Published:Updated:

"மாதவன், ஷாலினிகிட்ட லவ் சொல்ற அந்த ட்ரெய்ன் சீன்...!"- ஸ்வர்ணமால்யா ஷேரிங்ஸ் #20YearsofAlaipayuthey

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

‘இளமை புதுமை’யில் இளசுகளின் பேவரைட் வீஜே-வாக இருந்தவர் பின் ‘அலைபாயுதே’ பூரணியாக சினிமாத்துறையின் குட்புக்கிலும் இடம்பிடித்தார் ஸ்வர்ணமால்யா!

"நடனம் இசைன்னு பிஸியா நாள்கள் போயிட்டு இருக்கு. நீங்க எதிர்பார்க்கிற பெரிய திரை, சின்னத்திரை மீடியத்துல வேணா நான் இல்லாம இருக்கலாம். மத்தபடி சோஷியல் மீடியால ஆக்டிவாதான் இருக்கேன். அதனால நானும் என்னோட ரசிகர்களை மிஸ் பண்ணல, அவங்களும் என்னை மிஸ் பண்ணல” எனத் தன்னுடைய ட்ரேட்மார்க் புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் ஸ்வர்ணமால்யா.

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா
ஓரம் போ, ஆரண்ய காண்டம், இன்னும் பல... -  தமிழ் சினிமாவின் ஈஸ்டர் எக்குகளைக்  கண்டுபிடிப்போமா?!

`இளமை புதுமை’யில் இளசுகளின் ஃபேவரைட் வீஜேவாக இருந்தவர், `அலைபாயுதே’ பூரணியாக சினிமாத்துறையின் குட்புக்கிலும் இடம்பிடித்தார். சினிமா, சீரியல், கலை எனப் பேசுவதற்கு அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

எப்படி போயிட்டிருக்கு க்வாரன்டீன் நாள்கள்?

swarnamalya
swarnamalya

``ரொம்ப உபயோகமா செலவழிச்சுட்டு வர்றேன். மாணவர்களுக்கு பரதநாட்டியம் க்ளாஸ் ஆன்லைன்ல எடுக்குறது, என்னோட பழைய ஆராய்ச்சி வேலைகளைத் திரும்பப் பார்க்குறதுனு நேரம் சரியா இருக்கு. இரண்டாம் உலகப்போர் காலத்துல நாம நிச்சயம் இருந்திருக்க மாட்டோம். அதுக்குப் பிறகு மனித குலம் தன்னோட வாழ்வுக்காக நடத்துற போராட்டம்னா கண்டிப்பா இதுவாதான் இருக்கும். அதனால, எந்த அளவுக்கு இப்ப நமக்குக் கிடைச்சிருக்க நேரத்தை உபயோகமா செலவழிக்க முடியுமோ அதை நாம செய்யணும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் இருக்கணும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்வாரன்டீன் நாள்கள்ல மக்களுக்கான பொழுதுபோக்கா, தொலைக்காட்சி சேனல்கள் நாஸ்டால்ஜியா நிகழ்ச்சிகளைத் திரும்பக்கொண்டு வர்றது எப்படி இருக்கு?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

``பாட்டு, நடனம்னு பிஸியா இருக்கறதுனால அதிகம் டிவி பார்க்குறது இல்லை. நீங்க சொல்லித்தான் நாஸ்டால்ஜியா நிகழ்ச்சிகள் டிவில இப்போ மறுபடியும் ஒளிபரப்பிட்டு இருக்காங்கனு தெரியும். நல்ல விஷயம்தான். நம்ம வாழ்க்கையவே திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமதான் இயந்திரத்தனமா இவ்வளவு நாள்கள் ஓடிட்டு இருந்தோம். அந்த வகையில இப்ப இயற்கையே நம்மளைக் கட்டிப்போட்டு இருக்கு. பல வருஷத்துக்கு முன்னாடி நமக்கு இருந்த நினைவுகளைச் சேமிச்சு வைக்கறதுக்கு ஒரு டெக்னாலஜி இருந்துருக்குனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு."

`இளமை புதுமை’ நிகழ்ச்சி அனுபவம்?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

``ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போக இருந்த சமயத்துல விஜய் டிவிக்காக ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு சன் டிவில என்னைக் கூப்பிட்டு ஒரு பத்து நிகழ்ச்சி சாய்ஸ் கொடுத்தாங்க. `இதுல எதாவது ஒண்ணு எடுத்துப் பண்ணுங்க. ஆனா, எங்க சேனலுக்கு நீங்க வேணும்’னு சொன்னாங்க. அப்ப ரொம்ப சுமாரா போயிட்டிருந்த `இளமை புதுமை’ நிகழ்ச்சியைச் சவாலா எடுத்துப் பண்ணறேன்னு சொன்னேன். `இளமை புதுமை’ல நான் உள்ள போகும்போது எனக்கு 17 வயசுதான். நான் எடுத்துப் பண்ண பிறகு அந்த நிகழ்ச்சியோட ரீச், ஹிட் எதுவுமே நான் அந்த வயசுல உணரல. ஏதோ கூப்பிட்டாங்க, ஜாலியா வந்து பண்ணினோம்னுதான் இருந்தேன். எங்க டீம் எல்லாருக்குமே கிட்டத்தட்ட என் வயசுதான். அதனால செட் எப்பவுமே கலகலன்னு இருக்கும். ஒருமுறை எஸ்.பி.பி. சார்கூட ஒரு நிகழ்ச்சிக்காக கோவை போயிருந்தேன். நிகழ்ச்சி முடிச்சு வரும்போது அங்க இருந்த `இளமை புதுமை’ நிகழ்ச்சி ரசிகர்கள் எங்களைப் பார்க்கிறதுக்காக ஷட்டர் எல்லாம் உடைச்சிட்டு வந்துட்டாங்க. எஸ்.பி.பி. சார், `என்னமா உன்மேல இவ்வளவு கிரேஸியா இருக்காங்க’னு சிரிச்சார். அப்பதான் அந்த நிகழ்ச்சியோட ரீச் எனக்குப் புரிஞ்சது."

வீஜே, நடிப்பு, நடனம்னு ஆல்ரவுண்டரா இருந்தது பத்தி?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

"நான் 3 வயசுல இருந்தே பரதம் ஆடிட்டு இருக்கேன். அதனால நடனத்தை எப்பவுமே என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. மத்தபடி வீஜே பண்ணதைப் பார்த்து நடிக்க வாய்ப்பு வந்தது. அதுலருந்து சின்னத்திரை, பெரிய திரைனு பயணம் பண்ணேன். படிப்பு, நடனம் ரெண்டுக்குமே நேரம் போக மத்த நேரத்தைதான் நடிக்கக் கொடுத்தேன். அதனால பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கேன்."

'அலைபாயுதே’ படம் வெளியாகி 20 வருஷங்கள் ஆகுது. இன்னைக்கும் படம் கொண்டாடப்படுதே?

அலைபாயுதே
அலைபாயுதே

" 'அலைபாயுதே’ வெளியாகி இத்தனை வருஷங்கள் கழிச்சும் இளைஞர்கள் மத்தியில் க்ரேஸ் இருக்குனு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. `இளமை புதுமை’ பண்ண ஆரம்பிச்ச சில மாசத்துலயே எனக்கு இந்தப் படத்துக்கான வாய்ப்பு வந்தது. அப்ப மணிசார் படத்துல நடிக்கிறேன்ங்கிற சீரியஸ்னெஸ்லாம் இல்லாம ஜாலியா பண்ணேன். மாதவன், ஷாலினி, விவேக்னு எல்லாருமே ஒரே வயசுப்பசங்க வேற. மறக்கமுடியாத நாள்கள் அதெல்லாம். ரயில்ல அவசரமா ஆபீஸ் கிளம்பிப் போறதுதான் எனக்கான முதல் காட்சி. அங்க பிசி ஸ்ரீராம் சார், மணிசார்னு பெரிய ஆட்கள் எல்லாரும் இருந்தாங்க. அதெல்லாம் கவனத்துல வெச்சுக்காம ஜாலியா நடிச்சுட்டு, `எனக்கு எக்ஸாம்க்கு டைம் ஆச்சு, என்னை சீக்கிரம் விடுவீங்களா?’னு மணிசாரை கேட்டு நச்சரிச்சுட்டு இருந்தேன். அதேமாதிரி, படத்துல எல்லாருக்கும் பிடிச்ச மாதவன் ஷாலினிகிட்ட காதல் சொல்ற ரயில் காட்சியில எனக்கான வசனம் இல்லை. சும்மா நானே ஏதோ அங்க பண்ணப் போக, அது க்ரேஸியா எல்லாருக்கும் பிடிச்சுப் போயிடுச்சு. அந்த ட்ரெயின் சீனை மறக்கவே முடியாது. அந்தக் கதையும் காட்சிகளும் அதை மணி சார் படமாக்கின விதமும்தான் இத்தனை வருஷங்கள் கழிச்சும் பேசப்படறதுக்கான காரணம்."

`அலைபாயுதே’, `மொழி’ மாதிரியான நல்ல படங்கள் நடிச்சிட்டு இருந்தீங்க. அதுக்குப் பிறகு சின்னத்திரை பெரியதிரைன்னு எங்கேயும் உங்களைப் பார்க்க முடியலையே?

மொழி
மொழி

``நான் நடனம் தொடர்பா பி.ஹெச்டி முடிச்சிட்டு இப்ப பேராசிரியரா இருக்கேன். அதுக்கான நேரம் செலவிடவே எனக்கு சரியா இருக்கு. அதுவுமில்லாம, வயசு ஏற ஏற நமக்கான ஆர்வமும் மாறிட்டேதான் இருக்கு. அதனால என்னோட விருப்பம் மாறும்போது, அதற்கான கரியரைதான் தேர்ந்தெடுப்பேன். சின்ன வயசுலருந்து நடனம் என் கூடவேதான் இருக்கு. அதுக்கு இடையில வந்ததுதான் இந்த சினிமா. சினிமாவுல இருந்த காலகட்டத்துல நிறைய நல்ல விஷயங்கள் கத்துக்கிட்டேன். மத்தபடி படங்கள் பண்ணிதான் ஆகணும்னு எந்த ஒரு கட்டாயமும் எனக்கில்லை. நல்ல கதாபாத்திரம், அதற்கான சரியான நேரம் வரும்போது கண்டிப்பா மறுபடியும் பண்ணலாம்."

இயக்குநர் பாரதிராஜாவோட `தெக்கத்தி பொண்ணு’ சீரியல்ல நடிச்ச அனுபவம்?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

``சின்னத்திரை பெரியதிரையில நுழையறதுக்கு எல்லாம் முன்னாடி, நான் 10-வது படிக்கும்போது என்னோட நாட்டிய நிகழ்ச்சிக்கு பாரதிராஜா சார் வந்திருந்தார். என் நடனம் பார்த்துட்டு, `இந்த நிமிஷம் இந்தப் பொண்ணு என் படத்துல நடிக்கணும்’னு அவரோட அசிஸ்டென்ட்ஸ் எல்லாரையும் என் வீட்டுக்கு தினமும் அனுப்பி கன்வின்ஸ் பண்ணார். `கருத்தம்மா’ படத்துக்காகன்னு நினைக்கறேன். அப்ப ஸ்கூல் போயிட்டிருந்த பொண்ணுங்கறதால, `எனக்கு எக்ஸாம்லாம் இருக்கு. நடிக்கிற ஆர்வமும் இல்லை’னு சொல்லிட்டேன். என்னைத் தேடி வந்த அவ்வளவு பெரிய வாய்ப்பை வேணாம்னு சொன்னது அப்ப எனக்குப் பெரிய தப்பா தெரியலை. ஆனா, சில வருஷங்கள் கழிச்சுதான் புரிஞ்சது பாரதிராஜா சார் படத்துல நடிக்க இருந்த நல்ல அனுபவத்தை மிஸ் பண்ணிட்டேன்னு. அப்ப மிஸ் பண்ணின மாதிரி, `தெக்கத்தி பொண்ணை’யும் தவற விடக்கூடாதுன்னு வாய்ப்பு வந்தபோது கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். பாரதிராஜா சார் எவ்வளவு பெரிய ஜீனியஸ்ங்கிறதை நேரடியா அவர்கூட வேலை பார்த்ததுல உணர முடிஞ்சது”.

தமிழ் சினிமா, சீரியல்களைக் கவனிச்சுட்டு வர்றீங்களா?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

"நான் அதிகம் சினிமா பார்க்கக்கூடிய ஆள் இல்லை. ஆனா, நல்ல படங்கள் வரும்போது அது எந்த மொழியா இருந்தாலும் பார்த்துடுவேன். அப்படி சமீபத்துல கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின் இவங்களோட படங்கள் எல்லாம் பார்த்தேன். அதேமாதிரி சின்னத்திரையில ஒரு விஷயம் வெற்றி அடைஞ்சா அதே மாதிரியான நிகழ்ச்சிகள்தான் பண்ணணும்னு எல்லாரும் இப்ப ஓடிக்கிட்டு இருக்காங்க. புதுசா பரிசோதனை பண்ணிப்பார்க்குறதுக்கு யாருமே தயாரா இல்லையோன்னு சமயங்கள்ல யோசிக்கத் தோணுது. இப்ப இருக்க மீடியத்துல நிறைய விஷயங்கள் புதுசா பண்ணலாம். டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் இப்ப ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிடுச்சுனுதான் சொல்வேன்."

நடனத்துல என்ன மாதிரியான குறிக்கோள், திட்டங்கள் எல்லாம் வச்சிருக்கீங்க?

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

``நடனத்துல எனக்குனு சில குறிக்கோள்கள் இருக்கு. ஆனா, அதை நாம அடைஞ்சிட்டோம்னா அடுத்து என்னங்கிற கேள்வியும் வரும் இல்லையா? அதுக்காகவும் சேர்த்து வேலை பார்த்துட்டு இருக்கேன். பரதநாட்டியத்துல பாரம்பர்யக் கலைஞர்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கணும்னு என்னுடைய ஆராய்ச்சிகள், நடனம்னு பல விஷயங்கள் பண்ணிட்டு இருக்கேன். நாட்டியம்கிறது ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும்தான் இருக்குங்கறதைத் தாண்டி, எல்லா தரப்பு மக்களுக்கும் இது பிடிக்கணும்கிறதுக்கான வேலையை என்னோட மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்.”

கொரோனாவால கலைத்துறை எந்த அளவுக்குப் பாதிக்கப்படும்னு நினைக்கறீங்க?

swarnamalya
swarnamalya

"சாதாரண குடிமகளா, இந்தச் சூழல்ல எந்த ஒரு விமர்சனமும் அரசு மேல வைக்க விரும்பல. அதுக்கான சரியான நேரமும் இது இல்லை. இந்த நிலைமையில இருந்து வெளிய வந்து பல துறைகள் சந்திக்கப்போற பொருளாதாரச் சரிவை எப்படி சரி செய்யணும்னுதான் அரசு பார்க்கணும். அதைவிட்டுட்டுப் பழையபடி, மதம் ஜாதின்னு அரசியல் பண்ணா அதுக்கான விளைவு எப்படி இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இது பொதுவான விஷயம். கலைத்துறைன்னு குறிப்பிட்டுச் சொல்லனும்னா, இந்த க்வாரன்டீன் நாள்ல, வாழ்க்கையே ஸ்தம்பிச்சுப்போற நிலையில மன உளைச்சல்ல இருந்து பாதுகாக்கிறது கலைதான்னு மக்கள் உணர்ந்திருக்காங்க. நாட்டுப்புறக் கலைஞர்கள் தொடங்கி சினிமால தொழில் பார்க்கிறவங்க எல்லாரும் நிச்சயம் பாதிக்கப்படுவாங்க. அவங்களுக்கானதை அரசு பார்த்து சரியா செய்யணும்கிறதுதான் என்னோட வேண்டுகோள்.”

அடுத்த கட்டுரைக்கு