Published:Updated:

``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல!" - கமலா கண்ணீர்

கமலா காமேஷ்
கமலா காமேஷ்

`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’

மறைந்த விசுவின் படங்களில் இவருக்கு மனைவி கேரக்டரில் நடித்தவர் நடிகை கமலா காமேஷ். `சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் இவர் நடித்திருந்த கோதாவரி கேரக்டர் இன்றும் 90'ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரும் ஃபேமஸ். விசுவின் நினைவலைகளுக்காக அவரிடம் பேசினோம்.

``என் கணவர் காமேஷின் நெருங்கிய நண்பர் விசு. அப்ப, மயிலாப்பூர்ல எங்க வீடு இருந்தது. விசு எப்பவும் எங்க வீட்டுலதான் இருப்பார். நிறைய மேடை நாடகங்களுக்கான ஒத்திகை, டிஸ்கஷன் எல்லாமே எங்க வீட்டுல நடக்கும். விசுவின் நாடகங்களுக்கு என் கணவர் இசையமைப்பார். அதனால எப்போவும் வீடு கச்சேரியும், சந்தோஷமுமா இருக்கும். அதை நினைச்சா இப்பக்கூட கண்ணுல கண்ணீர் வருது. என் கணவர் மூலமாதான் விசுவைத் தெரியும். விசு திருமணத்துக்குப் பெண் பார்த்துட்டு, `சுந்தரியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு எப்படிப் படுது'னு கேட்டார். அந்தளவுக்கு வீட்டுக்கு நெருக்கமான ஒருத்தர். விசுவோட படங்கள்ல அறிமுகமாகுறதுக்கு முன்னாடி `குடிசை'னு ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிருந்தேன். இந்தப் படத்துக்கான எடிட்டிங் போயிட்டிருந்தப்ப விசு என்னோட ஆக்டிங் பார்த்துட்டு கமலேஷ்கிட்ட, `கமலா நல்லா நடிக்குறாங்க. தொடர்ந்து நடிக்கட்டும். திறமையோட வீட்டுல ஏன் இருக்கணும்'னு கேட்டார். `அவளுக்கு நடிக்க தெரியாதுபா. ஏதோ இந்தப் படத்துல முயற்சி பண்ணியிருக்கா'னு காமேஷ் சொன்னார். விசு விடாம என் கணவர்கிட்ட பேசிட்டு அவரோட மேடை நாடகங்கள்ல என்னை நடிக்க வெச்சார். கிட்டத்தட்ட 2000-க்கும் மேலே மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்."

கமலா
கமலா

``விசுவோட மேடை நாடகங்கள் பின்னாடி படமா திரைக்கு வரத் தொடங்குச்சு. மேடை நாடகங்கள்ல ஹீரோயின் கேரக்டர்ல மட்டும் நான் நடிச்சிட்டிருந்தேன். சொல்லப்போனா `குடும்பம் ஒரு கதம்பம்' நாடகத்துல சுஹாசினி கேரக்டரை நாடகத்துல நான்தான் நடிச்சிருந்தேன். படம்னு வர்றப்ப என்னோட கேரக்டர்ல சுஹாசினி நடிச்சாங்க. `சம்சாரம் ஒரு மின்சாரம்' படமும் இது மாதிரிதான். நாடகத்துல நான் நடிச்சிருந்த கேரக்டர்ல படத்துல லட்சுமி நடிச்சாங்க. இப்படி போயிட்டிருந்தப்ப பாரதிராஜாகிட்ட இருந்து அழைப்பு வந்தது. `புதுமுக ஹீரோயினை அறிமுகப்படுத்துற இயக்குநர், நம்மல கூப்பிடுறார்'னு போய் பார்த்தேன். `கார்த்தியோட அம்மா கேரக்டர்ல நடிக்கச் சொல்லி அட்வான்ஸ் பணமா நூறு ரூபாய் கொடுத்தார். பெரிய இயக்குநர் படம். ஆனா, அம்மா கேரக்டர்னு யோசிச்சப்ப வீட்டுல கணவரும், இளையராஜவுடைய ப்ரதர் பாஸ்கரும், `ஒத்துக்க கமலா. கமர்ஷியல் படத்துல அறிமுகம் கிடைக்குது'னு சம்மதம் சொல்ல வெச்சிட்டாங்க. படத்துல நடிச்சு முடிச்சேன். படமும் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் `குடும்பம் ஒரு கதம்பம்' படத்தோட தயாரிப்பாளர் கூப்பிட்டுவிட்டார். `இதுல அம்மா கேரக்டர்ல நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. விசு சாரோட கதை. அதனால காமேஷும், நடி கமலானு சொன்னதால ஒப்புக்கொண்டேன். அட்வான்ஸ் பணமா ஐந்நூறு ரூபாய் கொடுத்தாங்க. தொடர்ந்து நடிச்சிக்கிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 500 படங்கள் வரைக்கும் நடிச்சிட்டேன். இதுல விசுவோட படங்கள் பத்துக்குள்ளேதான் இருக்கும். ஆனா, விசுவோட படங்கள் மூலமாதான் நான் ஃபேமஸ் ஆனேன். நான் நடிச்சிட்டிருந்தப்ப எனக்குக் கண் சரியா தெரியாது. இருந்தும், இந்த விஷயம் ஆடியன்ஸுக்குத் தெரியாத மாதிரி நடிச்சுக் கொடுப்பேன். விசுவோட நிறைய நாடகங்கள்ல நடிச்சதால அவரோட டைமிங் சென்ஸ் எனக்கு நல்லா தெரியும். அதனால அவர் பேசுற வசனதுக்குச் சமமா நானும் லீட் கொடுத்துப் பேசுவேன். இந்தப் படத்துல நடிச்சிருந்தப்ப சுஹாசினி, `உங்களுக்கும், விசு சாருக்கும் விருது கிடைக்கும்'னு சொல்லிட்டே இருப்பாங்க. அதே மாதிரி சப்போர்ட்டிங் ஆக்டர், ஆக்டர்ஸ் விருது கிடைச்சது.''

``காமேஷ் இறந்தப்ப, உமா கையிலே ஏழு வயசு குழந்தையா இருந்தா. அவளைக் கையிலே வெச்சுக்கிட்டு தனியா நின்னுட்டு இருந்தேன். அப்ப விசுவோட மொத்தக் குடும்பமும் வந்து எல்லாருக்கும் சாப்பாடு சமைச்சு போட்டு எல்லா காரியங்களையும் நடத்துனாங்க. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். அதே மாதிரி விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. இடுப்புல ஏழு முறை வரைக்கும் ஆபரேஷன் நடந்திருக்கு. அதனாலதான் நடக்க முடியாமப் போகல. கடைசியா விசுவை ஆச்சி அம்மா இறந்தப்ப நேர்ல பார்த்தேன். `கமலா எப்படியிருக்க'னு பேசுனார். அப்பவே அவருக்கு டயாலசிஸ் சிகிச்சை போயிட்டிருந்தது. அதுமட்டுமல்லாம, எந்த நேரத்துலயும் கொஞ்சமும் என்னை விசு விட்டுக்கொடுத்ததே இல்லை. அவரை மொத்த யூனிட்லயும் பேர் சொல்லிக் கூப்பிடுற நபர் நான் மட்டும்தான்."

விசு
விசு

``எனக்கான மரியாதையை அவரும் கொடுப்பார். 'அவள் சுமங்கலிதான்' படத்தின்போது பரிசல்ல ஷூட் போயிட்டிருந்தப்ப எல்லாரும் இறங்கிப் போயிட்டாங்க. கடைசியா இறங்க முடியாம நான் தவிச்சிருந்தப்ப அங்கே இருந்த மேனேஜர் ஒருத்தரை 'டேய் புளியங்கொட்டை வாடா'னு கூப்பிட்டேன். இதைப் பார்த்துட்டு இருந்த கார்த்திக், `யாரை எப்படி கூப்பிடணும்னு தெரியா வேண்டாம்'னு விளையாட்டா சொன்னார். உடனே விசு, `இந்த யூனிட்ல என்னைப் பெயர் சொல்லி கமலாதான் கூப்பிடுவாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு மரியாதை கொடுத்திருக்கேன். என் நெருங்கிய நண்பனின் மனைவி கமலா. இந்த யூனிட்ல இருக்கிற யாரையும் எப்படி கூப்பிடவும் அவளுக்கு உரிமை இருக்கு'னு கார்த்திக்கிட்ட சொன்னார். அந்தளவுக்கு என்னைப் பார்த்துக்குவார். என் பொண்ணோட உமா பெயரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட படத்துல வர்ற பெரும்பாலான ஹீரோயின்ஸ் பேர் உமானுதான் இருக்கும். விசுவை நினைச்சிட்டா பழைய நினைவுகள் எல்லாமே நினைவுல வருது. அவரோட முகத்தைக் கடைசியா பார்க்க முடியலனு கஷ்டமா இருக்கும். அவருக்கு மூணு பொண்ணுங்க. ஒருத்தி துபாய், இன்னொருத்தி டெல்லினு இருந்தாங்க. எல்லாரும் இறுதிச் சடங்குக்கு வந்தாங்களானு தெரியல. தெரிஞ்சுன்னா யாராவது சொல்லுங்க''னு கண்ணீர் மல்கக் கூறுகிறார் கமலா.

``விசு சாரோட இறுதி ஊர்வலம் திருவிழா மாதிரி இருந்திருக்கணும்; ஆனா..." - டி.பி.கஜேந்திரன்
அடுத்த கட்டுரைக்கு