Published:Updated:

`பொழுதுபோக்கு மட்டும்தான் முக்கியமா?'- தனியார் டி.வி நிகழ்ச்சியால் கலங்கும் நடிகை கஸ்தூரி

”பெண்களுடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாக இந்த வருட நிகழ்ச்சி அமைந்துவிட்டதுதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.”

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

நெல்லையில் நடைபெற்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய சமூகத்தில், இரவு நேரத்தில் தனியாகப் பெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. நகரமயமாதல், இடம்பெயர்தல் உட்பட, சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது. இது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது. பெண்கள், தம் பாதுகாப்புக்கு மிக அதிக முயற்சிகள் எடுக்கவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

கஸ்தூரி
கஸ்தூரி

அதற்கென்று, தனியாக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்பான நிகழ்ச்சி அல்ல. அதில் பங்கேற்றவர்கள் முழுவதுமே சினிமா, நாடகக் கலைஞர்கள், பிரபலங்கள் மட்டும்தான். டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. மக்களை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே சிக்க வைக்கும் நோக்குடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போக்கு உள்ளது.

தவறான விஷயங்களைச் சொல்வதனால் மட்டுமே இங்கு பிரபலம் ஆகிறது என்று கலைஞர்கள் நினைத்தால், அது உண்மையில் தவறான ஒன்று. தனியார் டி.வி நிகழ்ச்சியில், நடிகர் கமலுக்கு ஒதுக்கப்பட்டது எல்லாம் பேச்சளவில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இனி வரும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்குடன் சேர்ந்து பொறுப்பாகவும் இருக்க வேண்டும். பெண்களுடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகத்தான் இந்த வருட நிகழ்ச்சி அமைந்துவிட்டது என்பதுதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சாமியின் சினிமா படங்களுக்கு நான் ஒரு நல்ல ரசிகை. நடிகர் விஜய், நடிக்க மட்டுமே செய்ய வேண்டும். அதைத்தாண்டி வேறெதுவும் பேசக்கூடாது என்று இயக்குநர் சாமி விரும்புவதைப்போல, இயக்குநர் சாமி படம் மட்டுமே இயக்க வேண்டும். அதைத்தாண்டி வேறு எதுவும் பேசக்கூடாது என நான் விரும்புகிறேன்.

கஸ்தூரி
கஸ்தூரி

இன்றைக்கு தமிழ்நாட்டில், எந்தத் தலைவருக்கு சினிமாவோடு சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும்? சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையவர்கள்தான் இன்றைய அரசியலிலும் இருக்கிறார்கள். ஆகவே, இதில் ஒரு பெரிய முரணை நான் பார்க்கவில்லை. எந்த இடத்தில் நல்ல பொறுப்புள்ள மனிதர்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நாம் நம் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தவறில்லை என்பதே எனது கருத்து” என்றார்.