Published:Updated:

``விஜயகாந்த் அனுமதியுடன் அந்த நடிகரைத் திட்டினேன்; உடனே மன்னிப்பு கேட்டார்!"- சீறும் ஸ்ரீப்ரியா

Sripriya
Sripriya

"`முதலில் மேடை நாகரிகத்தை கத்துக்கோங்க. என்னைப் பத்தி கருத்து சொல்லணும்னா, என் எதிரில் வந்து நின்னு சொல்லுங்க'ன்னு அந்த நடிகரைப் பார்த்து தைரியமா எல்லார் முன்னிலையிலும் பேசினேன். அவர் தன் தவற்றை உணர்ந்து, கீழே இறங்கிவந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்." 

சமூகப் பிரச்னைகள் பலவற்றுக்கும் தைரியமாகக் குரல் கொடுப்பவர், நடிகை ஸ்ரீப்ரியா. இவரின் கருத்துகளும் பேச்சுகளும் எப்போதும் அதிரடி ரகம்தான். எதற்கும் அஞ்சாமல் தன் நிலைப்பாட்டை தைரியமாக முன்வைப்பார். `நானும் உருவ கேலிக்கு ஆளாகியிருக்கேன்' என்று, உருவ கேலிக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ஶ்ரீப்ரியாவை சந்தித்துப் பேசினோம். சமூக வலைதளங்களில், பெண்களுக்கு எதிரான கருத்துப் பதிவுகளால் தானும் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர், உருவ கேலி மற்றும் சமூக வலைதளப் பிரச்னைகள் குறித்து அசராமல் அதிரடி கருத்துகளை வீசினார்.  

Sripriya
Sripriya

``பெண்களுக்கு எதிரான உருவ கேலி நீண்டகாலமாகவே இருக்கு. அதற்கு நானும் கண்டனம் தெரிவிச்சுகிட்டுதான் இருக்கேன். ஒருமுறை நடிகர் சங்கக் கூட்டத்துல கலந்துகிட்டேன். மேடையில் இருந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், `ஶ்ரீப்ரியா மேடையில் ஏறினா, மேடை தாங்காது' என்பதுபோல ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தைப் பலர் முன்னிலையில் சொன்னார். கீழே உட்கார்ந்திருந்த நான், உடனே கையை உயர்த்தினேன். அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் என்னைப் பேச அனுமதிச்சார்.

`என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ் போன்ற பல ஜாம்பவான்கள் தடம்பதித்த சங்கம் இது. இதுல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தரை உருவ கேலி செஞ்சு நீங்க காமெடி பண்றது நியாயம் கிடையாது. அதை ஏத்துக்கவும் முடியாது. முதலில் மேடை நாகரிகத்தை கத்துக்கோங்க. என்னைப் பத்தி கருத்து சொல்லணும்னா, என் எதிரில் வந்து நின்னு சொல்லுங்க'ன்னு எஸ்.எஸ்.சந்திரன் சாரைப் பார்த்து தைரியமா எல்லார் முன்னிலையிலும் பேசினேன். அவர் தன் தவற்றை உணர்ந்து, கீழே இறங்கிவந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். 

Sripriya
Sripriya

ஹீரோயினாக நடிச்சப்போ ஒல்லியாக இருந்த நான், இரண்டு முறை குழந்தை பெற்றபோது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டேன். பல மாதங்கள் நடக்க முடியாமல் ஓய்வில் இருந்தேன். பிறகு, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உடல் பருமன் பிரச்னை ஏற்பட்டுச்சு. ஆனாலும், யார் உதவியுமின்றி என் பணிகளைச் செய்துகிட்டுதான் இருக்கேன். உடல் பருமனுடன் இருக்கணும்னு எந்தப் பெண்ணும் ஆசைப்பட மாட்டார். உடல் பருமனுடன் இருப்பது என் தனிப்பட்ட விஷயம். அதைக் கேலி பண்ணிப் பேச யாருக்கும் உரிமையில்லை. அப்படிப் பேசுறவங்களுக்கு, உடல் பருமனால் நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றித் தெரியுமா?" என்கிற ஶ்ரீப்ரியாவின் பேச்சு, சமூக ஊடகங்களில் பெண்களுக்கான பிரச்னைகளாகத் திரும்பியது.

``பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகிட்டே இருக்கு. தவிர, பெண்கள் மற்றும் பிறர் குறித்துத் தவறான கருத்துகளையும் போட்டோக்களையும் சித்திரிச்சு வெளியிடுறாங்க. இதனால பல பெண்கள் மனத்தளவில் பாதிக்கப்படுவதைத் தாண்டி, உயிரிழப்புகள்கூட ஏற்படுது. இதுபோன்ற நிகழ்வுகளால், ஆண்கள்கூட பாதிக்கப்படுறாங்க. 

Sripriya
Sripriya

சமூக வலைதளப் பக்கங்களில் போலியான கணக்கு வெச்சுகிட்டிருக்கிற நபர்கள்தாம் இதுபோன்ற செயல்களைச் செய்றாங்க. சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் வருகைக்குப் பிறகு, சினிமா பிரபலங்கள் குறித்து ஆபாசமான, தவறான கருத்துகளைப் பலரும் பதிவு செய்றாங்க. இதனால், நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.

எனக்கு ஏதாவதொரு விஷயம் பத்தின சந்தேகம்னா, உடனே கூகுள் செய்துபார்ப்பேன். சமையல் சந்தேகங்களுக்கு யூடியூபில் தேடுறேன். சமூக வலைதளம் ஓர் அணுசக்தி போன்றது. அதை ஆக்கம் மற்றும் அழிவு இரண்டுக்கும் பயன்படுத்தலாம். அறிவில்லாத சிலர், சமூக வலைதளங்களைப் பிறர் அழிவுக்கு ஏன் பயன்படுத்துறாங்க?அவங்கள்லாம் சமூக வலைதளப் பக்கத்துல ஒரிஜினல் ஐ.டி-யில் இருந்து எழுதட்டுமே... அப்போது, யார் தப்பா பேசியிருக்காங்கன்னு எல்லோருக்கும் தெரியும். 

Sripriya
Sripriya

அந்தத் தைரியம் இல்லாமதானே, பலரும் போலி அக்கவுன்ட்ல எழுதுறாங்க. இப்படியான தலைமறைவு நெட்டிசன்களில் பலரும் பேராசிரியர்கள், அதிகாரிகள் உட்பட சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறவர்களாம்; படித்தவர்களாம். இவர்களெல்லாம் தங்களோட படிப்பறிவை எப்படிப் பயன்படுத்தணும் என்ற அறிவு இல்லாமதான் இப்படியெல்லாம் செய்றாங்க.

ஹீரோயினாக நடிச்சுகிட்டு இருக்கும்போதிலிருந்தே நான் தைரியமாகத்தான் செயல்படுறேன். அதனால, இத்தகைய நிகழ்வுகளுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். இதுபோன்ற நிகழ்வுகள் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரையும் பாதிக்குது. என்னால், அவர்கள் ஏன் பாதிக்கப்படணும்?" என்கிறார் அழுத்தமான குரலில்.  

Sripriya
Sripriya

சற்று அமைதியானவர் மீண்டும் தொடர்ந்தார். ``இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலத்தில் என்னை ரொம்பவே பாதிச்சது. அதனாலதான், விஜய் டி.வி-யில பெண்கள் மற்றும் போட்டியாளர்களை உருவ கேலி செய்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுறதை எதிர்த்து கருத்து தெரிவிச்சேன். `அதுபத்தி அந்த சேனல்ல இருந்து உங்ககிட்ட பேசினாங்களா?'னு பலர் என்கிட்ட கேட்டாங்க. இதுவரை யாரும் பேசலை! ஆனாலும், ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டி தைரியமா குரல் கொடுத்தேன். இனியும் கொடுப்பேன்!

நியாயமான முறையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தால், அதில் கூறிய முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்து, தவறாக சித்திரிச்சு அல்லது பரபரப்பைக் கிளப்பணும்னு அபத்தமான தலைப்புடன் சில முறையற்ற யூடியூப் சேனல்களில் செய்தியாகவும் வீடியோவாகவும் வெளியிடுறாங்க. இதை நிறைய மக்கள் பார்க்கிறாங்க. இதனால, நல்லா வாழ்றவங்களின் வாழ்க்கையைக் கெடுக்கிற மாதிரியான நிகழ்வுகளும் நடக்குது. இப்படி ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கிறவங்களைக் கேட்கிறேன்... நீங்க செய்றதெல்லாம் ஒரு பிழைப்பா?

குற்றங்களைத் தடுக்க, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தித்தான் சமூக வலைதளப் பக்கங்களில் கணக்குத் தொடங்க முடியும் என்ற நிலையை உருவாக்கணும்.
ஶ்ரீப்ரியா

எனவே, சமூக வலைதளங்கள்ல பெண்கள் மற்றும் பிறர் குறித்து தவறாகக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கணும். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தித்தான் சமூக வலைதளப் பக்கங்களில் கணக்குத் தொடங்க முடியும் என்ற நிலையை உருவாக்கணும். இதனால், தவறாகக் கருத்துப் பதிவிடுபவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

`மாட்டிக்கொள்வோம்' என்ற பயத்துடன், பலரும் தவறான கருத்துகளைப் பதிவிடாம இருப்பாங்க. சமூக வலைதளங்களை ஆரோக்கியமான போக்கில் பயன்படுத்த இந்த யோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்றைய மற்றும் வருங்கால தலைமுறைப் பெண்களின் நலன் கருதி, இந்த முன்னெடுப்புக்கு என் பங்களிப்பைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று முடித்தார், ஶ்ரீப்ரியா.

Sripriya
Sripriya

திரைத்துறை வெற்றிப் பயணம் குறித்த நடிகை ஸ்ரீப்ரியாவின் அதிரடியான பேட்டியை, வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகும் அவள் விகடன் இதழில், `எவர்கிரீன் நாயகி' தொடரில் படிக்கலாம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு