Published:Updated:

``நான் மேக்கப் போட்ட பிறகுதான் என்னைப் பார்க்கணும்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்!'’ - அம்மு அட்ராசிட்டி

அம்மு
அம்மு ( ஆ.முத்துக்குமார் )

நடிகை அம்முவிடம் ஒரு ஜாலி சாட்!

சினிமா நடிகையாக மட்டுமல்ல; சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் பரதநாட்டிய கலைஞராகவும், மாடலாகவும் எனக் கடந்த 22 வருடங்களாகக் கலக்கி வரும் அம்முவிடம் ஒரு ஜாலி உரையாடல், 'அம்மு என்கிற பெயருக்கேற்ப குழந்தைத்தனத்தோடு பேச ஆரம்பித்தார்.

’’எனக்கு வில்லத்தனமான ரோலில் நடிக்கத்தான் ஆசை. அந்த ஆசையும் 'ஒரு மலையாளம் கலர் படம்' என்கிற மலையாளம் படத்தில் நிறைவேறிடுச்சு. அந்தப் படத்தில் நான் ஒரு கண்டிஷனும் போட்டேன். நான் மேக்கப் போட்டு முடித்த பிறகுதான் என்னைப் பார்க்கணும்னு டைரக்டர்கிட்ட சொன்னதும், அவர் புரியாமல் விழித்தார். இருந்தாலும் ஒப்புக்கொண்டார். ஷூட்டிங் நாள் வந்தது. சொன்ன மாதிரியே அந்தக் கதாபாத்திரத்தில் போய் நின்றேன். பெரிய பொட்டு வைத்து, சேலையில் போனேன். அதுவரை டைரக்டரிடம் போனில்தான் பேசிட்டு இருந்தேன். அவரை நான் நேரில் பார்த்ததில்லை. வெயில் காலமான அந்த நேரத்தில் மொட்டை மாடியில் ஷூட் வைத்திருந்தார்கள். மேக்கப் எல்லாம் வேர்வையில் நனைய ஆரம்பிக்க, உடனே, 'ஹேர் ஸ்டைலிஸ்ட் எங்க, மேக்கப் மேன் எங்க?'னு டைரக்டர்கிட்டயே கத்திட்டு இருந்தேன். 'நான்தாம்மா டைரக்டர்'னு சொன்னதும் பக்குனு ஆகிடுச்சு. அதுக்கப்புறம் சிரிச்சு ஒருவழியா சமாளிச்சிட்டேன். அந்தப் படத்தில், வில்லத்தனமான மருமகள் கதாபாத்திரத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது. வில்லி கதாபாத்திரத்தை அடுத்து எனக்கு பிச்சைக்காரி கதாபாத்திரம் பண்ணணும்னு ஆசை. எந்த மேக்கப்பும் போடாமல் எழுந்த உடனே ஷூட்டிங்குக்கு வந்திடலாம் பாருங்க; அதனாலதான். ஆரம்பத்தில் ஏழைப்பொண்ணு, ஏழை தங்கச்சி மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிச்சேன். அடுத்தடுத்துதான் டீசன்ட் கதாபாத்திரங்களில் மேக்கப் போட்டு நடிக்க ஆரம்பித்தேன்.

அம்மு
அம்மு
ஆ.முத்துக்குமார்

நான் அடிப்படையில் பரதநாட்டிய டான்ஸர். ஆக்டிங், ஆங்கரிங் இவைதான் என்னை அடையாளப்படுத்தியது. நடிக்க வந்த பிறகுதான் டான்ஸ் ஆட கத்துக்கிட்டேன். நடிக்கும்போது கண்களில் ஆக்‌ஷன் பண்ணி பண்ணி அது பரதநாட்டியத்துக்கு பயன்பட்டுச்சு. விஜய் சார்கூட 'கில்லி' படத்தில் நடிச்சிருக்கேன். ரஜினி சார்கூட போட்டோதான் எடுக்க முடிந்தது. கமல்சாரை பார்க்கத்தான் முடிந்தது. விஜய்சேதுபதிகூட நடிக்க அவ்வளவு ஆசை. வாய்ப்புக் கிடைத்தால் அவருடைய படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்'' என்றவருக்கு சைக்காலஜி அவ்வளவு பிடிக்குமாம்.

''மெட்ராஸ் யுனிவர்சிட்டியில், பி.ஏ சைக்காலஜி இப்போதான் முடிச்சிருக்கேன். ரிசல்ட்டுக்காக வெயிட்டிங். அதில் முதுகலை செய்யணும்னு ஆசை இருக்கு. எதிர்காலத்தில் ஒரு கவுன்சலராக இருக்கத்தான் பிரியப்படுகிறேன். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து நடிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் என் பெயரை தக்க வைப்பதற்கே போராட வேண்டியிருந்தது. முதலில் என் பெயரை அம்முனுதான் வச்சிருந்தேன். நானே குட்டியாக இருக்கேன். என் பெயராவது கொஞ்சம் நீளமாக இருக்கட்டுமேனுதான் அப்பா பெயரையும் சேர்த்து, அம்மு ராமசந்திரன் என வைத்தேன்.

அம்மு
அம்மு
ஆ.முத்துக்குமார்

இப்போதுதான் சோஷியல் மீடியா பாப்புலர் ஆகியிருக்கு; அப்போது அது இல்லை. ஒரு புராஜெக்ட் செய்யுற வரைதான் மக்கள் நம் பெயரை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அதனால் அடுத்தடுத்த புராஜெக்ட்டில் உடனே கமிட் ஆக வேண்டியிருக்கும். 'அவர்கள்', 'பெண்', 'அஞ்சலி' எனப் பல சீரியல்களில் நடித்தேன். சினிமாவைப் பொறுத்தவரை, வெங்கட் பிரபுவின் 'சரோஜா', கரு.பழனியப்பனின் 'மந்திரப் புன்னகை', விக்ரமனின் 'மரியாதை' போன்ற படங்கள் எனக்கான அடையாளத்தைத் தந்தன. சமீபத்தில் ’டிராஃபிக் ராமசாமி’ படத்தில் நடித்திருந்தேன்’’ என்றவரிடம் மறக்க முடியாத ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் பற்றிக் கேட்டேன்,

`` `டிராஃபிக் ராமசாமி' படத்துக்கான கடைசி நாள் ஷூட்டிங் என்னால் மறக்க முடியாது. படத்தின் ஒரு சீனுக்காக கேக் வெட்டினார்கள். அப்போது, நான் அங்கு இல்லை. கடைசி வரை அந்த கேக்கை என்னால் சாப்பிட முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. ’கடைசி வரை கேக்கை கண்ணில் காட்டலையே'னு பாவமா கேட்டேன். ஷூட்டிங் முடிந்து பேக்கப் அன்று, கேக் வாங்கி எஸ்.ஏ.சி சார் என்னை கூப்பிட்டாங்க. நான் கேட்ட வெண்ணிலா கேக்கை எனக்காக வாங்கி வெட்டியது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது. என்னுடைய ஒவ்வொரு புராஜெக்ட்டிலும் வாழ்ந்திருக்கேன்னுதான் சொல்லணும். ஒவ்வொரு புராஜெக்ட்டும் முடியும்போது அழுகையோடுதான் வெளியில் வருவேன். அடுத்தடுத்த சில நாள்களுக்கும் அந்தச் சோகம் நீளும்'' என்றவரிடம் யாருடன் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிப்போனது எனக் கேட்டேன்.

''அஜித் நடித்த 'ஆஞ்சநேயா' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதேபோல இன்னொரு படத்தில் தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் நான் வேறு சில வேலைகளில் இருந்துவிட்டேன். இப்போது அவருடைய படத்தில் நடிப்பதற்காக போட்டாபோட்டி நடக்கிறது. அன்று நமக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமேனு இப்போதும் ஃபீல் பண்ணிட்டுத்தான் இருக்கேன்’’ என்றவரிடம், ‘22 வருடங்களாக இருந்த துறையில் இருக்கீங்க. உங்களைப் போன்ற நடிகர்களுக்கு நீங்க சொல்லும் அட்வைஸ் என்ன’ என்று கேட்டேன்.

''உங்களுக்காக ஒரு புராஜெக்ட் கமிட் ஆனதும், இது வாங்கணும் அது வாங்கணும்னு யோசிக்காதீங்க. மரத்தில் இருக்கும் பலாப்பழத்தைவிட, கையில் இருக்கும் கலா காயே மேல் என நினையுங்கள். தேவையில்லாத ஆடம்பரத்துக்காக ஆசைப்பட்டு கடனில் சிக்கி தத்தளிக்காதீர்கள். அதேபோல, சினிமா மட்டுமல்ல எந்த ஒரு துறையாக இருந்தாலும் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள். அதற்கான பலன் ஒருநாள் கிடைத்தே தீரும். உங்கள் வீட்டாருக்கு நீங்கள் அந்த வீட்டுப் பிள்ளைதான் என்பதை உணருங்கள். எல்லா இடத்திலும் நீங்கள் பெரிய பிரபலம் என்பதை முன் வைக்காதீங்க. கணவன், மனைவி தங்களுக்குள் விட்டுக் கொடுத்துப் போகும் பழக்கத்தை கைவிட்டுவிடாதீர்கள். இவற்றை கடைப்பிடித்தாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’’ என்றவரிடம், 'கல்யாணம் எப்போது..?' என்றதற்கு, ‘’இப்போதைக்கு நோ கமென்ட்ஸ்’' எனச் சின்ன சிரிப்போடு முடித்துக்கொண்டார் அம்மு.

அடுத்த கட்டுரைக்கு