Published:Updated:

`சாவித்ரி பயோபிக்குக்கு நடந்தது எனக்கும் நடந்துடக்கூடாது!' - கொதிக்கும் நடிகை ஜமுனா

தெலுங்கு சினிமாவில் இருபெரும் துருவங்களாக இருந்த என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோருடனான மோதலில் அவர்களுடன் சில காலம் நடிக்காமல் இருந்த ஜமுனா, அரசியலிலும் இயங்கினார். இவருடைய பயோபிக் குறித்த செய்திகள் வரவே, அவற்றை உறுதிப்படுத்த ஜமுனாவிடம் பேசினோம்.

சினிமா துறையில் இது பயோபிக் காலம். திரைப் பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலரின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. `நடிகையர் திலக'த்தில் தன் நடிப்பால் சாவித்ரியை கண்முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ், தேசிய விருதும் வென்றார். `தலைவி'யில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் கங்கனா ரணாவத். தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய ஜமுனா, சூப்பர் சீனியர் நடிகை. அவரது பயோபிக்கில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி, டோலிவுட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சாவித்ரியுடன் ஜமுனா
சாவித்ரியுடன் ஜமுனா

தெலுங்கு சினிமாவில் இருபெரும் துருவங்களாக இருந்த என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோருடனான மோதலில் அவர்களுடன் சில காலம் நடிக்காமல் இருந்த ஜமுனா, அரசியலிலும் இயங்கியவர். பயோபிக் குறித்த செய்திகளை உறுதிப்படுத்த ஜமுனாவிடம் பேசினோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத்தில் வசிப்பவர், சரளமாகத் தமிழில் பேசினார்.

``சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமா இயக்குநர் ஒருத்தர் என்னைச் சந்திச்சார். `உங்களோட பயோபிக் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்'னு சொன்னார். `என்னோட பயோபிக்ல, என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ் உடன் நான் நடிக்காம இருந்த காலகட்டம், அவங்களை நான் எதிர்த்து நின்னது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தைரியமா படமாக்கத் தயாரா?'ன்னு கேட்டேன். அப்புறம் இது தொடர்பா யாரும் என்னை வந்து பார்க்கல; பேசல. திடீர்னு என்னோட பயோபிக் எடுக்கப்போறதா இப்போ பேச்சு கிளம்பியிருக்கு. என்னோட அனுமதி இல்லாம யாரும் என் பயோபிக்கை எடுக்க முடியாது.

Jamuna
Jamuna

பயோபிக் படங்கள் எடுக்கிறதுல எனக்குப் பெரிசா உடன்பாடில்ல. ஏன்னா, அந்த மாதிரியான படங்கள் எடுத்தா, சம்பந்தப்பட்ட பிரபலத்தின் வாழ்க்கை பத்தின எல்லா விஷயங்களையும் சரியா பதிவு செய்யணும். அதேநேரம் பிரபலங்கள் பலருடைய பர்சனல் வாழ்க்கையிலும் பிறருக்குத் தெரியக்கூடிய, தெரியக் கூடாத விஷயங்கள் நிறையவே இருக்கும். அதையெல்லாம் வெளிப்படையா காட்சிப்படுத்தினா, அந்தப் பிரபலத்தோட புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துற மாதிரி ஆகிடலாம். அந்த உண்மையான விஷயங்கள் சிலவற்றை, அவரோட ரசிகர்களால ஏத்துக்க முடியாமலும் போகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது மாதிரியான பயோபிக் எடுக்கிறவங்க, சம்பந்தப்பட்ட பிரபலத்துடன் பழகினவங்க, நெருங்கிய சொந்தங்கள் எல்லார்கிட்டயும் பேசி, முழுமையா எல்லாத் தகவலையும் தெரிஞ்சுகிட்டு படம் எடுக்கிறதில்ல. சாவித்ரியோட பயோபிக்கா வெளிவந்த `மகா நதி' படம், நான் சொல்ற விஷயத்துக்குச் சரியான உதாரணம். என்னோட வாழ்க்கையில நெருங்கிய சினிமா தோழி சாவித்ரி. அவங்கதான் என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்ததா தவறான செய்தி இப்ப வரை பேசப்படுது. நடனக் கலைஞரா இருந்த சாவித்ரி அக்காவை, ஒருமுறை எங்க வீட்டில் தங்க அனுமதிச்சோம். அதுதான் எங்க முதல் சந்திப்பு. பின்னர், அவங்க நடிகையானதும், யதேச்சையா நானும் சினிமாவுக்கு வந்தேன்.

'நடிகையர் திலகம்' படம்
'நடிகையர் திலகம்' படம்

ஒரே காலகட்டத்துல நாங்க ரெண்டு பேரும் புகழுடனும், நெருங்கிய தோழிகளாவும் சகோதரிகளாகவும் இருந்தோம். `ஒருத்தர் தானே வந்து பகிர்ந்துக்காத பட்சத்துல, அவங்க பர்சனல் விஷயங்கள்ல தலையிடாம இருக்கிறதுதான் ஒழுக்கமான செயல்'னு என் அப்பா கத்துக்கொடுத்த விஷயத்தை இப்ப வரை கடைப்பிடிக்கிறேன். அதனாலதான், சில செயல்களால் சாவித்ரியின் நிலை பாதிக்கப்பட்டப்போ நானா எதையும் அவர்கிட்டபோய் கேட்கல. சுயநினைவு இல்லாம சாவித்ரி ரொம்பவே பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தப்போ, அவரைச் சந்திக்கப் போன முதல் சினிமா பிரபலம் நான்தான். புகழின் உச்சத்துல இருந்துட்டு, மிகவும் மோசமான நிலையில் படுத்திட்டிருந்த சாவித்ரி அக்காவைப் பார்த்துக் கதறி அழுதேன். அப்போதைய ஆந்திரா முதல்வர்கிட்ட சாவித்ரிக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தினேன்.

`மகா நதி'ன்னு பயோபிக் எடுத்தப்போ, அந்தப் படக்குழுவினர் என்னைச் சந்திச்சு சாவித்ரி பத்தி எதையும் கேட்கவே இல்ல. அந்தப் படத்துல சாவித்ரி பத்தின முழுமையான விஷயங்களைக் காட்சிப்படுத்தலைனு சிலர் என்கிட்ட சொன்னாங்க. அதனாலயே, `மகா நதி' படத்தை நான் இப்ப வரை பார்க்கல. அதேபோல, என்.டி.ராமாராவ் பத்தின பயோபிக்கும் எடுத்தாங்க. அதுலயும் அவரைப் பத்தின உண்மையான எல்லா விஷயங்களையும் காட்சிப்படுத்தல. இந்த மாதிரி சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. ஒருத்தரைப் பத்தின முழுமையான எல்லா விஷயங்களையும் பதிவு செய்ற துணிச்சல் இருந்தா மட்டுமே, பயோபிக் படம் எடுக்கணும். அதுக்கு மாறா, பணம் சம்பாதிக்கிற நோக்கத்துல ஒருத்தரைப் பத்தி பயோபிக் படத்துல அரைகுறையா பதிவு செய்றது ரொம்பவே தவறானது" என்று அழுத்தமாகக் கூறுபவர், தனது பயோபிக் படம் குறித்தும் பேசினார்.

சாவித்ரி
சாவித்ரி

``சினிமா தொடங்கின காலத்துல இருந்து இப்ப வரைக்கும் இந்தத் துறையில ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கு. சினிமாவுல புகழ்பெற நடிகைகள் ரொம்பவே போராட வேண்டியதா இருக்கு. எங்க காலத்துலயும் இந்தப் பிரச்னை அதிகம் இருந்துச்சு. தெலுங்கு சினிமா ஜாம்பவான்களா இருந்த என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ்கூட நான் அப்போ நிறைய படங்கள்ல நடிச்சேன். அந்தப் படங்கள் பெரிய ஹிட் ஆனதுடன், அவங்க ரெண்டு பேருக்கும் இணையா எனக்கும் புகழ் கிடைச்சது. சில காரணங்களால, அந்த நடிகர்கள் இருவரும் என்னை ஒதுக்கினாங்க.

எதுக்காகவும் யாருக்காகவும் என்னோட தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். அந்த வைராக்கியத்துல, அவங்க இருவருடனும் நடிக்கக் கூடாதுனு நானும் முடிவெடுத்தேன். கிருஷ்ணம் ராஜூ, கிருஷ்ணானு அப்போ பெரிசா பிரபலம் ஆகாத நடிகர்களுடன் சேர்ந்து நடிச்சேன். அந்தப் படங்களும் ஹிட் ஆச்சு. கதை நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள்லதான் நடிச்சேன். இப்படியே நாலு வருஷம் ஓட, அந்த நடிகர்கள் இருவரின் சில படங்களும், என்னோட சில படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறல.

சிவாஜியுடன் ஜமுனா
சிவாஜியுடன் ஜமுனா

இதைக் குறிப்பிட்டு, `தற்போதைய சூழல் சினிமா துறைக்கு ஆரோக்கியமா இருக்காது. என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் படங்கள்ல மறுபடியும் நடிக்கணும்'னு நாகிரெட்டி, சக்ரபாணி உள்ளிட்ட பலரும் என்னை சமாதானம் செஞ்சாங்க. அதன் பிறகு, 1960-கள்ல அந்த நடிகர்கள் இருவருடனும் தொடர்ந்து நடிச்சேன். எங்க படங்கள் பெரிய ஹிட்டாச்சு. என்னோட சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம நடிச்சுகிட்டு, அமைதியா சினிமாவுல இருந்து ஒதுங்கிட்டேன். அப்புறம் இந்திரா காந்தி வலியுறுத்தவே, காங்கிரஸ் கட்சியில சேர்ந்தேன். தேர்தல்ல ஜெயிச்சு எம்.பி-யாவும் இருந்தேன்.

குறிப்பிட்ட தொகையை செலவு பண்ணி, அதைவிட அதிகமான பணம் எடுக்கிற வியாபாரமா அரசியல் மாறிடுச்சு. அதில் எனக்கு உடன்பாடில்ல. அதனாலதான், அரசியல்ல இருந்து விலகிட்டேன். பிறகு, இப்ப வரைக்கும் அமைதியா வாழ்ந்துகிட்டு இருக்கேன். இப்படி என்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயங்களையும் வெளிப்படையா படமாக்க தைரியமா யாராச்சும் முன்வந்தால் மட்டுமே, என் பயோபிக்கை எடுக்க அனுமதிப்பேன்" என்பவர், `தெனாலி ராமன்', `தங்கமலை ரகசியம்', `நல்ல தீர்ப்பு' உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

எஸ்.வி.ரங்கா ராவ்வுடன் ஜமுனா
எஸ்.வி.ரங்கா ராவ்வுடன் ஜமுனா

``1950, 60-கள்ல தமிழ்லயும் நிறைய படங்கள்ல நடிச்சேன். எம்.ஜி.ஆர் கூட ரெண்டு படங்களும், சிவாஜி கூட 10 படங்கள்லயும் நடிச்சேன். ஒருகட்டத்துல தெலுங்குலதான் எனக்கு அதிகமான வாய்ப்புகளும் கிடைச்சது. அதனால, தெலுங்கு சினிமாவே எனக்கு அடையாளம் ஆகிடுச்சு. அப்போ சென்னை தி.நகர்ல பெரிய பங்களா வீட்டுல வசிச்சோம். என்னோட கணவர் பேராசிரியரா இருந்தார். அவரோட வேலை விஷயமா, 1970-கள்லயே ஹைதராபாத்ல குடியேறிட்டோம். குடும்பம், சினிமா நினைவுகள், சினிமா நண்பர்களுடனான அன்புனு ஓய்வுக்காலம் நல்லா போகுது" என்கிற ஜமுனா, புன்னகையுடன் விடைகொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு