Published:Updated:

"நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே வாழ்ந்துகிட்டிருக்கேன்!" - அர்ச்சனா ஓப்பன் டாக்

அர்ச்சனா
அர்ச்சனா

நானே நடிச்சிருந்தாலும் எனக்குப் பிடிக்காத திரைப்படங்களைப் பார்க்க மாட்டேன். பிடிக்காத மனிதர்களைப் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன். எனக்குள் காயங்கள் இருந்தாலும்கூட, நான் யாரையும் காயப்படுத்தினதில்லை.

'யதார்த்த சினிமா'க்களின் நாயகி, அர்ச்சனா! பாலு மகேந்திராவின் இயக்கம் அர்ச்சனாவை சிறந்த நடிகையாக்கியது. நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கிய சவாலான ரோல்களில் அநாயாசமாக நடித்தார். புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி, உயரிய விருதுகள் பல வென்று இந்திய அளவில் சிறந்த நடிகைகளில் ஒருவராகப் புகழ்பெற்றார். இன்று வரை தனித்துவத்துடன் நடித்துவருகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரத்யேகமாகப் பேட்டியளிக்கும் 'ஊர்வசி' அர்ச்சனா, தன் திரைப் பயணத்தையொட்டிய பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2PxByFY

"பொதுவா, ஒரு படத்தில் கமிட் ஆகிட்டா, இயக்குநர் என்ன சொல்றாரோ அதை தட்டாம செய்துட்டு வந்திடுவேன். ஒரு விஷயத்தை உணர்ந்து பார்த்து நடிக்கிற Stanislavski முறையை பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கிறப்போ கத்துகிட்டேன். அதை என் சினிமா பயணத்துக்குச் சிறப்பா பயன்படுத்தினேன். அதற்கு ஓர் உதாரணம், 'தாசி' படம். ஒவ்வொரு காட்சியிலும் மனதளவில் பதைபதைப்புடன் நடிச்ச அந்தப் படம், இரண்டாவது முறையாக எனக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்துச்சு.

தேசிய விருது வென்ற இரு முறையும், சினிமா ஆளுமைகள் பலரும் என்னைப் பாராட்டினாங்க. அதில், 'இயக்குநரின் பங்களிப்பைத் தாண்டி, நடிக்கும் படங்களில் உன் அர்ப்பணிப்பும் அதிகம் இருக்கு' என்று கே.பாலசந்தர் சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. இந்த நிலையில, 'பாலு மகேந்திராவின் படங்களுக்குத்தான் அர்ச்சனா செட் ஆவாங்க. அவர் படங்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுப்பாங்க. விருது வாங்கும் படங்கள்லதான் நடிப்பாங்க'ன்னு திரையுலகில் பலரும் அவங்களாவே முடிவெடுத்துப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இதனால்கூட நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன். அதைப்பற்றி நான் கவலைப்படலை. காரணம், 'தாசி', 'மட்டி மனசுலு', 'பிறவி', 'யமனம்', 'சம்மோகனம்'னு தனித்துவமான இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்கள் படங்கள்ல நடிச்சேன்.

இதுவரை இந்தி, ஒடியா உட்பட ஆறு மொழிகளில் 30 படங்கள்ல நடிச்சிருக்கேன். அதில் சில படங்களைத் தவிர எல்லாமே ஹீரோயின் ரோல்தான். எனக்கு ஏற்ற வாய்ப்புகள் வராததால, கடந்த 30 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் ரொம்பவே செலக்டிவாதான் நடிக்கிறேன். ஆனாலும், தமிழ்ப் பெண் அடையாளத்துடன் சென்னையிலதான் வாழ்கிறேன்.

"நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே வாழ்ந்துகிட்டிருக்கேன்!"  - அர்ச்சனா ஓப்பன் டாக்

பணம், புகழ் இரண்டுக்காக மட்டும் நான் நடிப்புத்துறையைத் தேர்ந்தெடுக்கலை. கமர்ஷியல் படங்கள்ல மட்டும் நடிச்சா போதும்னு நான் நினைச்சிருந்தா, நூற்றுக்கணக்கான படங்கள்ல நடிச்சிருக்கலாம்; நிறைய பணம் சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, இப்போ எனக்கிருக்கும் தனித்துவமான பெயர் கிடைச்சிருக்காது. 'ஆர்ட் பிலிம் நடிகை'ங்கிற அடையாளம் இப்போதும் எனக்கு உண்டு. எனவே, 'ஒருநாளைக்கு ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளம் தர்றோம். நடிக்க வாங்க'ன்னு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும், என் அடையாளத்தை இழக்காம, நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கும் முடிவில் உறுதியா இருக்கேன். அதன்படி எந்த இயக்குநரின் படைப்பிலும் நடிக்கத் தயாராக இருக்கேன்!

நானே நடிச்சிருந்தாலும் எனக்குப் பிடிக்காத திரைப்படங்களைப் பார்க்க மாட்டேன். பிடிக்காத மனிதர்களைப் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன். எனக்குள் காயங்கள் இருந்தாலும்கூட, நான் யாரையும் காயப்படுத்தினதில்லை. இதனால 30 ஆண்டுக்கால திரைப்பயணத்துல எந்தச் சர்ச்சைகளுக்கும் நான் இடம் கொடுக்கலை.

நான் சினிமாவில் நடிக்கிறப்போ மட்டும்தான் அர்ச்சனாவா தெரிவேன். மற்றபடி நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே அமைதியா வாழ்ந்துகிட்டிருக்கேன். தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில், நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிறேன்; சிந்திக்கிறேன். இப்போதும் டான்ஸ் பயிற்சி எடுக்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைத் தனியாகத்தான் நடத்தினேன். எந்தக் காலத்திலும் எதையும் இழக்காம, எனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழ்ந்திட்டிருக்கேன். நிறைய கோயில்களுக்குப் போவேன். காசிக்குப் போகணும்னாலும் தனியாவே போயிட்டு வந்திடுவேன். தனிமை, இயற்கை, இசை... இவையே என்னை இயக்கிட்டிருக்கு.

"நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே வாழ்ந்துகிட்டிருக்கேன்!"  - அர்ச்சனா ஓப்பன் டாக்

நல்ல மனைவி, சகோதரி, தோழி, அம்மான்னு குடும்ப உறவுகளை அழகாகவும் அழுத்தமாகவும் காட்டுகிற பெண் கதாபாத்திரங்கள் சினிமாவில் அதிகம் வந்திருக்கு. மகனுக்காகத் தாயும், கணவனுக்காக மனைவியும், சகோதரனுக்காகச் சகோதரியும் வாழ்ந்தே தீருவாள். ஆனா, இதையெல்லாம் தாண்டி பெண்ணுக்குள் வேற ஒரு பெண் இருக்கா. உறவுமுறைகளுக்குள் சிக்கித் தவிக்காம தனக்கான வாழ்க்கைக்குச் சுயமாக முடிவெடுக்கும் தனி அடையாளத்துடன் இருக்கும் பெண்களை, 'அவள் அப்படித்தான்', 'அரங்கேற்றம்', 'நிழல் நிஜமாகிறது', 'அருவி', 'மொழி' போன்ற சில படங்கள்ல பார்க்க முடிஞ்சது. இதுபோன்ற பெண்ணுக்குள் இருக்கும் பெண்ணாக நடிக்கவே நான் அதிகம் ஆசைப்படுவேன். இதுபோன்ற தனித்துவமான பெண்களை இந்தக் கால சினிமாவில் மிக மிக அரிதாகவே பார்க்க முடிவது மிகவும் வருத்தமளிக்குது."

- அர்ச்சனாவின் முழுமையான பகிர்வுகளை அவள் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! - அர்ச்சனா https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-archana

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு