Published:Updated:

`பெரியப்பா இறந்துட்டார்; அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட போக முடியலை!' - நடிகை ரூபினி ஆதங்கம்

ரூபினி
ரூபினி

"என்னாலும், அவருடைய சொந்த மகளாலும்கூட அவருக்கு அஞ்சலி செலுத்தப் போக முடியலை. அவருடைய அஸ்தியை நதிகளில் கரைப்பதற்குக்கூட வழியில்லை."

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ளனர். அந்த மாநிலத்தில் நோய் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கு மக்கள் வெளியிடங்களில் நடமாடுவதும் அதிகரித்தவாறு இருக்கிறது. இதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், பாமர மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிக இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

மும்பை
மும்பை

இந்த நிலையில் மும்பையில் வசித்துவரும் நடிகை ரூபினி, தனது நெருங்கிய உறவினர் மரணத்துக்குக்கூடச் செல்ல முடியாமல் வீட்டில் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்துவருகிறார். அவரிடம் மும்பை நிலவரம் குறித்து கேட்டோம்.

``’தூங்கா நகரம்’னு பெயர் பெற்ற மும்பையின் பல இடங்கள் இரவு நேரத்தில்கூட பரபரப்பாகவே இருக்கும். வியாபாரம் நடந்துகிட்டே இருக்கும். ஏழைகள் முதல் பணக்காரங்க வரை எல்லாத் தரப்பு மக்களும் மும்பையில் வசிக்கிறாங்க. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மும்பை நகரத்தை தற்போதைய அமைதியான சூழலில் நாங்க பார்த்ததேயில்லை. கொரோனா பாதிப்பால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இழந்த பொருளாதாரத்தைக் கூடுதலா உழைச்சு மீட்டுடலாம். ஆனா, உயிரிழப்புகள் ஏற்பட்டால் மீட்க முடியாது. எனவே, மக்கள் பாதுகாப்பா இருக்கவேண்டியது அவசியம்.

மும்பை
மும்பை

மும்பையில் வசிக்கும் என் பெரியப்பா சில தினங்களுக்கு முன்பு இறந்துட்டார். தற்போதைய ஊரடங்கால் என்னாலும், அவருடைய சொந்த மகளாலும்கூட அவருக்கு அஞ்சலி செலுத்தப் போக முடியலை. அவருடைய அஸ்தியைப் பல நதிகளில் கரைப்பதற்குக்கூட வழியில்லை.

ரூபினி
ரூபினி

இந்த வேதனையால் சில தினங்களாகவே என்னால இயல்பா இருக்க முடியலை. ரெண்டு வாரமா வீட்டை விட்டு எதற்குமே வெளிய வர முடியாம தனிமையில் இருக்கிறோம். இந்த நிலைமை சீக்கிரமே சரியாகிடணும்னு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்பவர் பாமர மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்துப் பேசினார்.

``சமையல் பொருள்களுக்கு ஆர்டர் பண்ணிட்டா, எங்க அப்பார்ட்மென்ட் வாசலில் கொண்டுவந்து கொடுத்திடுறாங்க. அதனால, அத்தியாவசியப் பொருள்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. இதை எல்லா மக்களுக்கும் உறுதி செய்ய முடியாததுதான் வருத்தம். கொரோனா அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு பாமர மக்களுக்கு முழுமையாகப் போய் சேரலை. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், குடிசைப்பகுதியில் வசிக்கிறவங்க உட்பட ஏழை மக்கள் பலரும் வெளியே நடமாடுவதாகச் செய்திகள் தொடர்ந்து வருது.

மும்பை
மும்பை

அவர்களை போலீஸார் அடிப்பதால் கண்டனங்கள் எழுது. இது ரொம்பவே சிக்கலான விஷயம். மக்களின் நடமாட்டத்தால் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரிச்சுட்டே வருது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் வரப்போகுதுனு தினமும் உறுதிசெய்யப்படாத வதந்திகள் வருவது மக்களுக்குக் கூடுதல் அச்சத்தை உண்டாக்குது. வீட்டிலேயே இருப்பதால், குடும்பத்துடன் அதிகம் பேச முடியுது. சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்ய அவசியம் ஏற்பட்டிருக்கு” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு