Published:Updated:

சர்வைவர்: ``அங்க எனக்கு நல்லதும் நடந்திருக்கு; படுமோசமான விஷயங்களும் நடந்திருக்கு!" - காயத்ரி ரெட்டி

மூன்றாம் உலகில் அதிக நாள்கள் இருந்த போட்டியாளர் என்ற பெருமைக்குரியவர் காயத்ரி. மற்ற போட்டியாளர்களுக்கு இல்லாத பல சவால்கள், கஷ்டங்களை மூன்றாம் உலகத்தில் சந்திக்க வேண்டும். காயத்ரி சந்தித்த அந்த அனுபவங்களைக் கேட்கும்போது மனது பாரமாகிறது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `சர்வைவர்' நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் காயத்ரி ரெட்டி. நடிகையும் மாடலுமான இவர், காடர்கள் அணியிலிருந்து வெளியேறினாலும், மூன்றாம் உலகம் என்ற தனித்தீவில் கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார். மூன்றாம் உலகத்துக்கு வந்த இந்திரஜா, ராம், பார்வதி, பெசன்ட் ரவி என வரிசையாக அனைவரும் நிகழ்ச்சியைவிட்டே வெளியேறிய நிலையிலும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்தார். இந்நிலையில், `காடர்கள்' அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூன்றாம் உலகத்துக்கு வந்த அம்ஜத் கானுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நிலையில், சர்வைவர் ஷோவிலிருந்தே வெளியேறினார் காயத்ரி. தைரியமான போட்டியாளராக அறியப்பட்டவர், எலிமினேட் ஆன நாளன்று கண்ணீர் விட்டதும், அவருக்கு படிப்பில் உள்ள ஆசை குறித்து சக போட்டியாளர் விஜயலட்சுமி சொன்னதும் பார்வையாளர்களுக்கு எமோஷனல் எபிசோடாக அமைந்தது.

காயத்ரி ரெட்டி
காயத்ரி ரெட்டி

போட்டியிலிருந்து வெளியேறியிருக்கும் காயத்ரியிடம் பேசினோம்.

``நான் ரொம்ப ஆசைப்பட்டு கலந்துகிட்ட ஷோ `சர்வைவர்'. மற்ற ரியாலிட்டி ஷோஸ்ல நிறைய டிராமா இருக்கும். ஃபிசிகல் டாஸ்க் ரொம்ப கம்மியா இருக்கும். ஆனா, சர்வைவர் ஷோவுல ஃபிசிகல் டாஸ்க் அதிகமிருக்கும். நான் அப்படியொரு நிகழ்ச்சிக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன். அடிப்படையில நான் ஸ்போர்ட்ஸ்பர்சன், எனக்கு அட்வென்ச்சர் பிடிக்கும். அதனாலதான் ஜீ தமிழ்லேருந்து `சர்வைவர்' ஷோவுல கலந்துக்கறீங்களானு கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். ஆஸ்திரேலியன் சர்வைவர் ஷோ பார்த்திருக்கேன். இதுல என்னால நல்லா பண்ண முடியும்ங்கிற நம்பிக்கையோடதான் போனேன். பொதுவா, இந்த மாதிரி ஷோஸ்ல கலந்துக்கிறவங்க உள்ளே போய் எப்படி நடந்துக்கணும்னு ஒரு ஸ்ட்ராட்டஜியை பிளான் பண்ணிட்டுதான் போவாங்க. அப்படி விதம்விதமான ஸ்ட்ராட்டஜியை யூஸ் பண்ணாதான் அடுத்தடுத்த இடத்துக்குப் போக முடியும். ஆனா, நான் அப்படி எதையும் யோசிக்காமதான் போனேன். கேமை கேமா மட்டும் பார்க்கணும், எதையும் பர்சனலா எடுத்துக்கக் கூடாதுங்கிற தெளிவோடதான் போனேன்.

ஆனா, நான் நினைக்கிற மாதிரியே எல்லாரும் இருப்பாங்கனு எதிர்பார்க்க முடியாது... பர்சனலா எடுத்துக்கிறவங்களும் இருப்பாங்க. அப்படி எடுத்துக்கும்போது பிரச்னைகள் வரலாம், அதை எப்படி சமாளிக்கிறதுனு எல்லாத்தையும் யோசிச்சு வெச்சிருந்தேன். உள்ளே போகும்போது ஒரு விஷயத்துல நான் தெளிவா இருந்தேன். குறிப்பிட்ட நாள்வரைக்கும்தான் போட்டியாளர்களுக்குள்ள நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கும், அப்புறம் அது சாத்தியமில்லைனு தெரிஞ்சுதான் போனேன். இதையெல்லாம் மீறி உள்ளே போன மூணாவது நாளே என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. வேடர்கள் டீம்ல இருந்தவங்க சரியான ஸ்ட்ராட்டஜியோட விளையாடிட்டிருந்தாங்க. ஆனா, நான் இருந்த காடர்கள் டீம் எமோஷனலா விளையாடிட்டிருந்தாங்க. அதனால எனக்கும் அவங்களுக்கும் செட் ஆகாம என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. என்னை எலிமினேட் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக் கலாம். ஒருவேளை நான் இருந்திருந்தா நிச்சயம் என் பங்குக்கு என் டீமுக்கு சப்போர்ட் பண்ணிருப்பேன்'' என்கிற காயத்ரியின் பேச்சில் இன்னமும் அந்த மன உறுதி குறையாதது ஆச்சர்யம்.

காயத்ரி ரெட்டி
காயத்ரி ரெட்டி
சர்வைவர் - 44 | காயத்ரியை மூன்றாம் உலகத்தில் இருந்தும் வெளியேற்றிய அம்ஜத்… இனி என்ன நடக்கும்?!

``சர்வைவர் ஷோவுல இருக்குற போட்டியாளர்கள்ல யாரையும் எனக்கு பர்சனலா தெரியாது. இந்திரஜாவும் நானும் `பிகில்' படத்துல நடிச்சிருந்தாலும் நாங்க குளோஸ் கிடையாது. ராமும் நானும் ஷோவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒருமுறைதான் மீட் பண்ணியிருக்கோம். அவரும் எனக்கு ஃபிரெண்டெல்லாம் இல்லை. விஜயலட்சுமி சொல்லிதான் நான் இந்திரஜாவை வெளியேற்ற வோட் அவுட் பண்ணதா வெளியில நினைக்கிறாங்க. ஆனா அப்படியில்லை. இந்திரஜாவை வோட் அவுட் பண்ணணும்ங்கிறது என் தனிப்பட்ட முடிவு. எனக்கும் விஜயலட்சுமிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதனாலதான் மூன்றாம் உலகத்துக்கு அவங்க வந்தபோது எங்களால அவ்வளவு குளோஸா இருக்க முடிஞ்சது. இன்னும் சொல்லப்போனா மொத்த சர்வைவர் டீம்லயே நான் ரொம்ப குளோஸா பழகினது விஜயலட்சுமியோட மட்டும்தான்'' என விஜியுடனான நெருக்கம் குறித்து பகிர்பவர், சர்வைவர் டீமில் அம்ஜத்தும் ஐஸ்வர்யாவும் தன் ஃபேவரைட் போட்டியாளர்கள் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசாத்திய நம்பிக்கையுடன் உள்ளே போனாலும் டைட்டில் ஜெயிக்கும் ஆசை தனக்கில்லை என்கிறார் காயத்ரி.

``சர்வைவர் ஷோவை பொறுத்தவரை டைட்டில் ஜெயிக்கிறது யார் கையிலயும் இல்லை. யார் வேணா எலிமினேட் ஆகலாம். யார் வேணா ஜெயிக்கலாம். ஃபிசிகலி ஸ்ட்ராங்கா இருக்கிறவங்கதான் அடுத்த லெவலுக்குப் போவாங்கன்றது இதுல கிடையாது. நிறைய குழப்பங்கள், ட்ரிக்ஸ் உள்ள ஷோ இது. நாம நிச்சயம் ஜெயிச்சிடுவோம்னு நினைச்சுப் போக முடியாது. ஆனா, டாப் 3 அல்லது டாப் 5-ல நான் நிச்சயம் இருப்பேன்னு நம்பினேன். போட்டியாளர்கள் எல்லாருக்கும் அவங்கவங்க ஃபேமிலியிலேருந்து லெட்டர் வந்திருக்கிற தகவலை பெசன்ட் ரவி அண்ணாதான் என்கிட்ட சொன்னார். மூன்றாம் உலகத்துல இருக்கிறதால எனக்கு லெட்டர் வரலைபோலனு ரொம்ப அப்செட்டா இருந்தேன். இப்படியொரு தண்டனையானு ஃபீல் பண்ணிட்டிருந்தபோது திடீர்னு விஜயலட்சுமி எனக்கான லெட்டரை கொடுத்தாங்க. அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமாயிட்டேன். ஒருவேளை நான் எலிமினேட் ஆகாம இருந்திருந்தா, அந்த லெட்டர் எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்து இன்னும் நல்லா விளையாடவெச்சிருக்கும்...'' லேசான வருத்தம் வெளிப்படுகிறது அவரது பேச்சில்.

காயத்ரி ரெட்டி
காயத்ரி ரெட்டி
சர்வைவர்: `பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!' - விக்ராந்த் மனைவி மானசா

மூன்றாம் உலகில் அதிக நாள்கள் இருந்த போட்டியாளர் என்ற பெருமைக்குரியவர் காயத்ரி. மற்ற போட்டியாளர்களுக்கு இல்லாத பல சவால்கள், கஷ்டங்களை மூன்றாம் உலகத்தில் சந்திக்க வேண்டும். காயத்ரி சந்தித்த அந்த அனுபவங்களைக் கேட்கும்போது மனது பாரமாகிறது.

``சுருக்கமா சொல்லணும்னா மூன்றாம் உலகம் என்பது ஒரு நரகம். அங்கே எனக்கு நல்லதும் நடந்திருக்கு. படுமோசமான விஷயங்களும் நடந்திருக்கு. பிச்சையெடுக்கிறதை விடவும் மோசமான நிலைமையை நான் அங்கே அனுபவிச்சிருக்கேன். மூன்றாம் உலகத்துக்குப் போன முதல் ரெண்டு நாள் எனக்கு சாப்பிட எதுவும் இல்லை. சாத்துக்குடி மாதிரி ஒரு பழம் மட்டும் அந்தத் தீவுல எங்கேயோ இருந்ததைக் கண்டுபிடிச்சு அதைப் பறிச்சு சாப்பிட்டேன். நான் தங்கியிருந்த இடத்துல வெறும் கட்டை மட்டும்தான் இருந்தது. அதுலதான் படுக்கணும்.

தினம் மழை பெய்யும். கடல்காத்து வீசும். உடம்பை உறைய வைக்கிற மாதிரியான குளிரடிக்கும். போர்வை கிடையாது. மாற்றுத்துணி கிடையாது. ராத்திரி முழுக்க அந்தக் குளிர்லயும் மழைலயும் நனைஞ்சு உடம்பு விறைச்சுப் போயிடும். அந்தக் குழுவுல டாக்டர்ஸ் இருப்பாங்க. அவங்கள்ல ஒருத்தர் சாப்பிட்டு மிச்சம் வெச்சிருந்த ஒருவாய் சாப்பாட்டை ஒருநாள் சாப்பிட்டேன். இதையெல்லாம் வாழ்க்கையில யோசிச்சிருக்கவே மாட்டோம்... ஆனா, அன்னிக்கு சாப்பிட எதுவுமே இல்லாத நிலைமையில அந்த ஒருவாய் சாப்பாட்டைக்கூட மிஸ் பண்ண மனசு வரலை.

இதையெல்லாம் மீறி, மூன்றாம் உலகம் எனக்கு வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தைக் கத்துக்கொடுத்திருக்கு. அங்கே அதிகபட்ச கஷ்டங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு வாழ்க்கையில எத்தனை நல்ல விஷயங்கள் இருக்குங்கிறது புரிஞ்சது. இனிமே எதுவுமே இல்லாம என்னை தனியா விட்டாகூட எப்படி சர்வைவ் பண்ணணும்னு எனக்குத் தெரியும். வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுனு ஃபீல் பண்ற மாதிரியான தருணம் இனிமே வந்தா என்னால அதுலேருந்து வெளியே வந்துட முடியும்'' என்பவருக்கு சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தேடி வந்திருக்கின்றன.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44
``அந்த எதிர்பார்க்காத நேரத்துலதான் அப்பா `சர்வைவர்' ஷோவுக்கு கிளம்பினார்!" - பெசன்ட் ரவி மகள்

``ஆர்மி பின்னணி உள்ள குடும்பத்துலேருந்து வந்தவள் நான். ரொம்ப பொத்திப் பொத்திதான் வளர்த்தாங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட். சர்வைவர் ஷோவுல கலந்துக்கப் போறேன்னு சொன்னபோது எங்க வீட்டுல முதல்ல அனுமதி கொடுக்கலை. ஏன்னா ஷோ நடக்குற இடம் ரொம்பவே ஆபத்தானது. ராத்திரியில லைட் இருக்காது. எந்தப் பூச்சியும் விஷ ஜந்துவும் தாக்கலாம். அதனால பயந்தாங்க. இப்போ அதையெல்லாம் தாண்டி, இத்தனை நாள் அந்த ஷோவுல இருந்துட்டு வந்திருக்கேன். இப்போ அவங்களுக்கு என்மேல நம்பிக்கை வந்திருக்கு. கைகால் உடையாம நல்லபடியா நான் திரும்பி வந்ததுல வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.

எனக்கு மீடியா ரொம்ப பிடிக்கும். ஷோவுலேருந்து வெளியே வந்ததும் மூணு படங்களுக்கான வாய்ப்புகள் வந்திருக்கு. பேசிட்டிருக்கேன். நான் பிளான் பண்ணியெல்லாம் நடிக்க வரலை. ஒரு கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தபோதுதான் `பிகில்' பட வாய்ப்பு வந்தது. மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்த படம் அது. ஷாட் பிரேக்ல விஜய் சார் தனியா உட்கார்ந்திருப்பார். நானும் வர்ஷா பொல்லம்மாவும் அவர்கிட்ட மொக்கை ஜோக் சொல்லி சிரிக்க வைப்போம். செம ஃபன்னா இருக்கும்...'' நிகழ்காலத்துக்குத் திரும்புபவர், பார்வதி பகிர்ந்த சர்வைவருக்கு முன், சர்வைவருக்கு பின் போட்டோஸ் பற்றி பேசுகிறார்.

சர்வைவர் - 44
சர்வைவர் - 44
``என்னை திட்டணும்னாகூட திட்டுங்க; ஆனா..?!" - `சர்வைவர்' கதை சொல்லும் பார்வதி

``ஷோவுக்கு போறதுக்கு முன்னாடியும் ஷோவிலேருந்து வெளியே வந்த பிறகுமான போட்டோஸை பார்வதி போட்டிருந்தாங்கனு கேள்விப்பட்டேன். என் போட்டோஸை நான் இன்னும் ஷேர் பண்ணலை. நான் போட்டோஸ் போட்டாலும் ட்ரோல் பண்றவங்களும் ஹேட்டர்ஸும் பேசிட்டேதான் இருப்பாங்க. இப்படியொரு ஷோவுல வெயில்ல இருந்துட்டு வந்தா ஸ்கின் கருத்துப்போகும்னுகூட தெரியாத அறிவில்லாதவங்களைப் பத்தி நான் கவலையே பட மாட்டேன். புரியுறவங்களுக்குப் புரியும்.'' அதிரடி பதிலுடன் காத்திருப்பவருக்கு கனவுகள் இருக்கின்றன.

``என் தம்பி இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கான். அடுத்து மேல்படிப்புக்காக வெளிநாடு போக ஆசைப்படறான். இப்போதைக்கு அவனைப் படிக்க வைக்கிறதுதான் எனக்கு லட்சியம். எனக்கும் எம்.பி.ஏ படிக்கணும்னு ஆசை. ஆனா, ஒரே நேரத்துல ரெண்டு பேரும் வெளிநாடு போய் படிக்கிறது சாத்தியமில்லை. அதனால முதல்ல அவனைப் படிக்கவெச்சிட்டு அப்புறம் நான் படிக்கலாம்னு இருக்கேன். மீடியா கைகொடுக்கலைனாலும் படிப்பு கடைசிவரை காப்பாத்துமே...'' என்கிறார் நிஜ சர்வைவராக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு