Published:Updated:

``இப்பவரை என் பசங்களை பிரகாஷ்ராஜ் நல்லா பார்த்துக்கறார்!'' - லலிதகுமாரி

லலிதகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
லலிதகுமாரி

நான் நடிச்சு சம்பாதிச்சுக் கொடுக் கணும்ங்கிற அழுத்தம் இல்லாததால ரொம்ப சுதந்திரமா இருந்தேன். வாழ்க்கையில நான் சாந்தி அக்காவுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்.

``இப்பவரை என் பசங்களை பிரகாஷ்ராஜ் நல்லா பார்த்துக்கறார்!'' - லலிதகுமாரி

நான் நடிச்சு சம்பாதிச்சுக் கொடுக் கணும்ங்கிற அழுத்தம் இல்லாததால ரொம்ப சுதந்திரமா இருந்தேன். வாழ்க்கையில நான் சாந்தி அக்காவுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்.

Published:Updated:
லலிதகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
லலிதகுமாரி

நடிப்பிலிருந்து ஒதுங்கியதும் அடையாளமே தெரியாமல் மாறிப்போகும் நடிகைகளுக்கு மத்தியில், தனித்துத் தெரிகிறார் லலிதகுமாரி. அன்று பார்த்ததுபோலவே இருக்கிறார். அதிகாலைத் துயில் எழும் வழக்கம், ஆன்மிக நம்பிக்கை, எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாத மனஉறுதி, உடற்பயிற்சிகள் என அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என் பது அவரிடம் பேசியதிலிருந்து விளங்குகிறது.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும் சீரியல் தயாரிப்பு, நடிகர் சங்கப் பொறுப்பு என பிசியாகவே இருந்தார். தற்போது ‘யாத்ரா டைம்ஸ்’ என்ற பெயரில் ஆன்மிகச் சுற்றுலாவுக்கான யூடியூப் சேனலை தொடங்கி மேலும் பிசியாகியிருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகான அவரது பேட்டி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாவற்றையும் பேசுகிறது.

‘‘அப்பா ஆனந்தன், அக்கா டிஸ்கோ சாந்தின்னு எனக்கு முன்னாடியே என் குடும்பத்துலேருந்து சினிமாவுக்கு வந்து ஜெயிச்சவங்க இருந்தாங்க. ஒருமுறை, நானும் அக்காவும் இருக்கிற மாதிரி படத்தோட பொங்கல் வாழ்த்து அனுப்பினதைப் பார்த் துட்டு, ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துக்காக பாலசந்தர் சார் என்னைக் கூப்பிட்டனுப்பி னார். அப்போ நான் ஒன்பதாம் கிளாஸ் விடுமுறையில இருந்தேன். ‘நடிக்கிறியா’ன்னு கேட்டார். ‘சரி’ன்னு சொன்னேன். ஒரு டயலாக் கொடுத்துப் பேசச் சொன்னார். பேசினேன். ‘நாளையிலேருந்து ஷூட்டிங்... வந்துடு’ன்னு சொல்லி அனுப்பினார். மொத் தமே நாலுநாள் தான் எனக்கு ஷூட்டிங்... முடிச்சிட்டு மறுபடி ஸ்கூலுக்குப் போயிட் டேன். நான் டென்த் முடிக்கும்போது படம் ரிலீசாச்சு. அதுல எனக்கு ஆச்சியோட ரசிகையா `வாசு'ங்கிற கேரக்டர். போற இடத் துல எல்லாம் என்னை ‘சின்ன ஆச்சி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு ஸ்கூல்ல கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. அந்தக் கிண்டலைத் தாங்க முடியாம படிப்பை நிறுத்திட்டு மறுபடி நடிக்க வந்துட்டேன்...’’ ஆரம்பம் சொல் பவருக்கு நடிப்பில் கனவுகளோ, லட்சியங் களோ இல்லாதது ஆச்சர்யம்.

மகள்களுடன்
மகள்களுடன்

‘‘ஆனந்தனோட பொண்ணு... சாந்தியோட தங்கச்சினு இண்டஸ்ட்ரியில எனக்கு மரியாதையும் பாதுகாப்பும் அதிகமாவே இருந்தது. வந்த வாய்ப்புகள்ல எனக்குப் பிடிச்சதை மட்டும்தான் பண்ணிருக்கேன். ‘நீங்க ஏன் கவுண்டமணி, செந்தில்கூட வெல்லாம் நடிச்சீங்க’ன்னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. கவுண்டமணி அங்கிளும் செந்தில் அங்கிளும் எங்கப்பாவோட டிராமா ட்ரூப்ல இருந்தவங்க. அவங்ககூட நடிச்ச போது என்னை அவங்க ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அவங்ககூட நடிக் கிறதும் அந்தச் சூழலும் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால நடிச்சேன்.

நான் நடிச்சு சம்பாதிச்சுக் கொடுக் கணும்ங்கிற அழுத்தம் இல்லாததால ரொம்ப சுதந்திரமா இருந்தேன். வாழ்க்கையில நான் சாந்தி அக்காவுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். எங்கக் குடும்பத்துக்காக அவங்க பண்ணின தியாகமும் உழைப்பும் ரொம்ப பெருசு. ‘உன் ஆசைக்காக நடிக்க வந்திருக்கே. பிடிச்சா நடி. இல்லைனா விட்டுடு’னு சொல்ற பெருந்தன்மை அவங்ககிட்ட இருந்தது. பெரிய நடிகையாகணும், நிறைய படங்கள் பண்ணணும்ங்கிற மாதிரி யான எந்த எண்ணமும் இல்லாம நடிக்க வந்ததாலயோ என்னவோ நடிப்பு பத்தின சீரியஸ்னஸ்ஸே எனக்கு வரலை. பாலசந்தர் சார், எஸ்.பி.முத்து ராமன் சார், மாதவன் சார்னு பெரிய டைரக்டர்களோட வொர்க் பண்ணி யிருக்கேன். பண்ணது சின்ன கேரக்டர் னாலும் அத்தனையும் பெரிய டைரக்டர்களோட படங்கள். அந்த வகையில எனக்கு ரொம்பவே திருப்தி...’’ என்பவர், நடிகர் பிரகாஷ் ராஜை திருமணம் செய்துகொண்டதும் நடிப்பி லிருந்து விலகினார்.

‘‘என் வாழ்க்கையில எல்லாமே நான் எடுத்த முடிவுகள்தான். கல்யாண மாச்சு... குழந்தைங்க பிறந்தாங்க. மகளா, மருமகளா, அம்மாவா எனக்கு நிறைய பொறுப்புகளும் கடமைகளும் இருந்தது. அதையெல்லாம் ஆத்ம திருப்தியோடு செய்தேன். சினிமாவை விட்டுட்டோமேனு ஒரு நாளும் நினைச்சதில்லை. ‘பிசியா நடிச்சிட்டிருந்த நிலைமையில அந்தப் பெயர், புகழையெல்லாம் உதறிட்டு எப்படி உங்களால ஹோம் மேக்கரா மாற முடிஞ்சது’ன்னு என்கிட்ட கேட்டிருக்காங்க. அது நான் ரொம்ப விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கைன்னு தான் சொல்லணும். ஒருகட்டத்துல நானும் என் கணவரும் பிரியவேண்டிய சூழல் வந்தது. பிள்ளைங்க என் வளர்ப்புல இருந்தாங்க. விவாகரத்துக்குப் பிறகும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா, குழந்தைங்களை வளர்க்கிறது அதைவிட முக்கியம்னு தோணுச்சு. அதனால அத்தனை வாய்ப்புகளுக்கும் ‘நோ’ சொல்லிட்டேன்.

எங்களுக்கு மூணு பிள்ளைங்க. 2004-ம் வருஷம் மகன் தவறிட்டான். மூத்த மகள் பூஜா பிரகாஷ்ராஜ், அமெரிக்காவுல மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்கிரிப்ட் ரைட்டிங் முடிச் சிருக்கா. இளைய மகள் மேக்னா பிரகாஷ்ராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் ஸ்கூல்ல படிக்கிறா. ரெண்டு பேருக்குமே நடிக்கிற ஆசை இல்லை. ஒருத்தி ஸ்கிரிப்ட் ரைட்டிங் பண்ணவும், இன்னொருத்தி சிங்கராகவும் பிளான் பண்ணி யிருக்காங்க...’’ தன்னில் பாதியும் தன்னவரில் மீதி யுமாக வளர்ந்து நிற்கும் மகள்களின் புகைப்படத்தை ரசித்தபடியே உரை யாடலைத் தொடர்கிறார் லலிதா.

மகனின் இழப்பு, காதல் திருமண முறிவு என லலிதா வின் வாழ்க்கையில் அடுத் தடுத்து சோக நிகழ்வுகள்... அனைத்திலிருந்தும் மீண்ட ரகசியம் சொல்கிறார் அவர்.

‘‘எனக்கு கடவுள் நம் பிக்கை அதிகம். மனசு சரி யில்லைன்னா கோயிலுக்குப் போவேன். சாமிகிட்ட பேசு வேன், அழுவேன். அப்புறம் நார்மலாகிடுவேன். எனக்கு டிப்ரெஷன் என்ற வார்த்தை யில நம்பிக்கையே இல்லை. ஒவ்வொருத்தரும் வாழ்க்கை யில கஷ்டங்களை சந்திக்கிறது இயல்பு. அந்தச் சூழலை நாம எப்படி அணுகறோம்ங்கிறது முக்கியம். என் வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு யோசிச்சேன். அதைப் புரிஞ்சுகிட்டேன். கஷ்டங்களை எப்படிக் கடந்து வரணும்னு யோசிச்சு அதன்படியே கடந்தும் வந்தேன். வாழ்க்கையில நமக்கொரு விஷயம் நடந்தா ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அடுத்தவங்களுடைய அட்வைஸோ, அனுபவமோ உங்களுக்கு நிச்சயம் உதவாது. உங்க வாழ்க்கை, உங்க பிரச்னை... அதுலேருந்து நீங்கதான் வெளியே வரணும். அதுதான் ஈஸியும்கூட...’’ யதார்த்தம் உணர்த்துபவரை இழப்புகளிலிருந்து மீட்டதில் நடனமும் முன்னாள் கணவரின் ஆதரவும் பெரிய பங்காற்றியிருக்கின்றன.

``இப்பவரை என் பசங்களை 
பிரகாஷ்ராஜ் நல்லா பார்த்துக்கறார்!'' - லலிதகுமாரி

‘`நான் ஒரு கிளாசிகல் டான்ஸர். பரதமும் குச்சுப்பிடியும் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு டான்ஸ்ல நிறைய கவனம் செலுத்த ஆரம் பிச்சேன். திருப்பதி, உப்பிலியப்பன்னு நிறைய கோயில்கள்ல டான்ஸ் பண்ணினேன். அந்தச் சூழல்லேருந்து என்னை மீட்டெடுக்க அது பெரிய அளவுல உதவியா இருந்தது. எங்களுக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும் பிரகாஷ்ராஜ் பெரிய சப்போர்ட்டா இருந்தார், இருக்கார். என் பிள்ளைங்களுக்கான எல்லாத்தையும் அவர்தான் இன்னிவரைக்கும் பார்த்துக் கிறார். அவங்களை வளர்க் கறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம பார்த்துக்கிட்டார். எனக்கு டிராவல் ரொம்ப பிடிக்கும். எங்கேயாவது போக ணும்னா, பிரகாஷுக்கு போன் பண்ணிச் சொல் வேன். பிள்ளைங்களை அவர்கிட்ட அனுப்பச் சொல்வார். அவர் வீட்டுக்கு அனுப்பிட்டு நான் நிம்மதியா டிராவல் பண்ணுவேன். இப்போ தைக்கு பெரிய பொண்ணு அவங்கப்பாகூட பிசினஸ் பார்த்துக்கிட்டிருக்கா. அவளும் சின்னவளைப் பார்த்துப்பா...’’ பிரிவுக்குப் பிறகும் துணையின் மீதான அன்பு மாறாத லலிதாவின் அணுகுமுறை வித்தியாசமாக, வியப்பாக இருக்கிறது.

ஆன்மிகத் தேடல் மற்றும் பயணக் காதலின் நீட்சியாக ‘யாத்ரா டைம்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி யிருக்கிறார் லலிதகுமாரி. இதில் இவரின் பார்ட்னர் நடிகை கோவை சரளா.

‘‘நானும் சரளா அக்காவும் நிறைய கோயில் களுக்குப் போவோம். கேதார்நாத் போன போது அதுல அஞ்சு கேதார் இருக்கிறது தெரிஞ்சது. அதை சும்மா ஷூட் பண்ணினோம். அப்படியே ஒரு சேனல் ஆரம்பிச்சு யூடியூப்ல போட்டோம். அதுக்குப் பின்னாடி பெரிய பிளானெல்லாம் இல்லை. நாங்க போறதெல்லாம் முக்கியமான கோயில்கள் என்பதால மிஸ் பண்ண வேணாம்னு தோணுச்சு. இதுல பணம் சம்பாதிக்கிறது நோக்கமே இல்லை’’ என்கிறார்.

பேட்டியின் இடையில் பலமுறை அக்கா டிஸ்கோ சாந்தியை நினைவுகூரும் லலிதாவுக்கு அவர் குறித்த கவலையும் பெரிதாக இருக்கிறது.

‘‘அக்கா ஹைதராபாத்ல இருக்காங்க. அவங்க சென்னை வந்தாலோ, நான் அங்கே போனாலோ சந்திக்கிறோம். சாந்தி அக்காவுக்கு ரெண்டு பசங்க. பெரியவர் ஷஷாங்க், ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் பண்றார். சின்னவர் மேகாஷ், ரெண்டு படங்கள்ல ஹீரோவா பண்ணியிருக்கார். கணவர் ஹரி பாவாவோட இழப்புலேருந்து சாந்தி அக்காவால இன்னும் முழுமையா மீண்டு வர முடியலை. அதை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு...’’ அக்காவுக்காகவும் சேர்த்துப் பிரார்த்திப்பவர், எதிர்காலத் திட்டங்களும் சொல்கிறார்.

‘‘நடிகர் சங்கத்துல பாண்டவர் அணியில இருந்தேன். எங்க அணியோட விருப்பம் நடிகர் சங்க கட்டடம் கட்டறதா இருந்தது. உழைச்சோம், ஜெயிச்சோம். நியமன உறுப்பின ரானேன். மனக்கசப்புல மறுபடி தேர்தல் வந்தது. மறுபடி ஜெயிச்சிட்டோம். கட்டடம் கட்டறதுக்கான எல்லா முயற்சிகளையும் மறுபடி பண்ணிட்டிருக்கோம். நீ பெருசா, நான் பெருசாங்கிற எண்ணம் எந்த அணிக்கும் இல்லை. அந்தவகையில நடிகர் சங்கம் நல்ல படியாவே செயல்பட்டுக்கிட்டிருக்கு.

2018-ல கலர்ஸ் தமிழ் சேனல்ல ‘தறி’னு ஒரு சீரியல் புரொடியூஸ் பண்ணேன். அந்த அனுபவத்தை வெச்சு ஓடிடில ஒரு படம் பண்ணணும், வெப்சீரிஸ் டைரக்ட் பண்ணணும்ங்கிற பிளான் இருக்கு. நடிக்கக் கேட்டும் வாய்ப்புகள் வருது. பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. இனி மனசுக்குப் பிடிச்ச கேரக்டர் வந்தா நடிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். மத்தபடி நிறைய டிராவல், நிறைய நிறைய சந்தோஷம்னு வாழ்க்கை நிறைவா போயிட்டிருக்கு’’

- குறையொன்றுமில்லாதவருக்கு அது அப்படியே தொடரட்டும்.`