Published:Updated:

``லவ்வர்ஸைவிட ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கலாம்னு ப்ரேக்அப் பண்ணிட்டேன்!" - இனியா

நடிகை இனியா

`என் கரியர்ல எப்படியாச்சும் நடிச்சிடணும்னு நினைக்கிற ஆறு கேரக்டர்கள் இருக்கு.’

``லவ்வர்ஸைவிட ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கலாம்னு ப்ரேக்அப் பண்ணிட்டேன்!" - இனியா

`என் கரியர்ல எப்படியாச்சும் நடிச்சிடணும்னு நினைக்கிற ஆறு கேரக்டர்கள் இருக்கு.’

Published:Updated:
நடிகை இனியா

``இந்த க்வாரன்டீன் எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல். எல்லோருக்கும் இந்த க்வாரன்டீன் பொறுமையைக் கற்றுக்கொடுத்திருக்கு. நம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும்" எனப் பொறுப்புணர்வோடு பேசத் தொடங்குகிறார் நடிகை இனியா.

க்வாரன்டீன்ப் எப்படி போயிக்கிட்டிருக்கு?

``ஸ்கூல்ல ஏப்ரல், மே மாசம் லீவு விட்டா ஒரு சந்தோஷம் இருக்கும்ல, அந்த மாதிரி இருக்கு. நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் கூட அதிகம் பேசுறேன். எங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் க்ரூப் இருக்கு. அதுல பழைய ஸ்கூல் போட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ணி ஒவ்வொருவரும் இப்ப எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்க, ஸ்கூல்ல நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்னு நிறைய பேசுறோம். இதெல்லாம் இந்த க்வாரன்டீன்ல ரொம்ப ஜாலிதான். தவிர, எனக்கு கிளாஸிக்கல் டான்ஸ் தெரியும். ஆனா, ரொம்ப வருஷமா கிளாஸிக்கல் டான்ஸ் ஆடாமலே இருந்தேன். அதனால இந்த கேப்ல தினமும் கிளாஸிக்கல் டான்ஸ் ஆடி பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கேன்."

இப்ப கேரளா எப்படியிருக்கு?

நடிகை இனியா
நடிகை இனியா

``ஓகேதான். இந்தக் கடுமையான நேரத்துல கேரளா அரசாங்கம் எடுக்கிற முடிவுகள், அவங்களோட விதிமுறைகள் எல்லாம் நல்லா இருக்கு. இங்க இருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், அரசாங்கத்துல முக்கிய பொறுப்புல இருக்கிற அதிகாரிகள், காவல்துறை... இவங்களோட நடவடிக்கைகள் எல்லாம் ரொம்ப பாசிட்டிவா இருக்கு. சீக்கிரமே இந்தச் சூழல் மாறிடும்னு நம்பிக்கை தருது. கேரளாவோட வடக்குப் பகுதியில இருக்கிறவங்க பெரிய ஹாஸ்பிட்டலுக்கு போகணும்னா கர்நாடகா எல்லையைத் தாண்டி மைசூருக்குதான் போகணும். இப்ப கேரளா - கர்நாடகா எல்லையை மூடிட்டதுனால நிறைய பேர் மருத்துவ சிகிச்சை கிடைக்காம தடுமாறிட்டு இருந்தாங்க. உடனே, கேரளா அரசு திருவனந்தபுரத்துல இருந்து மருத்துவ குழு ஒன்றை கேரளாவோட வடக்குப் பகுதிக்கு அனுப்பி, அங்க இருக்கிறவங்களைப் பார்த்துக்கச் சொல்லியிருக்காங்க. எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கிறதுனால பிரச்னையில்லை. ஆனா, நிறைய ஊர்ல அவங்களுக்குள்ள புரிதல் இல்லாமல் இருக்காங்க. நம்மளை நம்மதான் பார்த்துக்கணும். அந்த மாதிரி ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கிறதுனல மனிதம் மிஸ் ஆகுறமாதிரி இருக்கு."

உங்களுடைய அறிமுக கன்னட படமே சூப்பர்ஸ்டார்கூட. எப்படி இருந்தது அந்த அனுபவம்?

நடிகை இனியா
நடிகை இனியா

``ஆமா. கொரோனாவுக்கு முன்னாடிதான் அந்தப் படம் ரிலீஸாச்சு. படத்தோட பெயர் `துரோனா'. கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் சாருக்கு மனைவியா நடிச்சிருந்தேன். அவர் தமிழ் சூப்பரா பேசுவார். எனக்கு கன்னடம் சுத்தமா தெரியாது. அதனால, கன்னட வார்த்தைகளை எப்படி உச்சரிக்கணும்னு சொல்லிக்கொடுத்து நடிச்சும் காட்டுவார். அவர் கன்னடம், நான் மலையாளம். ஆனா, ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியும்ங்கிறதுனால தமிழ்லதான் எங்களுக்கான உரையாடல் இருக்கும். ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. அவர்கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம்."

மலையாளத்துலயும் மெகா ஸ்டார் மம்மூட்டிகூட நடிச்சுட்டு இருக்கீங்களே! தமிழ்ல அடுத்து எப்போ?

``ஏற்கெனவே அவர்கூட ரெண்டு படம் வொர்க் பண்ணியிருக்கேன். இப்ப சமீபமா `மாமாங்கம்' படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிச்சேன். எப்பவும் மம்மூட்டி சார் ஸ்பெஷல்தான். மலையாளத்துல படங்கள் பண்ணிட்டு இருந்ததுனால தமிழ்ல மூணு வருஷம் கேப் விழுந்திடுச்சு. `கலர்ஸ்'னு ஒரு படத்துல வரலட்சுமியும் நானும் நடிச்சிருக்கோம். அப்புறம், `காஃபி'னு ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படம். இந்த ரெண்டு படமும் தமிழ்ல வெளியாகக் காத்திருக்கு."

`வாகை சூடவா' படம் உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டைக் கொடுத்துச்சு. அந்தப் பட ஆடிஷன் அனுபவம்?

நடிகை இனியா
நடிகை இனியா

``ஸ்ருதியா இருந்த என்னை `இனியா'னு பெயரை மாத்தி அந்தப் படத்துல நடிக்க வெச்சார் சற்குணம் சார். எனக்கு இந்த ஜோதிடம், நியூமராலஜி மேல பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனா, அந்தப் பெயர் வெச்ச பிறகு, என் வாழ்க்கையே மாறிடுச்சு. இந்தப் படத்துக்கான ஆடிஷனுக்கு எனக்குப் போக விருப்பமேயில்லை. என் அம்மாதான் போகச் சொன்னாங்க. அன்னிக்கு என் பிறந்தநாள். தி.நகர்ல இருக்கிற கோயில்ல சாமி கும்பிட்டுட்டு ஆடிஷன் போனேன். மறுநாள் நான்தான் நடிக்கப் போறேன்னு சொன்னாங்க. எனக்கு முன்னாடி 16 பேரை செலக்ட் பண்ணி வெச்சிருந்தாங்கனு அப்பதான் தெரியும். நானும் சரியாயில்லைனா ஆடிஷன் போதும்னு, எல்லோருக்கும் தெரிஞ்ச ஹீரோயின் யாராவது ஒருவரை நடிக்க வெக்கிற பிளான்ல இருந்திருக்காங்க. அந்தப் படம்தான் என் வாழ்க்கையில் டர்னிங் பாயின்ட். ஆடிஷன் மட்டுமல்ல, அந்தப் படத்துடைய அனுபவம் மறக்க முடியாது. படம் பார்த்துட்டு பாரதிராஜா சார் பாராட்டின மொமன்ட் இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு."

உங்களுக்கான ட்ரீம் ரோல் என்ன?

``என் கரியர்ல எப்படியாச்சும் நடிச்சிடணும்னு நினைக்கிற ஆறு கேரக்டர்கள் இருக்கு. ஒரு ஸ்டைலிஷான கிளாமரஸான டான், பிரமாண்ட பட்ஜெட்ல உருவாகுற வரலாற்று படத்துல ராணி, எல்லா டான்ஸ் ஃபார்மெட்டும் ஆடுற ஒரு டான்ஸர், தினசரி வாழ்க்கையில நிறைய பிரச்னைகளைச் சந்திக்கிற மிடில் கிளாஸ் ஹோம்லி பெண், ஒரு ஸ்டைலிஷ் பைக் ரேஸர், ஒரு பக்கா ரொமான்டிக் ஹீரோயின்னு இந்த கேரக்டர்ல எல்லாம் நடிக்கணும், பார்ப்போம்."

தமிழ்ல யார்கூட நடிக்கணும்னு ஆசை?

``ரஜினி சார் படத்துல அவர்கூட ஒரு சீனாவது நடிச்சிடணும். அப்புறம் விஜய், விஜய் சேதுபதி ரொம்பப் பிடிக்கும்."

லவ் பண்ணியிருக்கீங்களா?

நடிகை இனியா
நடிகை இனியா

``பண்ணியிருக்கேன். ஆனா, அது ப்ரேக் அப் ஆகிடுச்சு. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து மூணு வருஷம் லவ் பண்ணோம். அப்பதான் நான் சினிமா பத்தி அதிகமா யோசிட்டு இருந்த நேரம். அதனால ரெண்டு பேருக்குள்ள கொஞ்சம் மனக்கசப்பு வந்திடுச்சு. அப்புறம், இது செட்டாகாதுனு ரெண்டு பேரும் ஃபிரெண்ட்லியா பிரிஞ்சிட்டோம். அழுத்தமான நட்புதான் ஒரு கட்டத்துல காதலா மாறுது. எங்களுக்குள்ள இருந்த அந்த நட்பே சூப்பரா இருந்தது. அதனால நல்ல நண்பர்களாவே இருப்போம்னு பிரிஞ்சுட்டோம். அவருக்கு சமீபமாதான் கல்யாணமாச்சு. பொண்ணு போட்டோ எல்லாம் அனுப்பினாங்க, கல்யாணத்துக்குச் கூப்பிடாங்க. ஷூட்டிங் இருந்ததுனால போக முடியலை."

இந்த க்வாரன்டீன்ல நீங்க மிஸ் பண்றது என்ன?

``என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் லாக் டௌன் அறிவிச்சாங்க. அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். அம்மா சாப்பாடு, என் வீட்டு நாய்க்குட்டி, சென்னை ஃப்ரெண்ட்ஸ் இவங்களை எல்லாம் மிஸ் பண்றேன்."