Published:Updated:

``சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் நெப்போட்டிஸம்னா, அந்த வாரிசு ஏன் சூப்பர் ஸ்டார் ஆகலை!'' - குஷ்பு

குஷ்பு

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு எப்போதும்போல லாக்டெளனில் செம ஆக்டிவ். டிவி சீரியல் தயாரிப்பாளராக ஷூட்டிங்குகள் தொடங்கப் பல முயற்சிகள் எடுத்தவர், பர்சனலாக ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி ஸ்லிம்மாகிவிட்டார். சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கும் குஷ்புவிடம் பேசினேன்.

``சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் நெப்போட்டிஸம்னா, அந்த வாரிசு ஏன் சூப்பர் ஸ்டார் ஆகலை!'' - குஷ்பு

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு எப்போதும்போல லாக்டெளனில் செம ஆக்டிவ். டிவி சீரியல் தயாரிப்பாளராக ஷூட்டிங்குகள் தொடங்கப் பல முயற்சிகள் எடுத்தவர், பர்சனலாக ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி ஸ்லிம்மாகிவிட்டார். சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக இயங்கும் குஷ்புவிடம் பேசினேன்.

Published:Updated:
குஷ்பு

``லாக்டெளன்ல புதுசா எதுவும் நடக்கல. எப்பவும் போல வீட்ல குடும்பத்தோட நேரம் செலவழிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங் இல்லாம இருந்தாலும் பிஸியாதான் இருக்கேன். ஏன்னா, வீட்டுல எல்லா வேலையும் நான்தான் பண்ணிட்டிருக்கேன். அதனால, கொஞ்சம் வெயிட்லாஸ் ஆகிட்டேன். நம்ம உடலுக்கு வேலை கொடுத்தாலே சோர்வாகி இரவு நேரத்துல நல்லா தூங்கலாம். உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி சோஷியல் மீடியால நிறைய எழுதியிருந்தீங்க. நெப்போட்டிஸம், ஸ்டார் வார்ஸ்னு அவர் தற்கொலைக்குப் பின்னால் பல காரணங்கள் பேசப்படுது. சினிமால 35 வருஷ சீனியர்... நீங்க நெப்போட்டிஸம் பத்தி என்ன நினைக்கிறீங்க... தமிழ்லயும் இப்படி நடக்குதா?''

குஷ்பு, சுந்தர்.சி
குஷ்பு, சுந்தர்.சி

``ஒருத்தர் மேல பழி போடணும்னா என்னவேனா சொல்லலாம். ஆனா, ஒருத்தர் தற்கொலைக்கு எல்லாநேரங்களிலும் மூணாவது நபர் காரணமா இருக்க முடியாது. அதுவும், சுஷாந்த் சிங்கைப் பொறுத்தவரைக்கும் அவர் மனஅழுத்தத்துல இருந்திருக்கார். Clinical Depression. நம்ம நாட்ல நிறைய பேர் க்ளினிக்கல் டிப்ரஷன்ஷல் இருக்காங்க. சில பேருக்கு வெளியே வர தைரியம் இருக்கும். சிலருக்கு வராது. எதுவா இருந்தாலுமே தற்கொலைன்றது ஒரு நிமிஷத்துல எடுக்குற முடிவுதான். சுஷாந்த் சிங்கைப் பொறுத்தவரைக்கும், `காலையில எந்திருச்சு வொர்க்அவுட் பண்ணிட்டு, புரொட்டீன் ஷேக் குடிச்சிருக்கார். பேப்பர் படிச்சிருக்கார். அப்புறம் ரூம்குள்ள போனவர் தூக்குப்போட்டுக்கிட்டார். காலைல விடிஞ்சதும் நார்மலாதான் பொழுதைத் தொடங்கியிருக்கார். ஆனா, ஒரு நிமிஷத்துல தற்கொலை முடிவு எடுத்துட்டார். இதுல, யாரையும் பழி சொல்ல முடியாது. நெப்போட்டிஸத்தை மட்டுமே காரணமா சொல்ல முடியாது.

சொல்லப்போனா ஸ்டார் கிட்ஸா இருந்தாத்தான் பிரச்னைகள் அளவுக்கு மீறியிருக்கும். ஏன்னா, பெற்றோர் பெரிய ஸ்டாரா இருந்தா ஒவ்வொரு முறையும் அவங்ககூட பசங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. க்ளாசிக் உதாரணம்னு பார்த்தா, அபிஷேக் பச்சன். இப்போ இருக்குற தலைமுறை நடிகர்கள்ல சிறந்த நடிகர். நெப்போட்டிஸம் உண்மையாயிருந்தா அவர் சூப்பர் ஸ்டாரா இருந்திருப்பார். மிகவும் திறமையான நடிகர். சீரியஸான ரோல், காமெடி கேரக்டர்னு எல்லாமே பண்ணுவார். இவர் நடிச்ச படங்கள் மூலமா தன்னை நிரூபிச்சுக் காட்டியிருக்கார். ஆனா, அவரால பெருசா வரமுடியல. அழகு, உயரம், நடிப்பு எல்லாமே இருந்தாலும் அப்பா அமிதாப் பச்சன்கூட எப்பவும் ஒப்பிட்டுட்டே இருப்பாங்க. எப்பவும் அமிதாப்பச்சனின் நிழல் இருந்துக்கிட்டே இருக்கும். மும்பைல இப்படி நிறைய ஸ்டார்ஸ் திறமையிருந்தும் வெற்றியடைய முடியல. ஹீரோயின்ஸை எடுத்துக்கிட்டா ஈஷா தியோல், ட்விங்க்கிள் கன்னானு பல உதாரணங்கள் சொல்லலாம். ஸ்டார்ஸோட பசங்களுக்கு சினிமாவுக்குள்ள நுழையிறது ஈஸியா இருக்கலாம். ஆனால், நிலைச்சு நிக்க எல்லாரும் மாதிரியே ரொம்ப கஷ்டப்படணும். உண்மையில மத்த நடிகர்களைவிட இன்னமும் கஷ்டப்படணும்.

தமிழ் சினிமாலயும் அதேதான் நடக்குது. சிபிராஜ், கெளதம் கார்த்திக், விக்ரம் பிரபுன்னு எல்லாருமே நல்ல திறமைசாலிங்க. ஆனா, இவங்க அப்பாக்கள் பெரிய ஸ்டார்ஸ். அவங்களோட இவங்களை ஒப்பிட்டுட்டே இருப்பாங்க. பெரிய உதாரணம் சொல்லணும்னா ஸ்ருதிஹாசன். அழகா இருக்காங்க, நல்லா நடிப்பாங்க, சூப்பரா பாடுவாங்க, டான்ஸ் ஆடுவாங்க. ஆனாலும், அப்பா, அம்மா மாதிரியில்லைன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஸ்டார் கிட்ஸோட பிரஷர் ரொம்ப அதிகம். நிலைச்சு நிக்குறது ரொம்ப கஷ்டம். அவங்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. சுஷாந்த் சிங் இப்போ உயிரோட இல்ல. அதனால, என்ன வேணும்னாலும் பேசலாம்னு பேசுறாங்க. பேசுறவங்க யாருக்காவது சுஷாந்த் சிங் யார், அவர் என்ன நிலைமைல இருந்தார்னு ஏதாவது தெரியுமா..? யாருக்கும் தெரியாது.''

``இப்ப அதிகமா உச்சரிக்கப்படுற வார்த்தை டிப்ரஷன்... நீங்க டிப்ரஷனைக் கடந்து வந்திருக்கீங்களா? இளைஞர்களுக்குக் குறிப்பா பெண்களுக்கு டிப்ரஷனை எப்படி சமாளிக்கிறதுன்னு சொல்லுங்க?''

``டிப்ரஷன் எல்லாருக்கும் வாழ்க்கைல வந்துட்டுதான் போகும். வாழ்க்கையோட ஏதோ ஒரு நேரத்துல இருந்திருக்கும். இதை எப்படி கடந்து வருவது என்பதுதான் ரொம்பவும் முக்கியம். எந்த டிப்ரஷனா இருந்தாலும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் முக்கியம். கல்யாணத்துக்கு அப்புறம் நான் பயங்கர டிப்ரஷன்னல போயிட்டேன். சரியாப் பேசமுடியாது. வார்த்தைகள் திக்க ஆரம்பிச்சிடுச்சு. திக்குவாய் ஆகிட்டேன். மூணு மாசத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். வெளில யாருக்குமே இது தெரியாது. என் கணவருக்கு மட்டும்தான் தெரியும். என் வீட்டுக்காரர் இல்லைனா இதுல இருந்து என்னால வெளியவே வந்திருக்க முடியாது. என்னோட டிப்ரஷன் காரணமா மொத்தமா அவரைச் சார்ந்தே இருக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த க்ளினிக்கல் டிப்ரஷன் ஏன் வருது, எதுக்காக வருதுன்னு யாருக்குமே தெரியாது. சில நேரங்கள்ல மனசளவுல ரொம்ப தாழ்வா இருக்கும்போது, சிலரோட ஒரே ஒரு வார்த்தைகூட நம்மளை டிப்ரஷனுக்குள்ள தள்ளிடும். இதையெல்லாம் எல்லோரும் கடந்துதான் வரணும். அப்படி வந்ததாலதான் உங்ககூட இப்ப தைரியமா என்னால பேசமுடியுது. குஷ்புக்கு என்ன பிரச்னை, சாப்பாடு இருக்கு, ஏசி ரூம் இருக்கு, பிஎம்டபிள்யு கார் இருக்கு, என்ன வேணாலும் பேசுவாங்கன்னு இந்தப் பேட்டிக்குக் கீழகூட சிலபேர் கமென்ட்ஸ் போடுவாங்க. நானும் சாப்பாடு இல்லாம பசியைப் பார்த்திருக்கேன். சொந்த வீடு இல்லாம, அடுத்த மாசம் வாடகை எப்படி கொடுப்போம்கிற வலி, வேதனையைக் கடந்து வந்திருக்கேன். ஒரு நகையும் இல்லாம எல்லாத்தையும் வித்து சாப்பிட்டிருக்கோம். இது எல்லாத்தையும் சொந்த வாழ்க்கையில பார்த்திருக்கேன். பெண்கள், ஆண்கள்னு டிப்ரஷனுக்கு ஜெண்டர் தெரியாது. வயசு தெரியாது. எப்ப வேணா வரும். Empty Mind is Devil's Workshopனு சொல்லுவாங்க. அதனால மைண்டை நாமதான் டைவர்ட் பண்ணணும். எக்சர்ஸைஸ் பண்ணணும், உடம்புக்கு நல்லா வேலை கொடுக்கணும். உடம்புக்கு வேலை கொடுத்துட்டாலே அசந்து தூங்கிடுவோம். நல்லா தூங்கிட்டால நாம நல்லாயிருக்கோம்னு அர்த்தம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சுஷாந்த் இறந்தது, யானை இறந்ததுன்னு இதுக்கெல்லாம் பெரிய அளவுல ரியாக்ட் பண்ற சினிமாக்காரர்கள், தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு இறந்தப்போ பெருசா ரியாக்ட் பண்ணலையே?''

sushanth Singh
sushanth Singh

``சோஷியல் மீடியா மட்டுமே உலகம் கிடையாது. நம்ம மனசுக்குள்ள இருக்குற எல்லா விஷயத்தையும் வெளியே கொட்டுறதுக்கான ப்ளாட்பார்ம் மட்டும்தான். அவ்ளோதான். என்னைப் பொறுத்தவரைக்கும் இதுல பேசுற எதையும் பெருசா எடுத்துக்க வேண்டாம். இங்கே அதிகமா ட்ரோல்தான் நடக்குது. சிலர் காசு வாங்கிட்டுக்கூட ட்ரோல் பண்றாங்க. சிலர் உடல் கேலி பண்றது, தப்பா பேசுறதுனு இருப்பாங்க. வீட்ல இருக்குற பொண்ணை அடிமையா பார்ப்பாங்க. புத்திசாலித்தனமா பெண் பேசக்கூடாதுனு நினைப்பாங்க. இவங்களைப் பத்தி இங்க பேச வேண்டாமே!''

``அதனாலதான், சோஷியல் மீடியால பயங்கர ஆக்ரோஷமா இருக்கீங்களா?''

``ஆமா, சிலர் புத்தி கேவலமா இருக்கு. `நீங்க ஏன் பதில் கொடுக்குறீங்க'னு நிறைய பேர் என்கிட்ட கேட்பாங்க. ரொம்ப கேவலமா என்னையும், என் பசங்களைப் பற்றியும் பேசுனா நான் அடிப்பட்ட புலியா மாறிடுவேன். அவன் வீட்டுப் பொம்பளை பற்றித் தப்பா பேசுனா அவனுக்குக் கோபம் வரும் இல்லையா? அதே மாதிரிதான் என் வீட்டுல இருக்குறவங்க பற்றிப் பேச அவனுக்கு எந்த உரிமையும் இல்ல. எல்லோருக்கும் ரூல்ஸ் ஒண்ணுதான்.''

``சமீபத்துல, ட்விட்டர்ல அன்பே சிவம் ஃப்ளாப், அதனால சுந்தர் சி, 2 வருஷம் படம் பண்ணமுடியலைன்னு சொல்லியிருந்தீங்களே?''

Anbe Sivam
Anbe Sivam

``ஆமாம். அந்தப் படத்தின் தோல்வினால என் கணவர் பெரியளவில் பாதிக்கப்பட்டார். `அன்பே சிவம்' அப்போதான் எங்க சின்ன பொண்ணு பிறந்திருந்தா. பொருளாதார ரீதியா கையிலே ஒண்ணுமே இல்ல. இப்போ இருக்குற மெச்சூரிட்டி அப்போ இல்ல. அப்போதான் ரெண்டு பேரும் வளர்ற காலம். என்ன பண்ணப் போறோம்னு ஒரே குழப்பமா இருந்தது. அதிர்ஷடவசமா அப்போ எனக்கு `ஜாக்பாட்' மற்றும் `கல்கி'னு ரெண்டு ப்ராஜெக்ட் போயிட்டு இருந்தது. `நான் அடுத்த படம் பண்ற வரைக்கும் வீட்டுப் பொறுப்பை நீ எடுத்துக்க முடியுமா'னு சுந்தர்.சி சார் கேட்டார். `தாராளமா பண்றேன்'னு சொன்னேன். எங்களுக்குள்ள எந்த ஈகோவும் இல்ல. அதனால நான்தான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டேன்னு சொல்லமுடியாது. எங்களோட 25 வருஷ கல்யாண வாழ்க்கைல வெறும் ரெண்டு வருஷம்தான் நான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டேன். மீதி, 23 வருஷம் எங்களுக்காக அவர்தான் ஓடிட்டு இருக்கார். எங்களுக்கான எல்லா விஷயங்களையும் பார்த்துக்கிட்டு இருக்கார்.

அப்ப `அன்பே சிவம்' இப்படியானதும் என்ன பண்றதுன்னே தெரியல. தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்கல. அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிக்குறப்போதான் சொந்தமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்தோம். பெரிய ரிஸ்க்தான். காசு போடும்போது, நூறு முறை இல்ல, ஆயிரம் முறை ரெண்டு பேரும் யோசிச்சோம். ஷூட்டிங் ஸ்பாட்ல எந்த இடத்துல காசு மிச்சம் பண்ண முடியும்னு பார்த்தோம். இப்போ இருக்குற மாதிரியான 20 கோடிக்கான பட்ஜெட் இல்ல. அர்ஜுன் மற்றும் பிரகாஷ்ராஜ்கிட்ட பேசுனோம். ரம்யா, ரீமாசென் கிளாமர் ரோலுக்காக தேவைப்பட்டாங்க. வடிவேல் அண்ணாகிட்டயும் பேசுனோம். சப்ஜெக்ட் மேல நம்பிக்கை வெச்சு `கிரி' படத்தை ஆரம்பிச்சோம். சுந்தர்.சி திரும்பவும் ஃபீல்ட்டுக்கு வந்தார். படமும் ப்ளாக்பஸ்ட்டர் ஹிட். கெட்டதுல எப்போவும் ஒரு நல்லது நடக்கும்னு நானும், என் கணவரும் நினைப்போம். எல்லாம் நல்லா போயிருந்தா சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சிருக்கமாட்டோம். சம்பாதிச்சா காசை எல்லாம் கம்பெனில போட்டு ஆரம்பிச்சோம். கண்ணை மூடிட்டு என் கணவரை நம்புனேன். 2004-ல இருந்து இப்போ வரைக்கும் 16 வருஷம் நிலைச்சு நிக்குறோம். வெற்றியான புரொடக்‌ஷன் கம்பெனியா தமிழ் சினிமால போயிட்டு இருக்கோம்.''

``28 வருஷங்களுக்குப் பிறகு ரஜினிகூட `அண்ணாத்தே' படத்துல நடிச்சிருக்கீங்க... ஷூட்டிங் அனுபவம் எப்படியிருந்தது?''

ரஜினி
ரஜினி

``ரொம்ப நல்லாயிருந்தது. `அண்ணாமலை', `பாண்டியன்' படத்தோட ஷூட்டிங் அப்போ எப்படியிருந்தரோ அப்படியேதான் `அண்ணாத்தே'லயும் இருந்தார். மாறவே இல்ல. லொக்கேஷன்ல நாங்க தனியா உட்கார்ந்திருந்தா, சேர் எடுத்துட்டு வந்து பக்கத்துல உட்கார்ந்திடுவார். `ஏன் என்கிட்ட யாரும் பேச மாட்டீங்களா..? தனியா ஒதுக்கி வெச்சிருவீங்களா'னு கேட்பார். பழைய படங்களோட ஷூட்டிங் அப்போ என்னலாம் நடந்ததுனு பேசிட்டு இருப்போம். அவருக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கு. ஒவ்வொரு ஷாட்ல நடிக்கும்போதும் ஸ்கூலுக்கு முதல்நாள் போற பையன் மாதிரியான ஆட்டிட்யூட்லயே இருப்பார். பத்துமுறைகூட ரிகர்சல் பார்ப்பார். டூ மினிட்ஸ் லேட்டா வந்துட்டாகூட `லேட்டா வந்துட்டேனா ஸாரி'னு சொல்லிக்கிட்டே இருப்பார். அதே மாதிரி நாங்க ஸ்பாட்ல ஏதாவது தப்பு பண்ணிட்டா முழுநாளும் கலாய்ச்சிக்கிட்டே இருப்பார். `அண்ணாத்தே' ஷூட்டிங் இன்னும் மிச்சமிருக்கு. திரும்பப்போய் நடிக்கணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism