``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது இப்போ அந்தப் பொண்ணு ஃபீல் பண்ணும்!'' - ஐஷ்வர்யா ராஜேஷ்

ஆரம்பத்தில், தமிழ்ப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். அதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.
தமிழ், தெலுங்குனு ரொம்ப பிஸியா இருக்கீங்க. ஒரே நாள்ல ரெண்டு படம் ரிலீஸாகுது. எப்படி இருக்கு?
"ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடத்துல ரிலீஸாகுற முதல் தமிழ்ப் படம், 'மெய்'. படத்துல மெடிக்கல் ரெப்பா நடிச்சிருக்கேன். உடலுறுப்பு திருட்டு உள்ளிட்ட நிறைய மெடிக்கல் க்ரைம் பத்தி இதுல பேசியிருக்கோம். அதேபோல 'கனா'வின் தெலுங்கு ரீமேக்கான 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி'யும்' ரிலீஸாகுது. 'கனா' என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம்."
இயக்குநர்கள் கதை சொல்லும்போது நிறைய கேள்விகள் கேட்பீங்களாமே?

"நம்ம வாழ்க்கையில நடந்த ஏதோ ஒரு விஷயத்தைதான் ஸ்கிரிப்ட்டா எழுதுறாங்க. ஒரு படம் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடந்ததை எடுத்த மாதிரி ஃபீல் ஆகும். உதாரணத்துக்கு, '96' படத்துல வர்ற மாதிரி நம்ம ஸ்கூல் லைஃப்லேயும் ஒரு காதல் இருந்திருக்கும். 'காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணேன். ஆனா, புரொபோஸ் பண்ணலை'னு விஜய் சேதுபதி ஒரு பேட்டியில சொன்னார். இப்போ அந்தப் பொண்ணுக்கு அது தெரிஞ்சா எவ்ளோ ஃபீல் பண்ணும். அதுமாதிரிதான் எல்லாமே. 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்துல நடிக்கும்போது என் பர்சனல் வாழ்க்கையோட நிறைய கனெக்ட்டாச்சு. காரணம், என் அண்ணா என்மேல நிறைய பாசம் வெச்சிருக்கான். கதை கேட்கும்போது அதை அப்படியே விஷுவலா பார்ப்பேன். எனக்கு கனெக்ட் ஆகாத பட்சத்துல இயக்குநர்கள்கிட்ட சந்தேகம் கேட்பேன்."
முன்னணி நடிகையா வளர்ந்துட்டு வர்ற சமயத்துல தங்கச்சி கேரக்டர் பண்ண யோசிச்சீங்களா?
"ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், அது என்ன சொல்லப்போகுது, அதுல எவ்வளோ ஸ்கோப் இருக்குனுதான் பார்ப்பேன். `நடிச்சா ஹீரோயின்தான்' கான்செப்ட்லாம் இல்லை. `நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துல தங்கச்சி கதாபாத்திரம் ரொம்ப சூப்பரா இருக்கும். இது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அதே மாதிரி, `கனா' படத்துல சத்யராஜ் சார்தான் ஹீரோ, நான் ஹீரோயின். எல்லா படத்துலேயும் ஒருவருடைய கதாபாத்திரத்தை கேரக்டர்தான் முடிவு பண்ணும்."
இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறதுல சிரமம் இருந்ததுனு சொன்னீங்களே?

"சிரமம் இல்லை. அப்போ நான் பொறுமையா ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுத்து பண்ணணும்னு இருந்தேன். இவங்க என்னை இந்தப் படத்துக்காக அணுகும்போது ஒரு படம்தான் போயிட்டிருந்தது. அந்தப் படத்துக்கு 40 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். இடையில 10 நாள் இந்தப் படத்துக்குக் கொடுத்தா, அந்தப் படத்துக்குப் பிரச்னை வருமோனு யோசிச்சேனே தவிர, வேற ஒண்ணுமில்லை. 'மெய்' படக் கதை கேட்டவுடனே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 'என்கூட யாரும் நடிக்க மாட்டேங்கிறாங்க'னு சொன்னார் நிக்கி. ரெண்டு, மூணு படங்கள் பண்ண ஹீரோயின்களே அவர்கூட நடிக்க தயங்கியிருக்காங்க."
சார்லிகூட நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க?
"என்னுடைய முதல் படம் 'அவர்களும் இவர்களும்'. அதுல சார்லி சார்கூட நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு, இந்தப் படத்துலதான் வொர்க் பண்ணியிருக்கேன். ஒரு பாவப்பட்ட அப்பாவா நடிச்சிருக்கார். இந்தப் படத்துல நான் அவரை டூ வீலர்ல கூட்டிட்டுப்போற மாதிரி ஒரு சீன் இருந்தது. ஆனா, எனக்கு டூ வீலர்ல டபுள்ஸ் ஓட்டத் தெரியாது. இதை அவர்கிட்ட சொல்லாமலே அவரை உட்காரவெச்சு வண்டி ஓட்டி, டேக்கையும் ஓகே பண்ணிட்டேன். வண்டியில இருந்து இறங்கின பிறகு, 'உனக்கு வண்டி ஓட்டத்தெரியுமா, தெரியாதா?'னு கேட்டார். 'சத்தியமா டபுள்ஸ் ஓட்டினதில்லை. இதுதான் முதல்முறை'னு சொன்னதும் ஷாக்காகிட்டார். அவர் மாதிரியான நடிகர்கள்கூட நடிக்கும்போது நிறைய கத்துக்கலாம்."
'மாலையே' பாட்டுல ரஜினி பேனர் பக்கத்துல நின்னு நீங்க அவருக்கு சல்யூட் அடிப்பீங்க. இது உங்க ஐடியாவா?

"நான் ரஜினி சாருடைய பெரிய ஃபேன். அவர்கூட ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு ஆசை. இனியாவது நடக்குதானு பார்க்கலாம்."
உங்க படங்களுக்கான விமர்சனங்களை படிப்பீங்களா?
"நான் ரிவ்யூ பார்க்கிறதுமில்லை, படிக்கிறதுமில்லை. அதே மாதிரி, ரிவ்யூ பார்த்துட்டும் ஒரு படத்துக்குப் போகமாட்டேன். எல்லோரும் ரிவ்யூ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதனால நான் ரிவ்யூ பார்க்கிறதை நிறுத்திட்டேன்."