Published:Updated:

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி

ஒரு கலைஞனாக, ஒரு நடிகையாக, சக பெண்மணியாகத்தான் இந்தச் சமூகத்துக்கு எவ்வித தவறான கருத்தையும் சொல்லிவிடக்கூடாது என்கிற பயம்.

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

ஒரு கலைஞனாக, ஒரு நடிகையாக, சக பெண்மணியாகத்தான் இந்தச் சமூகத்துக்கு எவ்வித தவறான கருத்தையும் சொல்லிவிடக்கூடாது என்கிற பயம்.

Published:Updated:
பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி

“திரைப்படங்களில், பெண்ணின் மீதான வெறுப்பு எது என்பதை அடையாளப்படுத்துவதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் நூலளவு வித்தியாசம்தான். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் பெண்ணினத்தின் மீது தன் வெறுப்பை உமிழும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியான பாத்திரம் கைத்தட்டல் பெறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டால் அது பெண் வெறுப்பைப் புகழ்பாடுவதாகிவிடும். அதுவே பார்ப்பவர்களை, இந்தப் பாத்திரம் செய்வது தவறுதானே எனப் பேசவைத்துவிட்டால், அந்தத் திரைப்படம் மக்களோடு இணைந்த சமூகப் பிரச்னையை அடையாளப்படுத்தும் ஒரு படைப்பாகிவிடுகிறது. அதுதான் நிஜ சினிமா. அது ஓர் உரையாடல்!”

பார்வதி திருவொத்துவிடம் பேசுவதற்கு எப்போதும் ஓர் அரசியல் இருக்கிறது; ஓர் ஆதங்கம் இருக்கிறது; முக்கியமாக ஒருவித பயம் இருக்கிறது. அது ஒரு கலைஞனாக, ஒரு நடிகையாக, சக பெண்மணியாகத்தான் இந்தச் சமூகத்துக்கு எவ்வித தவறான கருத்தையும் சொல்லிவிடக்கூடாது என்கிற பயம். ஒவ்வொரு கலைஞனும் தனக்குள் எப்போதும் கொண்டிருக்க வேண்டிய பயம். அவர் தன் சித்தாந்தங்களிலும் அரசியலிலும் மிகத் தெளிவாக இருக்கிறார். அதில் மனிதம் எப்போதும் உயிர்ப்புடன் இழையோடுகிறது. கதைத் தேர்வுகளில் பார்வதி அவ்வளவு மெனக்கெடுவதற்குக் காரணமும் இதுதான். அவர் பெண்களை போகப் பொருளாக மட்டுமே சித்திரிக்கும் படங்களில் நடிக்கவிரும்புவதில்லை. சொல்லப்போனால், பெண் என்றல்ல, எந்தப் பாலினத்தவருக்கும், எந்தவிதக் கதை மாந்தருக்கும் அவர் இதையேதான் சொல்வார். தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் எனப் பலரும் இன்று பார்வதியின் ரசிகர்களாக இருக்க இதுவே காரணம்.

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டாவை அருகில் வைத்துக்கொண்டே அவர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் எப்படிப் பெண்ணின வெறுப்பை ஹீரோயிசமாகக் காட்டியது என்று வெளிப்படையாகப் பேசியவர் பார்வதி. இதற்கும் முன்னரே மம்மூட்டி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘கஸாபா’ படத்திலிருக்கும் இதே வெறுப்புப் பிரசாரத்தை வெளிப்படையாகப் போட்டுடைத்து விமர்சனம் செய்தவர் பார்வதி. ஓர் இளம் நடிகை ஒரு சூப்பர்ஸ்டாரின் படத்தைத் துணிந்து விமர்சனம் செய்வதெல்லாம் இந்திய சினிமா உலகம் கண்டிராத ஒன்று! அதற்கு மம்மூட்டியின் ரசிகர்கள் பலர் பார்வதியை வசைபாடினர். ஆனால், பார்வதி பின்வாங்கவில்லை. தன் மனதில் பட்டதைத்தான் இன்றுவரையிலும் பேசிவருகிறார்.

முன்னணி நடிகை ஒருவருக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்த நடிகர் தீலிப்புக்கு ஆதரவாக மலையாளத் திரைக்கலைஞர்களை உள்ளடக்கிய ‘AMMA’ அமைப்பு முடிவுகள் எடுத்தபோது துணிந்து எதிர்க்குரல் கொடுத்தது தொடங்கி, தற்போது ஓ.என்.வி குறூப் விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட இருந்ததைக் கண்டித்துப் பேசியது வரை பார்வதியின் குரல் வெளிப்படையானது; துணிச்சல்மிக்கது.

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

அதே சமயம், தன்னிடம் தவறு என்றால் அவர் மன்னிப்பு கேட்கவும் தயங்குவதில்லை. ‘அர்ஜுன் ரெட்டி’ பற்றிப் பேசிய அதே பேட்டியில் ‘இரு துருவங்கள்’ என்ற பொருள்படப் பேசவேண்டிய இடத்தில், ‘பைபோலார் பிஹேவியர்’ என்ற பதத்தைப் பயன்படுத்தி விட்டார். ‘பைபோலார் டிஸ்ஸார்டர்’ என்பது ஒருவித மனநோய். ‘அவ்வித மனநோய் கொண்டவர்களின் செயல்களைப்போல...’ என்ற அர்த்தம் இதற்கு வந்துவிடவே ட்விட்டரில் சிலர் இதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். பார்வதி அதற்குப் பதிலளித்து ட்வீட் செய்யும்போது, “இதை எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி! இது நிச்சயம் தவறானதொரு வார்த்தைப் பயன்பாடு. நான் இதை ஏற்கிறேன். மனநலக் குறைபாடுகளைப் பெயரடைச் சொல்லாகப் பயன்படுத்தியது தவறு. அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து அதற்கும் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

‘பூ’ மாரி, மரியானின் காதலி பனிமலர், உத்தம வில்லனின் மகள் மனோன்மணி எனத் தமிழில் நமக்குப் பரிச்சயமான பார்வதி, தன் 15 வருடத் திரைப் பயணத்தில் பல சமூக விஷயங்களைக் கேள்வி கேட்கும், விமர்சனம் செய்யும், முற்போக்கான படங்களில் நடித்துவிட்டார். படம் எப்படியோ, அவர் ஏற்ற கதாபாத்திரம் நிச்சயம் நம் மனதில் ஆழப் பதியும் ஒன்றாகத்தான் இருக்கும். மலையாள மண்ணிலிருந்து வந்தாலும் நம் சிவகாசியின் கொங்கன் குள கிராமத்தின் பெண் மாரியாக மழையெனப் பொழிந்த அவரின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது.

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...
பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

‘பெங்களூர் டேஸ்’ படத்தில் பார்வதி, ஆர்ஜே சாராவாக வீல்சேர் வாழ்க்கையில் உடலளவில் கட்டுண்டு இருப்பார். ஆனால், சாராவின் மனத்திற்கு இறக்கைகள் இருந்தன, அவை காதலுடன் பறந்தன. ப்ரித்விராஜுடன் அவர் காஞ்சன மாலாவாக நடித்த அமரக் காதல் காவியமான ‘என்னு நிண்டே மொய்தீன்’ இப்போது பார்த்தாலும் கண்களைக் குளமாக்கும். ‘சார்லி’ படத்தில் இளவரசி டெஸ்ஸாவாக பார்வதி, தன் இளவரசனைத் தேடிச் சென்ற பயணம் நாம் அறிந்ததே! பார்த்திராத ஆணைக் காதலிக்கும் கதைதான் என்றாலும் ‘சார்லி’யின் டெஸ்ஸாவின் மேல், அந்தச் ‘சுந்தரிப் பெண்’ணின் மேல் நம் அனைவருக்கும் ஒரு காதல் தோன்றவே செய்தது.

பார்வதியின் நடிப்பு, ஸ்க்ரிப்ட் தேர்வு போன்றவை வேறொரு பரிமாணத்துக்குச் சென்றது ‘டேக் ஆஃப்’ படத்துக்குப் பிறகுதான். ஈராக்கின் குண்டுச் சத்தங்களுக்கு நடுவே கர்ப்பிணியான சமீரா, அங்கு தவிக்கும் இந்தியர்களைக் காக்கும் தேவதையாக மாறிப்போகிறாள். இயல்புக்கு மீறிய விவரணைகள் ஏதுமின்றி, போர் பூமியின் நிஜப் பதைபதைப்பு, அதற்குள் துளிர்விடும் மனிதம் என சமீராவாகப் பார்வதி நம் மனத்தை நெகிழச் செய்திருப்பார். அதே சமயம் ‘உயரே’ படத்தில் பல்லவி ரவீந்திரனாக நடிப்பில் இன்னும் உயரம் தொட்டிருப்பார். ஆசிட் வீச்சிலிருந்து மீண்டு வந்து தன் பைலட்டாகும் கனவைச் சாதிக்கும் பெண்ணாக மெய்சிலிர்க்க வைத்திருப்பார்.

கிட்டத்தட்ட மலையாளத் திரையுலகமே ஒன்றுதிரண்டு, ‘நிபா’ வைரஸை கேரளா எப்படி வென்றது என்பதைப் படமாக்கிய ‘வைரஸ்’ படத்தில், முதல் தொற்றாளரைக் கண்டறியப் பார்வதி எடுக்கும் முயற்சிகள் கதைக்கு வலுச்சேர்ப்பவை. குஞ்சாகோ போபன், டொவினோ தாமஸ், ரேவதி, ஆசிப் அலி, ரகுமான், மடோனா செபாஸ்டியன் எனப் பெரும்படையே இருந்தபோதும் படத்தின் நாயகி என்னமோ பார்வதிதான். கொரோனாத் தொற்றுக் காலத்துக்கும் பொருந்திப் போகிற கதைக்களம், இப்போது பார்த்தாலும் நமக்கு அச்சத்தில் அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒரு பந்து உருண்டுவரும்.

பார்வதியிடம் ரகசியங்கள் ஏதுமில்லை. எதையும் ஒளிவுமறைவின்றிப் பேசிவிடுவது அவரின் குணம். மன அழுத்தம், மனநலம் குறித்துத் தொடர்ந்து நிறைய பேசிவருகிறார். “சோகமாக இருப்பதற்கும் மன அழுத்தத்துடன் இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. யாரேனும் அவர்களுக்குத் தொடர் பதற்றம் இருக்கிறது, அதனால் உடல் நடுக்கம் உண்டாகிறது, மனம் நிம்மதியை இழக்கிறது என்றால், என்னால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் அந்தப் போராட்டம் இருக்கிறது, கடந்த ஐந்து வருடங்களாகவே இதற்கான சிகிச்சையை எடுத்துவருகிறேன்” என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

மனநல மருத்துவரிடம் சென்றாலே மனநலம் பாதிக்கப்பட்டவர் எனப் பேசும் இந்தக் காலகட்டத்தில், பார்வதி அத்தகைய குறுகிய மனப்பான்மையைக் களையச் சொல்கிறார். “ஒரு நடிகையாக இருப்பதனால் நிச்சயம் என்னைப் பற்றி பலரும் ஒவ்வொரு விதமான கருத்தை முன்வைக்கக் கூடும். நான் அதைப் பற்றி இனிமேலும் கவலைகொள்ளப் போவதில்லை. நான் பாதிக்கப்பட்டவள் என்று சொல்வதைவிட ‘மீண்டவள்/மீள்பவள்’ என்றே என்னைக் கூறிக்கொள்கிறேன், காரணம், இங்கே நான் இந்த நொடி உங்களுடன் உரையாடுகிறேன் என்றால், நான் மீண்டவள் என்ற காரணத்தினால்தான். தினமும் மீள்கிறேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

பார்வதி வெறும் நடிகை மட்டுமல்ல...

பார்வதி, ஒரு நடிகையென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இலக்கணம் எல்லாம் வகுக்கவில்லை. அவர் அவராகவே இருக்கிறார். அவர் பேசும் அரசியலை, பெண்ணியம் என ஒரு வட்டத்துக்குள், ஒரு பாலினத்துக்குள் சுருக்கிவிட முடியாது. மனிதம் என்பதை அடிநாதமாகக் கொண்டு பின்னப்பட்டது அது! பார்வதி இதனுடன் நிச்சயம் முரண்படலாம். ஆனால், அவர் பெண்ணியவாதி மட்டுமல்ல. அப்படியெல்லாம் ஒரேயொரு பாலினத்தின் பிரதிநிதியாக மட்டும் அவரை ஆண் இனம் விட்டுக்கொடுக்கக் கூடாது. அவர் எல்லோருக்குமானவர். அவரின் வெளிகளைச் சுருக்கிவிட முடியாது. ஆம், பொறாமைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism