Published:Updated:

``அந்த ரெண்டு மாஸ்டர்ஸைவிட துருவ்தான் செம சாய்ஸ்!" - `ஆதித்யா வர்மா' இயக்குநர் கிரிசய்யா

``படத்தில் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள்?'' என படத்தின் இயக்குநர் கிரிசய்யாவிடமே கேட்டோம்.

ஆதித்யா வர்மா
ஆதித்யா வர்மா

ஒரு நடிகனின் முதல் படத்துக்காக இப்படியெல்லாமா நடக்கும் எனும் அளவுக்கு பல வியப்புகளை இதுவரை தந்திருக்கிறது `ஆதித்யா வர்மா.' தன் மகன் துருவை இயக்குநர் பாலாதான் அறிமுகப்படுத்த வேண்டும் என விக்ரம் கோரிக்கை வைக்க, `அர்ஜுன் ரெட்டி'யை `வர்மா'வாக இயக்கினார் பாலா. ஆனால், படம் தங்களுக்குத் திருப்தியாக வரவில்லை என விக்ரமும் தயாரிப்பு தரப்பும் சொல்ல பாலா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு மீண்டும் முழுப்படத்தையும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் இணை இயக்குநர் கிரிசய்யாவை வைத்தே எடுத்துமுடித்திருக்கிறார்கள்.

Adithya Varma
Adithya Varma
Vikatan

இதுவரை தமிழ்த் திரையுலகில் நடந்திடாத விதமாக ஒரு முழுப்படத்தையே மீண்டும் ஒருமுறை படமாக்கியிருக்கிறார்கள். அப்படியென்றால் படமும் அதன் தரமும் எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும். இதுகுறித்து அந்தப் படக்குழுவினரிடமே விசாரித்தோம்.

``ஏன் `ஆதித்யா வர்மா' ஸ்பெஷல்?'' என்ற கேள்விக்குப் படக்குழுவின் பதில் ``காதல்தான்'' என்பதே. ஒரு நவீன காலத்து தேவதாஸ், அதிலும் மிகக் கோபக்கார தேவதாஸ் காதல் தோல்வியால் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதை இத்தனை அப்பட்டமாக இதுவரை ஒரு தமிழ்ப்படம்கூட காட்டவில்லை. அதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.

Adithya Varma
Adithya Varma
Vikatan

`தேவதாஸ்' படத்தை ஏற்கெனவே ஒட்டுமொத்த இந்தியாவும் எல்லா மொழிகளிலும் பார்த்துத் தீர்த்துவிட்டது. `தேவ்தாஸ்', `தேவ்-டி' என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதே கதை வேறொரு பெயரில் மீண்டும் மீண்டும் படங்களாக வெளியாகிக்கொண்டும் இருக்கிறது. போதாக்குறைக்கு `அர்ஜுன் ரெட்டி'யையும் ஒட்டுமொத்தத் தமிழகமும் பார்த்துக் கொண்டாடிவிட்டது. அப்படியென்றால் ஏன் இதை தமிழில் எடுக்க வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டோம்.

``இந்தக் கதையைத் தமிழ் நேட்டிவிட்டியோடு, இந்த ஊர்ல இருக்குற ஒரு பையன், அவன் காதல், அவன் துக்கம், இப்படி பார்க்க வேண்டாமா" என நம்மிடம் பதில் கேள்வி கேட்கின்றனர் `ஆதித்யா வர்மா' படக்குழுவினர். ``ஒரு கதையைத் தமிழ் ஆடியன்ஸுக்குச் சொல்லும்போது எப்படிச் சொல்லணும்னு சில விதிகள் இருக்கு. உதாரணத்துக்கு படத்தின் இறுதிக்கட்டத்துல ஒரு துக்க வீடு. அர்ஜுன் ரெட்டியில அந்தக் காட்சி வரும்போது எல்லாருமே வெள்ளை நிறத்துல உடைகள் அணிஞ்சிக்கிட்டுதான் இருப்பாங்க. இங்க தமிழ் நாட்டுல துக்க நிகழ்வுகள்ல அந்த வழக்கம் கிடையாது. அதனால் ஆதித்யா வர்மா படத்துல அதே காட்சி, ஒரு தமிழ் வீட்டுல மரணம் நிகழ்ந்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். இதுமாதிரி இன்னும் நிறைய இருக்கு படத்தில்" என்றனர்.

