Published:Updated:

`விளக்கேற்றும் நிகழ்வைப் புறக்கணிச்சதுல எனக்குப் பெருமைதான்!' - ரோகிணி

பெரும்பாலான திரைப்பிரபலங்கள் விளக்கேற்றும் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதை எதிர்த்தும், `இந்நிகழ்வை புறக்கணிக்கிறோம்’ என்றும் சில பிரபலங்கள் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். அதில் நடிகை ரோகிணியும் ஒருவர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றைத் தவிர்க்கவும், நோய் தீவிரத்தைக் குறைக்கவும் 144 தடை உத்தரவு, சோஷியல் டிஸ்டன்சிங் போன்றவற்றை கடைப்பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கொரோனோவின் தீவிரத்தை உணர்ந்து 21 நாள்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு இந்த மாதம் முழுக்க இருக்கலாம், இன்னும் மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்களும் உலவி வருகின்றன.

கொரோனா
கொரோனா

போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான திரையரங்குகள், மால்கள், மதுக்கடைகள் போன்றவை மூடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும், கூட்டம் எங்கும் சேர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களும் கொரோனாவால் தங்கள் ஊழியர்களுக்கு `வொர்க் ஃப்ரம் ஹோம்’ வழங்கியிருக்கின்றன. இந்த நிலை இப்படியே நீடித்தால் தினசரி கூலித்தொழிலாளர்களின் நிலை என்ன என்பதும் பல இடங்களில் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, ஒரு நாள் ஊரங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிறன்று மாலை, மருத்துவர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் கைதட்ட வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள்விடுத்தார். இதற்குப் பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்த நிலையில், இதே போன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு `ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விளக்கேற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை ஒளியை ஏற்றி, நம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்' என மீண்டும் பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விளக்குகள் ஏற்றியும், டார்ச் அடித்தும் இன்னும் ஒரு படி மேலே போய் பல பகுதிகளில் பட்டாசுகள் எல்லாம் வெடித்தனர். பல துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, தங்கள் இல்லங்களில் விளக்குகளை ஏற்றிய புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பாலான திரைப்பிரபலங்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதை எதிர்த்தும், `இந்நிகழ்வை புறக்கணிக்கிறோம்’ என்றும் சில பிரபலங்கள் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். அதில் நடிகை ரோகிணியும் ஒருவர். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் 'லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளிகள் பிச்சைக்காரர்கள் போல இழிவுபடுத்தப்பட்டிருக்கும் சூழலில் ஒளி ஏற்றும் செயலை புறக்கணிப்பதில் பெருமை கொள்கிறேன்' என ட்வீட் செய்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.

``எல்லோரையும் போலதான் இந்த க்வாரன்டீன் நாள்களில் வெளிய போகாம, வீட்லயே எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு, புத்தகங்கள் வாசிச்சுட்டு இருக்கேன். கொரோனா பாதிப்பு எல்லா பக்கமும் தீவிரமாகிட்டு இருக்க நேரத்துல சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றனும். இந்த மாதிரியான சமயத்துல கொரோனாவுக்கு எதிரா கைத்தட்டுங்க, விளக்கு ஏத்துங்க மாதிரியான அறிவிப்புகள் அரசு தரப்பிலேருந்து வந்துட்டு இருக்கு. என்னைய பொருத்தவரைக்கும் கைத்தட்டறதுனாலயோ, விளக்கு ஏத்தறதுனாலயோ வைரஸ் போயிருங்கறதுல நம்பிக்கை இல்லை.

நாட்டுல பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள், மன உளைச்சல்கள் இருக்கும்னு நான் சொல்லிதான் தெரியனும்னு இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது கைத்தட்டறதும், விளக்கேத்தறதுலயும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதைத்தான் அங்க பதிவு செஞ்சேன்” என்று முடித்து கொண்டார் ரோகிணி. அவரது இந்த நிலைப்பாட்டிற்கு பலரும் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு