Published:Updated:

``அந்த 20 நிமிடம், `நோ' மேக்கப், நைட் ஷூட் கடுப்பு..!'' - ரித்திகா சிங்

ரித்திகா சிங்
News
ரித்திகா சிங்

"கிளாமர் ரோல்ல நடிக்க ரெடி... ஆனா, ஒரு கன்டிஷன்!" - ரித்திகா சிங்

மூன்று வருடங்கள் ஆனாலும் பாக்ஸர் மதியைப் பற்றிய பேச்சு குறையவில்லை. முதல் படத்திலேயே தேசிய விருது, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என பிஸியாக இருக்கிறார், ரித்திகா சிங். நடிகையாக ரித்திகா பிஸியாக இருந்தாலும், கிக் பாக்ஸிங்கையும் அவர் விடவில்லை என்பதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே சாட்சி. ரித்திகாவிடம் பேசினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நடிகையா உங்க கரியர் தொடங்கி 3 வருடங்கள் ஆகிடுச்சு. எப்படி இருக்கு இந்தப் பயணம்?

"என் வாழ்க்கை இப்படி இருக்கும்னு நினைச்சதே இல்லை. நான் நினைச்சதைவிட ரொம்ப வித்தியாசமா இருக்கு. மாதவன் சாருடைய அந்த போன் கால்தான் இப்போ நான் இங்க இருக்கக் காரணம். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்குது. என்னை சூப்பரா பார்த்துக்கிறாங்க. ஆரம்பத்துல சினிமா பயமா இருந்தது. இந்த 3 வருடத்துல நிறைய கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டிருக்கேன். இனியும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்கு தேசிய விருது அறிவிச்சவுடன் எப்படி இருந்தது?

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"தேசிய விருது அறிவிச்சதுமே சுதா மேடம்கிட்ட இருந்து 'நமக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு'னு மெசேஜ் வந்தது. அப்போ என் போன்ல 1% சார்ஜ்தான் இருந்தது. போன் ஆஃப் ஆனதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. போன் ஆன் ஆகுறவரை பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். அப்போவரை எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. மீடியாவுல இருந்து கால் பண்ணி வாழ்த்துகள் சொல்லி, இன்டர்வியூ வேணும்னு கேட்டாங்க. அப்போதான் எனக்குப் புரிஞ்சது. 'இருங்க நானே திரும்ப கால் பண்றேன்'னு சொல்லிட்டு, 20 நிமிடம் அழுதேன். அதை என் தம்பி வீடியோ எடுத்து வெச்சிருக்கான். என் வாழ்க்கையில மறக்க முடியாத 20 நிமிட எமோஷனல் அது."

`ஆண்டவன் கட்டளை' படத்துல விஜய் சேதுபதிகூட நடிச்சதுல மறக்க முடியாத அனுபவம்?

"இந்தப் படத்துல கார்மேகக் குழலிங்கிற என் கேரக்டர் பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. மணிகண்டன் சார்கூட வொர்க் பண்ணதுல நிறைய கத்துக்கிட்டேன். நான் ரொம்ப ஹைப்பர் ஆக்டிவ், ஜாலியான பொண்ணு. ஆனா, இதுல என் கேரக்டருக்கு நேரெதிர் இந்த கேரக்டர். ரொம்ப அமைதியா இருக்கணும். மெச்சூர்டா நடந்துக்கணும். அதனால, கொஞ்சம் சிரமமா இருந்தது. இதுல ஒரு சீன் எனக்கு நடிக்க வரவே இல்லை. இருபது டேக்மேல போயிடுச்சு. எனக்கே என்மேல வெறுப்பு வந்து அழ ஆரம்பிச்சுட்டேன். எல்லோரும் சிரிச்சாங்க. மணிகண்டன் சார் வந்து என்னை ரிலாக்ஸ் பண்ணி வேலை வாங்கினார். விஜய் சேதுபதி எப்படிப்பட்ட நடிகர்னு எல்லோருக்கும் தெரியும். நடிப்புல சின்னச் சின்ன விஷயங்கள் அவர் சொல்லிக் கொடுத்தார்."

எல்லா நடிகர்களுக்கும் தேசிய விருது இலக்கா இருக்கும். அது உங்களுக்கு முதல் படத்துலேயே கிடைச்சதனால, இப்போ உங்க இலக்கு என்ன?

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"தேசிய விருது நான் எதிர்பார்க்காதது. அது எனக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும். புதுப்புது விஷயங்கள் செஞ்சு பார்க்கணும். அந்த மாதிரியான கேரக்டர்கள் பண்ணணும்னுதான் கதைகள் தேர்ந்தெடுக்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கேன். மக்களுக்கு என்னைப் பிடிக்கணும். அதுதான் என் இலக்கு."

சினிமாவுல ஏதாவது குழப்பம், சந்தேகம்னா யார்கிட்டே கேட்பீங்க?

"சுதா மேடம், மேடி சார் இவங்கதான். அடிக்கடி இவங்ககிட்ட பேசுவேன். எனக்கு சினிமா துறையில் ஏதாவது சந்தேகம், கதைகள் தேர்ந்தெடுக்கிறதுல குழப்பம்னா, இவங்கதான் எனக்கு ஐடியா சொல்வாங்க. மாதவன் சாரின் மனைவி, மகன் வேதாந்த் எல்லோரும் எனக்கு நல்ல பழக்கம்."

நடிகைன்னா மேக்கப் போடணும், இப்படித்தான் டிரெஸ் பண்ணணும்னு சொல்வாங்களே, அதெல்லாம் செட் ஆகிடுச்சா?

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"நான் டாம்பாய் மாதிரி. எனக்கு மேக்கப் போடுறது, ஜிகுஜிகுன்னு டிரெஸ் பண்றதெல்லாம் பிடிக்காது. நான் ஒரு பாக்ஸர். அதனால, கேஷுவலாதான் இருப்பேன். என் ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பேனே தவிர, அழகுக்குக் கொடுக்கமாட்டேன். ஆனா, நடிகையா இருக்கும்போது அழகும் முக்கியம். அதனால, மேக்கப் போட்டுப் பழகிட்டேன். அதுவும் சினிமா ஷூட்டிங், சினிமா விழாக்களுக்கு மட்டும்தான். மத்தபடி, நோ மேக்கப்."

வீட்டுல உங்க நடிப்பைப் பற்றி என்ன சொல்றாங்க?

"அப்பா கராத்தே அகாடமி வெச்சிருக்கார். அவர் மூலமாதான் எனக்கும் அதுல ஆர்வம் வந்துச்சு. அம்மாவும் வொர்க் பண்றாங்க. என் தம்பி ரோஹன் சிங். அவனும் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். ரொம்ப சாதாரணமான குடும்பம்தான் எங்களுடையது. ஆரம்பத்துல சினிமா துறையில் நான் போறதை நினைச்சுப் பயந்தாங்க. 'இறுதிச்சுற்று' வெற்றிக்குப் பிறகு, 'உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை பண்ணு'னு சொல்லி என்கரேஜ் பண்ணிக்கிட்டே இருக்காங்க."

தமிழ் சினிமாவுல உங்களுக்கான இடம் எப்படி இருக்கணும்?

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"எனக்கு இவங்களை மாதிரி ஆகணும், அவங்களமாதிரி ஆகணும்னு எல்லாம் எண்ணமில்லை. வித்தியாசமான கதைகள்ல நடிக்கணும். ரித்திகா நடிச்சிருந்தா, அது வித்தியாசமான படமாதான் இருக்குனு ஆடியன்ஸூக்கு நம்பிக்கை வரணும். அது போதும்."

ரஸ்ட்லிங் வீரர் கர்ட் ஆங்கிள் ரிப்ளை பண்ணது எப்படி இருந்தது?

" 'ஓ மை கடவுளே' போஸ்டரைப் பார்த்துட்டு, ட்விட்டர்ல ரிப்ளை பண்ணார், கர்ட் ஆங்கிள். அவர் சண்டைகளையெல்லாம் நான் ரசிச்சுப் பார்த்திருக்கேன். அவர் ரிப்ளை பண்ணதைப் பார்த்தவுடன் குஷியாகிட்டேன். 'இறுதிச்சுற்று' பார்த்துட்டு மைக் டைசன் ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணார். இது எல்லாத்தையும் எனக்கான பாசிட்டிவ் அறிகுறியா பார்க்கிறேன்."

நீங்க உங்க பாட்டிகூட ரொம்ப நெருக்கமாமே!

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"எனக்கும் என் தம்பிக்கும் பாட்டி ரொம்ப நெருக்கம். தம்பி அவங்களுக்குக் கராத்தே சொல்லிக்கொடுப்பான். பாட்டிக்கும் எனக்கும் தம்பி கராத்தே சொல்லிக்கொடுக்கிற வீடியோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அவங்க ரொம்ப ஜாலி. வயது முதிர்ச்சியானாலே எல்லோருக்கும் பிரச்னை இருக்கும்தான். ஆனா, அதையெல்லாம் இவங்க எனர்ஜி ஓவர்டேக் பண்ணிடுது. எனக்குப் பலவகையில் என் பாட்டிதான் இன்ஸ்பிரேஷன்."

சினிமாவுல பிடிக்காதது எது?

"நைட் ஷூட்டிங் பிடிக்காது. அது உடல்நிலையை மட்டுமல்லாம, மனநிலையையும் பாதிக்குது."

கிளாமர் ரோல்ல நடிக்கிறதை எப்படிப் பார்க்குறீங்க?

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

"பெரிய கேரக்டர்லதான் நடிப்பேன்னு நான் நினைச்சதில்லை. சின்ன கேரக்டரா இருந்தாலும் முக்கியமான கேரக்டரா இருந்தா நடிப்பேன். என் கேரக்டரை மக்கள் மறக்கக்கூடாது. கிளாமர் ரோல்ல நடிக்கத் தயார். ஆனா, எனக்கு அந்தப் படத்துல எனக்கு முக்கியத்துவம் இருக்கணும். கிளாமருக்காக மட்டும்னா, நான் நடிக்கமாட்டேன்."

ஷூட்டிங் இல்லாத சமயத்துல என்ன பண்ணுவீங்க?

"அப்பாவோட கராத்தே அகாடமிக்குப் போய் நானும், தம்பியும் அங்கிருக்கிற மாணவர்களுக்குக் கராத்தே சொல்லிக் கொடுப்போம்."

மொபைல் - ஐபோன் 10 S max.

கார் - கார் இல்லை. அப்பா ஜீப் வெச்சிருக்கார், நான் ஆக்டிவா வெச்சிருக்கேன்.

அதிகம் பயன்படுத்தும் ஆப் - யூ-டியூப்.

பிடிச்ச ஹீரோ - ஹ்ரித்திக் ரோஷன்.

பிடிச்ச ஹீரோயின் - ஆலியா பட்.

யார் இயக்கத்துல நடிக்க ஆசை - சுதா கொங்கரா, இம்தியாஸ் அலி.

ஃபேன் கேர்ள் மொமன்ட் - மைக் டைசன், கர்ட் ஆங்கள், கமல்ஹாசன்.

சினிமா நண்பர்கள் - ஹெபா படேல், ஷாலினி பாண்டே, ருக்‌ஷார்.

பிடிச்ச உணவு - தால் ரைஸ், ஃபிஷ் ரைஸ்.

போக நினைக்கும் நாடு - நியூசிலாந்து.

பிடிச்ச ஸ்போர்ட்ஸ்மேன் - ஐ லவ் விராட் கோலி!