Published:Updated:

``நைனிகா ரொம்பவே வளர்ந்துட்டா; அவளுக்கான நேரம் போகத்தான் நடிப்பேன்!" - நடிகை மீனா ஷேரிங்ஸ்

நைனிகாவுடன் மீனா

`த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் சத்தமின்றி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் மீனாவுடன் பேசினோம்.

``நைனிகா ரொம்பவே வளர்ந்துட்டா; அவளுக்கான நேரம் போகத்தான் நடிப்பேன்!" - நடிகை மீனா ஷேரிங்ஸ்

`த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் சத்தமின்றி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் மீனாவுடன் பேசினோம்.

Published:Updated:
நைனிகாவுடன் மீனா

மலையாளத்தில் பெரும் ஹிட் அடித்த படம் `த்ரிஷ்யம்’. தமிழ் (`பாபநாசம்’) உட்பட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, பெரிய அளவில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. நடிகை மீனாவின் செகண்டு இன்னிங்ஸையும் வெற்றியுடன் தொடங்கி வைத்த இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே கதையின் நாயகி. கொரோனா அச்சத்துக்கு நடுவே, `த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் சத்தமின்றி எடுக்கப்பட்டுள்ளது. நாளை ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

மோகன்லாலுடன் மீனா...
மோகன்லாலுடன் மீனா...

அதே எதிர்பார்ப்புடன் இருக்கும் மீனாவிடம் பேசினோம். வரிக்கு வரி, `டிரேட் மார்க்’ சிரிப்புடன் உற்சாகமாகப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `த்ரிஷ்யம்’ பட வாய்ப்பு வரும்போது என்னோட பொண்ணு நைனிகாவுக்கு 2 வயசு. அதனால, படங்கள்ல நடிக்கிற எண்ணம் எனக்குச் சுத்தமா இல்ல. இயக்குநர் ஜீத்து ஜோசப் என்கிட்ட கதை சொன்னார். ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தாலும், அந்தப் படத்துல நடிக்க வாய்ப்பில்லாத என்னோட சூழ்நிலையைச் சொன்னேன். குழந்தையைக் கவனிச்சுக்க எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு கொடுக்கிறோம்னு வாக்குறுதி கொடுத்து, மோகன்லால் சார் மனைவி கேரக்டர்ல நான்தான் நடிக்கணும்னு வலியுறுத்தினார். சொன்னதைவிடவும், எனக்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்தாங்க. நான் சம்பந்தப்பட்ட போர்ஷனை சீக்கிரமே படமாக்கினாங்க.

'த்ரிஷ்யம்' படத்தில்
'த்ரிஷ்யம்' படத்தில்

என்னோட அம்மா கூடவே இருந்து நைனிகாவைப் பார்த்துகிட்டாங்க. நல்ல கதை. நிச்சயம் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும்னுதான் மொத்தப் படக்குழுவும் நம்பிக்கையோடு வேலை செஞ்சோம். மலையாளத்துல இந்தப் படம் பெரிய ஹிட்டாச்சு. கல்யாணமானதுமே நடிகைகளுக்கு வரவேற்பும் முக்கியத்துவமும் குறைஞ்சுடுது. அதனால, எனக்கு மறுபடியும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கிடைக்கும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்த நேரத்துல, `த்ரிஷயம்’ வெற்றி இன்ப அதிர்ச்சியா அமைஞ்சது. கூடவே, ரெண்டாவது இன்னிங்ஸ்லயும் புகழ் பெறலாம்ங்கிற நம்பிக்கையும் எனக்குக் கிடைச்சது.

உடனே பல மொழிகள்லயும் அந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுச்சு. கன்னடத்துல வந்த வாய்ப்பை ஏற்க முடியல. ஆனா, தெலுங்குலயும் `த்ரிஷ்யம்’ங்கிற பெயர்லயே எடுக்கப்பட்ட படத்துல மட்டும் நடிச்சேன். அதன் மூலம், பெண் இயக்குநர் படத்துல நடிக்கணும்ங்கிற என்னோட நீண்டகால ஆசையும் நிறைவேறுச்சு. ரொம்பவே பழக்கமானவங்கன்னாலும், இயக்குநரா நடிகை ஸ்ரீப்ரியா மேடம்கூட வேலை செஞ்சது ஸ்வீட் மெமரீஸ். தெலுங்கிலும் அந்தப் படம் ஹிட். இந்த மாதிரியான அனுபவங்கள் கரியர்ல சில படங்கள்லதான் கிடைக்கும். அந்த வகையில, `த்ரிஷ்யம்’ என் கரியர்ல முக்கியமான படங்கள்ல ஒண்ணு.

'த்ரிஷ்யம் 2' படத்தில்...
'த்ரிஷ்யம் 2' படத்தில்...

தமிழ்ல `பாபநாசம்’ படத்தைப் பார்த்தேன். நெல்லைத் தமிழ்ல பேசி கமல் சார் தன்னோட பங்களிப்பைச் சிறப்பாவே செய்திருந்தார். மூலக்கதையும், திரைக்கதையும்தான் `த்ரிஷ்யம்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஒவ்வொரு காட்சியுமே மக்களுக்கு மட்டுமல்லாம, நடிக்கிற எங்களுக்குமே எதிர்பார்ப்பை ஏற்படுத்துச்சு. அதனால, தெலுங்கு ஷூட்டிங்கின்போது, `இந்தப் படத்தின் ரெண்டாம் பாகம் வெளியாகுமா?’ன்னு ஸ்ரீப்ரியா மேடம் என்கிட்ட கேட்டாங்க. `கதை முடிஞ்சுடுச்சே. அடுத்த பார்ட் வருமான்னு தெரியல. ஆனா, அப்படி நடந்தா இன்னும் த்ரில்லிங்கா இருக்குமே’ன்னு அவங்ககிட்ட சொன்னேன். அதோடு அந்தப் பேச்சை மறந்துட்டேன்” என்று அதிரச் சிரிக்கிறார்.

லாக்டெளனில் போனிலேயே கதையைக் கேட்ட மீனா, இரண்டாம் பாகத்தில் நடிக்க கேரளாவுக்குச் சிட்டாகப் பறந்துவிட்டார்.
'த்ரிஷ்யம் 2' படத்தில்...
'த்ரிஷ்யம் 2' படத்தில்...

`` `த்ரிஷ்யம்’ ரெண்டாம் பாகம் உருவாகும் விஷயத்தைப் படக்குழு என்கிட்ட சொன்னாங்க. பயங்கர இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. புதிய படத்தின் கதை எப்படி நகரும், குறிப்பா என்னோட கேரக்டரோட பங்களிப்பு எப்படி இருக்கும்னு எனக்குள் நிறைய கேள்விகள், குழப்பங்கள். எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்ன இயக்குநர் ஜீத்து ஜோசப், முழுக் கதையையும் எனக்கு போன்லயே சொன்னார். எனக்கு ரொம்பவே சந்தோஷம். கடந்த அக்டோபர் மாசத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சது. கொரோனா சூழலால கொஞ்சம் பயத்துடன் நான் மட்டும்தான் தனியா ஷூட்டிங் போனேன். எல்லாப் பரிசோதனையும் எடுத்து, கோவிட் நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகுதான் எல்லோரையும் வேலை செய்ய அனுமதிச்சாங்க.

முதல் பாகம் ஷூட்டிங் நடந்த தொடுபுழா பகுதியிலதான் மறுபடியும் ஷூட்டிங் நடந்துச்சு. முதல் பாகத்தோட கதையின் முடிவுல இருந்து அடுத்த ஏழு வருஷங்கள் கழிச்சு, மோகன்லால் சாரோட குடும்பம் எப்படி இருக்கு. அவங்களுக்குள் நடக்கும் எமோஷனல் பந்தம்தான் `த்ரிஷ்யம்' படத்தின் 'பார்ட் 2' கதை. அதுல நிறைய எதிர்பாராத திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் இருக்கும். அதனால, முதல் பாகம் போலவே இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன். ஒரு மாச ஷெட்யூல்ல நடிச்சேன். மோகன்லால் சார் நீண்டகால நண்பர். எப்போதும் போல ஃபிரெண்ட்லியா பழகினார். காலம் ஓடினதே தெரியாத வகையில, சீக்கிரமே ஷூட்டிங் முடிஞ்சது.

'த்ரிஷ்யம் 2' படத்தில்...
'த்ரிஷ்யம் 2' படத்தில்...

கொரோனா பிரச்னையால, படம் நேரடியா ஓ.டி.டி தளத்துல வெளியாகுது. தியேட்டர்ல மக்களின் உற்சாகத்தைப் பார்க்க முடியாதது சின்ன வருத்தம்னாலும், நடைமுறை சூழ்நிலையை ஏத்துகிட்டுத்தான் ஆகணும். இந்தக் காலத்துல ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகறத்துக்குள்ள ஓவர் எதிர்பார்ப்புடன் இருக்காங்க. அது கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், உடனே எதிர்மறையா விமர்சனம் செய்யறாங்க. அதனால, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எல்லோரும் படம் பார்த்துட்டு, அப்புறமா விமர்சனம் செய்யறது நல்லா இருக்கும். நாளைக்கு வெளியாகும் இந்தப் படத்தைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கேன்” என்பவர் திரைப் பயணத்தில் 39 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

``குழந்தை நட்சத்திரமா நடிச்சது, ஹீரோயினா ஆனது, செகண்டு இன்னிங்ஸ்னு என்னோட சினிமா கரியர் எந்தத் திட்டமிடலும் இல்லாம அமைஞ்சதுதான். இத்தனை வருஷங்கள் நடிக்கிறதும், புகழோடு இருக்கிறதும் எல்லோருக்கும் அமையாத கொடுப்பினை. அது எனக்குக் கிடைச்சிருக்கு! என் எதிர்காலம் பத்தி பெரிசா யோசிக்கவே மாட்டேன். எது நடந்தாலும் ரொம்பவே பாசிட்டிவ்வா எடுத்துப்பேன். அதனாலதான் நான் சந்தோஷமா இருக்கிறதோடு, என் குடும்பத்தையும் மகிழ்ச்சியா பார்த்துக்க முடியுது. ரொம்பவே எதிர்பார்த்து அது நடக்கலைனா, பெரிசா மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன்.

அம்மா, மகளுடன் மீனா...
அம்மா, மகளுடன் மீனா...

என் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே செகண்டு இன்னிங்க்ஸ் போயிட்டு இருக்கு. வருங்காலத்துல நல்ல பட வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். வரலைனாலும் வருத்தமில்ல. நைனிகா அஞ்சாவது படிக்கிறா. ரொம்பவே வளர்ந்துட்டா. அவளுக்கான நேரம் போக மற்ற நேரத்துலதான் நடிப்பேன். அளவோடு நடிப்பு, குழந்தை, குடும்பத்துக்கு அதிக நேரம் செலவிடுறதுன்னு லைஃப் ரொம்பவே நல்லா போயிட்டு இருக்கு” என்று கண்கள் மின்னக் கூறுகிறார் மீனா.