்ணோம். அப்போ, விஜய் சேதுபதி சார்கூட கன்ஃபர்மா நடிக்கப்போறேன்னும் தெரியாது. அவர் நடிப்பாரானு கொஞ்சம் டவுட் இருந்தது. ஆனா, நலன் குமாரசாமி சாரின் கதை என்பதால் விஜய் சேதுபதி நடிச்சார். எனக்கு செம சந்தோஷம். ஏன்னா, அவருடைய தீவிர ரசிகை நான்.''

விஜய் சேதுபதியை ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தப்போ எப்படியிருந்தது?

குட்டி ஸ்டோரி
குட்டி ஸ்டோரி

"முதல்ல கொஞ்சம் பயந்தேன். படத்தோட ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடி ஸ்க்ரிப்ட் ரீடிங் செஷன் இருந்தது. அப்போ, கொஞ்சம் பயம் போச்சு. நம்மகிட்ட பேசிப் பேசியே கம்ஃபர்ட் ஸோன்ல கொண்டு வந்தாங்க. ஆனாலும், ஷூட்டிங் அப்போ கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். நான் பயப்படுறேன்னு தெரிஞ்சிக்கிட்டு Calm Calm-னு சொல்லுவார். ரொம்ப தன்மையான மனுஷன். மலையாளத்துல ப்ரித்வி ராஜ் படத்துல கமிட்டாகுறதுக்கு முன்னாடி விஜய் சேதுபதிகிட்ட படத்தோட ஸ்டோரி சொல்லிட்டு டிஸ்கஷன் பண்ணேன். அவர்கிட்ட எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்ணணும்னு நிறைய கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். அந்தளவுக்கு என்னோட நலம் விரும்பியா விஜய் சேதுபதி இருக்கார்."

'அருவி' படத்துக்குப் பிறகு ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?!

அதிதி பாலன்
அதிதி பாலன்

"நிறைய ஸ்க்ரிப்ட் வந்தது. ஆனா, எனக்கு பிடிச்ச மாதிரி எதுவும் சரியா அமையல. அதனால, கொஞ்சம் டைம் எடுத்துட்டு பண்ணலாம்னு முடிவு செஞ்சிட்டேன். இந்த மூணு வருஷ இடைவெளியில அதிகமா ட்ராவல் பண்ணேன். எப்பவும் ட்ராவலிங் என் வாழ்க்கையில இருக்கும். சோலோ ட்ரிப் நிறைய போயிருக்கேன். இன்னும் அதிகமா ட்ராவல் பண்ணவும் விரும்புறேன்."

இந்தப் படத்துல கொஞ்சம் கிளாமரா நடிச்சிருக்கீங்கன்னு சொல்றாங்களே?!

அதிதி பாலன்
அதிதி பாலன்

"படத்துக்கு, அனு வர்தன் மேடம்தான் காஸ்ட்யூம். ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி காஸ்ட்யூம் பார்க்குறதுக்கு போனேன். அப்போதே இப்படித்தான் நமக்கான காஸ்ட்யூம் டிசைன் இருக்கப் போகுதுனு தெரிஞ்சது. அதுமட்டுமில்லாம கதையே லாக்டெளன்ல வீட்டுக்குள்ள நடக்குறதுதான். இப்பலாம் வீட்டுக்குள்ள இப்படித்தான் டிரெஸ் போடுறாங்க. அதனால, எனக்கு தப்பா தெரியல. என்னோட வீட்டுல இருக்குறவங்களுக்கும் படம் பிடிச்சிருந்தது. முழுபடமும் பார்த்துட்டாங்க. அவங்க எல்லோருக்கும் படம் ரொம்ப பிடிச்சிருந்தது."

ஓடிடி தளத்துகாக எடுத்த படம் தியேட்டர்ல ரிலீஸாகுற ஃபீல் எப்படியிருக்கு?

"ரொம்ப நல்லாயிருக்கு. ஏன்னா, படத்துல கமிட்டாகுறப்போ ஓடிடி ரிலீஸ்னு இருந்தது. இப்போ மாறிருச்சு. மொத்தமா ஸ்க்ரீன்ல பார்த்தப்போ படத்தோட கான்செப்ட் ரொம்ப நல்லாயிருந்தது. மொத்தமா 'குட்டி லவ் ஸ்டோரி' பிடிச்சிருந்தது. கெளதம் சாருடைய 'எதிர்பாராத முத்தம்' நல்லாயிருந்தது. அவரோட லவ் ஸ்டோரி எப்பவும் வித்தியாசமா இருக்கும். இதுலயும் ஒரு மேஜிக் பண்ணியிருக்கார். வெங்கட் பிரபு சாரோட படமும் நல்லாயிருந்தது. அனிமேஷன்ஸ் இருக்குறனால குட்டி பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஏ.எல்.விஜய் சாரின் படமும் நல்லா இருந்தது. நாலுமே வித்தியாசமான லவ் ஸ்டோரீஸ்!''

மலையாளத்துல ப்ரித்வி ராஜ் மற்றும் நிவின் பாலிகூட நடிக்குற அனுபவம் எப்படியிருக்கு?

அதிதி பாலன்
அதிதி பாலன்

"ரெண்டு பேரையும் ஸ்க்ரீன்ல பார்த்து வியந்திருக்கேன். நிவின் பாலி புராஜெக்ட்டோட ஷூட்டிங் இன்னும் அஞ்சு நாள் இருக்கு. கண்ணூர்ல படத்தோட ஷூட்டிங் நடந்தது. கிராமத்துல இருக்குற பொண்ணு மாதிரியான ரோல். நிவின் பாலியை 'பிரேமம்' படத்துல பார்த்து பிடிச்சிருந்தது. அதுக்கு அப்புறம் 'மூத்தோன்' படம் பார்த்தப்போ வேற மாதிரியான லுக்ல மிரட்டியிருந்தார். இவர்கூட நடிச்சப்போ ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணார். ப்ரித்வி ராஜ்கூட நடிச்சதும் நல்ல அனுபவம். ரொம்ப சின்சியரான வொர்க்கர். வேலையில கரெக்டா இருப்பார். பத்திரிகையாளர் கேரக்டர் பண்ணியிருக்கேன். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர். ஹீரோக்கு சமமான ரோல் ஹீரோயினுக்கும் படத்துல இருக்கு."

'அருவி' வெற்றியால் கமர்ஷியல் ஹீரோயின் லுக் இருக்கக் கூடாதுனு சில கதைகள்ல நடிக்காம விட்டுட்டீங்களா?

'அருவி'
'அருவி'

"எனக்கான கதைகள் அமையல. 'அருவி'க்குப் பிறகு ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகள் நிறைய வந்தன. எனக்கு இதுல உடன்பாடில்ல. ஒரே மாதிரியான கதைகளே பண்ண வேண்டாம்னு நினைச்சேன். தவிர, கமர்ஷியல் ஹீரோயினா நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணியெல்லாம் நடிக்காம இருக்கல."

கொடைக்கானல்ல மாஸ்க் போடாததுக்கு நீங்க அபராதம் கட்டுன வீடியோ வைரல் ஆச்சு. அதைப் பற்றி சொல்ல முடியுமா?

"கொடைக்கானலுக்கு கார்ல நான், அம்மா, அப்பா, டிரைவர் அண்ணாகூட போயிருந்தேன். அப்போ, கார்ல ஃபேமிலியோட இருந்தாலும் மாஸ்க் போடணும்னு எனக்குத் தெரியல. வந்தவுடனே போலீஸ் ஃபைன் கட்டணும்னுனார். 'சரிங்க சார்'னு சொல்லி கட்டிட்டேன். ஆனா, இந்தப் பணம் எங்கே போகுதுனு தெரிஞ்சிக்கணும்னு கேள்வி கேட்டேன். அந்த வீடியோதான் வைரல் ஆச்சு."

அடுத்த கட்டுரைக்கு