Published:Updated:

`தொடர் தோல்விகள், ஷூட்டிங்கில் பதறிய ரஜினி, `நோ அட்வைஸ்' பாலிசி!’ - நடிகை ஐஸ்வர்யா ஷேரிங்ஸ்

அம்மாவுடன் ஐஸ்வர்யா
News
அம்மாவுடன் ஐஸ்வர்யா

விஜய் டிவி `காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியின் மூலம் முதல் முறையாக சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா. நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யாவிடம், நடுவர் பயணம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான `மீரா’ திரைப்படம், இளையராஜாவின் ஹிட் கிராஃபில் முக்கியமான படமும்கூட. `ஓ பட்டர்ஃப்ளை’ பாடல் இன்றளவும் பலரது ஃபேவரைட்டாக ஒலிக்கிறது. அந்தப் படத்துக்குப் பிறகுதான், நடிகை ஐஸ்வர்யாவுக்கு கோலிவுட்டில் அடையாளம் கிடைத்தது. சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர், விஜய் டிவி `காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியின் மூலம் முதல் முறையாக சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கியுள்ளார். நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யாவிடம், நடுவர் பயணம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

``பெரிய இடைவெளிக்குப் பிறகு, `சுயம்வரம்’ படத்துல ரீ-என்ட்ரி கொடுத்தேன். அதுல, முதல் முறையா காமெடி ரோல்ல நடிச்சேன். அப்பதான் என்னாலயும் காமெடி ரோல்ல நடிக்க முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. பிறகு, அதுமாதிரியான பல படங்கள்லயும், சீரியல்லயும் நடிச்சுட்டேன். இயல்பாவே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. எல்லோர் கூடவும் ஃப்ரெண்ட்லியா பழகுவேன். சமீபத்துல விஜய் டிவியில `ஸ்டார்ட் மியூசிக்’ ஷோவுல கலந்துகிட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடுத்த கொஞ்ச நாள்லயே, அந்த சேனல்ல இருந்து அழைப்பு வந்துச்சு. காமெடி ஷோ பத்தி சொன்னாங்க. புதுமையான அனுபவமா இருக்கும்னு, `காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவுக்கு நடுவரா இருக்க ஓகே சொன்னேன். இப்பவே நிறைய காமெடியுடன் செம ஜாலியா அந்த நிகழ்ச்சி போகுது. போட்டியாளர்களுடன் சேர்ந்து நானும் காமெடி ரகளை பண்ண ஆயத்தமா இருக்கேன்” என்று சிரித்தபடியே, தனது சினிமா பயணம் குறித்துப் பேசினார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

``ஸ்கூல் படிப்பு முடிச்சதும், வெளிநாட்டுல சட்டப்படிப்பு முடிச்சுட்டு அங்கேயே செட்டில் ஆகும் முடிவுல காத்துகிட்டிருந்தேன். அப்போ, என் அம்மாவின் தயாரிப்புல சிவசந்திரன் சார் கன்னடத்துல ஒரு படம் எடுத்தார். அந்தக் கதைக்கு ஏத்த மாதிரியான ஹீரோயின் அமையாமல் குழப்பத்துல இருந்தாங்க. அதுக்கான ஆடிஷன் நடக்கும்போது நேர்ல இருந்து பலமுறை கவனிச்சதால, டயலாக்ஸ் எனக்கு மனப்பாடமாகி ஒருநாள் நான் யதேச்சையா பேசிக் காட்டினேன். அந்தப் படத்துல என்னைத் தேர்வு செஞ்ச சிவசந்திரன் சார், அம்மாகிட்ட வலியுறுத்தி சம்மதம் வாங்கினார். `ஒருமுறை அரிதாரம் பூசினால் பூசியதுதான்’னு எம்.ஆர்.ராதா அங்கிள் சொல்ற டயலாக் மாதிரி, அந்தக் கன்னடப் படம் முடியுறதுக்குள்ள தெலுங்குப் பட வாய்ப்பு வந்துச்சு. அதோடு என்னோட கரியர் பிளான் கனவாவே போயிடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நான் புடிச்ச மாப்பிள்ளை’ படமும், அதன் தெலுங்கு ரீமேக்கும் பெரிய ஹிட். அதனாலேயே ரெண்டு மொழிகள்லயும் ஒரே நேரத்துல 14 படங்கள்ல கமிட் ஆனேன். அதுல ஒரு படம்தான் `மீரா’. பி.சி.ஸ்ரீராம் சார் முதன்முதலா இயக்கியதாலயும், இளையராஜா சார் இசையமைச்சதாலும் அந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. விக்ரமுக்கு ரெண்டாவது படம் அது. அதுல, நாங்க ரெண்டு பேரும் மேக்கப் இல்லாம நடிச்சோம். பெரும்பாலான காட்சிகள் மலைப் பிரதேசங்கள்ல சாயந்திரத்துலயும் அதிகாலை நேரத்துலயும் எடுக்கப்பட்டதால, விக்ரமும் நானும் ரொம்பவே சிரமப்பட்டு நடிச்சோம்.

அம்மாவுடன் ஐஸ்வர்யா
அம்மாவுடன் ஐஸ்வர்யா

அந்தப் படம்தான் எங்க ரெண்டு பேருக்கும் அடையாளம் கொடுத்துச்சு. பாடல்கள் செம ஹிட்டானாலும், `மீரா’ எதிர்பார்த்தபடி ஹிட் ஆகல. அப்போ நான் நடிச்ச மற்ற 13 படங்களும் தோல்வி அடையவே, `ராசியில்லாத நடிகை’ன்னு என்மேல முத்திரை குத்திட்டாங்க. அதனால, ரொம்பவே வருத்தப்பட்டேன். சரியான தருணத்துல எனக்கு ஊக்கம் கொடுத்த என் அப்பா, ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்னைப் பாதிக்காதவாறு பக்குவப்படுத்தினார். பாக்யராஜ் சாரின் `ராசுக்குட்டி’ படம் பெரிய ஹிட்டாகவே, மறுபடியும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. மலையாளத்துலயும் என்னோட கிராஃப் உயர்ந்துச்சு.

என் அம்மாவின் நண்பரான ரஜினி சார்கூட மகள்போல பழகிய நிலையில, `எஜமான்’ல அவருடன் வித்தியாசமான ரோல்ல நடிச்சது பயம் கலந்த அனுபவம். `உறக்கக் கத்துது கோழி’ பாடல் ஆறு நாள்களா இரவு நேரத்துல எடுக்கப்படவே, குளிர் தாங்க முடியாம வலிப்பு வந்து மயங்கிட்டேன். பதறிப்போய் என்னை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனார் ரஜினி சார். இப்படி சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைய உண்டு. மூணு வருஷம் மட்டுமே நடிச்ச நிலையில, கல்யாணமானதும் சினிமாவுல இருந்து விலகிட்டேன்” என்பவர், இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து நடிக்கிறார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

``ரீ-என்ட்ரிக்குப் பிறகுதான் சொந்தமா டப்பிங் பேச ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல, `ஹேராம்’ படத்தின் எல்லாப் பதிப்புலயும் ராணி முகர்ஜிக்கு என்னை டப்பிங் கொடுக்க வெச்சார் கமல் சார். `ஆறு’ படத்துல அடாவடியா சவுண்டு சரோஜாவா நடிச்சபோதுதான், சென்னை லோக்கல் பாஷையைக் கத்துகிட்டேன். `அபியும் நானும்’ல மனசுக்கு நெருக்கமான அம்மா, `வேல்’ல வெகுளியான மனைவினு என்னால முடிஞ்ச வரைக்கும் வித்தியாசமான ரோல்களைத் தேர்வு செஞ்சு நடிக்கிறேன்.

நடிப்பு வேலை ஒருபக்கம் இருக்க, பிராணிகள் வளர்ப்பு, சமையல்னு எனக்குப் பிடிச்ச விஷயங்கள்ல தொடந்து கவனம் செலுத்துறேன். மனிதர்களைவிட பிராணிகள்மேலதான் எனக்கு அன்பு அதிகம். என்னோட பூனைகளோடு தினமும் செல்லம் கொஞ்சுவேன். தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு கொடுக்குற வேலையை நேசிச்சு செய்யுறேன். என்னோட யூடியூப் சேனல்ல சமையல் வீடியோக்களைப் பதிவிடுறேன். ஷூட்டிங் இல்லாத நேரங்கள்லயும் பயனுள்ள வகையில பொழுதைக் கழிக்கிறேன்” என்றவர், தன்னுடைய குடும்ப உறவு முறை குறித்து கூறிய வார்த்தைகள் வித்தியாசமான உணர்வைக் கொடுத்தன.

அம்மாவுடன் ஐஸ்வர்யா
அம்மாவுடன் ஐஸ்வர்யா

``எங்க குடும்பத்துல ஒருத்தர் இன்னொருத்தரை சார்ந்து இருக்காம, சுயமா வளரணும் வாழணும்னுதான் நினைப்போம். யாருக்குமே அட்வைஸ் கொடுக்கவும், அட்வைஸ் கேட்கவும் விருப்ப மாட்டோம். என்னோட சின்ன வயசுல இருந்தே அம்மா எனக்கு அட்வைஸ் பண்ண மாட்டாங்க. அதேபோல, என்னோட மகளுக்கு நானும் அட்வைஸ் கொடுக்க மாட்டேன். சினிமா, குடும்ப பர்சனல் தாண்டிய பொதுவான விஷயங்கள் பத்தி மட்டுமே நேரம் கிடைக்கும்போது பேசுவோம்.

`வீட்டுல ஃப்ரீயா இருக்கீங்களா?’ன்னு முன்அனுமதி வாங்கிட்டுத்தான், ஒருத்தர் இன்னொருத்தரை சந்திக்கப் போவோம். எந்த உறவுகளா இருந்தாலும், வாழ்க்கையின் எல்லாத் தருணங்கள்லயும் கூடவே வரமாட்டாங்க. நம்மோட வாழ்க்கையை நாமதான் கட்டமைச்சுக்கணும். அதைப் பிரதிபலிக்கிற மாதிரி, இயல்பாகவே நாங்க அதுப்படித்தான் வாழுறோம்” என்று புன்னகையுடன் முடித்தார்.