Adithya Varma
Adithya Varma
"பாலாவின் 'வர்மா' டீஸருக்கும், கிரிசய்யாவின் 'ஆதித்யா வர்மா' டீஸருக்கும் என்ன வித்தியாசம்?!" #AdithyaVarma

``படத்தில் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள்?'' என படத்தின் இயக்குநர் கிரிசய்யாவிடமே கேட்டோம். ``என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் வெற்றியடைந்தால் அதற்கு முக்கிய காரணம் துருவ்தான். உண்மையைச் சொல்லணும்னா எனக்கு `வர்மா' படத்தைப் போட்டுக்காட்டும்போது, அதுதான் தோணுச்சு. `இப்படியொரு நடிகனா? என்ன இப்படி நடிக்கிறானே'னு பிரமிச்சுப்போய்ட்டேன். துருவோட திறமைமேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை வந்தது. `வர்மா' படத்தைப் பத்தி சொல்றதுக்கு என்கிட்ட ஒண்ணுமில்லை. அதைப் பத்தி எந்த விவரமும் சொல்ல விரும்பல. ஆனா, துருவ் அந்தப் படத்துல நடிச்சிருந்த விதம்தான் என்னை இதுக்குள்ள இழுத்தது" என்றார்.

`` `அர்ஜுன் ரெட்டி'யாக இருக்கட்டும், அதன் இந்தி வெர்ஷனான `கபீர் சிங்'காக இருக்கட்டும், இரண்டிலும் ஹீரோவாக நடித்திருந்த விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர், இருவரைவிடவும் தோற்றத்திலும் வயதிலும் மிக மிக இளையவர் துருவ். அவர் எப்படி இந்தக் கதாபாத்திரத்தில் பொருந்துவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதையே கிரிசய்யாவிடம் கேட்டேன்.

Adithya Varma
Adithya Varma
Vikatan

``அதுதான் இந்தப் படத்தோட பெரிய பலமே. கதைப்படி ஹீரோ மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட். அதுக்கான தோற்றம் விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூரைவிட துருவ் கிட்டதான் மிகப்பொருத்தமா இருந்தது. நான் அர்ஜுன் ரெட்டியில இணை இயக்குநரா இருந்தவன். அதனால், என்னால் இதை ஸ்ட்ராங்கா சொல்ல முடியும். துருவ், மற்ற ரெண்டு பேரைவிடவும் இந்த ரோலுக்கு மிகச்சிறந்த தேர்வுதான். அதை நீங்க படம் பார்க்கும்போது புரிஞ்சுக்குவீங்க" என்றார்.

``நடிகர்களைத் தாண்டி படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?''

``அர்ஜுன் ரெட்டி படம் எடுக்கும்போது, எங்களுக்கு நிறைய சிக்கல் இருந்தது. ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டுலதான் அந்தப் படத்தை எடுக்க வேண்டியிருந்தது. கடைசி நிமிடத்துல சில நண்பர்கள் உதவியால்தான் படம் முழுமையா முடிக்கவும் முடிந்தது. ஆனா, இந்தப் படம் பட்ஜெட் ரீதியா பெரிய சுதந்திரத்தைக் கொடுத்தது. அதனால ஒருங்கிணைப்பு, நடிகர்கள் தேர்வுன்னு எதுலையும் குறை வைக்காம படம் எடுத்திருக்கோம்" என்றார் கிரிசய்யா.

`` `அர்ஜுன் ரெட்டி', `கபீர் சிங்' டிரெய்லர்லாம் ரொம்ப ராவாக இருக்கும். ஆனால், ஆதித்யா வர்மாவால் அவற்றையெல்லாம் கொஞ்சம் குறைச்சு ரொம்ப சாஃப்ட் ஆக்கின மாதிரி இருக்கே?'' என்றேன். ``இதுக்கு முன்னாடி `வர்மா' டீசர் வந்த சமயத்துல அதன் மேல எக்கச்சக்க விமர்சனம் வந்தது. அர்ஜுன் ரெட்டியோட அடிப்படை அம்சங்கள்கூட இல்லையேனு ஒரு பார்வை இருந்தது. அதனாலதான் எங்க டீசர்ல நாங்க எந்தக் குறையும் இல்லாம வெளியிடணும்னு நினைச்சோம். இது அர்ஜுன் ரெட்டியோட நியாயமான ரீமேக்தான்னு எல்லாருக்கும் தெரியணும்னு விரும்பினோம். ஆனா, இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது ஆதித்யா வர்மாவைச் சுற்றி நடக்குற கதை. அவன் ஒரு பொண்ணை காதலிக்கிறான். அவள்தான் அவனுக்கு எல்லாமே. அவள் அவனை விட்டுட்டுப் போகும்போது, அவன் வாழ்க்கை மொத்தமா மாறுது. அவன் கோபக்காரன், வெறி பிடிச்சவன்னு எல்லாரும் சொல்றீங்கல்ல. ஆனா, அவனுக்கு ஒரு மென்மையான பக்கம் கண்டிப்பா இருக்கும்ல. அது இருக்குறதுனாலதான அவன் அந்தப் பொண்ணை அவ்ளோ உயிருக்கு உயிரா காதலிக்கிறான். அப்போ அந்த மென்மையான பக்கங்களையும் பத்தி பேசணும்ல. அதான், இந்தப் படத்துல அதுக்கும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கோம். அதோட ஒரு சாம்பிள்தான் இந்த டிரெய்லர்" என்றார்.