Published:Updated:

`முதல்ல அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமதான் இருந்தேன்; ஆனா, அப்புறம்..?!" - சரண்யா மோகன்

கணவர், குழந்தைகளுடன் சரண்யா மோகன்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா மோகன், `யாரடி நீ மோகினி’ படம் மூலம் பிரபலமானார். திருமணமானதும் சினிமாவிலிருந்து விலகியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க ஆயத்தமாகியுள்ளார். சினிமா கம்பேக் பற்றி சரண்யாவிடம் பேசினோம்.

`முதல்ல அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமதான் இருந்தேன்; ஆனா, அப்புறம்..?!" - சரண்யா மோகன்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா மோகன், `யாரடி நீ மோகினி’ படம் மூலம் பிரபலமானார். திருமணமானதும் சினிமாவிலிருந்து விலகியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க ஆயத்தமாகியுள்ளார். சினிமா கம்பேக் பற்றி சரண்யாவிடம் பேசினோம்.

Published:Updated:
கணவர், குழந்தைகளுடன் சரண்யா மோகன்

நடிகர் விஜய் மற்றும் நடிகை ஷாலினிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் `காதலுக்கு மரியாதை’. அதில் வரும் `ஆனந்தக் குயிலின் பாட்டு’ பாடலின் இடையே `சைலன்ஸ்’ என்று சொல்லி `க்யூட் பேபி'யாக நடனமாடும் சரண்யா மோகன், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும், `யாரடி நீ மோகினி’ படம்தான் இவரைப் பலருக்கும் பரிச்சயமாக்கியது. க்யூட் சிரிப்பாலும் குழந்தைத்தனமான ரியாக்‌ஷன்களாலும் ரசிகர்களைக் கவர்ந்த சரண்யா, `வெண்ணிலா கபடிக்குழு', `ஜெயம்கொண்டான்', `வேலாயுதம்' போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

கணவர், குழந்தைகளுடன் சரண்யா மோகன்
கணவர், குழந்தைகளுடன் சரண்யா மோகன்

திருமணமானதும் சினிமாவிலிருந்து விலகியவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடை கூடியவராகத் தன் குழந்தையுடன் தோன்றிய புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் வைரலானார். தன்னை உருவகேலி செய்தவர்களுக்கு, `என் உடல் என் உரிமை’ என்று பதிலளித்து அதிரடி காட்டினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க ஆயத்தமாகி ஆர்வமாகக் கதை கேட்டுவருபவருக்கு, முதலாவதாகத் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆசை. சினிமா கம்பேக் பற்றி சரண்யாவிடம் பேசினோம்.

``என் பூர்வீகம் ஆலப்புழா. எங்க மாவட்டத்துல வருஷம்தோறும் நடக்கிற குழந்தைகளுக்கான கல்ச்சுரல் நிகழ்ச்சியில தொடர்ந்து ரெண்டு முறை ஜெயிச்சேன். அதனாலேயே, மூணாவது முறையா நான் கலந்துக்கக் கூடாதுனு சிலர் பிரச்னை செஞ்சாங்க. அதனால, என்னையும் என் தங்கச்சியையும் அழைச்சுகிட்டுப்போய் கலெக்டர்கிட்ட அப்பா புகார் கொடுத்தார். `மணிச்சித்ரதாழ்' படம் ரிலீஸாகி அதுபத்தின பேச்சு அதிகமா இருந்த நேரம் அது. கலெக்டரைச் சந்திச்சுட்டு திரும்பி வரும்போது, `மணிச்சித்ரதாழ்’ படத்தின் டைரக்டரான ஃபாசில் சார் வீட்டைக் காட்டி, `இதுதான் நாகவள்ளி வீடு'ன்னு (அந்தப் படத்தில் நடிகை ஷோபனா நடித்த கதாபாத்திரம்) அப்பா விளையாட்டா சென்னார்.

சரண்யா மோகன்
சரண்யா மோகன்

அடம்பிடிச்சு அந்த வீட்டைப் பார்க்கணும்னு தங்கச்சியும் நானும் அடம்பிடிக்கவே, காம்பவுண்டு கேட்டுகிட்ட அப்பா எங்களைக் கூட்டிட்டுப்போனார். எங்களைப் பார்த்த ஃபாசில் சார், உள்ளே கூப்பிட்டார். அவர்கிட்ட கல்ச்சுரல் நிகழ்ச்சியில நடந்த பிரச்னை பத்தி சொன்னோம். அடுத்த சில தினங்கள்ல அவர்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. அவர் டைரக்ட் செஞ்ச `அனியத்திப்ராவு' படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான `காதலுக்கு மரியாதை'யிலும் நடிக்க வெச்சார்.” - மூன்றாம் வகுப்பு படித்தபோது சினிமாவில் அறிமுகமான சரண்யாவை, உச்ச நடிகர்களை வைத்து, தான் இயக்கிய சில படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வைத்திருக்கிறார் ஃபாசில்.

விவரம் தெரிய ஆரம்பித்த பருவத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் நடிக்க வைத்ததும் அவரின் குருநாதர்தான்.

``எந்த விவரமும் தெரியாத பால்ய பருவத்துல, பெரிய ஆர்ட்டிஸ்டுகள் பலருடனும் நடிச்சேன். அப்புறமா சினிமாவை முழுசா மறந்துட்டு, படிப்புல மட்டும் கவனம் செலுத்தினேன். ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்தபோது `ஒரு நாள் ஒரு கனவு' படத்துல மறுபடியும் என்னை நடிக்க வெச்சார் ஃபாசில் சார். என் குருநாதர் கேட்கும்போது மறுக்க முடியுமா? அந்தப் படம் ரிலீஸானதுமே, `யாரடி நீ மோகினி' படத்தோட புரொடக்‌ஷன் டீம்லேருந்து என்கிட்ட பேசினாங்க. எனக்கு நடிக்க விருப்பமில்லைனு எவ்வளவோ மறுத்தேன்.

Saranya Mohan
Saranya Mohan

`ஸ்கிரீன் டெஸ்டுக்கு வாங்க. மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்'னு சொன்னாங்க. ஸ்கிரீன் டெஸ்டுல நிறைய பெண்கள் காத்திருந்தாங்க. அதனால, எனக்கு வாய்ப்பு கிடைக்காதுனு சந்தோஷப்பட்டு, போன வேலை முடிஞ்சதும் சென்னையைச் சுத்திப்பார்த்துட்டு கிளம்பிட்டேன். நயன்தாரா அக்காவோட தங்கச்சி ரோல்ல என்னை உறுதிப்படுத்திட்டாங்க. அன்புக் கட்டளையா அந்தப் படத்துல நடிக்க வேண்டியதா போச்சு. அந்தப் பட ஷூட்டிங்லதான் நயன்தாரா அக்காவை முதன்முறையா சந்திச்சேன். நாங்க ரெண்டு பேரும் கேரளாவைச் சேர்ந்தவங்க என்பதால அன்பா பழகினோம். தனுஷ் சார்கிட்ட லவ் புரொபோஸ் பண்றதுதான் அந்தப் படத்துல நான் நடிச்ச முதல் சீன். நான் நடிச்ச படங்கள்லயே முதன்முறையா அந்தப் படத்துலதான் எனக்கு டூயட் சாங் கொடுத்தாங்க” என்பவருக்கு, அந்தப் படத்தின் வெற்றி, தொடர் பட வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க, காலேஜ் படிப்பும் நடிப்புமாக இரட்டை சவாரி செய்திருக்கிறார்.

``என் முதல் இன்னிங்ஸ் முடிக்கிற வரையுமே, சினிமாவுல பேர் எடுக்கணும்னு எந்த ஆசையும் எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. ஆனாலும், என்மேல பலரும் வெச்சிருந்த நம்பிக்கைக்காக மறுக்க முடியாம சில படங்கள்ல மட்டும் நடிச்சேன். `வெண்ணிலா கபடிக்குழு' டீம்லேருந்து என்னை அணுகி, `ஹீரோயின் ரோலுக்காக நீங்க உயரமும் எடையும் கூட்டணும்'னு சொன்னாங்க. `எடை கூட்டுறதுகூட சாத்தியம். ஆனா, உயரம் கூட்டுறது என் கையிலயா இருக்கு? அதில்லாம, இப்போ ஆக்டிங்ல எனக்கு விருப்பமில்லை'னு நடிக்க மறுத்துட்டேன். வேறு நடிகையை வெச்சு ஒரு வாரம் ஷூட்டிங்கும் எடுத்திருக்காங்க. இந்த நிலையில, அப்போ ரிலீஸாகியிருந்த `யாரடி நீ மோகினி' படத்தை டைரக்டர் சுசீந்திரன் சார் பார்த்திருக்கார். அதுல என் நடிப்புப் பிடிச்சுப்போய், `உயரம், எடை எதுவுமே பிரச்னை இல்ல. நீ இந்தப் படத்துல நடிச்சா போதும்'னு கேட்டார். அப்புறம்தான் அந்தப் படத்துல நடிச்சேன்.

நடிகர் விஜய்யுடன் சரண்யா
நடிகர் விஜய்யுடன் சரண்யா

ஹீரோயினா எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த அந்தப் படத்தோட இந்தி ரீமேக்லயும் நானேதான் நடிச்சேன். ஹீரோயினா நடிச்சுகிட்டிருந்த நிலையில, தங்கச்சி ரோல் வேண்டாம்னு நினைச்சு, `வேலாயுதம்' பட வாய்ப்பையும் மறுத்தேன். டைரக்டர் மோகன் ராஜா சார் போன்ல அரை மணி நேரத்துல கதை சொல்லி முடிக்கும்போது, `தங்கச்சி கேரக்டர் இறந்து போயிடுவாங்க அல்லது என்ன ஆவாங்கன்னு இன்னும் முடிவெடுக்கலை'னு சொன்னார். உடனே நான் சம்மதம் சொன்னதுடன், தங்கச்சி கேரக்டர் இறந்து போயிடும்படியா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன். நான் எதிர்பார்த்ததுபோலவே அமைஞ்சது. `காதலுக்கு மரியாதை'ல குழந்தை நட்சத்திரமா விஜய் சாருடன் ஒருசில சீன்லதான் வருவேன். ஆனா, `வேலாயுதம்’ல அவர்கூடவே டிராவல் பண்ற மாதிரி நடிச்சது எனக்கு வியப்புதான். மறுபடியும் விஜய் சார்கூட நடிக்க வாய்ப்பு வந்தா டபுள் ஓகே சொல்லிடுவேன்.

எனக்கு ஹோம்லி லுக்ல இருக்கிறதுதான் பிடிக்கும். அதனால, சினிமாவுல எனக்கு ப்ளஸ் மைனஸ் ரெண்டுமே கிடைச்சிருக்கு. `தாவணி அல்லது புடவைனு டிரெடிஷனல் டிரஸ் மட்டுமே பயன்படுத்தினா, சினிமாவுல சீக்கிரமாவே பட வாய்ப்புகள் குறைஞ்சுடும்'னு சிலர் என்கிட்ட சொன்னாங்க. அதை நான் ஏற்கலை. அதனாலகூட பெரிய ஹீரோக்களுடன் ஜோடியா நடிக்க எனக்கு வாய்ப்பு வராம இருந்திருக்கலாம். இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற பெயரும் புகழும் கனவுலயும் நான் நினைச்சுப் பார்க்காதது. அதனால, கிடைக்காத வாய்ப்புக்காக நான் வருத்தப்பட்டதில்லை" என்று கொஞ்சலாகச் சிரிப்பவர், தன் பர்சனல் பக்கங்கள் குறித்தும் பேசினார்.

குழந்தைகளுடன் சரண்யா மோகன்
குழந்தைகளுடன் சரண்யா மோகன்

``கணவர் அரவிந்த் கிருஷ்ணன் பல் மருத்துவர். ஆனந்த பத்மநாபன், அன்னபூர்ணானு எங்களுக்கு ரெண்டு குழந்தைகள். பொண்ணுக்கு இப்போ மூணு வயசு. அவளுக்கு ஒரு வயசு இருக்கும்போது அவளுடன் விளம்பரப் படம் ஒண்ணுல நடிச்சேன். கல்யாணம் முடிஞ்சதும் குடும்பம், குழந்தைனு இருந்ததால சினிமாவுல பிரேக் ஏற்பட்டுடுச்சு. புகுந்த வீட்டுலயும் எனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட் கிடைக்குது. அதனாலதான், சினிமாவுல நடிக்காட்டியும் பல வருஷமா டான்ஸ் கிளாஸ் நடத்திட்டிருக்கேன். இப்போ மறுபடியும் நடிக்க முடிவெடுத்து கதை கேட்டிட்டிருக்கேன். மலையாளத்துல ஒரு படத்துக்குக் கதை கேட்டு, அது எனக்குப் பிடிக்கல. தமிழ் சினிமாவுலயும் கதை கேட்க ஆரம்பிச்சிருக்கேன். முன்பு `டிக்டாக்'ல நிறைய வீடியோஸ் வெளியிட்டேன். அந்தப் பழக்கத்துல நேரம் கிடைக்கும்போது டான்ஸ் ஆடியும் பாடியும் பிடிச்ச வீடியோக்களை சோஷியல் மீடியாக்கள்ல பதிவிடுறேன். இந்த விஷயத்துல இப்போ என்னைவிட என் கணவர் ரொம்ப ஆர்வமா இருக்கார்" என்னும் சரண்யா, `உருவகேலி' விவகாரம் குறித்தும் பேசினார்.

``சினிமாவுல ஆக்ட்டிவ்வா நடிச்சுகிட்டிருந்தபோது, என்னைப் பத்தி வதந்திகள், தவறான செய்திகள் வந்திடக் கூடாதுனு ரொம்பவே கவனமா இருந்தேன். அதுக்கப்புறம் சினிமாவுல நடிக்காததால எதைப் பத்தியும் கவலையில்லாம இருந்தேன். அந்த நேரத்துல நான் கொஞ்சம் வெயிட் போட்டிருந்ததைப் பத்தி பலரும் பலவிதமா சோஷியல் மீடியாவுல பேசினாங்க. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, தேவையில்லாம என்னைப் பத்தி இப்படிப் பேசுறவங்களையெல்லாம் எதுவும் செய்யவே முடியாதுனு நினைச்சு நான் பெரிசா ரியாக்ட் பண்ணல. ஆனா, என் நலன்ல அக்கறையுள்ள என் குடும்பத்தினருக்கு அந்தக் கேலிப்பேச்சுகள் ரொம்பவே வருத்தத்தை உண்டாக்குச்சு. அதனாலதான், அந்த நேரத்துல என் மனசுல பட்டதை வெளிப்படையா பேசினேன்.

குழந்தைகளுடன் சரண்யா மோகன்
குழந்தைகளுடன் சரண்யா மோகன்

கர்ப்பமா இருந்தபோது எடுத்துகிட்ட உணவுகள், உடல்ல ஏற்படுற ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல விஷயங்களால எனக்கு வெயிட் கூடுச்சு. என்ன, ஏதுன்னு காரணம் தெரியாம `ஃப்ரீ அட்வைஸ்' கொடுக்கிறவங்களோட அக்கறை தேவையில்லாததுனு என் குடும்பத்தினரும் ஒருகட்டத்துல புரிஞ்சுகிட்டாங்க. அதுக்கப்புறமா என் உடல் எடையைக் குறைச்சேன். உடலும் மனசும் என் கன்ட்ரோல்ல இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன். சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தபோது ஆர்வம் இல்லாம இருந்த நான், இப்போதான் நடிக்கணும்னு ரொம்பவே ஆர்வமா இருக்கேன். கூடிய சீக்கிரமே பாசிட்டிவ்வான தகவல் சொல்லுறேன்" என்று சிரித்தபடியே விடைபெற்றார்.