Published:Updated:

``சினிமா வாய்ப்புகளை ஏன் தவிர்த்தேன்னா..!?’’ - சொர்ணமால்யா பெர்சனல்ஸ்

swarnamalya
swarnamalya

``நான் வேணாம்னு சொன்ன பல படங்கள் ரொம்ப நல்லா ஓடியிருக்கு. அதெல்லாம் பார்த்தப்போ சந்தோஷப்பட்டேன்.'’

’இளமை புதுமை’ நிகழ்ச்சியின் மூலமாக 90'ஸ் இளசுகளைக் கட்டிப்போட்டவர், சொர்ணமால்யா. டிவி நிகழ்ச்சிகள், சினிமா என இயங்கிக்கொண்டிருந்தவர், தற்போது பரதநாட்டியத்தில் பல விஷயங்களைச் செய்து வருகிறார். அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

பரதநாட்டியத்தின் மீது எப்போது ஆர்வம் வந்தது? 

swarnamalya
swarnamalya

’’மூணு வயசுல இருந்து பரதநாட்டியம் ஆடிக்கிட்டு இருக்கேன். ஆனால், எல்லோருக்கும் என் செலிபிரிட்டி சைடுதான் தெரிஞ்சிருக்கு. பரதநாட்டியம் மட்டும் கத்துக்கிட்டு ஆடாமல், எனக்கு அதோட வரலாற்றைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசை வந்தது. அப்படித்தான் பரதநாட்டியத்துல பி.ஹெச்டி படிச்சேன். படிச்சதுக்கு அப்புறம் பரதநாட்டியத்தின்மேல் இன்னும் ஆர்வம் அதிகமாகிடுச்சு. இப்போ, அதுதான் என் அடையாளமாகவும் இருக்கு.’’

’இளமை புதுமை’ நிகழ்ச்சிக்கு அப்புறம், ஏன் நீங்க அடுத்தடுத்து வேற நிகழ்ச்சிகள் பண்ணல?

’’என்னுடைய முழு ஈடுபாடும் பரதநாட்டியத்தின்மேல் போனதுக்கு அப்புறமும், அதில் முனைவர் பட்டம் வாங்கணும்னு ஆசைப்பட்டதுக்கு அப்புறமும், நான் சென்னையில் இருந்து நிகழ்ச்சிகளைப் பண்ணிக்கிட்டே இதையும் பண்ணணும்னு நினைக்கல. அதனால்தான், எல்லாத்தையும் விட்டுட்டு அமெரிக்காவுக்குப் போய் பி.ஹெச்டி படிச்சேன். படிச்சு முடிச்சு இப்போ பலபேருக்கு பரதநாட்டிய வகுப்பு எடுத்துக்கிட்டு இருக்கேன். என் வேலைகள் எல்லாமே இதைச் சுற்றியே அமைஞ்சிடுச்சு.’’

ஒரு டிவி நிகழ்ச்சிக்கு நீங்க எப்படித் தயாராவீங்க?

swarnamalya
swarnamalya

``எப்போதுமே பெருசா நேரம் எடுத்துக்கிட்டது கிடையாது. ஒரு நிகழ்ச்சி பண்றதுக்கு முன்னாடியே என்ன பண்ணப்போறோம், எப்படியெல்லாம் பண்ணப்போறோம்னு நிகழ்ச்சியோட இயக்குநர்கிட்ட பேசிப்போம், அவ்வளவுதான். இப்போ இருக்கிற மாதிரி அப்போ தொகுப்பாளர்களுக்கு 'டாக்பேக்' கிடையாது. அப்படி இருந்திருந்தாலும், அதை நான் பயன்படுத்தியிருக்கமாட்டேன். அதுல கேட்டுக் கேட்டுப் பேசுறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். ஒவ்வொரு நிகழ்ச்சி ஆரம்பிச்சதும், அப்படியே ஒரு ஃப்ளோவுல பேசுறதுதான் என் சாய்ஸ்!’’

அப்போதே உங்களுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்ததாமே, அதிலெல்லாம் ஏன் நடிக்கல?

’’நேரம்தான் எனக்குப் பிரச்னையா இருந்தது. காலேஜ் போயிட்டு இருக்கும்போதுதான், டிவி நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதேசமயத்தில்தான் பரதநாட்டிய வகுப்புக்குப் போறது, நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுறதுன்னு பல வேலைகளும் பண்ணினேன். சினிமா வாய்ப்புகளும் அதிகமா வர ஆரம்பிச்சது. எனக்கு எது ரொம்பப் பிடிச்சிருக்குனு நானே தேர்ந்தெடுத்து, அந்த வேலைகளை மட்டும் செஞ்சேன். அதனால, சினிமாவில் நடிக்கமுடியாம போச்சு.’’

நீங்க மிஸ் பண்ண படங்களை நினைச்சு வருத்தப்படுவது உண்டா?

‘’கண்டிப்பா இல்லை. நான்தானே வேணாம்னு சொன்னேன். பின்னே எப்படி நான் வருத்தப்பட முடியும். நான் வேணாம்னு சொன்ன பல படங்கள் ரொம்ப நல்லா ஓடியிருக்கு. அதெல்லாம் பார்த்தப்போ சந்தோஷப்பட்டேன்.'’

’அலைபாயுதே’ அனுபவம் எப்படி இருந்தது?

’’ ‘அலைபாயுதே’ படம் பண்ணும்போது, எனக்கு 17 வயசுதான். அந்த வயசுல நான் மணி சார்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். ஒரு காட்சியை ரொம்பத் தெளிவா விவரிப்பார். அந்தக் காட்சி ஷூட் முடியிறவரைக்கும் அவர் சொன்னது நம்ம மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். அதுமட்டுமல்லாம, ஒரு சீன் சொல்லிட்டு, ‘இதை நீ எப்படியெல்லாம் பண்ணலாம்னு யோசி’ன்னு நமக்கு நேரம் கொடுப்பார். அதில் நம்ம இன்புட்ஸ் சேர்த்துக்கலாம். இப்படி அவரோட பிராஸஸை நான் நல்லா கவனிச்சேன். அது எனக்கு இப்போவும் பயன்படுது.’’

உங்க கரியர்லேயே ரொம்ப முக்கியமான படம், ’மொழி’. அதைப் பற்றிச் சொல்லுங்க?

swarnamalya
swarnamalya

’’ஹீரோயிஸப் படங்களுக்கு மத்தியில் ரொம்ப சென்சிட்டிவான படமா ’மொழி’ வந்துச்சு. ஜோதிகா, ப்ரித்விராஜ், பிரகாஷ் ராஜ், நான்... எல்லோரும் அந்த ஷூட்டிங் முழுக்க விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டேதான் இருந்தோம். எப்படித்தான் எங்களை வெச்சு முழுப் படத்தையும் ராதா மோகன் எடுத்தார்னு எங்களுக்குத் தெரியல. அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.’’ 

`எங்கள் அண்ணா’ படம் பற்றி?

`` `எங்கள் அண்ணா’ படத்தில் நடிச்சது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா, அந்தப் படத்தில் நிறைய அழற காட்சிகள் இருந்துச்சு. நான் அப்படியெல்லாம் அழுததேயில்லை. ஆனால், அந்தப் படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சதனால, ஷூட்டிங் பிரேக்ல அவங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பேச முடிஞ்சது."

பரதநாட்டியத்தில் பிஸியாக இருக்கீங்க, சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருக்கா?

``இப்போவரை அப்படி எதையும் நினைக்கல. இதுக்கப்புறம் அது நடக்குமா, நடக்காதான்னு தெரியல. ஏன்னா, என் மைண்ட் இப்போ சினிமாவுல இல்லை. ஒருவேளை அது நடந்தா, நானே சொல்றேன்.’’

சிங்கப்பெண்களுக்குச் சிக்கல், நண்பேன்டா ராசி! `பிகில்' ஸ்கூப் #SneakPeek #MovieLine
அடுத்த கட்டுரைக்கு