Published:Updated:

`` `நோ சான்ஸ்' தோனி, சுட்டிப் பையன் யாஷ், `ஜானு'வைப் பார்க்க ஆசை!'' - பூமிகா பெர்சனல்

பூமிகா
பூமிகா

90'ஸ் கிட்ஸின் 'ஜானு' பூமிகாவுடன் ஒரு சந்திப்பு.

'96' படத்திற்குப் பிறகு சமூக வலைதளம் எங்கும் 'ஜானு' மயம்தான். ஆனால், அதற்கு முன்பே 'பத்ரி' படத்தில் நமக்கு அறிமுகமான ஒரு ஜானு இருக்கிறாரென்றால், அவர் நடிகை பூமிகா! பத்து வருடத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்த பூமிகாவை சந்தித்துப் பேசினோம்.

பூமிகா
பூமிகா

"ஏன் இத்தனை வருடம் சென்னை பக்கம் எட்டிப்பார்க்கல?!"

"கடைசியா 'சில்லுனு ஒரு காதல்' ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்திருந்தேன். கடந்த பத்து வருடமா நான் நடிக்கிற படங்களோட ஷூட்டிங் இங்கே நடந்ததில்லை. பிறகு, இப்போதான் சென்னைக்கு வர்றேன். சென்னை, ரொம்பவே மாறியிருக்கு. அதேசமயம் சிம்பிளா இருக்கு."

"நிறைய தமிழ் படங்கள்ல நடிக்கலைனு வருத்தம் இருக்கா?"

"கண்டிப்பா இருக்கு! நான் மும்பையில இருந்ததுனால, எனக்குக் கல்யாணம் ஆகிட்டதுனால, தமிழ் சினிமா வாய்ப்புகள் எனக்கு வரலைனு நினைக்கிறேன். நடிக்கிறது ஒரு வேலை. அதுக்குத் திருமணம் ஒரு தடையா இருக்காது. கல்யாணத்துக்குப் பிறகும் ஜோதிகா நடிக்கிறது மக்களுக்குப் பிடிக்குது. வித்யா பாலன் நடிக்கிற கதாபாத்திரங்களை மக்கள் பாராட்டுறாங்க. ஒரு சிலரோட முடிவு, நடிகைகள் வேலை செய்ற கால அளவைக் குறைச்சிடுது."

பூமிகா
பூமிகா

" 'ரோஜாக்கூட்டம்' மனோ, 'பத்ரி' ஜானு, 'சில்லுனு ஒரு காதல்' ஐஸு... இதுல உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது?"

" 'பத்ரி' ஜானுதான் பலருக்கும் பிடிக்கும்; எனக்கும் அதுதான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"'ஐஸு' கேரக்டர் கொடுத்தா நான் நடிக்கிறேன்னு சொன்னேன்."
'சில்லுனு ஒரு காதல்' குறித்து பூமிகா...

" 'முன்பே வா அன்பே வா' பாடல் பற்றி?"

"அந்தப் பாட்டு என்னை தமிழ் மற்றும் கேரள மக்களுக்குக் கொண்டுபோய் சேர்த்தது. 'சில்லுனு ஒரு காதல்' படத்தோட கதையை இயக்குநர் கிருஷ்ணா சொல்லும்போது, நான் ஜோதிகா நடிச்ச கேரக்டர்லதான் நடிக்கிறதா இருந்தது. அவர் முழு கதையையும் சொல்லி முடிச்ச பிறகு, 'ஐஸு' கேரக்டர் கொடுத்தா நான் நடிக்கிறேன்னு சொன்னேன்."

" 'பத்ரி' ஜானுவான உங்களுக்கு, '96' 'ஜானு' தெரியுமா?"

"நான் கடந்த வாரம்தான் சென்னைக்கு வந்தேன். '96' படத்தைப் பற்றி ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கிட்டாங்க. அந்தப் படம் பெரிய ஹிட்டா?! அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் எங்கே பார்க்கலாம்னு சொல்லுங்க. பார்க்கணும்னு ஆவலா இருக்கேன்."

"குடும்பம் பற்றி?"

"கணவர் பரத் தாகூர், யோகா பயிற்றுனர். துபாய் மற்றும் இன்னும் சில இடங்கள்ல யோகா ஸ்டூடியோ வெச்சிருக்கார். அவருக்கு ஓவியம் வரையிறதும் பிடிக்கும்ங்கிறதால, இப்போ ஓவியங்கள் வரைவதைத் தொழிலா பண்ணிக்கிட்டிருக்கார். பையன் யாஷுக்கு நான்கு வயது. இப்போதான் ஸ்கூலுக்குப் போறான். கூடவே நீச்சல், ஸ்கேட்டிங் வகுப்புகளுக்கும் போயிட்டிருக்கான்."

bhumika
bhumika

"பிஸி ஹீரோயின் பூமிகாவின் இல்லத்தரசி வாழ்க்கை எப்படி இருக்கு?"

"இல்லத்தரசி மட்டுமில்ல; இப்போ ஒரு அம்மாவும்கூட!. என் பையன் யாஷை ஸ்கூலுக்குக் கிளப்புறது தொடங்கி, ராத்திரி அவனுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்கிற வரைக்கும்... பிஸியா இருப்பேன். குழந்தையைப் படி, எழுதுன்னு சொல்றது தாண்டி அவர்களுக்கு நல்ல பழக்கங்களையும் கத்துக் கொடுக்கணும்னு நினைப்பேன். என் பையன் செம ஸ்மார்ட். நானும் அவனும் வெளியே எங்கேயாவது போனா, என்னையும் அவனையும் யாராவது போட்டோ எடுக்க நினைப்பாங்க. ஆனா, அவன் தள்ளி நின்னு, 'இவங்கெல்லாம் நீங்க நடிகைன்னு போட்டோ எடுக்கிறாங்க; நான் எதுக்கு'ன்னு சொல்வான்."

" 'எம்.எஸ். தோனி'யில நடிச்சீங்க. தோனி என்ன சொன்னார்?"

"அந்தப் படத்துல நடிக்கும்போதும் சரி, முடிஞ்ச பிறகும் சரி... நான் தோனியைப் பார்க்கவே இல்லை. 'தோனிக்கு அக்காவா நடிக்கிறேன். ஆனா, தோனியைப் பார்க்க விடமாட்டீங்களா'னு இயக்குநர் நீரஜிடம் சண்டையெல்லாம் போட்டிருக்கேன். அப்படி சண்டை போட்டும் அந்த வாய்ப்பு வரல! எனக்குக் கிரிக்கெட் வீரர்களில் தோனியை ரொம்பப் பிடிக்கும். அதேசமயம், ராகுல் டிராவிட் என் ஆல்டைம் ஃபேவரைட்!"

'தோனிக்கு அக்காவா நடிக்கிறேன். ஆனா, தோனியைப் பார்க்க விடமாட்டீங்களா'னு இயக்குநர் நீரஜிடம் சண்டையெல்லாம் போட்டிருக்கேன்.
'எம்.எஸ். தோனி' படம் குறித்து பூமிகா

"அடுத்த திட்டம்?"

"உதயநிதியுடன் 'கண்ணை நம்பாதே' படத்துல நடிச்சிருக்கேன். நல்ல கதையும், கதாபாத்திரமும் கிடைச்சா... தொடர்ந்து நடிக்க ரெடி!"

இது தவிர,

"இத்தனை வருட இடைவெளி ஏன்?"

"தமிழ் சினிமா உங்களை மிஸ் பண்ணதா நினைக்கிறீங்களா?"

"தமிழ் சினிமா நண்பர்கள்?"

" 'கண்ணை நம்பாதே' பட வாய்ப்பு எப்படி அமைந்தது?"

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகவிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், நடிகை பூமிகா. ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு