
என் தோழியும் நடிகையுமான ரம்பாவும் கலா மாஸ்டரும் எனக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்ததோடு, என்னையும் நைனிகாவையும் வெளியே கூட்டிட்டுப்போய் எங்க இறுக்கத்தை உடைச்சாங்க
‘கண்ணழகி’ மீனா, சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கொண்டாட்டமாக அமைய வேண்டிய இத்தருணம், சில மாதங்களுக்கு முன்பு மறைந்த கணவர் வித்தியாசாகரின் இழப் பால், மீனாவுக்கு ஈடுசெய்ய முடியாத துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் பொதுவெளிக்கு வந்திருப்பவரை, மனம் திறந்த முதல் உரையாடலுக்குச் சம்மதிக்க வைத்தோம்.
“நான் அனுபவமுள்ள நடிகை. ஆனால்...” என்றவரின் கம்மிய குரலே, அவர் முழுமையாக இயல்புநிலைக்குத் திரும்பாததை நமக்கு உணர்த்துகிறது.
“எப்படிச் சொல்றதுனே தெரியலை. எதிர்பாராத வகையில நினைச்சதுக்கு மாறா நிறைய விஷயங்கள் திடுதிப்புனு நடந்துடுச்சு. எங்கம்மா ரொம்ப தைரிய மானவங்க. நடிகையா இத்தனை வருஷமா நான் வெளியுலகத்துல தெரிய அவங்கதான் காரணம். அவங்களைப் பார்த்து வளர்ந்த தாலோ என்னவோ, இக்கட்டான இந்த நேரத்துல என்னால தைரியமா இருக்க முடிஞ்சிருக்கு. என்னதான் பாசிட்டிவ்வா பேசினாலும், பேட்டி கொடுக்கிற அளவுக் குச் சீக்கிரமே நான் மீண்டு வந்திருக்கிறதை நினைச்சா, எனக்கே ஆச்சர்யமா இருக்கு” என்றவர், கணவரின் இழப்புக்கான கார ணத்தையும் முதன்முறையாகப் பகிர்ந்தார்.

“நாங்க வசிச்ச பெங்களூரு அப்பார்ட்மென்ட்டை சுத்தி நிறைய புறாக்கள் இருந் துச்சு. அவற்றின் எச்சம் மூலமா ‘ஐ.எல்.டி’ங்கிற (Interstitial Lung Disease) நுரையீரல் தொற்று அவருக்கு ஏற்பட்டுச்சு. தாமதமா தான் இதைக் கண்டுபிடிச்சோம். அந்த நேரத்துல தான் கொரோனா ரெண்டாவது அலை ஏற்பட்டு, எங்க வீட்டுல எல்லோருக் கும் கோவிட் ஏற்பட்டுச்சு. வித்தியாசாகரைத் தவிர, எங்களுக்கெல்லாம் சில தினங்கள்ல உடல்நிலை சரியாகிடுச்சு. ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததால, மறுபடியும் தொற்று ஏற்பட்டு, அவரின் உடல்நிலை மோசமாச்சு. அவருக்கு நுரையீரல் செய லிழந்து அந்த உறுப்பைத் தானமா பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்ட தெல்லாம் நாங்க வாழ்நாள்ல கேள்விப்படாத பிரச்னை. எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவரைக் காப்பாத்த முடியலை” என்ற படியே மெளனத்தில் உறைகிறார் மீனா.
தன் கணவருக்கான இறுதிச்சடங்குகளை மீனா செய்தது மாற்றத்துக்கான முன்னெ டுப்பு. ஆனால், அதுகுறித்து அந்நேரத்தில் சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. அதுகுறித்துப் பேசியவர், “கேமரா முன்னாடி வரவே அவர் கூச்சப்படுவார். பொதுவெளியில தன்னை முன்னிலைப்படுத்திக்கவும் விரும்ப மாட்டார். மத்தவங்களுக்குக் கெடுதல் செய்யாம, யாரையும் கஷ்டப்படுத்தாம எது வேணாலும் செய்யலாம்ங்கிற கொள்கையில வாழ்ந்தவர், மனசுல பட்டதை தைரியமா சொல்ல என்னையும் பழக்கப்படுத்தினார். அவர் ரொம்ப பிராக்டிகல் பர்சன். முற் போக்கா யோசிப்பார்.
எங்கப்பா இறந்தப்போ, அவருக்கான இறுதி காரியங்களை மருமகனா அவரைச் செய்யச் சொன்னோம். ‘நான் வெளியி லிருந்து வந்தவன். பிறப்புலேருந்து கூடவே இருக்கும் நீதான் அவருக்கான காரியங் களைச் செய்யணும்’னு சொன்னார். எந்த விஷயத்துலயுமே ‘இதை இவங்கதான் செய்யணும்’ங்கிற வரையறை கூடாதுங்கிற தையும் அவர்கிட்ட தான் கத்துகிட்டேன். அதனாலதான் என் கணவருக்கான இறுதி காரியங்களை நானே செஞ்சேன். அவருக்கு எது பிடிக்கும், பிடிக்காதுனு என்னைத் தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்? என் கணவருக்கான சடங்குகளை, அவர் விரும்புற வகையில நான் செஞ்சதுல யாருக்கு என்ன பிரச்னை? பாலின பாகுபாடுகள் எதுலயும் இருக்கக் கூடாதுனு சொல்றது வாய் வார்த் தையா இல்லாம, நடைமுறையிலயும் சாத்திய மாகணும்” நியாயத்துக்கான குரலாக மீனாவின் வார்த்தைகள் அழுத்தமாக ஒலிக் கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் மீனாவை இறுக்கத்திலிருந்து மீட்டதில் அவரின் தோழிகளுக்கு முக்கியப் பங்குண்டு.
“என் தோழியும் நடிகையுமான ரம்பாவும் கலா மாஸ்டரும் எனக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்ததோடு, என்னையும் நைனிகாவையும் வெளியே கூட்டிட்டுப்போய் எங்க இறுக்கத்தை உடைச்சாங்க. மனசு லேசாச்சு. அதுக்கப்புறமாதான் மறுபடியும் வெளியுலகத்தோடு கலக்க ஆரம்பிச்சேன். தோழிகள் சிலர் என் பிறந்தநாள்ல சர்ப்ரைஸ் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. எப்பவும் உற்ற துணையா இருக்கிற என் தோழிகள், என் வீட்டுக்கு அடிக்கடி வந்து, உரிமையுடன் திட்டி, வம்படியா என்னை ரெடி பண்ணி, வெளியிடங்களுக்குக் கூட்டிட் டுப்போகவும், என் முகத்துல சிரிப்பைப் பார்க்கவும் மெனக்கெட்டாங்க. இதையெல் லாம் சினிமாவுல மட்டுமே பார்த்த நான், என் மேல உண்மையான பாசம் கொண்ட நண்பர் களை, இப்போ கண்கூடா தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சது” என்று நெகிழ்பவருக்கு, மகள் நைனிகாவும் தைரியத்தைக் கொடுத்திருக் கிறார்.
“அப்பாவின் மறைவால, ஆரம்பத்துல சில தினங்கள் நைனிகா ரொம்ப வருத்தமா இருந்தா. பல விஷயங்கள்ல குழந்தைகளை நினைச்சு நாம ரொம்பவே பயப்படுவோம். ஆனா, கடினமான சில சூழல்கள்ல அவங்க நமக்கு நம்பிக்கையா இருப்பாங்க. நைனிகா நடிக்க வந்தப்போ, நாலு வயசுல அவளால சமாளிக்க முடியுமான்னு பயந்தேன். ஆனா, ‘தெறி’ படத்துல முதல் டேக்லயே நைனிகாவின் டயலாக் ஓகே ஆனதோடு, டப்பிங் முதற் கொண்டு எல்லா வேலைகளையும் சுலபமா செஞ்சு முடிச்சுட்டா. அப்படித்தான் இந்த நேரத்துலயும் சீக்கிரமா சகஜ நிலைக்கு வந் துட்டா. நைனிகா வருத்தத்துல இருந்திருந்தா, நானும் இயல்புநிலைக்குத் திரும்ப ரொம்ப காலம் தேவைப்பட்டிருக்கும்” என்பவர், இறுதியாகச் சொல்வது எல்லோருக்குமான செய்தி.
“எல்லாருக்குமே கஷ்டங்கள், இழப்புகள் வரும். இது இயல்பானதுதான். என்ன நடந் தாலும், பழசுலயே முடங்கி வருத்தப்படாம, அடுத்த அடியை நல்லபடியா எடுத்து வெக் கணும். என்னைச் சுத்தியிருந்த பலரும் கொடுத்த அதுக்கான நம்பிக்கை, வாழ்நாள் முழுக்க உதவும்னு நம்புறேன். நிகழ்காலம் மட்டுமே நிஜம். இதை ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணக் கூடாதுனு, ‘இந்தக் கணம் மட்டும்தான் கையில; அதை உங்களுக்காக வாழுங்க’னு மத்தவங்களோடு எனக்கும் சேர்த்தே சொல்லிக்கிற மாதிரி, என் 46 வருஷ பயணம் பத்தின ஒரு பதிவை வெளியிட்டேன். மறுபடியும் கிடைக்காத நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமா கழிப் போம்” என்று மனதிலிருந்து சொல்லி முடித் தார் மீனா.
மாற்றங்கள் மலரட்டும்!
18 வயதில் கண்தானம்!
“மறைஞ்ச பிறகும் என் கண்கள் இன்னொருத்தருக்கு உதவட்டுமேனு 18 வயசுலயே கண்தானம் செஞ்சேன். தக்க சமயத்துல என் கணவருக்கு நுரையீரல் தானம் கிடைக்காம போனப்போ நாங்க தவிச்சதை இப்ப நினைச்சாலும் வேதனையா இருக்கு. அந்த வேதனை மத்தவங்களுக்கும் வரக் கூடாதுதான், என் உடலை தானம் செஞ்சதுடன், உடலுறுப்பு தானத்தின் முக்கியத் துவம் பத்தி ஒரு பதிவு வெளியிட்டேன். நாம இறந்த பிறகும் சிலரை வாழவைக்க, உடலுறுப்பு தானம் செய்ய முன்வந்தா பயனுள்ள மாற்றத்துக்கான ஆரம்பம் வலுவாகும்” - அக்கறையுடன் கூறுகிறார் மீனா.