Published:Updated:

‘அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலை!’

மீனா
பிரீமியம் ஸ்டோரி
News
மீனா

உண்மையச் சொல்லணும்னா ‘என் ராசாவின் மனசிலே’ படம் ரிலீசாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தெலுங்குல ஹீரோயினா அறிமுகமாகிட்டேன்.

‘திரிஷ்யம் 2’, மலையாளத்தில் `முதல் பாகத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல’ என்கிற விமர்சனங்களைப் பெற்றதில் மீனா இப்ப செம ஹேப்பி. கண்ணசைவிலும் கல்கண்டுக் குரல் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன் இதே ஒரு கோடை நாளில்தான் வெள்ளந்தி ’சோலையம்மா’வாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ‘‘ஹீரோயினாகி முப்பது வருஷமாச்சுல்ல... என் அம்மாவாலேயே இதை நம்ப முடியலை’’ எனச் சிரித்தவரிடம் கேள்விகளை வைத்தேன்.

``ஹீரோயினாகுறதுக்கு ஆரம்பத்துல நீங்க பண்ணின முயற்சிகள்... ‘என் ராசாவின் மனசிலே’ வாய்ப்பு வந்த, ஹிட் ஆன தருணங்கள்... எல்லாம் ஞாபகத்துல இருக்கா?’

‘‘முயற்சிகளா..? ஆக்சுவலி நான் சைல்டு ஆர்ட்டிஸ்ட் ஆனதே ஒரு விபத்துதாங்க. சிவாஜி அப்பா அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா எப்படியோ அடுத்தடுத்து படங்கள் அமைஞ்சது. அந்த வயசுலயே கேமரா, ஷூட்டிங் பயமும் போயிடுச்சு. ஆனாலும் திரும்பவும் படங்கள் நடிப்பேன்னு நினைக்கலை. ஏன்னா ஐ.எஃப்.எஸ். ஆபீசர் ஆகணும்கிறதுதான் என் கனவு. இந்தச் சூழல்ல பட வாய்ப்புகள் திரும்பத் திரும்ப வர, `ஒரு படம் பண்ணிப் பார்க்கலாமே’ன்னு நினைச்சுச் சம்மதிச்சதுதான் ‘என் ராசாவின் மனசிலே.’ கஸ்தூரி ராஜா சார் கதை சொன்னப்ப ரொம்பப் பிடிச்சிருந்ததால சரின்னு சொன்னேன். ஆடிஷன்ல பேசிட்டு துடுக்குத்தனமா, ‘சார், லைட், கேமராவெல்லாம் வச்சா இன்னும் நல்லா வரும்’னு சொன்னேன். சிரிச்சுட்டுப் போனார். அடுத்த சில நாள்கள்ல கன்ஃபார்ம் பண்ணி, ‘ஷூட்டிங் கிளம்பணும்’னாங்க, ஹீரோ யார்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்குமில்லையா, அதையும் கேட்டுட்டேன். ‘புரொடியூசரே ஹீரோவாப் பண்றார்’னு மட்டும் சொன்னாங்க. ஷூட்டிங் தொடங்கிய ரெண்டாவது நாள்தான் ராஜ்கிரண் சாரைப் பார்த்தேன். படத்துக்காகத்தான் முரட்டு ஆளா இருந்தாரே தவிர, நிஜத்துல மனுஷன் ஸ்வீட் அண்ட் சாஃப்ட். எல்லோரையும் அக்கறையா கவனிச்சுக்கிட்டார். படம் ஹிட்டுன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதேநேரம் அதை என்ஜாய் பண்றதுக்குக்கூட நேரமில்லாதபடி அடுத்தடுத்து பிஸி ஆகிட்டேன்.’’

‘அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலை!’

`` ‘சோலையம்மா’வை கோடம்பாக்கம் வாரி அணைச்சுக்கிட்டதுல ஐ.எஃப்.எஸ். கனவு கலைஞ்சிடுச்சு.. அதானே?’’

‘‘உண்மையச் சொல்லணும்னா ‘என் ராசாவின் மனசிலே’ படம் ரிலீசாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தெலுங்குல ஹீரோயினா அறிமுகமாகிட்டேன். அதுவும் ட்ரையல்தான்னு வச்சுக்கோங்களேன். ஆனா ‘சீதாராமய்யா காரு மனவராலு’ங்கிற அந்தப் படம் அங்க சூப்பர் டூப்பர் ஹிட். இங்கயும் ‘ராசாவின் மனசிலே’ ஹிட் ஆகிடுச்சா... தமிழ், தெலுங்குன்னு ரெண்டு பக்கமிருந்தும் நிறைய வாய்ப்புகள். ஸோ, ஐ.எஃப்.எஸ் கனவு அப்பவே கலைஞ்சிடுச்சு. இப்ப விமன் செண்ட்ரிக் படங்கள்னு சொல்றாங்களே, எனக்கு தெலுங்குல அப்பவே அந்த வாய்ப்புகளெல்லாம் வந்துச்சு. ஆனா ஒரு கட்டத்துல வீடு, அம்மா, அப்பா, சென்னை எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்ற ஃபீலிங் வந்துட்டதால, அங்க குறைச்சுக்கிட்டு தமிழுக்கு வந்தேன்.’’

``குழந்தை நட்சத்திரம் தொடங்கி இப்ப வரைக்குமான பயணத்துல சக்சஸ்க்கான சீக்ரெட்னு ஏதாவது இருக்குமே?’’

“கடின உழைப்பு, பங்க்சுவாலிட்டி, டெடிகேஷன்... நானே லிஸ்ட் போட்டா நல்லா இருக்குமாங்க? ஆனா ஒரேயொரு விஷயம் நாகேஸ்வர ராவ் சார் சொல்லிக் கொடுத்தை ஃபாலோ செய்தேன். ‘நாம யாருக்காகவும் வெயிட் பண்ணலாம். ஆனா நமக்காக யாரும் வெயிட் பண்ணக் கூடாது’ங்கிறதுதான் அது. அதேபோல, தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஹீரோயின் தரப்புல இருந்து எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுங்கிறதையும் ஒரு பாலிசியா வச்சிருந்தேன். ப்ளஸ் ரசிகர்கள் என்னை விரும்பி ஏத்துக்கிட்டதும் முக்கியக் காரணம்.’’

‘அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலை!’

``ரஜினி, கமல், மோகன்லால், அஜித்துடன் நடிச்சீங்க. விஜய் எப்படி மிஸ் ஆனார்?‘ஷாஜகான்’ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினப்ப இதுபத்தி நீங்களோ அவரோ பேசினதுண்டா?’’

‘‘எப்படி நடந்ததுன்னு சொல்லத் தெரியலை. அந்தச் சமயத்துல நானும் பிஸியா இருந்தேன். அவரும் பிஸியா இருந்திருக்கலாம். ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட மூணு படங்கள் தவற விட்டிருக்கேன். ஆனா அவர்கிட்ட இதைப் பத்திப் பேசியதில்லை. ‘ஷாஜகான்’ ஷூட்டிங்ல ரெண்டு பேரும் ஜஸ்ட் ஒரு ஹலோ சொல்லியிருப்போம், அவ்ளோதான். நானும் கொயட், அவரும் கொயட். அப்புறம் என்னத்த பேசறது?”

``ஹீரோயினா உச்சத்துல இருந்தப்ப உங்களுக்குப் போட்டின்னு யாரையெல்லாம் நினைச்சீங்க?’’

“ரோஜா, நக்மா, ரம்பா, சௌந்தர்யான்னு ஒரு லிஸ்ட்டே இருந்தது. ஒளிவு மறைவில்லாமச் சொல்லட்டுமா, இவங்கெல்லாம் ஒரு படம் கமிட் ஆனா, அந்தக் கேரக்டர், அதுக்குக் கிடைச்ச வரவேற்பு குறித்த அப்டேட்லாம் நமக்கு உடனுக்குடன் வந்திடணும்னு நினைச்சிருக்கேன். இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்னா கேக்கவே வேண்டியதில்லை. பர்ஃபாமன்ஸ்க்குப் பெரிய போட்டி இருக்கும். ஆனா ஆரோக்கியமான போட்டியா மட்டுமே வச்சுக்கிட்டேன். ரோஜாவும் நானும் சேர்ந்து நடிச்சப்பெல்லாம் எங்களுக்கிடையில் நல்ல பாண்டிங்கே இருந்தது.’’

‘அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலை!’

``சினிமாவுல இன்னும் நிறைவேறாத ஆசைகள் இருக்கா?’’

‘‘நிறைய இருக்கு. டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர் சார் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை. மணிரத்னம் சார் ‘திருடா திருடா’வுக்குக் கேட்டப்ப மிஸ் பண்ணிட்டேன். ஷங்கர் சார் தன்னுடைய முதல் படமான ‘ஜென்டில்மேன்’க்கே கேட்டார். தேதி பிரச்னையாலதான் பண்ண முடியலை. இன்னைக்கும் ஷங்கர் சார் எங்க பார்த்தாலும் ‘நான் புது டைரக்டர்னுதானே அன்னைக்கு முடியாதுன்னு சொல்லிட்டீங்க’ன்னு கலாய்க்கிறார். ‘இந்தியன்’லயும் சுகன்யா நடிச்ச கேரக்டர் முதல்ல எனக்குத்தான் வந்தது.

அடிப்படையில் நான் கிளாசிகல் டான்ஸர். டான்ஸை அடிப்படையா வச்ச கதை இது வரைக்கும் அமையல. அடுத்ததா இன்னொண்ணு இருக்கு. அது இனிமே அமைய சான்ஸே இல்லை. ஆமாங்க, காலேஜ் ஸ்டூடன்ட்டா நடிக்கணும்னு ஆசைப்பட்டேன் (பலமாகச் சிரிக்கிறார்). ஆனா, யாரும் எனக்கு அந்தக் கேரக்டர் தரலை. ரியல் லைஃப்லயும் காலேஜ் போனதில்லை. சினிமாவுலயும் நடக்கலை.’’

``இப்ப உள்ள ஹீரோக்கள்ல யாருடைய படங்களை விரும்பிப் பார்க்கறீங்க?’’

‘‘விஜய் சேதுபதி, தனுஷ்லாம் அட்டகாசமா நடிக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருடனும் டஃப் கொடுக்கிற ஒரு ஆப்போசிட் கேரக்டர்ல நடிக்கணும்னுகூட ஒரு சின்ன ஆசை இருக்கு.’’

‘அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலை!’

``நைனிகா எப்படி இருக்காங்க?’’

“ஆன்லைன் கிளாஸ்ல பிஸியா இருக்காங்க. விளையாட்டு, பாட்டு பாடறது, ஃப்ரண்ட்ஸ்களோட பேசறது பொழுது போயிட்டிருக்கு. ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங் கிளம்பினப்ப, ‘நீங்க மட்டும் ஷூட்டிங் போறது’னு கேட்டாங்க. கோவிட் பாண்டமிக் முடியட்டும், நீங்களும் போகலாம்னு சொல்லி வச்சிருக்கேன். டீச்சர், சிங்கர், மாடல்னு நிறைய ஆசை இருக்கு. இடையில ஒருநாள் பிரைம் மினிஸ்டர் ஆகணும்னுகூட சொன்னாங்க... (அதே பலமான சிரிப்பு)’’

`` ‘அண்ணாத்த’ ஷூட்டிங் அப்டேட் ஏதாவது..?’’

“25 வருஷம் கழிச்சு ரஜினி சார் கூட நடிச்சேன். ஷூட்டிங்ல ஒருநாள் கிட்ட வந்தவர், அவர் ஸ்டைல்ல `மீனா, ஐ யம் வெரி டிஸ் அப்பாயிண்டட் வித் யூ’ன்னு படபடன்னு பேசினார். பதறிப்போய் ‘என்னாச்சு சார்’னு கேட்டேன். எல்லாருமே மாறிட்டாங்க. ‘நீங்க மட்டும் எப்படி ‘வீரா’வுல பார்த்த மாதிரியே இருக்கீங்க’ன்னு கேட்டார். செட்டில் எல்லாருமே சிரிக்க, ஒரே வெட்கமாப் போச்சு.’’