Published:Updated:

``நானும், யாஷிகாவும் இனி சேர்ந்து நடிக்கமாட்டோம்!” - ஐஸ்வர்யா தத்தா

Aishwarya Dutta
Aishwarya Dutta

`நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு தோணுது. காரணம், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள்’

மேற்குவங்கத்திலிருந்து வந்து தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான் இவருக்கு அடையாளம். ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் இறுதிவரை வந்த ஐஸ்வர்யா தத்தா, இப்போது நான்கைந்து படங்களில் பிஸி. அவருடனான அலைபேசி உரையாடலிலிருந்து...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு உங்க சினிமா பயணம் எப்படி இருக்கு?

"அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் பல பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆனா, நான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கேன். காரணம், நல்ல கதைகள்ல நடிக்கணும். அதைவிட முக்கியம், நாம நடிக்கிற படம் வெளியாகணும். நல்ல கதையா இருந்தாலும் படம் வெளியாகலைன்னா நம்ம உழைப்பு வீணாகிடும். அதனால, இந்த மாதிரி விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்துறேன். இப்போ, நான்கு படம் கைவசம் இருக்கு."

'அலேகா' படத்துல நடிச்ச அனுபவம்?

ஆரி - ஐஸ்வர்யா தத்தா
ஆரி - ஐஸ்வர்யா தத்தா

"எனக்கு இந்தப் படம் ஸ்பெஷல். ஏன்னா, பிக்பாஸ் முடிஞ்சவுடன் எனக்கு வந்த முதல் வாய்ப்பு. ஆரிக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். ரொம்ப மெச்சூர்டான பொண்ணு கேரக்டர். இந்தப் படத்தை ராஜமித்ரன் சார் இயக்கியிருக்கார். இருந்தாலும் ஆரியுடைய பங்கும் டைரக்‌ஷன்ல அதிகம் இருந்தது. அந்த அளவுக்கு ஆரி ரொம்ப ஆர்வமா இருந்தார். வழக்கமான கமர்ஷியல் படமா இல்லாமல் ஃபேமிலி எமோஷன்களைப் பத்தி பேசுற படமா இருக்கும். நாசர் சார் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். சீனியர் ஆர்ட்டிஸ்டுங்கிறதை எந்த இடத்திலேயும் காட்டிக்க மாட்டார். என் ரியாக்‌ஷன், வாய்ஸ் மாடுலேஷன்னு நிறைய இடங்கள்ல என் நடிப்புல கரெக்‌ஷன் சொல்லி, என்னை என்கரேஜ் பண்ணார். இந்தப் படம் பண்ணிட்டு இருந்த சமயத்துல என் வாழ்க்கையில சில பர்சனல் பிரச்னைகள் இருந்ததுனால, நான் நடிச்ச எமோஷன் சீன்கள்ல க்ளிசரின் இல்லாமலே எனக்கு அழுகை வந்திடுச்சு. அந்த இக்கட்டான சூழல்ல எனக்கு ஆதரவா இருந்த என் நண்பர்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் நன்றி."

மஹத்கூட 'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா' படம் எந்த அளவுல இருக்கு?

"படத்தோட ஷூட்டிங் இன்னும் பேலன்ஸ் இருக்கு. இது ரொமான்டிக் காமெடி ஜானர் படம். ’பிக் பாஸ்’ல இருந்தே நானும் மஹத்தும் நல்ல நண்பர்கள். இப்போ, அவங்க குடும்பத்துல நானும் ஒரு நபர் மாதிரி ஆகிட்டேன். மஹத், அவங்க அப்பா, அம்மா, மஹத் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு ப்ராச்சி... எல்லோருமே எனக்கு நல்ல பழக்கம். எனக்கு ஏதாவது பிரச்னைனா இவங்கதான் முதல்ல வந்து ஆதரவா இருப்பாங்க. அப்படியொரு குடும்பத்தைச் சம்பாதிச்சது நான் பண்ண பாக்கியம்.

எனக்குள்ளே இந்தளவுக்கு தைரியம் வர காரணம், மஹத். அவங்க குடும்பத்துல எல்லோரையும் நல்லா தெரியுங்கிறதுனால, ரொமான்டிக் காட்சிகள்ல நடிக்கக் கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனா, நடிப்புன்னு வந்துட்டா அதெல்லாம் பார்க்கக்கூடாதுனு நடிச்சுட்டேன். மொட்டை ராஜேந்திரன் அண்ணா, மஹத் இவங்க எல்லோரும் இருக்கிறதனால ஸ்பாட் கலகலப்பா இருக்கும். அடுத்த ஷெட்யூல்ல யோகி பாபு அண்ணாவும் வர்றார். அப்போ, எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும்!"

'கன்னித்தீவு'னு ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம் பண்றீங்கன்னு கேள்விப்பட்டோமே!

'கன்னித்தீவு'
'கன்னித்தீவு'

"ஆமா. வரலட்சுமி சரத்குமார், நான், ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா... நாலு பேர் நடிக்கிறோம். இந்தப் படத்துக்கான ஷூட்டிங் பாதி முடிஞ்சிடுச்சு. இந்தப் படத்துல வரலட்சுமினு ஒரு நல்ல தோழி கிடைச்சிருக்காங்க. அவங்ககூட இருந்தா, பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குது. இதுவரைக்கும் தூரமா நின்னு ஸ்டன்ட்ஸ் எப்படிப் பண்றாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன். ஆனா, இதுல நிறைய ஸ்டன்ட் காட்சிகள் எனக்கு இருக்கு. இதை எல்லாம் பண்ணும்போதுதான், ஃபைட்டர்ஸ் எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியுது. முதல்முறையா ஆக்‌ஷன் சீனெல்லாம் பண்ணும்போது, நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. வரு எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க. தவிர, 'சர்கார்', 'மாரி 2'னு அவங்க நடிச்ச படங்கள்ல நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை எங்ககிட்ட பகிர்ந்துக்குவாங்க."

'பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)'னு ஒரு படத்தை ஆரம்பிச்சிருக்கீங்க. இது என்ன மாதிரியான படம்?

" 'தாதா 87' இயக்குநர் விஜய்ஶ்ரீ சார்தான் இந்தப் படத்தை இயக்குறார். வித்தியாசமான கதை. பப்ஜி விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுல எனக்கு பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு சாயலும் இருக்கிற மாதிரியான கேரக்டர். இப்போதான் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு. இந்தப் படத்திலும் மொட்டை ராஜேந்திரன் அண்ணா இருக்கார். இந்தப் படங்கள் தவிர, ஒரு ஹிட் படத்தின் சீக்வெல்ல நடிக்கக் கமிட் ஆகியிருக்கேன். அது எந்தப் படத்துடைய சீக்வெல்ங்கிறது சஸ்பென்ஸ்!"

நீங்களும் உங்க தோழி யாஷிகாவும் எப்போ சேர்ந்து நடிக்கப்போறீங்க?

யாஷிகா - ஐஸ்வர்யா தத்தா
யாஷிகா - ஐஸ்வர்யா தத்தா

"யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கா. அவ நடிச்ச 'ஜாம்பி' பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தளவுக்கு வந்திருக்கா. நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு தோணுது. காரணம், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிக்கும்போது, போட்டி போட்டு நடிக்கவேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. நாங்க ரெண்டுபேரும் இப்போ இருக்கிற மாதிரி நல்ல தோழிகளா இருக்கவே விரும்புறோம். அதனால, சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு