Published:Updated:

`கேஷியர் வேலை, 40 வருஷ சினிமாவில் சம்பாதித்தது, சாமானிய வாழ்க்கை!' - நடிகை வடிவுக்கரசி ஷேரிங்ஸ்

தனுஷூடன் வடிவுக்கரசி

சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் இணைந்து நடித்து, பிரபல குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கையோ, போராட்டங்களும் சவால்களும் நிறைந்தது. இயல்பாக உரையாடத் தொடங்கிய வடிவுக்கரசி, பலரும் அறியாத தனது வாழ்க்கைப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

`கேஷியர் வேலை, 40 வருஷ சினிமாவில் சம்பாதித்தது, சாமானிய வாழ்க்கை!' - நடிகை வடிவுக்கரசி ஷேரிங்ஸ்

சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் இணைந்து நடித்து, பிரபல குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கையோ, போராட்டங்களும் சவால்களும் நிறைந்தது. இயல்பாக உரையாடத் தொடங்கிய வடிவுக்கரசி, பலரும் அறியாத தனது வாழ்க்கைப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

Published:Updated:
தனுஷூடன் வடிவுக்கரசி

தனுஷ் நடிப்பில், சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான `ஜகமே தந்திரம்' படத்தில் பாசமிகு கிராமத்துத் தாயாக மனதில் நின்றார் வடிவுக்கரசி. சகோதரி, அம்மா, பாட்டி என உறவுகளை மேன்மைப்படுத்தும் கதாபாத்திரங்கள் பலவற்றிலும் யதார்த்த நடிப்பால் கலக்கியவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றி நடித்து வருகிறார். 450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நடுத்தர மக்களின் வாழ்க்கைநிலைதான் வடிவுக்கரசிக்கு.

'சிவாஜி' படத்தில் வடிவுக்கரசி
'சிவாஜி' படத்தில் வடிவுக்கரசி

சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் இணைந்து நடித்து, பிரபல குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவரின் தனிப்பட்ட வாழ்க்கையோ, போராட்டங்களும் சவால்களும் நிறைந்தது. இயல்பாக உரையாடத் தொடங்கிய வடிவுக்கரசி, பலரும் அறியாத தனது வாழ்க்கைப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சில வருஷங்களுக்கு முன்னாடி `கண்ணே கலைமானே’ படத்துல நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு, சொல்லிக்குற அளவுக்குப் பட வாய்ப்புகள் வரல. இந்த நிலையில தம்பி தனுஷ் இயக்குற புதுப் படத்துல, அவர் கூடவே வர்ற சித்தர் ரோல்ல நடிச்சேன். கொஞ்ச நாள்லயே `ஜகமே தந்திரம்’ படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷன்ல `இறைவி’ படத்துல நடிச்சதால, அவரோட டீமுடன் நல்ல பழக்கம் எனக்கு உண்டு. அந்த அனுபவத்துலதான் `ஜகமே தந்திரம்’ல நடிச்சேன். லண்டன்ல என்னோட போர்ஷன் முடிச்ச பிறகு, மதுரைக்கு ஷூட்டிங் போனேன்.

வடிவுக்கரசி
வடிவுக்கரசி

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவோட இயக்கத்துல நடிச்ச நேரத்துல, சின்ன பையனா இருந்த தனுஷைப் பார்த்திருக்கேன். அவரே பெரிய நடிகராகி, டைரக்டரா மாறிய வளர்ச்சியையும் பக்கத்துல இருந்து பார்த்தது சந்தோஷம் கலந்த ஆச்சர்யம். டைரக்டரா பொறுப்பு கலந்த கண்டிப்புடன் நடந்துகிட்டார் தனுஷ். `ஜகமே தந்திரம்’ ஷூட்டிங் ஸ்பாட்ல டான்ஸ், நடிப்பு எல்லாமே அநாயாசமா வெளிப்படுத்துற இயல்பான நடிகரா ஆச்சர்யப்படுத்தினார். என்னோட பிள்ளைங்களோடு வேலை செஞ்ச உணர்வையும் சந்தோஷத்தையும் இந்தப் படம் எனக்குக் கொடுத்துச்சு” என்று புன்னகையுடன் கூறும் வடிவுக்கரசியிடம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

``சிவாஜி அப்பாவை வெச்சு நிறைய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன்தான் என்னோட பெரியப்பா. அதனால சினிமா பத்தின விஷயங்கள் ஓரளவுக்குத் தெரிஞ்சாலும், நடிக்கும் ஆர்வம் எனக்கு இல்லை. நல்லா வசதியா வாழ்ந்த குடும்பம் எங்களுது. திடீர்னு பெரிய வறுமை ஏற்படவே, ஆழ்வார்பேட்டையில துணிக்கடையில கேஷியரா வேலை செஞ்சுட்டிருந்தேன். அதுக்குப் பக்கத்துல இருந்த ஸ்டூடியோவுல என்னோட போட்டோவைப் பார்த்துட்டுத்தான், `கிழக்கே போகும் ரயில்’ படத்துல என்னைத் தேர்வு செஞ்சார் பாரதிராஜா சார். ஆனா, அந்தப் படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. பிறகு, `சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல என்னை நடிக்க வெச்சார் அவர். அதுல, மாடர்ன் பொண்ணா, அடாவடி ரோல்ல நடிச்சது நான்தானான்னு அடிக்கடி ஆச்சர்யப்படுவேன்.

Vadivukkarasi
Vadivukkarasi

குடும்ப கஷ்டத்துக்காக, சினிமாவை என்னோட கரியரா ஏத்துக்கிட்டேன். எனக்கு முக்கியத்துவம் இருக்குற ரோல்லதான் நடிப்பேன், அதிக சம்பளம் வேணும்னு இதுவரைக்கும் நான் கெடுபிடி காட்டினதில்ல. `கன்னிப் பருவத்திலே’ படத்துக்குப் பிறகு தமிழ்லயும் தெலுங்குலயும் ஹீரோயின் வாய்ப்புகள் வந்துச்சு. டான்ஸ், ரொமான்ஸ் நடிப்பெல்லாம் எனக்கு வராது. அதுக்காகவே, சின்ன வயசுலயே கேரக்டர் ரோல்களை மட்டுமே விருப்பப்பட்டு ஏத்துக்கிட்டேன்.

`வா கண்ணா வா’ படத்துல சிவாஜி அப்பாவுக்கு மகள் ஸ்தானத்துல நடிச்ச நிலையில, `முதல் மரியாதை’யில அவருக்கு மனைவி ரோல் எனக்கு. கே.ஆர்.விஜயா அம்மா மாதிரி குடும்பப்பாங்கான ரோல்னு நினைச்சு மூக்குல ரெண்டு பக்கமும் மூக்குத்தி குத்திகிட்டு எதிர்பார்ப்போடு போனா, சிவாஜி அப்பாவைத் திட்டி நடிக்கிற மாதிரி நெகட்டிவ் ரோல் எனக்கு கொடுத்தாங்க. சங்கடத்துடன் நடிச்சாலும், என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினார் சிவாஜி அப்பா. பிறகு, பல படங்கள்ல அவருடன் சேர்ந்து நடிச்சேன். `அருணாச்சலம்’ படத்துல ரஜினி சாரைத் திட்டி நடிச்சதால, அவரோட ரசிகர்களால சில சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனா, என்னோட ஒவ்வொரு ஷாட் நடிப்பையும் ரசிச்சு ஊக்கப்படுத்தினார் அவர்.

சிவாஜியுடன் வடிவுக்கரசி
சிவாஜியுடன் வடிவுக்கரசி

என்மேல பெரிய அன்பு கொண்ட ரஜினி சாருக்கு அம்மாவா `சிவாஜி’ படத்துல நடிச்சதும் மறக்க முடியாத அனுபவம். `ராஜாவின் பார்வையிலே’ படத்துல விஜய்க்கு அம்மாவா நடிச்சப்போ, அவர் அதிகம் பேசவே மாட்டார். ஷாட் இல்லாத நேரத்துல அமைதியா இருப்பார். பல வருஷம் கழிச்சு, அவர்கூட `புலி’ படத்துல இணைஞ்சு நடிச்சபோதும் அவரோட இயல்பான குணம் மாறவே இல்ல. தமிழ் சினிமாவுல புகழ்பெற்ற பெரும்பாலான நடிகர்களுடனும் நடிச்சுட்டேன். இதுல, பாசிட்டிவ், நெகட்டிவ்னு நடிக்காத கேரக்டர்களே இல்லை” என்று சிலாகிப்பவருக்கு, `கன்னிப் பருவத்திலே’, `முதல் மரியாதை’, `என்னுயிர் தோழன்’, `அருணாச்சலம்’ போன்ற படங்கள் ஆல்டைம் ஃபேவரைட்.

40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சாமானிய வாழ்க்கை முறை ஓட்டம் குறித்துப் பேசுபவர், ``பெரிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் படங்கள்ல அதிகளவுல நடிச்சேன். ஆனா, அதனால பெருமையா சொல்லிக்குற அளவுக்கு எனக்குப் பெரிசா வருமானமெல்லாம் கிடைக்கல. இத்தனை வருஷங்கள்ல ஒவ்வொரு காலத்துலயும் புதுப்புது கமிட்மென்ட்ஸ் எனக்கு இருந்துகிட்டே இருக்கு. அதனால, சேமிப்பு, முதலீடுலயெல்லாம் கவனம் செலுத்த முடியல. `அப்பாடா!’ன்னு நிம்மதியா ஓய்வெடுக்கலாம்னு நினைச்சாலும், அதுக்கான சந்தர்ப்பமும் எனக்கு இதுவரை அமையல. அதனாலதான், இந்த கொரோனா நெருக்கடி காலத்துலகூட பொருளாதாரத் தேவைக்காக பயந்துகிட்டே ஷூட்டிங் போறேன்.

வடிவுக்கரசி
வடிவுக்கரசி

என்னோட அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கவும், என்னை நம்பியிருக்குற என்னோட குடும்பத்தினர் சந்தோஷமா இருக்கவும் நான் நடிக்க ஓடித்தான் ஆகணும். அதனாலயே, எந்தப் பாகுபாடும் இல்லாம எல்லாத் தரப்பட்ட கலைஞர்களுடன் இணைஞ்சு வேலை செய்யுறேன். `படையப்பா’ படத்துல செளந்தர்யாவின் அம்மாவா நடிச்சப்போ, `உங்களுக்கு ஏத்த மாதிரியான முக்கியத்துவம் உள்ள ரோல் கொடுக்க முடியல’ன்னு ஆதங்கத்துடன் சொன்னார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சார். இதுபோல, என்மேல அன்பும் மதிப்பும் வெச்சு பல இயக்குநர்கள் சொல்லியிருந்தாலும், இப்படியே எல்லா இயக்குநர்களும் நினைச்சுட்டா, என்னை மாதிரியான நடுத்தர ஆர்ட்டிஸ்டுகளோட நிலை என்னவாகும்?

`கருத்தம்மா’ படத்துல சரண்யா பொன்வண்ணனுக்கு மாமியாரா நடிச்சேன். இன்னைக்கு சரண்யாவே அம்மா ரோல்ல நடிக்குற நிலையில, நான் பாட்டி ரோல்ல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. பாட்டி ரோல்ல நடிக்கவே ஏகப்பட்ட போட்டிகள் இருக்கும் நிலையில, இதுமாதிரியான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வருவதே பெரிய கொடுப்பினைதான் எனக்கு. சினிமா வாய்ப்புகளும் குறைவாகவே வர்றதால, பல வருஷமாவே எனக்கான வருமான வாய்ப்பை உறுதி செய்றது சின்னத்திரைதான். இதுலயும் நிறைய சீரியல்கள்ல பலதரப்பட்ட ரோல்கள்ல நடிச்சுட்டேன். அதுல, என்னோட வாழ்க்கையோடு ஒன்றிப்போன `திருமதி செல்வம்’ எப்போதும் மனசுல நிற்கும் புராஜெக்ட். `ரோஜா’ உள்ளிட்ட சில சீரியல்கள்ல நடிக்குறதாலதான், தினசரி தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்க முடியது. இதுவும் இல்லைனா, என்னை மாதிரியான நடுத்தர கலைஞர்களோட நிலைமை ரொம்பவே மோசமாகிடும்.

மனோரமாவுடன் வடிவுக்கரசி
மனோரமாவுடன் வடிவுக்கரசி

தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்ட நிலையிலும், இன்னொருத்தர்கிட்ட கையேந்தாம வாழுற பாக்கியத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார். எனக்கு 63 வயசாகுது! என்னோட கடைசி காலட்டம்வரை யாருக்கும் எந்த வகையிலயும் பாரமா இருக்கக் கூடாது. குடும்பம்தான் என்னோட உலகம். அவங்களுக்கான ஒரே பிடிப்பு நான்தான். அதனால, சுயநலமா வீட்டுல ஓய்வெடுக்க எனக்கு விருப்பமில்ல. அதனாலேயே, நடிக்குற தொழிலை நிறைவுடன் செய்யுறேன். எனக்கு வயசாகிடுச்சே தவிர, இப்பவும் மனசளவுல ஆக்டிவ்வாதான் இருக்கேன். அதனால, இப்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் இணைஞ்சு நடிக்க ஆவலோடு இருக்கேன்”

- வெள்ளந்தியான பேச்சிலும் பாசாங்கில்லாத சிரிப்பிலும் உள்ளம் கவரும் வடிவுக்கரசி, தான் ஏற்கும் கதாபாத்திரம்போலவே சாமானிய பெண்ணாக மனதில் குடிகொள்கிறார்.