Published:Updated:

`7 மணிக்கே தூக்கம், செம சேட்டை, வாத்தியார் பாக்யராஜ்!' - ஊர்வசியின் `முந்தானை முடிச்சு' ஃபிளாஷ்பேக்

நாயகியாக அறிமுகப் படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற ஊர்வசியிடம், `முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

1980-களில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் `முந்தானை முடிச்சு'. இயக்குநர் பாக்யராஜ் நாயகனாகவும், ஊர்வசி நாயகியாகவும் கலக்கிய படம். குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை, இனிமையான இசை, காட்சியமைப்பு உட்பட அனைத்து வகையிலும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படம், பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவது குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கும் தகவல் ஏற்கெனவே வெளியான நிலையில், நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். புதிய அறிவிப்புகளால் இந்த ரீமேக் படத்துக்கான வரவேற்பு கூடியுள்ளது.
முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு

நாயகியாக அறிமுகப் படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற ஊர்வசியிடம், `முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

`` `முந்தானை முடிச்சு' படத்துல ஹீரோயினா என் அக்கா கலா ரஞ்சனிதான் முதலில் கமிட்டானாங்க. அக்காவுக்குத் துணையா போன நான், அந்தப் படத்துல ஹீரோயினா கமிட்டானது தனிக்கதை. என்னை வற்புறுத்தி நடிக்கச் சொன்னதால, சின்ன ரோல்னு நினைச்சுத்தான் அந்தப் படத்துல நடிக்க ஒத்துகிட்டேன். அப்போ எனக்கு 13 வயசு. ஒன்பதாவதுதான் படிச்சிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்துல ஷூட்டிங். பஞ்சாயத்துல, `பரிமளம் வயசுக்கு வந்துட்டா'ன்னு சொல்றதுதான் என்னோட முதல் காட்சி. மத்தவங்க அந்த டயலாக் சொல்றப்போ, நான் தூங்கி வழிஞ்சேன். `நீதான் இந்தப் படத்தின் ஹீரோயின். இப்படிப் பண்றியே'ன்னு பாக்யராஜ் சார் கோபமா சொன்னார். `எனக்குப் பசிக்குது. தூக்கம் வருது'ன்னு சொல்ல, அவர் மேலும் கோபமானார்.

முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு

`80 நாள்கள் இங்க ஷூட்டிங். தினமும் சாயந்திரம் ஷூட்டிங் முடிஞ்சதும், அடுத்த நாள் டயலாக் பேப்பரை வாங்கிப் படிச்சுட்டுத்தான் தூங்கப் போகணும்'னு கண்டிப்போடு சொன்னார். தூங்கிடுவேன்னு இரவு 7 மணியானாலும் புரொடக்‌ஷன்ல எனக்கு சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. பக்கத்துல ஏதாவதொரு வீட்டுல சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவேன். உதவி இயக்குநர்கள் என்னைத் தேடிவந்து எழுப்பி கூட்டிட்டுப் போவாங்க. என்னால பல நாள்கள் ஷூட்டிங் தடைப்பட்டுச்சு. `நீ இப்படிச் சீக்கிரமே தூங்கினா, எப்படி ஷூட்டிங் முடிக்கிறது?'னு பாக்யராஜ் சார் திட்டுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடியற்காலையில 5 மணிக்கு எழுப்பிவிட்டுடுவாங்க. பகல் நேரத்துல சேர்ல உட்கார்ந்துகிட்டு கொளுத்துற வெயிலைப் பொருட்படுத்தாம தூங்குவேன். என் சேட்டைகளைப் பார்த்து பாக்யராஜ் சார் ரொம்பவே புலம்புவார். என்னால ஒரே கலாட்டாவா இருக்கும். என்னைக் கவனிச்சுக்க ஒரு நபரை நியமிச்சாங்க. அப்போ நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். `எலும்பெல்லாம் எண்ணிப் பார்க்கிற மாதிரி இருக்கு. இந்தப் பொண்ணை வெயிட் போட வைக்கணும்'னு சாப்பிட நிறைய உணவுகளைக் கொடுத்துட்டே இருப்பாங்க. சிக்கன், மட்டன், மீன், வெண்ணெய்னு எனக்கு மட்டும் தினமும் ஸ்பெஷல் உணவுகள் வரும். உடன் நடிச்ச தீபா, கோவை சரளா உட்பட பல பெண்களும் ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். அசைவ உணவுகளைச் சாப்பிட முடியாம அவங்களுக்குக் கொடுத்துடுவேன்.

ஊர்வசி
ஊர்வசி

அந்த ஊர் மக்களின் கொங்குத் தமிழ்ப் பேச்சு வித்தியாசமா இருக்கும். `ஏம்புள்ள சாப்டியா? ஏன் தாயி பசிக்குதா?'ன்னு ஊர் மக்கள் என்கிட்ட எப்பவும் கேட்பாங்க. அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி என்னைப் பாசமா பார்த்துகிட்டாங்க. படத்துல என்னோடு சுத்திட்டிருக்கும் பசங்களோடு சேர்ந்து, கில்லி, கோலி விளையாடுவேன். அரட்டை, சண்டை, ஆத்துல விளையாடுறதுனு பரிமளம் கேரக்டர் மாதிரியேதான் நிஜத்துலயும் சேட்டை பண்ணுவேன். அதுல தவக்களை அண்ணன் சின்ன பையன் மாதிரி இருந்ததால, அவரை `டேய்'னுதான் கூப்பிடுவேன். `அவன் உன்னைவிட வயசுல பெரியவன்மா. அவனை அண்ணான்னு கூப்பிடுமா'ன்னு அவரோட அப்பா என்கிட்ட சொல்லுவார்.

பாக்யராஜ் சாரின் குழந்தையா படம் முழுக்க வரும் சுஜிதாவுடன் விளையாடிய தருணங்களும் பசுமையானவை. குழந்தையைக் கீழ போட்டு நான் தாண்டுற சீன்ல நிஜமாவே சுஜிதாவைத்தான் பயன்படுத்தினாங்க. அப்போ அந்தக் காட்சியின் வீரியம் புரியலை. பிறகு நான் தாயான பிறகு, அந்தக் குழந்தையைத் தாண்டியதை நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். `கண்ணைத் தொறக்கணும் சாமி' பாட்டுக்கு கிளாமரா நடிக்க முடியாதுனு உறுதியா இருந்தேன். என்னைச் சமாதானப்படுத்தி அந்தப் பாடல்ல டான்ஸ் ஆட வெச்சார் சின்னா மாஸ்டர். படத்துல க்ளைமாக்ஸ்ல நான் கருத்தடை செய்துக்கிறது ரொம்பவே முக்கியமான காட்சி. அதை முழுமையா புரிஞ்சுகிட்டு நடிக்கும் பக்குவம் அப்போ எனக்கில்லை.

பாக்யராஜ்
பாக்யராஜ்

ஒவ்வொரு காட்சியையும் பாக்யராஜ் சார்தான் எனக்குப் புரிய வெச்சார். `ஏன், எதுக்கு?'ன்னு கேள்விகேட்டு அவரைக் கடுப்பேத்துவேன். பொறுப்புணர்வு இல்லாமதான் நடிச்சேன். கண்டிப்பான வாத்தியாருடன் (பாக்யராஜ்) ஸ்கூல் பிக்னிக் போன மாதிரிதான் அந்தப் படத்துல நடிச்ச அனுபவம் எனக்கிருந்துச்சு. கடைசி நாள் ஷூட்டிங்ல, `நீ நல்லா நடிக்கணும்னுதான் உன்கிட்ட பல நேரங்கள்ல கண்டிப்போடு நடந்துகிட்டேன். பெரிய நடிகையா வருவே'ன்னு பாக்யராஜ் சார் வாழ்த்தி அனுப்பினார். அவர் சொன்னது அப்படியே நடந்துச்சு. என் குடும்பத்தில் பலரும் சினிமா கலைஞர்கள்தாம். ஆனா, சினிமாவுக்கு தகுந்த நபர் நானில்லைங்கிற எண்ணம்தாம் அப்போ என் மனசுல இருந்துச்சு. எனவே, முழு ஈடுபாடு இல்லாமதான் அந்தப் படத்துல நடிச்சேன். அழுத்தமான அந்தப் பரிமளம் ரோல் ஒரு நடிகைக்கு அரிதாகவே கிடைக்கும். அதைப் பக்குவமா புரிஞ்சுக்கிற வயசும் அப்போ எனக்கில்லை.

ஒவ்வொரு காட்சியிலும் என்னை நடிக்க வைக்க பாக்யராஜ் சார் ரொம்பவே சிரமப்பட்டார். எனவே, அந்தப் படத்துல என் நடிப்புக்குக் கிடைச்ச பாராட்டுகள் எல்லாம் அவருக்கே சேரும். அறிமுக நடிகையா அப்படியொரு ரோல் எனக்குக் கிடைச்சது பெரிய பாக்கியம்னு இப்ப நினைக்கறேன். அதுபோல இன்னொரு ரோல் இப்பவரை எனக்குக் கிடைக்கலை. அந்தப் படத்துக்குப் பிறகு, கொஞ்ச நாள் ஸ்கூலுக்குப் போனேன். `கண்ணைத் தொறக்கணும் சாமி'ன்னு பசங்க என் பின்னாடி கலாட்டா பண்ணினாங்க. கூடவே, நிறைய பட வாய்ப்புகள் வர, நடிப்பு என் கரியராகிடுச்சு. என் சினிமா வளர்ச்சியில் குருநாதர் பாக்யராஜ் சாருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் ஊர்வசி.

முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு
`முத்தானை முடிச்சு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஜிதா, தற்போது சின்னத்திரையில் பிஸியான நடிகை. அந்தப் படம் ரீமேக் செய்யப்படுவதை அறிந்தவர், மகிழ்ச்சியுடன் பேசினார்.

``அந்தப் படத்துல ஊர்வசி அக்காவுடன் வரும் மூணு பசங்கள்ல என் அண்ணன் சுரேஷும் ஒருவர். அதனால அண்ணனுக்குத் துணையா அம்மா இருந்தாங்க. அப்போ நான் நாலு மாசக் கைக்குழந்தை. படம் முழுக்க வரும் ஆண் குழந்தை ரோலுக்கு எந்தக் குழந்தையும் தேர்வாகலையாம். ஒருநாள் என்னைக் கவனிச்ச பாக்யராஜ் சார், அவரின் குழந்தை ரோல்ல என்னைத் தேர்வு செய்திருக்கார். ஷூட்டிங் இல்லாதபோதும், பெரும்பாலும் அவர் மடியில்தான் நான் இருப்பேனாம். எல்லோரும் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து, பக்குவமா ஷூட்டிங்ல பயன்படுத்தினாங்களாம்.

சுஜிதா
சுஜிதா
`` `முந்தானை முடிச்சு' ரீமேக்குக்கு நல்ல இயக்குநரை தேடிட்டு இருக்கேன்!'' - சசிகுமார் #VE

ஊர்வசி அக்கா என்னைத் தாண்டுற காட்சியும், காசு முழுங்கிய என்னைத் தலைகீழா திருப்பி காசை வெளியில வரவழைக்கிற காட்சியும் முக்கியமானவை. அந்தக் காட்சிகளைப் படமாக்கும்போது, வருத்தப்படக்கூடும்னு சென்டிமென்ட்டா என் அம்மா அங்கே இல்லாம பார்த்துகிட்டாங்களாம். என் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, விவரம் அறியாத என்னையும் சிறப்பா நடிக்க வெச்சிருக்காங்க. அந்தப் படத்துக்குப் பிறகு, குழந்தை நட்சத்திரமா நிறைய படங்கள்ல ஆண் குழந்தை ரோல்லயே நடிச்சேன். விவரம் தெரிஞ்ச பருவத்துல அந்தப் படத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கேன். அம்மாவும் அந்தப் பழைய நினைவுகளைச் சொல்வாங்க.

பாக்யராஜ் சாரையும் ஊர்வசி அக்காவையும் சந்திக்கும்போதெல்லாம் அந்தப் படத்தைப் பத்தியும் தவறாமப் பேசுவேன். அவங்க இருவருக்கும் என்மேல் இப்பவரை தனிப்பட்ட அன்பும் பாசமும் உண்டு. குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த அந்தப் படம், எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பார்ப்பேன். அப்படியான படங்கள் இந்தக் காலத்துல வருவது குறைஞ்சதுதான் சின்ன வருத்தம்" என்கிறார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு