Published:Updated:

“எனக்கும் கனவுகள் இருந்துச்சு!”

சோனா
பிரீமியம் ஸ்டோரி
News
சோனா

பிரகாஷ்ராஜுடன் தெலுங்குப் படம் ஒன்றில் ஒரு பாடல் வந்தது. இப்ப இருக்கிற கிளாமருக்குப் பக்கத்தில்கூட இல்லை.

அடிமைப்படுத்துகிற அழகில்லை சோனாவுக்கு. ஆனாலும் சோனாவுக்கு என்று கணிசமான ரசிகர்கள் இருந்தது உண்மை. கவர்ச்சி, காமெடி, பார்ட்டி, சினிமாத் தயாரிப்பு எல்லாவற்றிலும் ஈடுபட்டுத் தலைமறைவான சோனா சட்டென இப்போது திரும்பி வந்திருக்கிறார்.

“சினிமால்லாம் நெனச்சதே இல்லை. நல்லா படிச்சுப் பெரிய ஆளாகிடணும்னு எண்ணம் மட்டுமே இருந்தது. மிடில்கிளாஸ்க்கும் கீழே. அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு போயிட்டாங்க. கஷ்டம் பல மடங்காகிவிட்டது. லாண்டரிக் கடையில் மாதம் 350 ரூபாய்க்குக் கணக்கு எழுதினேன். டெலிபோன் கம்பெனிக்கு வேலைக்குப் போனால் முதலாளி பார்த்த பார்வையே சரியில்லை. அப்பத்தான் நான் வேலை பார்த்த கடைக்குப் பக்கத்தில் நடிகை ஜீவிதா ராஜசேகர் இருந்தாங்க. அங்கே இருந்த புரொடக்‌ஷன் மேனேஜர் ‘நடிக்கிறியா’ன்னு கேட்டார். அந்த வார்த்தை என் வாழ்க்கையையே தலைகீழாக்கும்னு அன்றைக்கு எனக்குத் தெரியாது. அம்மாகிட்டே சினிமாவில் நடிக்கலாமான்னு கேட்டால் வானத்திற்கும் பூமிக்குமா குதிக்கிறாங்க. நானே ரொம்ப பயந்தவ. ஸ்கூல் போயிட்டு எதிரே நாலு பசங்க ஒரு மாதிரி பார்த்தாலே பயந்து அழ ஆரம்பிச்சுடுவேன். அப்படிப்பட்ட பொண்ணு இந்த அளவுக்கு எப்படி வந்ததேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!

 “எனக்கும் கனவுகள் இருந்துச்சு!”

அப்புறம் ஒரு தெலுங்குப் படத்துல பிரம்மானந்தத்திற்கு ஜோடியா காமெடி ரோல்ல நடிச்சேன். பாவாடை தாவணி காஸ்ட்யூம் கொடுத்தாங்க. ‘அப்படி தாவணி போடு’, ‘இப்படி தாவணி போடு’ன்னு சொன்னாங்க. சொன்னது மாதிரி செய்தேன். அதையே திரையில் பார்த்தால் ‘ஐயோ இவ்வளவு தெரியுதா’ன்னு பதறிப்போயிட்டேன். அப்ப கிளாமர்னா என்னன்னு எனக்குத் தெரியாது. அவ்வளவு சின்ன வயசில் எது நல்லது எது கெட்டதுன்னு தெரியலை. ‘செருப்பால அடிப்பேன், வீட்டில் வந்து உட்கார்’னு அம்மா சொன்னாங்க. அப்படி உட்கார்றது மாதிரி வீட்ல நிலைமையில்லை. அம்மாகிட்ட ‘கொஞ்சம் என்னை சுதந்திரமா விடு. கட்டுப்படுத்தாதே’ன்னு சொல்லிட்டு தீவிரமாக சினிமாவில் இறங்கிட்டேன்.

பிரகாஷ்ராஜுடன் தெலுங்குப் படம் ஒன்றில் ஒரு பாடல் வந்தது. இப்ப இருக்கிற கிளாமருக்குப் பக்கத்தில்கூட இல்லை. ஆனாலும் பாடல் பயங்கர ஹிட்டாகி, அடுத்தடுத்த நாளில் இருபது படங்களுக்கு மேலே டேட் கேட்கிறாங்க. அதுவரைக்கும் இருக்கற பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறதுன்னு புரியாம, கிடைக்கற வேடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

‘கனிமொழி’ன்னு ஒரு படம் எடுத்தேன். அது நல்ல அனுபவமா அமையலை. லவ் பண்ணணும்னு ஆசை. குழந்தை பெத்துக்கிட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை வாழணும்னு தோணுச்சு. ஏழு வருஷமாக ஒருத்தரைக் காதலிச்சேன். அதுவுமே நிலைக்கலை. நம்மகிட்டே இருக்கிற பைசாவுக்காக வரக்கூடாது. நிஜமாக நேசிக்கணும்னு நினைச்சேன். ஆனால் நடக்கலை.

எனக்கும் கனவுகள் இருந்துச்சு. ஒரு சிறிய வீடு, அன்பான கணவன், நாள் முழுக்க அவருக்காக வெயிட் பண்ணி, அவர் வந்ததும் சில கதைகள் பேசி, அவருக்காக சமைச்சுப் போட்டு... ஆசையிருக்கு. திடீரென்று அம்மா இறந்துட்டாங்க. நான் நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்ட ஆத்மா. அம்மா போன கொஞ்ச நாளில் அப்பாவும் போயிட்டாரு. தங்கச்சி லண்டன் போயிட்டா. சடார்னு பார்த்தால் அப்படியே தனியா உட்கார்ந்திருக்கேன். ராத்திரி படுக்கையில் உட்கார்ந்து பயங்கரமாக அழுவேன். எதுக்குன்னு எனக்குத் தெரியாது.

 “எனக்கும் கனவுகள் இருந்துச்சு!”

நிறைய காமெடிப் படங்கள் நடிச்சேன். நிறைய பார்ட்டி, நிறைய நண்பர்கள். நடிக்க ஆரம்பிச்சபோது தல, தளபதி படங்களில் தமிழில் ஆரம்பிச்சேன். விஜய் சாரை அப்படிப் பிடிக்கும். ‘கனிமொழி’ பாடல் வெளியீட்டுக்கு அவரோடு சேர்ந்து படம் எடுத்துக்கிட்டேன். ‘ஷாஜகான்’ படத்தில் ஹீரோயின் காதல் சொல்ற சீனில் பக்கத்தில் நிற்கிற என்னைப் பாருங்க... விஜய் சாருக்கே வெட்கம் வந்திருச்சு. ரஜினி சார் ‘குசேலன்’ படத்தில் நடிக்கும்போது ‘உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் நடந்ததாமே, எப்படி இருக்காங்க’ என்று கேட்பது வரைக்கும் நம்மைத் தெரிஞ்சுவச்சிருப்பார்.

இப்ப மறுபடியும் நடிக்க வந்துட்டேன். நடந்தது எல்லாமே பாடம்தான். நாம் எடுத்துக்கிற விதத்தில் இருக்கு. உண்மையா இருந்தால் தைரியமா, பயமில்லாமல் இருக்கலாம். இப்ப என்னோட சுயசரிதையை ஒரு புத்தகமா எழுதி முடிச்சிருக்கேன். அவ்வளவு உண்மை அதில் இருக்கும். அந்தப் புத்தகம்தான் என் வாழ்க்கை எனக்குக் கொடுத்த தெளிவு.”