Published:Updated:

"லிவிங் டுகெதர், லெஸ்பியன் கேரக்டர்ல ஏன் நடிச்சீங்க?’’ - நித்யா மேனன் பதில்

நித்யா மேனன்
நித்யா மேனன்

''நான் பார்ட்டி கேர்ள் கிடையாது. வீட்டுல இருக்கிறதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். ஏன்னா, என் நேரத்தை எனக்காகச் செலவு பண்றதுலதான் எனக்கு விருப்பம்" என்கிறார், நடிகை நித்யா மேனன். மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யாவிடம் பேசினேன்.

"இதுவரை மிஷ்கின் படங்களைப் பார்த்ததுண்டா?"

"மிஷ்கின் சார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். நடிகை ரோகிணி எனக்கு நல்ல பழக்கம். அவங்ககிட்ட இவரைப் பற்றிக் கேட்டப்போ, 'ரொம்ப சூப்பரான இயக்குநர். நல்ல படம் எடுப்பார்'னு சொன்னாங்க. எப்போதும் ஒரு இயக்குநர் முன்ன பின்னே என்ன பண்ணியிருக்கார்னு பார்க்குற ஆள் நானில்லை. ஒரு கதையை எப்படித் திரைக்கதையா மாத்தியிருக்காங்கனு மட்டும்தான் பார்ப்பேன். இதைத் தெரிஞ்சுக்கிட்டாலே அவர் எப்படிப்பட்ட இயக்குநர்னு நமக்குப் புரிஞ்சிடும். ரொம்ப கம்ஃபோர்ட் ஜோன்லதான் மிஷ்கின்கூட வேலை பார்த்தேன். ஒரு பெண் இயக்குநர்கிட்டகூட இந்த கம்போர்ட் எனக்குக் கிடைச்சதில்லை. நமக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தாக்கூட, அதைப் புரிஞ்சு நடந்துக்குவார். 'நீ எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் வந்து நடிக்கணும்'னு சொல்ற நபர் இல்லை மிஷ்கின்."

"உதயநிதிகூட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?"

நித்யா மேனன் மற்றும் மிஷ்கின்
நித்யா மேனன் மற்றும் மிஷ்கின்

"ஷூட்டிங் ஸ்பாட்ல உதயநிதி ரொம்ப அமைதியாவே இருப்பார். அதிகமா பேசவும் மாட்டார். படத்துல எங்க ரெண்டுபேருக்குமே சுவாரஸ்யமான கேரக்டர்ஸ். அதை ரசிச்சு நடிச்சிருக்கோம்."

"நீங்க பாடகியும்கூட... இந்தப் படத்துல இளையராஜா இசையில் நடிச்ச அனுபவம்?"

நித்யா மேனன்
நித்யா மேனன்

"அவர் இசை இருக்கிற படத்துல நான் இருக்கிறது பெரிய விஷயம். கொஞ்சம்கூட இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார்னு எதிர்பார்க்கல. 'இளையராஜா கமிட்டாகியிருக்கார்'னு மிஷ்கின் சார் சொன்னப்போ, ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் இசையில் நடிக்கணும்னு கனவு கண்டிருந்தேன். அது இந்தப் படத்துல சாத்தியமாகியிருக்கு."

"கேமராமேன் பி.சி.ஶ்ரீராம் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்?"

"ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான மனிதர். சினிமாவில் அவருடைய வேலைகள் எல்லாத்தையும் தாண்டி, நான் அவரை அப்பா ஸ்தானத்தில் வெச்சுதான் பார்ப்பேன். அவரும் என்னை அந்தளவுக்கு ஸ்பெஷலாதான் நினைக்கிறார். நடிகையா என்னோட நடிப்பைப் படம் பிடிக்குறது அவருக்குப் பிடிக்கும். அவர்மேல நிறைய மரியாதையும், அன்பும் வெச்சிருக்கேன்."

"உங்களுக்கான கதையை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க?"

நித்யா மேனன்
நித்யா மேனன்

"கேட்கிற கதை நேர்மையா இருந்தாலே, ஓகே சொல்லிடுவேன். அதுக்குப் பிறகு என்ன மாதிரியான கேரக்டர்னுகூட பார்க்க மாட்டேன். பல இயக்குநர்கள் ஹீரோவின் கமர்ஷியல் ஹிட்டுக்காகப் படம் எடுப்பாங்க. ஆனா, என்னைத் தேடி வர்ற கதையில் எனக்கான முக்கியத்துவம் இருக்கும். எனக்காக மெனக்கெட்டு கதை சொல்லுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி, கதையை நானேதான் கேட்டுத் தேர்ந்தெடுப்பேன். யார்கிட்டேயும் அந்தப் பொறுப்பைக் கொடுக்கமாட்டேன்."

"பல மொழிகளில் நடிக்கிறீங்க. எந்த மொழி சினிமா உங்களுக்கு ஈஸியா இருக்கு?"

நித்யா மேனன்
நித்யா மேனன்

"கன்னடம், தமிழ் மொழி பேசுறது எனக்கு சுலபம். ஆனா, தெலுங்கு சினிமாவுல நடிக்கிறதைக் கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றேன். மத்தபடி, தமிழ் சினிமாதான் எப்போவும் கம்ஃபோர்ட்!"

"திருமணம்?"

"பண்ணிக்கணும்ங்கிறதுக்காக யாரையும் திருமணம் செஞ்சுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. நமக்கு ஒருவரைப் பிடிச்சிருந்து, அவர்தான் நம்ம வாழ்க்கைனு தோணுச்சுனா உடனே கல்யாணம் பண்ணிடுவேன். இப்போதைக்குத் திருமணம் பண்ணியே ஆகணும்னு எந்தக் கட்டாயமும் எனக்கு இல்லை. சரியான நேரம், நபர் வர்றப்போ என் திருமணம் நடக்கும். முக்கியமா, நான் நடிக்கிற படங்களை வைத்து யாரும் என் திருமண உறவைத் தீர்மானிக்க முடியாது. எனக்கு வர்ற கேரக்டரை சவாலா எடுத்து நடிக்கிறேன். லிவிங் டுகெதர், லெஸ்பியன் ரிலேஷன்ஷிப் கேரக்டர்ல எல்லாம் நடிச்சதுக்கு காரணம் அதுதான்."

"ஜெயலலிதா பயோபிக் படத்தைப் பல இயக்குநர்கள் இயக்கப்போவதா அறிவிச்சிருக்காங்களே?"

நித்யா மேனன்
நித்யா மேனன்

" 'தி அயர்ன் லேடி' படம் பற்றிய செய்திகள் வந்தப்போதான் மற்ற படங்களின் அறிவிப்புகளும் வந்தன. இதைப் பற்றி இயக்குநர் ப்ரியதர்ஷினிகிட்ட கேட்டிருந்தேன். 'அவங்க பண்ணட்டும், நாமளும் பண்ணலாம்'னு சொன்னா. இந்தப் பதில் எனக்குப் பிடிச்சிருந்தது. எல்லோரும் ஜெயலலிதா மேடம் வாழ்க்கையைச் சொல்ல நினைக்கிறோம், அவ்வளவுதான்."

அடுத்த கட்டுரைக்கு