``பெண்ணால் இவ்வளவு வலி தாங்க முடியும்னு இப்போதான் புரிஞ்சது!'' - சுஜா வருணியின் கணவர்

''குழந்தையைப் பார்க்கிறவங்க, என் அம்மாவின் முக ஜாடை இருக்கறதா சொல்லும்போது எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கு. அம்மா என்கூட இல்லைங்கிற ஞாபகத்தை அந்த வார்த்தைகள்தான் சரிபடுத்துது'' என்று நெகிழ்ந்தபடி பேச ஆரம்பிக்கிறார், சுஜா வருணியின் கணவர் சிவகுமார்.
மாடலாக, நடிகையாக சினிமாவுக்கு அறிமுகமானவர், சுஜா வருணி. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவருக்கும் சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமாருக்கும் கடந்த நவம்பர் மாதத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை இந்த இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தத் தருணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார், சிவகுமார். "சுஜாவுக்கு சுகப் பிரசவத்துலதான் குழந்தை பிறந்திருக்கு. சரியா, நேற்று காலை 7.23-க்குப் பிறந்தான். ஆண் குழந்தை. நாங்க கல்யாணம் பண்ணும்போதே ஆண் குழந்தைதான் வேணும்னு முடிவு பண்னியிருந்தோம். சுஜா கர்ப்பமா இருந்த நாள்கள் ரொம்பவே இனிமையானது. எல்லாமே அப்போ கண்ணு முன்னாடி வந்துட்டுப் போனது. எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை பற்றி நிறைய கனவுகள் இருந்தது. இதைப் பத்திதான் நானும் சுஜாவும் எப்பவுமே பேசிட்டிருப்போம்.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது அவன்கூட நிறைய பேசியிருந்தோம். நேற்று சுஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே தி.நகர் மருத்துவமனையில சேர்த்துட்டோம். அந்தச் சமயத்துல சுஜா பக்கத்துலதான் இருந்தேன். நார்மல் டெலிவரியிலதான் குழந்தை பிறந்தது. அப்போ என்னைப் பார்த்து `லவ் யூ அத்தான்'னு சுஜா சொன்னாங்க. நான் தாலி கட்டியதும் இதே வார்த்தையைத்தான் சொன்னாங்க" என்று சொன்னவர், மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

''இப்போதான் உறவினர்களும் நண்பர்களும் கொஞ்சம் கொஞ்சமா வந்து பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. கமல் சார் போன் பண்ணி, 'குடும்பத்துல இன்னொரு சிங்கக்குட்டி பிறந்துக்கு. சீக்கிரம் வீட்டுக்கு வந்து பார்க்குறேன்'னு சொல்லி வாழ்த்து சொன்னார். இன்னைக்குக் காலையில அக்ஷரா ஹாசனும் போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. நான் நடிச்ச வெப் சீரிஸ் ஒண்ணு நேத்துதான் ஜீ ஆப்பில் ஒளிபரப்பானது, என்னுடைய மகனும் நேத்துதான் பிறந்திருக்கான். இது எனக்கு ரொம்பவே சந்தோஷமான தருணம்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, ராதிகா மேமுடைய பிறந்தநாளும் நேத்துதான். நேரில் சந்தித்து நேற்று எங்களுக்கு அவங்க வாழ்த்துச் சொன்னாங்க. நான் வெப் சீரிஸ் வேலைகள்ல இருக்கும்போது ஶ்ரீப்ரியா மேம்தான் சுஜாவை நல்லபடியா பார்த்துகிட்டாங்க. தூக்கமே இல்லாம பார்த்துகிட்டாங்க. இப்போதான் அவங்களைத் தூங்கச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வெச்சுருக்கேன். அம்மாவையும் பையனையும் வர்ற சனிக்கிழமை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுவோம்'' என்றவர்,

''குழந்தை என்னை மாதிரி இருக்கதா நிறைய பேர் சொன்னாங்க. சுஜாவுடைய கணவராவும் ஒரு அப்பாவாவும் எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் எமோஷனலாவும் இருக்கு. டாக்டர் ஆரம்பத்துல இருந்தே சிசேரியன்ங்கிற வார்த்தையை எடுக்கலை. சுகப் பிரசவத்துல குழந்தை பிறந்ததும் ரொம்பவே ஆறுதல். ஒரு பெண்ணால் இவ்வளவு வலியைத் தாங்கிக்க முடியும்ங்கிறதை அங்கேதான் பார்த்தேன்'' என்று எமோஷ்னல் ஆனவர்,
''இன்னும் சில பேர் குழந்தை என்னுடைய அம்மா ஜாடையில இருக்குனு சொல்றாங்க. இதைக் கேட்கும்போது எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கு. அம்மா என்னோட இல்லேனாலும் அவங்களுடைய ஞாபகத்தை இந்த வார்த்தைகள் சரிப்படுத்துது" எனச் சொன்னவர் குழந்தைக்கான பெயரையும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டாராம்.
"ஏற்கெனவே இரண்டு, மூன்று பெயர்களை முடிவு செய்து வெச்சிருக்கேன். இன்னும் சில நாள்களில் அந்தப் பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கணும்'' என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.