Published:Updated:

"பிக்பாஸால நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு.. ப்ச்!" ரித்விகா பெர்சனல்

Riythvika
Riythvika

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளர் ஆனவர், நடிகை ரித்விகா. சினிமாவில் அவரது பயணம் தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசினோம்.

"சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனா, 'மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரல. முக்கியமா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியா வரும்னு நினைச்சேன். ஆனா, புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கல!" என்கிறார் ரித்விகா.

Riythvika
Riythvika

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படம் பற்றி?

"படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரையை எனக்கு 'மெட்ராஸ்' படத்திலிருந்தே தெரியும். அந்தப் படத்துல இணை இயக்குநரா வேலைபார்த்தார். 'கதை வெச்சிருக்கேன். உங்களுக்கான ஒரு ரோலும் இருக்கு. கண்டிப்பா நடிக்கணும்'னு அப்போவே சொல்லிக்கிட்டிருப்பார். சொன்ன மாதிரியே இந்தப் படத்தோட கதையை எழுதி முடிச்சுட்டு சொன்னார். முழுக் கதையையும் கேட்டேன். எனக்கான ரோல் பிடிச்சிருந்தது. படத்துல நான் சமூக ஆர்வலரா வருவேன். வித்தியாசமான ஒரு படத்துல முக்கியமான ரோல் பண்ண சந்தோஷம் எனக்கு!"

விஜய் சேதுபதிகூட ஒரு படத்துல நடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோமே?

Riythvika
Riythvika

"ஆமா. அறிமுக இயக்குநர் ரகுநாதன் இயக்குற படம். இந்தப் படத்துல என் கேரக்டரைப் பற்றி மட்டும்தான் கேட்டேன். தனித்துவமா இருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். படத்தோட ஷூட்டிங் இப்போதான் தொடங்கியிருக்கு. விஜய் சேதுபதி சாருக்கும் எனக்குமான காட்சிகளை இன்னும் ஷூட் பண்ண ஆரம்பிக்கல. அதுக்காக ஆவலா காத்திருக்கேன். இந்தப் படம் தவிர, அமலாபால் நடிக்கிற 'காடவர்' படத்தில் நர்ஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ரொம்ப முக்கியமான ரோல் அது. இந்தக் கேரக்டர்ல என் நடிப்பைப் பார்த்த பிறகு பல நல்ல வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கை இருக்கு."

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திருக்குமே?

"பெருசா எதுவும் இல்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். என்கூட அந்த வீட்டிலிருந்த ஹவுஸ் மேட்ஸ்கூட இன்னும் தொடர்பில்தான் இருக்கேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு, ஒருநாள் கமல் சாரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போ ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்."

வாய்ப்புகள் உங்களைத் தேடி வராம இருக்கிறதுக்கு என்ன காரணம்?

Riythvika
Riythvika

"சினிமா ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் இந்தத் துறையில் இருக்கேன். தேடி வர்ற வாய்ப்புகளில் ரொம்ப செலக்ட்டிவ்வான கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். பெரும்பாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிற பல நடிகர், நடிகைகளோட சில காட்சிகளைப் படத்தின் ஃபைனல் வெர்ஷன் ரெடியாகும்போது நீக்கியிருப்பாங்க. ஆனா, எனக்கு இந்த மாதிரியான சம்பவம் பெரும்பாலும் நடந்ததில்லை. ஏன்னா, கதையைக் கேட்கும்போதே எந்தக் காட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்கன்னு புரிஞ்சுக்குவேன். அப்படி முக்கியத்துவம் இருக்கிற கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். தவிர, எனக்கு சின்னப் படமா இருந்தாலும், நான் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடிச்சிருந்தாலும் அது மக்கள் மனசுல நின்னா போதும்னு நினைக்கிறேன்."

ஹீரோயின் ரோலில் நடிக்க முடியலைங்கிற வருத்தம் உங்களுக்கு இருக்கா?

"கண்டிப்பா இல்லை. ஆனா, 'மாடு'ங்கிற படத்துல நான் ஹீரோயினா நடிச்சிருக்கேன். என்கூட காளி வெங்கட் சார் நடிச்சிருக்கார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகல. ஒருவேளை இந்தப் படத்துக்குப் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் வரலாம்!"

அடுத்த கட்டுரைக்கு