சினிமா
Published:Updated:

படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!

குடும்பத்துடன் நதியா
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் நதியா

இந்தத் துறையில நான் ரொம்ப நாள் நிக்க மாட்டேன்னு நினைச்சேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை பெத்துக்கணும்னுதான் அப்ப ஆசைப்பட்டேன்.

“தீபாவளின்னாலே குஷியாகிடுவேன்... சென்னைல திவ்யானு ஒரு தோழி உண்டு. நான் தமிழில் பிஸியா இருந்த காலகட்டங்கள்ல எனக்குப் படப்பிடிப்பு இல்லேன்னா அவங்க வீட்டுக்குப் போயிடுவேன். எங்க ரெண்டு பேருக்குமே வெடி வெடிக்கப் பிடிக்கும். திவ்யா வீட்டு மொட்டை மாடியில லட்சுமி வெடி வெடிப்போம். ரோட்டுல யாராவது நடந்து போனாக்கூட, வெடியைக் கொளுத்தி அவங்க பின்னாடி போட்டுடுவோம். அவங்க பயப்படுறதைப் பார்த்து ஒரு சந்தோஷம். அப்ப விவரம் தெரியாத வயசுனால குறும்பாகிடுச்சு. இப்பவும் தீபாவளி கொண்டாடுறோம். ஆனா, சாஃப்ட்டான வெடிகள்தான் வெடிக்கறோம்’’ - குஷியும் குதூகலமுமாகப் புன்னகைக்கிறார் நதியா. 80களில் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். இப்போது லிங்குசாமி இயக்கிவரும் தெலுங்கு - தமிழ் படத்தின் மூலம் மீண்டும் ரவுண்ட்ஸை ஆரம்பிக்கப்போகும் நதியாவிடம் பேசினேன்.

படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!
படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!

``எப்படிப் போகுது மும்பை வாழ்க்கை?’’

‘‘அருமையா! மும்பைதான் என் வீடு. ஏன்னா, அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். வீட்ல மலையாளம்தான் பேசுவோம். எங்கே போனாலும், என் கணவர், குடும்பம்னு என் மனசு முழுக்க இங்கேதான் இருக்கு. நான் ஒரு வீட்டுப் பறவை. வீட்ல இருக்க ரொம்பப் பிடிக்கும். அதனால மும்பை எனக்கொரு ஆத்மார்த்தமான இடம்னுகூடச் சொல்லலாம். சென்னையும் ரொம்ப ஸ்பெஷல்தான். நான் நடிக்க வந்த புதுசுல, சென்னை ரொம்பப் புது இடம். மொழியும் தெரியாது. அப்படியான சூழல்ல வந்து ஒரு நல்ல பெயரை சம்பாதிச்சிருக்கேன். எனக்கொரு அடையாளம், அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சினிமாதான். இப்பவும் நான் பிஸியா இருக்கேன்.’’

``இப்ப தெலுங்கு, மலையாளத்துலதான் படங்கள் பண்றீங்க? தமிழில் அதிகம் நடிப்பதில்லையே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லீங்க. இப்ப லிங்குசாமி சார் இயக்கத்துல நடிக்கற படம், தமிழிலும் வருது. தமிழை விட மத்த மொழிகள்ல அதிகம் வாய்ப்பு வருது. தெலுங்குல நடிக்கற படங்களும் சூப்பர் ஹிட் ஆகிடுது. என்னோட இந்த வயசிலேயும், தெலுங்குப் பட ஆடியன்ஸ் என்னை ஏத்துக்கறது, ஒரு பொண்ணாவே எனக்கு ரொம்பப் பெருமைப்படக்கூடிய விஷயம்னு நினைக்கறேன். எட்டு வயசுக் குழந்தையில இருந்து எண்பது வயசுப் பெரியவங்க வரை என் நடிப்பை ரசிச்சுப் பார்க்கறது, ஒரு ஆசீர்வாதம்தான்.

என் வயசுக்கேத்த கேரக்டர்கள்லதான் நடிக்கறேன். ஆனா, அப்படி நடிக்கும்போது அது அந்தப் படத்துக்கு எவ்ளோ தூரம் முக்கியமானதா இருக்கும்னு பார்த்து கமிட் ஆகுறேன். ஒரு கதையைக் கேட்கும்போதே, என் கேரக்டருக்கு வெயிட் இருக்குதான்னு புரிஞ்சிடும்.”

படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!
படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!

``தமிழ் சினிமாவில் உங்க மார்க்கெட் உச்சத்துல இருக்கும்போதே, கல்யாணமாகி வெளிநாடு போயிட்டீங்க. ஒரு புகழ்பெற்ற நடிகை, திடீர்னு எல்லாரையும் போல சாராசரிப் பெண்ணா மாறின சூழலை எப்படி எதிர்கொண்டீங்க?’’

‘‘என் கணவரை, நான் சினிமாவுல நடிக்க வர்றதுக்கு முன்பிருந்தே தெரியும். சினிமாவுல எனக்கு நல்ல பெயர் இருந்ததால, கொஞ்சம் படங்கள் நடிச்சிட்டு அதன்பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற ஐடியாவோடு இருந்தேன். இந்தத் துறையில நான் ரொம்ப நாள் நிக்க மாட்டேன்னு நினைச்சேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை பெத்துக்கணும்னுதான் அப்ப ஆசைப்பட்டேன். ஏனா, அந்த வயசுல, காதல்ல விழுந்திருக்கும் போது நம்மளோட லட்சியம் அதுவாகத்தானே இருக்க முடியும்! கல்யாணம் பண்ணின பிறகு முழு நேர இல்லத்தரசியா ஆகிட்டேன். ஆனா, நான் அப்படி இருந்தது என் கணவருக்கு ஃபீலாச்சு போல. ‘நீ ஏன் காலேஜ்ல சேர்ந்து படிக்கக் கூடாது?’னு கேட்டார். எனக்கும் அது நல்ல முடிவா தோணுச்சு. அங்கே கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ்னு ரெண்டு வருஷ படிப்பை முடிச்சேன். வெறும் தியரி மட்டுமல்லாமல், அந்த நாட்டோட கல்ச்சர் எல்லாமே தெரிஞ்சுக்க முடிஞ்சது.

கஷ்டப்பட்டுப் படிச்சதால, அந்த காலேஜோட டாப் ஐந்து மாணவர்களில் ஒருத்தியா நானும் வந்தேன். என் அப்பா அம்மாவுக்குக்கூட, இந்த விஷயம் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. ‘நீ எப்படி அங்கேபோய், அழகா படிச்சு முடிச்சே?’ன்னு ஆச்சரியப்பட்டாங்க. ‘ஸ்கூல் நாள்கள்ல அப்படி இங்கே கஷ்டப்பட்டு ஏன் நீ படிக்காமல் போனே?’ன்னு கேள்வி கேட்டதும் இன்னும் நினைவில் இருக்கு.’’

படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!
படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!

``லாக்டௌன் எப்படிப் போச்சு?’’

‘‘ஆரம்பத்துல ரொம்ப போரிங்கா இருந்துச்சு. வீட்ல இருந்தவங்களும் அவங்கவங்க ஊருக்குப் கிளம்பிப் போயிட்டாங்க. வீட்ல நாங்கதான் இருந்தோம். சமையல் எல்லாம் என்னோட பொறுப்பு. நல்லா சமைப்பேன். ஆனா, வீட்டு வேலைகளே ரொட்டீனா ஆன மாதிரி ஒரு ஃபீல் வந்திடுச்சு. லாக்டௌன் தளர்வுகள் வந்த பிறகு, அக்கம்பக்கம் வீடுகளுக்குப் போனோம். அவங்களும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஒண்ணா உட்காந்து பேசி, சிரிச்சு மகிழ்ந்தோம். கொரோனா, வாழ்க்கையையும் புரியவச்சிடுச்சு. ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கணும்னு உணர்த்துச்சு. இந்தக் கொரோனா சமயத்துல படங்கள் நடிச்சிட்டிருக்கறதும் ஒரு கொடுப்பினைதான்.”

``உங்க மகள்கள் எப்படி இருக்காங்க?’’

‘‘மும்பையில இப்ப நானும் கணவரும் இருக்கோம். பெரிய பொண்ணு சனம் படிப்பை முடிச்சிட்டு அமெரிக்காவுல ஒர்க் பண்றாங்க. சின்னப் பொண்ணு ஜனா, இப்ப காலேஜ் போறாங்க. பொண்ணுங்க வளர்ற வரைக்கும் அவங்கள பொறுப்பான அம்மாவா பாத்துக்கிட்டேன். இப்ப எனக்கும் டைம் கிடைச்சிருக்கு. படங்கள் வருது. பிஸியா இருக்கேன். பெரிய பொண்ணுக்கு எங்களைப் பார்க்கணும்னு தோணினா, உடனே ஃபிளைட் பிடிச்சு வந்திடுவா. நாங்களும் அப்படியே! ரெண்டு பேருமே இப்ப என் படங்கள பார்த்து நடிப்பை விமர்சனம் பண்றாங்க. அதுல நியாயம் இருக்கறதால, நானும் அவங்க சொல்றதை ரசிச்சுக் கேட்பேன்.”

படிப்பு... நடிப்பு... மறுபடியும் படிப்பு!

``இப்ப சினிமாவை கவனிக்கறீங்களா? எப்படி இருக்கு திரையுலகம்?’’

‘‘தென்னிந்தியப் பட உலகம் பிரமாதமா இருக்கு. எல்லாப் படங்களும் பார்க்கறேன். அருமையான கதைகள் வந்திட்டிருக்கு. நிறைய திறமைசாலிங்க வந்திருக்காங்க. என்னால இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு நினைக்கற அளவுக்கு நடிக்கறாங்க. சின்ன கேரக்டர்ல நடிக்க வர்றவங்ககூட ரொம்ப அருமையா பண்றாங்க. திறமைகள் குவிஞ்சிருக்கு. நிறைய வாய்ப்புகள் பெருகியிருக்கு. ஆனா, அதே அளவுக்கு போட்டியும் நிறைஞ்சிருக்கு.”