Published:Updated:

``தினமும் ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு கொடுக்குறோம்... உதவிதான் நம்மை உயர்த்தும்!'' - நடிகை பிரணிதா

பிரணிதா
பிரணிதா

தமிழில் `சகுனி', `மாஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா. பெங்களூரைச் சேர்ந்த இவர் தன்னுடைய பெயரிலேயே பவுண்டேஷன் ஒன்று ஆரம்பித்து இந்தக் கொரோனா காலத்தில் பல உதவிகளைச் செய்து வருகிறார். அவரிடம் பேசினேன்.

``தமிழ்ல நிறைய படங்கள் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். ஆனா, சரியான கதை எதுவும் அமையல. இப்போ கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி சினிமாவுல நடிச்சிட்டு வரேன். எல்லாரையும் மாதிரி சினிமாவை திரையில் ரசிச்ச பொண்ணு நான். அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். இவங்களுக்கு நான் சினிமாவுல நடிக்குறதுல முதலில் பெரிய உடன்பாடில்ல. அதனால வீட்டுல, `நடிக்க வேண்டாம்'னு சொன்னாங்க. முதல் படம் நடிக்குற வரைக்கும் வீட்டுல இதுதான் நிலைமை. அப்புறம் என்னோட விருப்பத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க. தமிழ்ல பெரிய ஹிட் அடித்த `போக்கிரி' படத்தின் கன்னட ரீமேக்தான் என்னோட முதல் படம். அசின் பண்ணுன கேரக்டர்ல நடிச்சிருந்தேன். ஏற்கெனவே `போக்கிரி' படத்தை தமிழ்ல பார்த்திருந்தேன். அதனால நடிக்கக் கொஞ்சம் சுலபமா இருந்தது. தமிழ் போல கன்னடத்துலயும் இந்தப் படம் செம ஹிட். இதுக்கு அப்புறம்தான் தெலுங்கு, தமிழ் பட வாய்ப்புகள் வந்தது.

இந்தில இப்போதான் முதல் படத்துல கமிட்டாகி இருக்கேன். `The Pride of India'. அஜய் தேவ்கன் மற்றும் சஞ்சய் தத் நடிக்கிறாங்க. ஆகஸ்ட்ல படத்தை ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணி ஷூட்டிங் போயிட்டு இருந்தது. ஆனா, லாக்டெளனால எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. ஹோம்லி பொண்ணு கேரக்டர்ல நடிக்குறேன். இந்தியில முதல் படமே பெரிய படமா இருக்குறதுல ஹேப்பி. இதுதவிர ப்ரியதர்ஷன் சார் இந்தில டைரக்ட் பண்ற `Hungama- 2' படத்துலயும் கமிட்டாகி இருக்கேன். ப்ரியதர்ஷன் சார் செட்ல இருக்குறனாலயே அதிகமான தமிழ் வார்த்தைகளைக் கேட்க முடியும்.

பிரணிதா
பிரணிதா

தமிழ்ல கார்த்தி, சூர்யா சார் படங்கள்ல நடிச்சதுல செம சந்தோஷம். ரொம்ப ஹோம்லியான கேரக்டர்தான் தமிழ்லயும் நடிச்சிருக்கேன். `மாஸ்' படத்துல பண்ணுன கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. கார்த்தி சார் படங்கள் தொடர்ந்து பார்த்துட்டு வரேன். அவரோட `கைதி' படம் வரைக்கும் பார்த்துட்டேன். தமிழ்ல சிவகார்த்திகேயன் ஆக்டிங் ரொம்பப் பிடிக்கும். இவரோட படங்கள் ரிலிஸானவுடனே பார்த்திடுவேன். இவர்கூட நடிக்கவும் ஆசையிருக்கு'' என்ற பிரணிதாவிடம் லாக்டெளன் நாள்கள் குறித்துக்கேட்டேன்.

``லாக்டெளன் ஆரம்பிச்சதுல இருந்து நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுல இருக்குறது கஷ்டமா இருந்துச்சு. வருமானம் இல்லாம நிறைய பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அவங்க தினமும் சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்காங்க. அதனால கஷ்டப்படுற மக்களுக்காக என்னால முடிஞ்ச உதவியைப் பண்ணிக்கிட்டு இருக்கேன். தினமும் ஒரு லட்சம் பேர் வரைக்கும் உணவுப் பொருள்கள், சாப்பாடு கொடுத்துட்டு வர்றோம். இதுதவிர பிரணிதா ஃபவுண்டேஷன் நடத்திக்கிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு வருஷமா இது மூலமா நிறைய நல்ல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. கடந்த வருஷம் கேரளாவுல வெள்ளம் வந்தப்போ கூட இந்த ஃபவுண்டேஷன் மூலமா மீட்புக்குழுவை அனுப்பி வெச்சோம்.

பிரணிதா
பிரணிதா

அம்மா, அப்பா ரெண்டு பேரும் டாக்டர்ஸ்ன்றதால மெடிக்கல் கேம்ப் போட்டு குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அடிக்கடி செக்கப் பண்ணிட்டு இருப்போம். கவர்மென்ட் ஸ்கூல்ல இருக்குற பசங்களுக்கு இங்கிலீஷ் கிளாஸ் எடுத்துட்டு வருவேன். முக்கியமா தினமும் ஆட்டோ ஓட்டுற தொழிலாளிகளின் குடும்பங்கள் இந்த நேரத்துல ரொம்பக் கஷ்டப்படுறதுனால உணவுப் பொருள்களையும் தாண்டி என்னால முடிஞ்ச பணஉதவியும் செய்றேன். நான் நடத்திட்டு வர்ற ஃபவுண்டேஷன் மூலமா தேவைப்படுறவங்களுக்கு பணஉதவி பண்ணச் சொல்லி நிதி திரட்டித்தான் இதைப் பண்றேன். நிறைய பேர் என்னோட ஃபவுண்டேஷனுக்கு உதவி செஞ்சுட்டும் வர்றாங்க. மெடிக்கல் சம்பந்தப்பட்ட உதவிகள் நிறைய பண்றோம். இதுமாதிரியான சமயங்கள்ல நாம பிறருக்கு உதவிதான் நம்மை உயர்த்தும்'' என்றார் பிரணிதா.

அடுத்த கட்டுரைக்கு