Published:Updated:

``நடிகைகளுக்கு, கவர்ச்சியா நடிக்கணும்ங்கிறது எழுதப்படாத விதி!" - நடிகை கன்னிகா ரவி

கன்னிகா ரவி
கன்னிகா ரவி

``நான் அவ்வளோ பிரபலம் எல்லாம் இல்லை. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன், அவ்ளோதான். ஆனா, இன்னும் நிறைய நடிக்கணும். முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கணும்."

கே.பாலசந்தர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்னர் சினிமாவுக்குள் சிறு வேடங்களில் நடித்து, தற்போது கெளதம் மேனன், மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார், நடிகை கன்னிகா ரவி.

கன்னிகா ரவி
கன்னிகா ரவி

பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் நடிகைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவிவருகிறது. இந்நிலையில், தமிழ்ப் பெண்ணான கன்னிகா ரவி, எப்படியாவது ஒரு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுவிட வேண்டுமென முயற்சி செய்து வருவதாகக் கூறுகிறார். அவரிடம் பேசினோம்.

``சிறிய காலகட்டத்துல பெரிய பிரபலமாகிட்டீங்க?"

``நான் அவ்ளோ பிரபலம் எல்லாம் இல்லை. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன், அவ்ளோதான். ஆனா, இன்னும் நிறைய நடிக்கணும். முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கணும். ஏன்னா, இதுவரை நான் நடிச்சதெல்லாம் கேரக்டர் ரோல்தான். இனிதான் ஹீரோயினா நடிக்கணும்."

கன்னிகா ரவி
கன்னிகா ரவி

``இருந்தாலும், சோஷியல் மீடியாவுல உங்களுக்கான ரெஸ்பான்ஸ் அதிகமா இருக்கே?"

``அதுக்கு என் சிலம்ப வீடியோக்கள்தான் காரணம். ட்விட்டர்ல என்னோட ஃபாலோவர்ஸ் எல்லோருமே ஒரு குடும்பம் மாதிரிதான். அதனாலதான், என்னோட எந்தப் பதிவுக்கும் ஒரு நெகட்டிவ் கமென்ட் கூட இருக்காது. எல்லோருமே என்னை அவங்க வீட்டுப் பொண்ணா நடத்துறாங்க."

`` `அடுத்த சாட்டை', `ராஜவம்சம்'னு ரெண்டு படங்கள்... தவிர, இதுக்கு முன்னாடி நடிச்ச படங்களும் கிராமத்துப் படங்கள்தான். ஏன் இப்படி?"

``மற்ற ஜானர்ல நடிக்க வாய்ப்பு வரலைனு சொல்ல முடியாது. இப்போ, 'ராஜவம்சம்'ல நடிச்சிருக்கேன். கிராமத்துப் படம்தான். நாற்பதுக்கும்மேலான கதாபாத்திரங்கள். அதுல எனக்கும் ஒரு ரோல். ஆனா, 'அடுத்த சாட்டை'யை ஒரு முழு கிராமத்துப் படம்னு சொல்லிட முடியாது. அது ஒரு கல்லூரி வளாகத்திற்குள் நடக்கிற கதை. அங்கே இருக்கிற சாதி சிக்கல்களெல்லாம் இந்தப் படத்துல பேசியிருப்பாங்க. சமுத்திரக்கனி சாரோட ஐந்து மாணவர்கள்தான் படத்தோட முன்னணி பாத்திரங்கள். அதுல நானும் ஒரு மாணவியா நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல என் கேரக்டர் தனியா தெரியும்!"

கன்னிகா ரவி
கன்னிகா ரவி

``சிலம்பம், வில்வித்தை, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்... எப்போதான் படிப்பிங்க?"

``சமையல், எழுத்தாளர், தற்காப்புக் கலை... இன்னும் இந்தப் பட்டியல் பெருசு. நான் படிக்காததுனாலதான் இதெல்லாம் பண்ண முடிஞ்சது. நான் ஸ்கூல் முழுசா படிக்கல. சின்ன வயசிலேயே மீடியாவுக்கு வந்துட்டேன். பிறகு, இங்கேயே இருந்துட்டதால, படிப்புல பெருசா கவனம் இல்லை. ஆனா, நிறைய குட்டிக் குட்டி கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஃபேஷன் டிசைனிங் தெரியும். எப்போவும் எதையாவது பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்."

``ஸ்கூல், காலேஜ் படிக்காம, `அடுத்த சாட்டை' மாதிரியான ஒரு படத்துல நடிக்கும்போது எப்படி இருந்தது? "

கன்னிகா ரவி
கன்னிகா ரவி

``அதுதான் இந்தப் படத்துல எனக்குக் கிடைச்ச அனுபவமா பார்க்கிறேன். இந்தப் படத்துக்காகப் பலநாள் ஒரு காலேஜ்ல ஷூட்டிங் நடத்தினாங்க. உண்மையான ஹாஸ்டல் வாழ்க்கை எப்படி இருக்கும், அதுல இருக்கிற சந்தோஷங்கள்... எல்லாத்தையும் உணர முடிஞ்சது. நான் காலேஜ் போகலையேங்கிற குறையை இந்தப் படம் தீர்த்து வெச்சிடுச்சு!"

Vikatan

``தமிழ் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவுல வாய்ப்புகள் குறைவுனு ஒரு வாதம் இருக்கே?"

``உண்மைதான். நம்ம கலாசாரக் கட்டமைப்பும் அதுக்கு ஒரு காரணம்னுதான் சொல்லணும். இப்போவுள்ள நடிகைகளுக்கு கவர்ச்சியா நடிக்கிறது ஒரு எழுதப்படாத நிர்பந்தமா இருக்கு. அதனால, வெளிமாநிலத்துல இருந்து இங்கே வந்து நடிக்கிற நடிகைகளுக்கு அது வசதியா இருக்கும். நடிச்சுட்டு திரும்ப அவங்க ஊருக்குப் போயிடுவாங்க. நாம அப்படி நடிச்சுட்டு, நம்ம வீடு, நம்ம சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரங்கனு இதே அமைப்புல வாழணும். அது சரிவராது. இது மட்டும் பிரச்னையில்லை, இதுவும் ஒரு பிரச்னைனு சொல்லலாம்!"

`` `பொன்னியின் செல்வன்' படத்திலும், அடுத்தபடியா கெளதம் மேனன் படத்திலும் நடிக்கிறதா கேள்விப்பட்டோம்?"

"நானும் கேள்விதான்பட்டேன். நான் இந்தப் படங்கள்ல இருக்கேனான்னு தெரியாது. அப்படி இருந்தா, சந்தோஷம். அது, அறிவிப்பு வரும்போதுதான் தெரியும்."

அடுத்த கட்டுரைக்கு