சினிமா
தொடர்கள்
Published:Updated:

“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

படங்கள்: கிரண் சா

அமலா பால் இப்போது தயாரிப்பாளர். சொந்த வாழ்க்கையில் நேர்ந்த பிரிவு, பின்தொடர்ந்த மனத்தாங்கல்கள், ‘ஆடை’க்குப் பிறகு நேர்ந்த நீண்ட இடைவெளி. எல்லாம் கடந்து இப்போது பளீர் சிரிப்பும், கொஞ்சல் தமிழும், மிகுந்த தன்னம்பிக்கையுமாக நாம் கண்டது வேறு அமலா பால். பச்சரிசிப் புன்னகையுடன் உரையாடலைத் தொடங்கியதே அழகு!

‘‘எனக்கு ‘கடாவர்’ படத்தின் கதையைக் கேட்டபோதே நன்றாக இருந்தது. இயக்குநர் அனுப் அதைச் சொன்னவிதம் சினிமாவில் ஒரு மொழி இருக்குன்னு தெரிஞ்சது. நம்மை மேன்மையான உணர்வுக்கும் அன்புக்கும் கொண்டுபோக சினிமாவைப் பயன்படுத்துவதுதான் இப்போது முக்கியமானது. அப்படி ஒரு கதை இது. அவங்க சில இடங்களுக்குப் போய்ப் பார்த்திருக்காங்க. ஒரு ஹீரோயினுக்கு வேண்டிய கதையாக இருக்கிறதை ஹீரோவுக்கு மாற்ற முடியுமான்னு கேள்வி வந்திருக்கு. மனசில்லாமல் திரும்பி, கதை என் கவனத்திற்கு வந்தது. நானே தயாரிக்க முடிவு பண்ணிட்டேன். அனுபவத்தைச் சேர்த்துக்கிற இடத்தில்தானே இன்னும் இருக்கோம். சிலர் சினிமா தயாரிக்கிறது ரிஸ்க் இல்லையான்னு கேட்டாங்க. எனக்கு சினிமா மேல நம்பிக்கையிருக்கு. ஒரு நல்ல சினிமாவிற்கான எல்லா அடையாளத்தோடும் இருக்கிறதுதான் மகிழ்ச்சி. இந்தப் படம் என் உள்ளுணர்வினால் அமைஞ்சதுன்னு சொல்லணும். நம்மை ஒரு கேரக்டரில் ஒட்டிக்கொள்ளவும் அதில் இயல்பாய்க் கரைந்துகொள்ளவும் ஸ்கிரிப்ட் இடம் தந்தால் நல்லது. ‘கடாவர்’ அப்படி வந்திருக்கு.”

“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”
“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”

“கொஞ்ச நாளாக ஒரு இடைவெளி விட்டீங்களே... ஏன்?”

“பத்து வருஷத்துக்கு மேலே நடிச்சிட்டே இருக்கேன். சதா ஓட்டமும் நடையுமாக பரபரப்பில் இருந்தேன். பிளைட் பிடிக்கிறதும், ஷூட்டிங் ஸ்பாட் போறதும், நடிச்சுட்டு அடுத்த படத்துக்கு மாறுவதுமா ஒரே பயணம். கொரோனா வந்தது. அப்படியே எல்லோரும் நிதானமாகி வீட்டுக்குள் இருந்தோம். அப்படி இருந்த அமைதி எனக்குப் பிடிச்சது. கொஞ்சம் படிச்சிட்டு, நல்லா யோசிச்சுக்கிட்டு, செய்த தப்புக்கு வருந்திக்கிட்டு உடனே அதிலிருந்து யோகான்னு மாறிக்கிட்டு, கொஞ்சம் அந்த விடுமுறையை எக்ஸ்டென்ட் பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான். அப்பாவுக்கு கேன்சர் வந்து அவரது மறைவிற்குப் பிறகு எல்லாமே கசந்து, அப்புறம் அதிலிருந்தும் வெளியே வந்தேன்.”

“நீங்க மலையேற்றத்தில்கூட ஈடுபாடா இருக்கீங்க...”

“அதையும் கண்டுபிடிச்சிட்டீங்களா? நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி மலையேற்றத்திற்குப் போனேன். அதற்கு ‘பின்பார்வதி மலையேற்றம்’னு சொல்வாங்க. ரொம்ப கஷ்டம். ஆனால் நமக்குள்ளே ஒரு தெம்பு தன்னால் வந்திடும். இப்படி மலையேற்றத்திற்குப் போன முதல் நடிகை நானாகத்தான் இருப்பேன்னு எல்லோரும் சொல்றாங்க. அப்புறம் டோடிடால் மலையேற்றம் போயிருக்கேன். அங்கேயிருக்கிற நதி, பனியால் மூடி இருக்கும். முங்கி எழுந்தால் உங்கள் உடல்நலம் நல்லா வந்துடும். நமக்கான செக்யூரிட்டி நம்மகிட்டேதான் இருக்கணும். நமக்குன்னு ஒரு இலக்கை செலக்ட் பண்ணி அதில் ஈடுபாடாக இருந்தால் நாம் ஈசியாக எதையும் சரி பண்ணிக்கிட்டு மீண்டும் வரலாம். ஒவ்வொருத்தர் மகிழ்ச்சியும் அவங்க கண்டுபிடிக்கிற இலக்குல மட்டுமே இருக்கு. நீடிச்சு இருந்து சாதனை செய்தவங்க யாரைப் பார்த்தாலும் இது புரியும்.”

“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”
“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”

“இமயமலைக்குக்கூடப் போனீங்க...”

“இரண்டு தடவை போயிட்டு வந்தேன். இயற்கை என்னை எப்போதும் அழைச்சிட்டே இருக்கு. சித்தர்கள், முனிவர்களைப் பார்க்கும்போது ரொம்ப நிம்மதியாக இருக்கு. இப்ப தியானத்திலும் இறங்கியிருக்கேன். அதுதான் நம்மைக் கட்டுக்குள் வைக்குது.நம்ம முன்னோர் களெல்லாம் மலை, நதி, வனங்களைச் சுற்றியிருந்தாங்க. நாம்தான் இயற்கையிடமிருந்து எதையும் தெரிஞ்சுக்கலை. அந்தப் பெரிய மலைகளின் அமைதியைப் பார்க்கும்போது நம் மனசும் அப்படியே ஆகிடும். அங்கே போயிட்டு நல்ல மாற்றங்கள் வந்திருக்கு.”

“இப்பல்லாம் சினிமாவில் நிறைய போட்டி இருக்கே...”

“இருக்கட்டுமே! அது இல்லாத இடத்தில் எப்படி நம்மை நிரூபிக்கிறது? என் படங்களை கவனமாக செலக்ட் பண்றேன். இன்னும் மனசுக்கு நெருங்கும்போது இதோ ஒரு சினிமாகூட தயாரிச்சிட்டேன். இப்ப சினிமா உலகம் ஒரு நல்ல ஸ்டேஜில் இருக்கு. நல்ல சினிமாவுக்கு, நடிப்புக்கு மரியாதை இருக்கு. உழைப்பை நம்புறாங்க. யாருக்குத் திறமை இருக்கோ அவங்கதான் பிழைக்க முடியும் என்கிற காலம் வந்துவிட்டது. இந்த மாதிரி நேரத்தில் கையில் நல்ல படங்கள் இருக்கிறது சந்தோஷம்.”

“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”
“அஜித் செய்வது பெரிய ஆச்சரியம்!”

“இப்ப பிடிக்கிற ஹீரோக்கள், ஹீரோயின்கள் யாரு?”

“விஜய்சேதுபதி ரொம்பப் பிடிக்கும். அவர்தான் ஸ்டீரியோ டைப் கேரக்டர்களையெல்லாம் உடைக்கிறார். சில கேரக்டர்களை விரும்பித் தேர்ந்தெடுத்து ஒரு ஆக்டர் எப்படி இருக்கணும்னு அழகா நமக்குக் காட்டுகிறார். தோற்றத்தில்கூட அவர் தனி விதமா இருக்கார். அவருக்கு அவர்மேலே இருக்கிற நம்பிக்கை, எனக்குப் பிடித்த மாதிரிதான் நடிப்பேன்னு நடிக்கிற விதம் இருக்கில்லையா... அதுவும் பிடிக்கும். சாய்பல்லவி ஒவ்வொரு கேரக்டருக்கும் அதிகபட்சமான உழைப்பைக் கொடுக்குறாங்க. கீர்த்தி சுரேஷ் நல்ல ரோல்களைத் தேர்ந்தெடுக்குறாங்க. நயன்தாராவின் வளர்ச்சி எவ்வளவு அழகானது. தனுஷின் நடிப்புக்கு நான் ரசிகை. அஜித் சார் எவ்வளவு நாளாக சினிமாவில் இருந்துக்கிட்டு ஒரு பிரைவேட் லைஃப் லீடு பண்றார். அது பெரிய ஆச்சரியம். அதுவும் பிடிக்கும்.”