Published:Updated:

`` `பிகில்'ல வராத சீன், நயன்தாராவின் பரிசு, கண்ணை மூடி திட்டு வாங்கின விஜய்!" - `பிகில்' அம்ரிதா

`தெறி' படத்துல எனக்கு அவர்கிட்ட பேசுற மாதிரி ஒரேயொரு வசனம்தான் இருந்தது. அதைச் சொல்றதுக்கே அவ்ளோ கஷ்டப்பட்டேன். ஏன்னா, நாம ஒரு வசனம் பேசும்போது, விஜய் சார் நம்ம கண்ணையே பார்த்துக்கிட்டு இருப்பார்.

அம்ரிதா
அம்ரிதா ( T Hariharan )

``நான் சின்ன வயசுல பார்த்து, ரசிச்சு, பிரமிச்ச ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். அவரோடு ரெண்டு படம் நடிச்சுட்டேங்கிறதே என்னோட வாழ்நாள் சாதனை!" - இன்னும் `பிகில்' படம் கொடுத்த மகிழ்ச்சியிலிருந்து மீளாமல் பேசுகிறார், நடிகை அம்ரிதா. `பிகில்' படத்தில் விஜய் பயிற்சிகொடுக்கும் சிங்கப்பெண்கள் நிறைந்த தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதாவிடம் பேசினோம்.

Amritha - அம்ரிதா
Amritha - அம்ரிதா
T Hariharan

``முதல்ல `தெறி', இப்போ `பிகில்' எப்படி அமைந்தது இந்த வாய்ப்பு?"

`` `தெறி' படத்துல நான் சமந்தாவோட ஃப்ரெண்டா நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல நடிக்கும்போதே நான் நல்ல பேஸ்கெட் பால் விளையடுவேன்னு அட்லி சார்கிட்ட சொல்லியிருந்தேன். அவர் அதை ஞாபகம் வெச்சிருப்பார்னு அப்போ நினைக்கல. பிறகு, இந்தப் படம் தொடங்கும்போது அட்லி சார் அலுவலகத்துல இருந்து கூப்பிட்டாங்க. இந்த இடைவெளில நான் ஹீரோயினா ரெண்டு படத்துல நடிச்சுட்டேன். அது அவருக்குத் தெரியுமோ தெரியாதோன்னு பயந்துக்கிட்டே போனேன். போன பிறகுதான், எனக்கு பேஸ்கெட் பால் விளையாடத் தெரியும்னு சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து, இந்தப் படத்தைப் பற்றி சொன்னார். அப்படித்தான் இந்தப் படத்துக்குள்ளே வந்தேன்."

``நீங்க சின்ன வயசுல இருந்தே தீவிர விஜய் ரசிகைன்னு கேள்விப்பட்டோம். இப்போ, அவர்கூடவே நடிக்கிறீங்க... எப்படி இருக்கு?"

``பின்னே... யாருதான் அவரை ரசிக்காம இருப்பாங்க. அவர் டான்ஸ் ஆடுனா அவ்வளோதான்... உலகத்தையே மறந்து பார்ப்பேன். அவர்கூட ரெண்டு படம் நடிக்கிறதுன்னா சும்மாவா! `தெறி' படத்துல என் காட்சிகளுக்கான ஷூட்டிங் 12 நாள்தான் இருந்தது. ஆனா, `பிகில்' படத்துல ஆறு மாசம். இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம்தான்."

Amritha in Theri
Amritha in Theri
Screenshot from Amazon Prime

``விஜய் ரசிகையான நீங்க, `பிகில்' படத்துல அவரைத் திட்டுற மாதிரி ஒரு காட்சியில நடிச்சீங்க. அந்த அனுபவம்?"

``அதை ஏன் கேக்குறீங்க. `தெறி' படத்துல எனக்கு அவர்கிட்ட பேசுற மாதிரி ஒரேயொரு வசனம்தான் இருந்தது. அதைச் சொல்றதுக்கே அவ்ளோ கஷ்டப்பட்டேன். ஏன்னா, நாம ஒரு வசனம் பேசும்போது, அவர் நம்ம கண்ணையே பார்த்துக்கிட்டு இருப்பார். அந்தக் கண்ணைப் பார்த்தா, ஒரு வசனமும் பேச வராது. அவ்ளோ தாக்கத்தைக் கொடுக்கும். `தெறி' படத்துல எப்படியோ பேசிட்டேன். `பிகில்' படத்துல அப்படியில்லை. அவரை வெறுத்துத் திட்டணும். அதேமாதிரி அவர் கண்ணைப் பார்த்துத் திட்டும்போது, சரியா நடிக்கமுடியல. இதை அவர்கிட்ட சொல்லும்போது சிரிச்சுக்கிட்டே, `இப்போ உனக்கு என்னைப் பார்த்து திட்ட முடியல... அதானே! நான் கண்ணை மூடிக்கிறேன். நீ திட்டு'ன்னு சொல்லி கண்ணை மூடிக்கிட்டார். அப்புறம்தான் அந்த சீன்ல ஒழுங்கா நடிக்க முடிஞ்சது. இன்னொரு காட்சி இருந்தது. அதைப் படத்துல இருந்து தூக்கிட்டாங்க!"

``அது என்ன சீன்?"

``படத்துல வர்ற ஃபைனல் மேட்ச்சுக்கு முன்னாடி, நான் பதட்டமா இருப்பேன், விஜய் என்கிட்ட பேசி சமாதானப்படுத்துவார். `தென்றல்... உனக்கு என்ன பிரச்னை. நான் ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா'ன்னு என் தோள்ல அவர் கை போட்டு ஒரு கதை சொல்வார். அந்த சீன்ல நடிக்கும்போது, நான் காத்துல மிதந்துக்கிட்டிருந்தேன்!"

Amritha in Singappenney poster
Amritha in Singappenney poster
Thumbnail from YouTube
``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்

``படத்துல விஜய்யும் உங்களைத் திட்டுற சீன் இருந்தது, அதைப் பற்றி?"

``அந்த சீன் எடுக்கும்போதும், ஒரு காமெடி நடந்தது. அந்த சீன்ல, டீம்ல இருக்கிற எல்லோரையும் சார் திட்டுற மாதிரி வசனம் இருக்கும். என்னைத் திட்டும்போது மட்டும் அவர் என்னைப் பார்த்து சிரிச்சிடுவார். `உன்னைப் பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது'ன்னு சொன்னார். அதனாலேயே, அந்த சீன் மட்டும் ரெண்டு மூணு டேக் போயிடுச்சு. ஆனா, இப்போ அந்தக் காட்சியைத் தியேட்டர்ல பார்க்கும்போது, அவர் நிஜமாவே எங்களைத் திட்டுற மாதிரி அவ்ளோ இயல்பா இருக்கு."

``ஒரு பக்கம் விஜய், இன்னொரு பக்கம் நயன்தாரா... அவங்ககூட நடிச்ச அனுபவம்?"

``இப்போவும் மறக்கமுடியாத ஒரு சம்பவம் இருக்கு. நயன்தாரா மட்டும் அழகில்லை, அவங்க மனசும் ரொம்ப அழகு! ஏன்னா, `பிகில்' ஷூட்டிங் நடக்கும்போது எனக்கு பிறந்தநாள் வந்தது. அதுக்கு ஒருநாள் முன்னாடி, அவங்ககிட்ட `நாளைக்கு கண்டிப்பா வந்திடுவீங்கள்ல மேடம்'னு திரும்பத்திரும்ப கேட்டேன். அவங்களும் கண்டிப்பா வந்திடுவேன்னு சொன்னாங்க. அப்போ அவங்ககிட்ட என்ன காரணம்னு சொல்லல. ஆனா, அடுத்த நாள் அவங்க வரல. வேற ஒரு ஷூட்டிங் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அன்னைக்கு, கொஞ்சம் சோகமாதான் இருந்தேன். இதுக்கிடையில, எனக்குப் பிறந்தநாள், அதனாலதான் திரும்பத்திரும்ப கேட்கிறேன்னு அட்லி சார் அவங்ககிட்ட சொல்லியிருந்தார். அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது, எனக்கு ஒரு வாட்ச் கிஃப்ட்டா கொடுத்தாங்க. விஜய் சார் கொடுத்த மோதிரத்தோடு அதையும் பத்திரமா வெச்சிருக்கேன்."

`விஜய் பிகிலுக்காக  ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா?!’ -  `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில்