Published:Updated:

"ஜீவாவுக்கு அம்மாவா, தனுஷுக்கு அம்மாவ நடிச்ச பிறகுதான் கவனிக்கிறாங்க!" - நடிகை மணிமேகலை

சக்தி தமிழ்ச்செல்வன்

"நாடகத்தில் நடிக்கும்போது குறைந்தது 20 நிமிடங்கள் தொடர்ந்து தியானத்தில் இருப்பது போன்ற நிலையில் நடிப்பை வெளிப்படுத்துகிறோம்."

மணிமேகலை
மணிமேகலை

சினிமாவில் பல சிறிய வேடங்களில் நடித்து, பிறகு 'நண்பன்' படத்தில் ஜீவாவின் அம்மாவாகவும், வெற்றி மாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தில் தனுஷுக்கு அம்மாவாகவும் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மணிமேகலை. நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர். தற்போது ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கிறார். ஒரு நாடக நிகழ்வுக்காக தஞ்சாவூர் வந்திருந்தவரிடம் பேசியதில் இருந்து...

"எப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது?"

மணிமேகலை
மணிமேகலை

"எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பொதுவாக எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். சிலரே வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். குடும்ப சூழ்நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருகட்டத்துக்கு மேல் எனக்கான சூழ்நிலை தானாக அமைந்தது. ஒய்.ஜி.மகேந்திரன் பள்ளியில் ஒரு வருடம் டிப்ளோமா முடித்தேன். உடல்ரீதியாக உழைக்கத் தொடங்கிய பிறகு, முதல் வாய்ப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில்தான் அமைந்தது. தொடர்ந்து நாடு முழுக்கப் பல்வேறு நிகழ்வுகளில் நடித்தேன்."

"கூத்துப் பட்டறையில் சேர்ந்தது பற்றி?"

"1994-ல் கூத்துப் பட்டறையில் இணைந்தேன். ஆரம்பத்தில் சிறு சிறு பாத்திரங்கள் ஏற்று நடித்துக்கொண்டிருந்தேன். போகப் போக சீனியர்கள் வேறு வேலையில் இருக்கும்போது, எனக்கு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அப்போது நாடகத்தின் மூலம்தான் பல முன்னெடுப்புகளை மேடையில் கொட்ட முடிந்தது."

"சினிமாவில் முதல் பட வாய்ப்பு?"

மணிமேகலை
மணிமேகலை

"23 வருடமா சினிமா துறையில் இருக்கிறேன். 1996-ம் வருடம் வெளியான 'கருவேலம்பூக்கள்'தான் எனது முதல் படம். நடிகை ரேவதி நடிக்கவிருந்த கேரக்டர் அது. சில காரணங்களால் அவர்கள் அதில் நடிக்க முடியாமல் போகவே, நான் நடித்தேன். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படம்தான் என்னை மக்களிடம் அதிக கவனம் பெற வைத்தது. இடையில், 'சண்டக்கோழி', 'பீமா' போன்ற படங்களிலும் நடித்திருந்தேன்."

"நாடகத்தில் நடிப்பதற்கும் சினிமாவில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?"

"நாடகத்தில் நடிக்கும்போது குறைந்தது 20 நிமிடங்கள் தொடர்ந்து தியானத்தில் இருப்பது போன்ற நிலையில் நடிப்பை வெளிப்படுத்துகிறோம். சினிமாவில் 2 நிமிடம், 3 நிமிடம் என்று விட்டுவிட்டு நடிக்கிறோம். நாடகத்தில் பார்வையாளனை அடையும்பொருட்டு மிகைப்படுத்தி நடிக்கிறோம். சினிமாவில், மிகைப்படுத்துதல் குறைவு. இரண்டும் வெவ்வேறு உணர்வுகள்."

" 'வடசென்னை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?"

"அந்தக் கேரக்டருக்காக ஆடிஷன் வைத்தார்கள். போட்டோ அனுப்பினேன். நானும் தனுசும் ஸ்லிம்மா இருப்பதால் கதைக்குக் கச்சிதமாக இருக்கும் என்று, என்னைத் தேர்வு செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்."

"அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?"

மணிமேகலை
மணிமேகலை

"வசந்த பாலன் இயக்கும் 'ஜெயில்' படத்தில், ஜி.வி.பிரகாஷுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். நடிப்பு மட்டுமல்ல, சென்னை முகப்பேரில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை பாட்டு கிளாஸ் நடத்திக்கொண்டு இருக்கிறேன். இந்த வருடத்தில் இருந்து டான்ஸ் கிளாஸும் நடத்திக்கொடுக்கலாம் என இருக்கிறேன். தவிர, திருவண்ணாமலையில் நடிப்புப் பள்ளிக்கு வகுப்பு எடுக்கிறேன். இந்த வேலைகளுக்கு இடையில சினிமா வாய்ப்புகள் வரும்போது, நடிக்கிறேன். இப்போது நேரம் கிடைக்காத காரணத்தால், தொடர்ந்து நாடகங்களில் நடிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது நாடகங்களிலும் நடிக்கணும்" என்கிறார் மணிமேகலை.