Published:Updated:

``80'ஸ் ரீயூனியன் சந்திப்புல என்னையும் அக்காவையும் யாருமே கூப்பிட்டதில்ல!"- நடிகை சாந்திப்ரியா படபட

சாந்திப்ரியா

"சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற கெட்ட பழக்கமே இதுதான். தேவைனா நூத்துக்கணக்கான தடவை போன் பண்ணுவாங்க. தேவையில்லைனா கண்டுக்கவே மாட்டாங்க. எதுவா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்களுக்கு முறையா தகவல் சொல்லணும்ல. அவாய்டு பண்ணியோ, காக்க வெச்சோ யாரையும் காயப்படுத்தாதீங்க..."

``80'ஸ் ரீயூனியன் சந்திப்புல என்னையும் அக்காவையும் யாருமே கூப்பிட்டதில்ல!"- நடிகை சாந்திப்ரியா படபட

"சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற கெட்ட பழக்கமே இதுதான். தேவைனா நூத்துக்கணக்கான தடவை போன் பண்ணுவாங்க. தேவையில்லைனா கண்டுக்கவே மாட்டாங்க. எதுவா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்களுக்கு முறையா தகவல் சொல்லணும்ல. அவாய்டு பண்ணியோ, காக்க வெச்சோ யாரையும் காயப்படுத்தாதீங்க..."

Published:Updated:
சாந்திப்ரியா

சினிமாவில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா - சாந்திப்ரியாவுக்கு முக்கிய இடமுண்டு. இசையமைப்பாளர் இளையராஜாவின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்த 'மதுர மரிக்கொழுந்து' பாடல் என்றதுமே நம் நினைவுக்கு வந்துபோவார் சாந்திப்ரியா. 1980-களில் கவனம் பெற்ற நடிகையான இவர், தமிழ் சினிமாவில் தலைகாட்டி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரிய இடைவெளிக்குப் பிறகு, ரீ-என்ட்ரிக்குத் தயாராகி, சரோஜினி நாயுடுவின் பயோபிக் படத்தில் நடித்துவருகிறார்.

மகன்களுடன் சாந்திப்ரியா
மகன்களுடன் சாந்திப்ரியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்தித்தோம். இன்னும் அதே துள்ளலுடன் இருந்தவர், தோற்றம் முதல் குரல் வரை பல விதத்திலும் தன் அக்கா பானுப்ரியாவை பிரதிபலித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"நான் ஸ்கூல் படிக்கும்போது, என் அக்கா முன்னணி நடிகையா இருந்தாங்க. லீவ் நாள்கள்ல அக்காவுடன் ஷூட்டிங் பார்க்கப் போவேன். அந்த வைபிரேஷன் எனக்கும் பரவினதாலயோ என்னவோ, சினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள துளிர்விட்டுச்சு. டான்ஸ் நிகழ்ச்சி ஒண்ணுல கங்கை அமரன் சார் என்னைப் பார்த்திருக்கார்.

அவர் இயக்கிய ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்துல என்னை நடிக்கக் கேட்டார். ‘வீட்டுல ஏற்கெனவே ஒரு நடிகை இருக்கிறது போதும்; நீ படிப்புல மட்டும் கவனம் செலுத்து’னு எங்கம்மா கண்டிப்புடன் சொன்னாங்க. ஆனாலும், அம்மாவின் பேச்சைமீறி அந்தப் படத்துல நடிச்சேன். அதனால, கோபத்துல எங்கம்மா சில காலம் என்கிட்ட பேசவே இல்ல. அதேசமயம் என் முதல் படம் ஹிட்டாக, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகரிச்சது.

பானுப்ரியாவுடன் சாந்திப்ரியா
பானுப்ரியாவுடன் சாந்திப்ரியா

ஒன்பதாம் வகுப்போடு என் நடிப்பும் தடைப்பட்டுடுச்சு. ஒருகட்டத்துல என் சினிமா ஆசையைப் புரிஞ்சுகிட்ட எங்கம்மா, எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. சினிமா இண்டஸ்ட்ரியில என் பெயர் பலவிதமா மாத்தப்பட்டது அப்போதான்.

அக்காவோட இயற்பெயர் பானு; என் பெயர் சாந்தி. சினிமாவுக்கு வந்த பிறகு, ‘பானுப்ரியா’னு அக்காவின் பெயர் மாறுச்சு. அதேபோல, என் பெயருக்கு முன்னாடி ‘நி’ங்கிற எழுத்தைச் சேர்த்து, ‘நிஷாந்தி’னு மாத்தினாங்க. அப்புறமா, ‘சாந்திப்ரியா’, ‘ரேகா’னு டிசைன் டிசைனா மாத்தினாங்க.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள்ல நடிச்சுகிட்டிருந்த நிலையில, பாலிவுட்டுலயும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது. சினிமாவுல அக்காவின் பெயர், எனக்கு விசிட்டிங் கார்ட்டா அமைஞ்சது உண்மைதான். ஆனா, திறமையின் அடிப்படையிலதான் எனக்கு ஆக்டிங் வாய்ப்புகள் கிடைச்சது” என, மின்னல் வெட்டு சிரிப்புடன் சொல்பவர், 80 மற்றும் 90-களில் ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தது குறிப்பிட்டத்தக்கது.

சாந்திப்ரியா
சாந்திப்ரியா

"எல்லா விஷயத்துலயுமே அக்கா ரொம்பவே நிதானத்துடனும் பொறுமையுடனும்தான் நடந்துப்பாங்க. வார்த்தைகளை அளந்துதான் பேசுவாங்க. நான் அவங்களுக்கு அப்படியே நேரெதிர். மனசுல பட்டதை ‘பட்டு’னு சொல்லிடுவேன். ‘ஏன்டீ இப்படியெல்லாம் பேசுறே’ன்னு எங்கம்மா என்னைக் கண்டிப்பாங்க. நான் இப்படித்தான். யாருக்காகவும் எதுக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன். யதார்த்த உண்மையை வெளிப்படையா சொல்ல எப்பவும் தயங்கவே மாட்டேன்” சாந்திப்ரியாவின் வார்த்தைகள் பட்டாசாக வெடிக்க, தன் அனுபவத்தில் இருந்து சினிமாவில் மாற வேண்டிய சில விஷயங்களையும் உரத்த குரலில் சொன்னார்.

"2016-ல் நடிகை லட்சுமி மஞ்சுவுக்கு (நடிகர் மோகன் பாபுவின் மகள்) அம்மாவா, தெலுங்குப் பட வாய்ப்பு எனக்கு வந்துச்சு. மூணு நாள்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அப்புறமா அந்த டீம்லேருந்து என்னைக் கூப்பிடவேயில்லை. நான் போன் செஞ்சாலும் யாருமே பதில் சொல்லலை. அப்புறமாதான், எனக்குப் பதிலா வேறொரு நடிகையை ரீப்ளேஸ் பண்ணிட்டதா தெரிஞ்சது.

சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற கெட்டப் பழக்கமே இதுதான். தேவைனா நூத்துக்கணக்கான தடவை போன் பண்ணுவாங்க. தேவையில்லைனா கண்டுக்கவே மாட்டாங்க. எதுவா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்களுக்கு முறையா தகவல் சொல்லணும்ல. அவாய்டு பண்ணியோ, காக்க வெச்சோ யாரையும் காயப்படுத்தாதீங்க.

சாந்திப்ரியா
சாந்திப்ரியா

அதேபோல உருவகேலியும் நிறப்பாகுபாடுகளும் சினிமாத்துறையில தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. குறிப்பா, பெண்களுக்கு. நிறப்பாகுபாட்டுக்கு எதிரான குரல் நம்மூர்ல ஆரம்பத்திலிருந்தே ஒலிக்கிறது சரிதான். அதேசமயம், நம்மூர் பொண்ணுங்களுக்கு அதிகமா ஆக்டிங் வாய்ப்பு கொடுக்காம, வட இந்தியாவிலிருந்து நடிகைகளை அழைச்சுகிட்டு வர்றது மட்டும் சரியா?

அதனாலதான், காலங்காலமா இந்தப் புறக்கணிப்புகள் தொடந்துகிட்டே இருக்கு. குறிப்பா, ஹீரோயின் கேரக்டருக்குனு சில வரையறைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுக்காக, கொஞ்சம் வெயிட் கூட்டுறது அல்லது குறைக்கிறது அவசியமானதுதான். ஆனா, ஹீரோயினா நடிக்க ‘சைஸ் ஜீரோ’ உடலமைப்புதான் அவசியம்ங்கிறதை நான் ஏத்துக்க மாட்டேன்.

இதுக்கு முன்பு தமிழ்ல எனக்கு சில ஆஃபர்ஸ் வந்துச்சு. அதுக்காக, வெயிட் போடச் சொன்னாங்க. அதுல உடன்பாடில்லாம மறுத்துட்டேன். இது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பம்தான். ஆனா, சினிமாவுல நடிக்கணும்னா இப்படித்தான் இருக்கணும்ங்கிற பொது வரையறையைத் திணிக்கக் கூடாதுங்கிறதுதான் என் கருத்து.

நிறம், உயரம், உடலமைப்பு, பேச்சு, நடைனு ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். இதெல்லாம் கடைசி வரைக்கும் கைகொடுக்காது. ஆனா, திறமை மட்டும்தான் காலத்துக்கும் நமக்கு உறுதுணையா இருக்கும். இதை, நிறப்பாகுபாட்டால பாதிக்கப்பட்டு, கலங்கி மீண்ட அனுபவத்துல சொல்றேன்” என, நியாயமான விஷயங்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறுகிறார் சாந்திப்ரியா.

சாந்திப்ரியா
சாந்திப்ரியா

கலகலப்பானவர்களையும் சில இழப்புகள் அசைத்துப் பார்த்துவிடும். அதுபோல காதல் கணவரின் இழப்பால் உடைந்துபோய் மீண்ட சாந்திப்ரியா, சிங்கிள் பேரன்ட்டாக அடுத்த இன்னிங்ஸிலும் பொறுப்புடன் செயல்படுகிறார்.

" 'சிங்கிள் பேரன்ட்'ங்கிற விஷயத்தை மனதளவுல ஏத்துக்க ஆரம்பத்துல கஷ்டப்பட்டேன். எங்கம்மாவும் சிங்கிள் பேரன்ட்தான். அவங்களோட போராட்டக்குணத்தையும் தைரியத்தையும் பார்த்து வளர்ந்த அனுபவம் எனக்கு உதவுச்சு. அதே அனுபவத்துலதான் என் அக்காவும் சிங்கிள் பேரன்ட்டா துணிச்சலா செயல்பட ஆரம்பிச்சாங்க.

சாந்திப்ரியா
சாந்திப்ரியா

கணவர் இறந்த பிறகு, என் ரெண்டு பசங்களோடும் நெருக்கத்தையும் தோழமை உணர்வையும் அதிகப்படுத்தினேன். பொய் சொல்லக்கூடாது; திருடக்கூடாது; செஞ்ச தப்பை ஒத்துக்க தயங்கக்கூடாது. இந்தக் குணங்களுடன் நியாயத்துக்காக எவ்ளோ பெரிய பிரச்னைனாலும் உங்களுக்கு ஆதரவா நான் இருப்பேன்னு சொல்லித்தான் அவங்களை வளர்த்தேன்.

'பெண்கள் உட்பட சக மனிதர்கள் எல்லோரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும். நான் இருந்தாலும் இல்லாட்டியும் சுயமா இயங்கணும்'னு பசங்களைத் தைரியமா வளர்த்திருக்கேன். சினிமா கரியர் நம்மோடு போகட்டும்னுதான் என் கணவரும் நானும் நினைச்சோம். அதனால, சினிமா பத்திரிகைகளைக்கூடப் படிக்க விடாம பசங்களை ரொம்பவே கட்டுப்பாட்டுடன் வளர்த்தோம்.

அவங்க ரத்தத்துலயே சினிமா ஊறியிருக்கும்ல. அதனாலதான், என் ரெண்டு பசங்களுமே சினிமாவுக்கு வந்து, இப்போ பாலிவுட்டுல வேலை செய்யுறாங்க. என்னால முடிஞ்ச ஊக்கத்தை அவங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று பக்குவமாகச் சொல்பவர், வயது கூடக்கூட உற்சாகம் அதிகரிப்பவராக, உடற்பயிற்சி, சைக்கிளிங், யோகா, டயட் உணவு, கச்சேரிகளில் நடனமாடுவது என சுறுசுறுப்பாக இருக்கிறார்.

சாந்திப்ரியா
சாந்திப்ரியா

80’ஸ் சினிமா நட்சத்திரங்களின் ரீயூனியன் சந்திப்பில் பானுப்ரியாவும் சாந்திப்ரியாவும் கலந்துகொண்டேதேயில்லை. அதுகுறித்துக் கேட்டதும், "அந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிற சுஹாசினி மேடத்துடன் நட்பில்தான் இருக்கேன். ஆனா, அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்யுற ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து இதுவரை ஒருமுறைகூட எனக்கு அழைப்பு வந்ததில்லை. ‘நீங்க போகலையா?’னு என் அக்காகிட்ட கேட்டிருக்கேன். ‘நான் பார்ட்டி பர்சன் கிடையாது. நான் வரமாட்டேன்னு நினைச்சு, என்னைக் கூப்பிடாம விட்டிருக்கலாம்’னு அவங்க சொல்லுவாங்க. எனக்கும் அக்காவுக்கும் இதுவரை அழைப்பே வரலைங்கிறதுதான் உண்மை" என்று முடித்தார்.